பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவிரோதநாதர்

236

அவொகாட்ரோ

ஞானத்தால் ஆணவமாலையை அறுக்கும்பொழுது ஈசனுடன் ஐக்கியமடைகிறான் ; இதுவே முத்தி நிலை.

4. வைஷ்ணவம் கூறுவது : புண்ணிய பாவமாகிய கருமங்களே அவித்தை; பிரம ஞானத்தால்தான் கருமங்கள் நாசமடையும். வீ. எஸ். கோ.

அவிரோதநாதர் ஜைனர் ; திருநூற்றந்தாதி நூலாசிரியர் ; 14ஆம் நூற்றாண்டினர்.

அவிநயனார் அகத்தியர் மாணவர் பன்னிருவருள் ஒருவர் ; அவிநயம் என்னும் யாப்பிலக்கணம் செய்தவர். இந்நூலிலுள்ள சூத்திரங்களுள் சில யாப்பருங்கலக் காரிகையுரையில் காணப்படுகின்றன. இந்நூல் இப்பொழுது இல்லை.

அவிநாசி கோயம்புத்தூர் ஜில்லா, திருப்பூர் புகைவண்டி நிலையத்துக்கு வடக்கே 8 மைலில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் முதலை வாயினின்றும் பிள்ளையை மீட்டுக் கொடுத்த தலம். சுந்தரர் பாடியருளிய திருப்புக்கொளியூர் அவிநாசிப்பதிகத்திலே பல செய்யுட்களிலும், 'திருப்புக்கொளியூர் அவிநாசியே' என இறைவனை விளிப்பதாக வருவதால், இப்போது அவிநாசி என்று வழங்குந் தலம் சுந்தரர் காலத்திலே திருப்புக்கொளியூர் என்று வழங்கியதென்றும், அவிநாசி என்னும் பெயர் இறைவன் பெயராக இருந்ததென்றும், பிற்காலத்தில் அவிநாசி என்னும் பெயரே தலப் பெயராக மாறியதென்றும் அறியலாம்.

முதலையிருந்த ஏரிகரையருகில் சுந்தரர் கோயில் இருக்கின்றது. கோயிலிற் பாதிரிமரம் உண்டு. சுவாமி அவிநாசியீசுவரர். அம்மன் கருணாம்பிகை. சுந்தரர் பாடல் பெற்றது. தலபுராணம் ஒன்று உண்டு. திருப்பூரிலிருந்து அவிநாசிக்குப் போகும் வழியில் 5ஆம் மைலில் திருமுருகன் பூண்டி இருக்கிறது.

அவுது பேகம்கள்: அவுதில் நவாபு ஷூஜா வுத்தௌலா 1775-ல் இறந்ததும், அவன் மகனான அசாபுத்தௌலா பதவிக்கு வந்தான். இவனுடைய தாய் பாகூ பேகம் ; பாட்டி புர்ரா பேகம். ஷூஜா வுத்தௌலா இறந்தபின் இவர்களுக்கு மொத்தமாக 2 கோடி ரூபாய் சொத்துக் கிடைத்தது. அசாபுத் தௌலா, 1775-ல் அவர்களிடமிருந்து 25 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டான். அப்போது அவனும் கம்பெனியாரும் இனி அவர்களைப் பணம் கேட்பதில்லை என்று உறுதி கூறினர். ஆயினும் பிறகு, அவுதின் ஆட்சி நிருவாகத்தைச் சீர்ப்படுத்தவேண்டும் என்று காரணம் காட்டி, அசாபுத்தௌலா பேகங்களின் சொத்தைப் பறித்துக்கொள்ள ஆங்கிலேயர்களோடு சேர்ந்து திட்டமிட்டான். அப்போது வங்காளக் கவர்னர் ஜெனரலாயிருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் வாக்குறுதியை மீறிப் பணம் பறிப்பதில் முனைந்தான் ; ராஜா சைத்சிங் தனக்கு விரோதமாக நடந்துகொண்டதற்கு அவுது பேகங்களும் உடந்தையென்று குற்றம் சாட்டினான். அவனுடைய ஆட்கள் பேகங்களுக்கு உதவியாயிருந்த வேலையாட்களைச் சங்கிலியாற் பிணைத்துச் சிறைப்படுத்திப் பேகங்களையும் அச்சுறுத்திப் பணத்தைப் பறித்தனர். 1782-ல் நவாபும், பிரிட்டிஷ் அதிகாரிகளும் பைசாபாத்திற்குச் சென்று, பேகங்களின் அரண்மனையில் துருப்புக்களை யிறக்கினர். பிறகு வாரன்ஹேஸ்டிங்ஸ் மிகவும் தவறான முறையில் நடந்துகொண்டதாகப் பிரிட்டிஷ் காமன்ஸ் சபையில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்தது. தே. வெ. ம.

அவுராக் (Auroch) : ஐரோப்பியக் காட்டெருதுக்கும் காட்டெருமைக்கும் இது பெயர். எருது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முற்றிலும் அழிந்துவிட்டது. எருமை கிழக்கு ஐரோப்பியக் காடுகள் சிலவற்றில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பியக் காட்டெருமைக்குத்தான் இந்தப் பெயர் வழங்குதல் சரியாகும். காட்டெருது பாஸ் பிரைமிஜீனீயஸ், காட்டெருமை பைசன்பொனாசஸ் எனப்படும். இவையிரண்டும் மாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

அவுரி (Indigo) பழங்காலத்திலிருந்து இந்தியாவில் வழக்கத்திலுள்ள முக்கியச் சாயமான நீலி உண்டாகும் செடி. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இது வங்காளத்திலும் பீகாரிலும் மிக அதிகமாகப் பயிராகி வந்தது. செயற்கை அவுரியைத் தயாரிக்கும் முறைகள் வழக்கத்திற்கு வந்தபின் அவுரிச் சாயத் தொழில் அநேகமாக அழிந்துவிட்டது.

அவுரிச்செடி லெகுமினோசீ குடும்பத்தைச் சேர்ந்தது. வங்காளத்தில் பயிராகி வந்த அவுரிவகை இண்டி கோபெரா சுமத்ரானா (Indigofera sumatrana)

அவுரி
1. பூ
2. கனி

என்றும், சென்னையில் பயிராகிய வகை இண்டிகோ பெரா அனில் (Indigofera anil) என்றும் அழைக்கப்படும். இச்செடி சுண்ணாம்பு மிகுதியாக உள்ள மண்ணில் நன்றாக வளரும். உயர்ந்த ரக அவுரிப் பயிருக்கு நீர்ப்பாசனமும் ஓயாத கண்காணிப்பும் தேவை. இது வேனிற் காலத்தில் விதைக்கப்பட்டு, ஆவணி, புரட்டாசி மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. மேட்டு நிலங்களில் இதை ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் விதைப்பதுண்டு. செடிகள் பூக்கும் தருணமே அறுவடைக்குத் தயாரான பருவமாகும்.

செடிகளை அறுவடை செய்து, கால தாமதமின்றி அவற்றைப் பெரிய தொட்டிகளிலுள்ள நீரில் ஓர் இரவு முழுதும் ஊற வைப்பார்கள். அவுரிச் செடியில், முக்கியமாக இலையில், இண்டிகான் என்ற பொருள் உள்ளது. இது ஒரு குளுகோசைடு. செடியில் ஓர் என்சைமும் உள்ளது. செடியை நீரில் ஊறவைக்கும்போது இந்த என்சைம் இண்டிகானை இண்டாக்சில் (Indoxyl) என்னும் பொருளாக மாற்றுகிறது. இதனால் தொட்டிகளிலுள்ள நீர் மஞ்சள் நிறம் பெறும். இதை வேறு தொட்டிகளுக்குள் வடித்துக் கலக்குவார்கள். இப்போது திரவத்திலுள்ள இண்டாக்சில் காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் வினைப்பட்டு நீலியாக (குறியீடு C16H10N202) மாறுகிறது. இது நீரிற் கரையாத பொருளாகையால் கீழே படியும். இதைப் பிரித்தெடுத் துப் பிழிந்து உலர்த்திக் கட்டிகளாகப் பெறுகிறார்கள்.

விரிவான ஆராய்ச்சிகளின் விளைவாய் வான் பேயர் என்ற ஜெர்மானிய ரசாயன அறிஞர் அவுரியின் ரசாயன அமைப்பைக் கண்டறிந்தார். இதன் பின்னர் அந்நாட்டில் மலிவான வகையில் இதைத் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. நாப்தலீன் (த. க.) என்ற கரிமக் கூட்டிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. பார்க்க : சாயங்களும், சாய இடைப்பொருள்களும்.

அவொகாட்ரோ (Avogadro, 1776-1856) இத்தாலிய பௌதிக-ரசாயன அறிஞர். இவர் டியூரினில் பிறந்து, அங்கேயே கல்வி பயின்று, அங்குள்ள பல்-