பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழுத்தக் காற்று

243

அழுத்தக் குக்கர்

மெழுகுவர்த்திகள், கரித்தார்ப் பொருள்கள் முதலியவற்றின் தயாரிப்பிலும் இது பயனாகிறது. உயர்ந்த அழுத்தங்களில் ரசாயன வினைகளை நிகழ்த்த அழுத்தக்கலம் மிகவும் ஏற்றது.

அழுத்தக் காற்று (Compressed air): காற்று மண்டலத்தைவிட அதிகமான அழுத்தத்தில் அடைக்கப்பட்ட காற்றுப் பல வகைகளில் பயன்படுகிறது. அழுத்தக் காற்றைக் கொண்டு சக்தியைப் பெறும் முறை மிக எளியதும், பல வேலைகளுக்கு இன்றியமையாததுமாகும். அழுத்தக் காற்றை இரு முறைகளில் பயன்படுத்தலாம். அது நேரடியாக விரிவடைந்து வேலை செய்யுமாறு அமைக்கலாம். காற்றுப் புருசு (த. க.), காற்று உயர்த்தி (த. க.) முதலியவை இத்தகைய சாதனங்களாகும். அழுத்தக் காற்றை ஒரு குழலின் வழியே மெல்லிய தாரையாக வெளியிட்டு, எந்திரங்கள், மோட்டார் வண்டிகள் முதலியவற்றைச் சுத்தப் படுத்த உபயோகிக்கிறார்கள். ரெயில் வண்டிகளிலும், டிராம் வண்டிகளிலும் பயன்படும் காற்றுப் பிரேக்கிலும் (பார்க்க: பிரேக்குகள்) அழுத்தக் காற்று இவ்வாறு பயனாகிறது.

இரண்டாம் முறையில் காற்றானது சக்தியைத் தந்து, கருவியையோ, எந்திரத்தையோ இயக்குகிறது. இது நூற்றுக் கணக்கான வகைகளில் பயன்படுகிறது. இவற்றுள் முக்கியமானது அழுத்தக் காற்று மோட்டார் என்ற சாதனம். இதில் அழுத்தக் காற்றுச் சிறகுகளினிடையே விசையுடன் பாய்ந்து அவற்றைச் சுழற்றுகிறது. இவ்வாறு சுழலும் உறுப்புடன் பல்லிணைகளாலோ, வார்ப் பட்டைகளாலோ வேறு எந்திரங்களை இணைத்து அவற்றை இயக்கலாம். இது சுரங்க வேலையில் எந்திரங்களை இயக்கப் பெரிதும் பயன்படுகிறது. நிலக்கரியை வெட்டி எடுக்கவும், பாறைகளில் குடையும் துறப்பணங்களை இயக்கவும், பூமிக்கடியில் குடைவுப் பாதைகள் அமைக்கவும் இந்த மோட்டார் பயனாகிறது. மோட்டாரை இயக்கும் காற்றை எஃகு உருளைகளில் அடைத்து, வலிவும் நெகிழ்வுமுள்ள குழல்களின் வழியே மோட்டாருக்குள் அனுப்பி இதை இயக்கலாம். ஆகையால் மோட்டாரை மிக இலேசானதாக அமைக்க முடிகிறது.இதனால் எந்திரத்தைக் கையில்பிடித்துக்கொண்டு வேலை செய்ய முடிகிறது. மேலும் இந்த மோட்டாரின் எப்பகுதியும் அதிகமாகச் சூடேறி ஆபத்து விளைவிப்பதில்லை. தீயினால் நேரும் அபாயமும் இதில் இல்லை. இதனாலேயே இது சுரங்க வேலைக்கு இன்றியமையாத சாதனமாக விளங்குகிறது. வெடி மருந்துக் கிடங்குகளில் வேறுவகை எஞ்சின்களை ஓட்டுவது அபாயகரமானது. ஆகையால் அழுத்தக் காற்று மோட்டாரைக்கொண்டு இயங்கும் வண்டிகளைத்தான் இங்குப் பயன்படுத்தவேண்டும். வெடி மருந்தைக் கொண்ட டார்ப்பிடோக்களை ஓட்டிச் செல்ல இம்மோட்டாரைப் பயன்படுத்துகிறார்கள். டிராம் வண்டி களையும் மோட்டார் வண்டிகளையும், இதைக்கொண்டு ஓட்ட முயன்றிருக்கிறார்கள்.

துறப்பணங்களையும், அரைக்கும் எந்திரங்களையும், நீர் இறைக்கும் பம்புகளையும், இயக்க அழுத்தக் காற்றுப் பயனாகிறது. பாதைகள் அமைப்பதில் காற்றினால் இயங்கும் துறப்பணங்கள் பல மனிதர்களது வேலையை இன்னும் விரைவாகச் செய்கின்றன. உலோகத் தகடுகளைத் தறையாணிகளால் இணைக்கவும் இம்முறை மிக அதிகமாக வழங்குகிறது. வானளாவும் உயர்ந்த கட்டட வேலைகளுக்கு இது மிகவும் ஏற்றது. கிரேன்களும், ஜாக்கிகளும், உலைக்களச் சம்மட்டிகளும் அழுத்தமான காற்றினால் இயங்கும் எந்திரங்களிற் சில. ரெயில்வேக்களில் பயனாகும் கைகாட்டிகளையும், வேறு எச்சரிக்கைச் சாதனங்களையும் இயக்குவதற்கு, அழுத்தக் காற்றைப் பயன்படுத்துகிறார்கள். அழுத்தக்காற்று எந்திரங்கள் இலேசாகவும், எளிய அமைப்பைக்கொண்டும், அடாயமான வாயுக்களை வெளியிடாமலும், தீயையோ மின்சாரப் பொறியையோ தோற்றுவிக்காமலும் இருப்பதால் இவ்வளவு அதிகமாகப் பயனாகின்றன.

அழுத்தக் காற்று முதன் முதலில் 1861-ல் ஐரோப்பாவிலுள்ள மான்செனிக் குடைவை அமைக்கும்போது பயன்பட்டது. இதில் உள்ள நன்மைகளை ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் (த.க.) என்னும் பொறியியல் அறிஞர் அறிந்தார். ஆகையால் அவர் இம்முறையைக் கொண்டு ரெயில் வண்டிப் பிரேக்குக்களை அமைத்தார். இதன் பின்னர் இதே தத்துவத்தைக் கொண்ட வேறு பல கருவிகளும் அமைக்கப்பட்டன.

அழுத்தக் குக்கர் (Pressure cooker) உயர்ந்த அழுத்தத்தில் உணவைச் சமைக்க உதவும் ஒரு சமையற்கலம். உருளை வடிவமான இது காற்றுப்புகாத மூடியையும், நீராவியைக் கட்டுப்படுத்தும் வால்வையும்,

அழுத்தக் குக்கர்
உதவி : சென்கோ , சிகாகோ.

அழுத்தமானியையும் கொண்டது. இதைத் திறந்து இதற்குள் சிறிதளவு நீரை ஊற்றிச் சமைக்கவேண்டிய உணவையும் இட்டுக் கலத்தை இறுக மூடி அடுப்பின் மேல் வைத்துவிட வேண்டும். உள்ளிருக்கும் நீர் ஆவியாகி அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. இந்த அழுத்தத்தினால் கலத்தின் வெப்ப நிலை உயருகிறது. ஆகையால் சாதாரணப் பாத்திரத்தைவிட இதில் பொருள்கள் சுமார் பத்து மடங்கு விரைவாக வெந்துவிடுகின்றன. நீராவி வால்வைக் கட்டுப்படுத்திக் கலத்தின் அழுத்தத்தையும், இதனால் வெப்பநிலையையும் தேவையானவாறு மாற்றலாம். இதைக்கொண்டு சில நிமிஷங்களில் பருப்பை வேக வைத்துவிடலாம். பெரிய அழுத்தக் குக்கர்களில் பல உணவுப்பொருள்களை ஒரேசமயத்தில் வேகவைப்பதற்கு ஏற்றவாறு பல தட்டுகள் இருக்கும்.

அழுத்தக் குக்கரினால் சமையலுக்குத் தேவையான காலம் குறைவதோடு எரிபொருளும் சிக்கனமாகிறது. மிகக் குறைவான அளவுள்ள நீரில் பொருளை வேகவைப்பதால் அதிலுள்ள உணவுச் சத்துக்கள் கெடாமல் இருக்கும். ஆனால் பொருள்கள் மிக விரைவில் வெந்துவிடுவதால் அவை மிகையாக வெந்து, அவற்றின் சுவையும் சத்தும் கெட்டுவிடக்கூடும். சிலநாள்பழக்கத்தில் சரியான பதத்தை முடிவு செய்து இக்குறையைத் தவிர்க்கமுடியும்.

உயரமான மலைகளின்மேல் நீரின் கொதிநிலை குறைவதால் அங்குத் திறந்த பாத்திரங்களில் சமைப்பது கடினம். இத்தகைய இடங்களுக்கு அழுத்தக் குக்கர் மிகவும் ஏற்றது.

உயர்ந்த வெப்பநிலையில் பொருளை வேகவைக்கும் அழுத்தக் குக்கர் உணவு வகைகளை டப்பியில் அடைத்துப் பாதுகாக்க ஏற்றது. ஏனெனில் அந்த வெப்பநிலையில் உணவைக் கெடுக்கும் சிற்றுயிர்கள் எளிதில் மறைந்துபோகின்றன.