பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அளவையியல்

252

அளவையியற் கொள்கை

யது? காரணங்களை எங்ஙனம் ஆராயலாம்? எவ்விதிகளை யனுசரிக்க வேண்டும்? என்ற விவரங்களை ஆகமன சாத்திரம் கவனிக்கிறது.

ஒரு பொருளின் காரணம் யாதென்று ஒரு பாலனை வினவினால், காரியத்துக்கு முன்னிற்பது காரணம் என்பான். ஆனால் ஊன்றிக் கவனித்தால், காரியமானது பிறிதோராற்றாற் பெறப்படாது; நியதமாக முன்னிற்கும் நிமித்தத்தொகுதியே அந்தக் காரியத்துக்குக் காரணமாகும்.

இந்த இலக்கணத்திலிருந்து பின்வரும் முடிவுகள் கிடைக்கின்றன. எந்த நிமித்தமில்லாத காலத்தில் காரியம் நிகழ்கிறதோ, அது காரணம் அன்று. எந்த நிமித்தமிருக்கும்போது காரியம் நிகழவில்லையோ, அது காரணமன்று. எந்த நிமித்தம் மாறாமலிருக்கும்போது ஒரு சம்பவம் மாறுகிறதோ, எந்த நிமித்தம் மாறும்போது ஒரு சம்பவம் மாறாமலிருக்கிறதோ, அல்லது ஒழுங்கீனமாக மாறுகிறதோ அது அச்சம்பவத்துக்குக் காரணமன்று. ஒரு காரியத்தின் காரணமாயிருப்பது மற்றொரு காரியத்தின் காரணமாயிராது. இங்ஙனம் காரணமல்லாதவற்றை விலக்கிக் காரணத்தை நிலை நிறுத்தச் சில ஆராய்ச்சி முறைகள் உள; இவற்றை மில் (Mill) என்னும் ஆங்கிலத் தார்க்கிகர் விவரமாக விளக்கியுள்ளார். முறையே இவற்றை ஒற்றுமை முறை, வேற்றுமை முறை, ஒத்தமாறுபாடுகள் முறை, எச்சமுறை யென்னலாம்.

ஒப்புமை வாதம்: பொது வாக்கியங்களை வெளியிடும் முறைகளில் ஒப்புமை வாதம் ஒன்றாகும். இரண்டு பொருள்கள் சில அமிசங்களில் ஒத்திருக்கக் கண்டு, இன்னும் சில அமிசங்களிலும் அவை ஒத்திருக்குமென அனுமானித்தல் ஒப்புமையாகும். கற்கண்டு வெண்மையாகவும், கனமாகவும், படிக வடிவமாகவும், தித்திப்பாக வும் இருக்கக்கண்ட சிறுவன், வேறொரு துண்டு வெண்மையாகவும், கனமாகவும், படிக வடிவமாகவும் இருத்தலால் அதுவும் தித்திக்கும் கற்கெண்டென நினைக்கிறான். அரைகுறையான ஒப்புமையிலிருந்து அதிக ஒப்புமை அன்றாட வாழ்க்கையிலும், விஞ்ஞான முறையிலும் ஊகிக்கப்படுகிறது.

ஒப்புமை வாதத்தின் மெய்ம்மை ஒற்றுமைகளின் எண்ணிக்கையைப் பொறுத்ததன்று; ஆனால் ஒற்றுமைகளுக்கும் அனுமானிக்கும் பண்புக்குமுள்ள தொடர்பைப் பொறுத்ததாகும் ; அதாவது ஒற்றுமைகளைச் சீர் தூக்கி மதிப்பிடவேண்டும், எண்ணக்கூடாது. மேற்கூறிய எடுத்துக்காட்டில் ஊகித்த பண்பாகிய தித்திப்புக்கும், வெண்மை நிறம், படிக வடிவம், கனம் போன்றவற்றிற்கும் நெருங்கிய சம்பந்தமுளதா வென்று கவனிக்க வேண்டும். இங்கு நெருங்கிய தொடர்பில்லாததால் இதை ஒப்புமைப் போலி என்பர். நியூட்டன் மரத்தில் நின்று உதிரும் கனிகளுக்கும், வானத்தில் சஞ்சரிக்கும் கிரகங்களுக்குமுள்ள ஒப்புமையைக் கண்டு பிரசித்தமான கவர்ச்சி விதியை வெளியிட்டார். மின்னலுக்கும் மின்சாரத்துக்கு முள்ள ஒப்புமையைக் கண்டு பென்ஜமின் பிராங்கிலின் மின்னலில் மின்சாரமிருக்கிறதென்று கண்டுபிடித்தார். டார்வின் என்னும் உயிரியல் அறிஞர் பயிர்களிலும் மிருகங்களிலும் செயற்கைத் தேர்தலினால் உயர்தரச் சாதிகளை யுண்டாக்க முடிவதிலிருந்து இயற்கைத் தேர்தல் (Natural selection) என்னும் கொள்கையை ஊகித்தார்.

கற்பனை : பொது வாக்கியங்களைக் கண்டுபிடிக்கக் கற்பனை தேவையாகும். ஒரு நிகழ்ச்சியை விளக்க அது எவ்விதம் நேர்ந்திருக்கலாமெனத் தற்காலிகமான சமாதானம் ஒன்றைக் கற்பனை செய்கிறோம். எண்ணிய கற்பனை நிரூபிக்கப் பெற்றால், அது நிலை நிறுத்தப்பட்ட பொது வாக்கியமாகிறது.

கற்பனைகள் அனுபவத்தில் மெய்ப்பிக்கவோ, தவிர்கவோ கூடியனவாக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் பயனற்றவையாகி (Barrenhypothesis) விடும் யூரேனஸ் என்னும் கிரகத்தின் சலன மாறுபாடுகளை ஓர் அரக்கனின் சேட்டையென்றால், இக்கற்பனையை அனுபவத்தில் மெய்ப்பிக்கவோ, பொய்ப்பிக்கவோ இயலாது.

கொடுத்த கற்பனையை ஏற்றுக்கொண்டு, அதன் பயன்களை ஊகித்து, அவற்றை உண்மைச் சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஒத்திருந்தால், கற்பனையை ஒப்புக்கொள்கிறோம்; ஒத்திராவிடில், கற்பனையைத் தள்ளுகிறோம். இங்ஙனம் கற்பனையை மெய்ப்பிப்பதில் இரண்டு அமிசங்கள் உள. கற்பனையை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் பயன்களும் உண்மைச் சம்பவங்களும் ஒத்திருத்தலைக் காண்பது உடன்பாட்டு நிரூபணமாகும். ஆனால் இது மட்டும் போதாது. உண்மைப் பயன்கள் வேறொரு கற்பனையிலிருந்தும் நேரக்கூடும். ஆகவே, எதிர்மறை நிரூபணமும் வேண்டும். அதாவது வேறெந்தக் கற்பனையும் இப்பயன்களைத் தராதென்றும் காண்பிக்கவேண்டும். அதாவது இக்கற்பனைக்கும் பயன்களுக்கும் இன்றியமையாத தொடர்பிருக்கிறதென்று காண்பிக்க வேண்டும்.

ஆகமனவாதமும் நிகமனவாதமும் : நிகமனவாதம், கொடுத்திருக்கும் பொது வாக்கியங்களிலிருந்து எவ்விதிகளை யனுசரித்தால் புதிய வாக்கியங்களைப் பெறலாமென்றும், ஆகமனவாதம் பொது வாக்கியங்களை எங்ஙனம் அடையலாமென்றும் விவரிக்கின்றன. இவற்றைத் தனியே விளக்கினாலும், இவை யொன்றை யொன்று தழுவியே நிற்கின்றனவென்பதை மறக்க லாகாது. சாத்திரங்களனைத்தும் ஆகமன முறையில் உண்மைகளைக் கண்டுபிடித்துப் பிறகு, கண்டுபிடித்த பொது வாக்கியங்களைப் புதிய சம்பவங்களினிடத்தில் நிகமன முறையில் கையாளுகின்றன. ஒரு மருத்துவ நிபுணர் பல சோதனைகள் மூலம் மலேரியா சுரத்துக்கு பிளாஸ்மோக்வீன் என்னும் மருந்து பரிகாரமென ஆக மன முறையில் காண்கிறார். அதற்குப்பிறகு சாதாரண மருத்துவர் யாவரும் அப்பரிகாரத்தை நிகமன முறையில் கையாளுகின்றனர். ஆகமனவாதம் நிகமனவாதத்தில் கருவி வாக்கியங்களைத் தருகிறது. ஒரு பொருளின் இலக்கணத்தை யறிவதிலும், பொருள்களைத் தரம் பகுத்தலிலும், சாதிப்பிரிவினை செய்தலிலும் நிகமனவாதம் ஆக மனத்தின் உதவியை எதிர்பார்க்கிறது. ஆகமனவாதம் கற்பனை நிரூபணத்தில் நிகமனவாதத்தின் உதவியை நாடுகிறது. ஆகவே இரண்டும் ஒன்றையொன்று தழுவியே நிற்கின்றன. கி. ர. அ.

அளவையியற் கொள்கை (Epistemology) : உண்மையான அறிவு ஏற்படுவது எப்படி? அதன் இயற்கை யாது? அறிவு உண்மை எனக் கருதப்படுவது எப்பொழுது? பொய்யெனக் கருதப்படுவது எப்பொழுது? அறிவை மெய் என்றோ பொய் என்றோ துணிவதற்கும் அளப்பதற்குமுள்ள உரைகல் எது ? அறிவுக்கு வரம்புகள் உண்டா ? இவ்வினாக்கள் அளவையியற் கொள்கையின் முக்கியமான கேள்விகளாம்; மனித அறிவின் தத்துவங்களை விளக்கிக் கொள்வதற்கும் பயன்படுவனவாம்.

அன்றாட வாழ்க்கையிலும் விஞ்ஞானத் துறையிலும் நாம் பெறும் அறிவு பல தடவைகளில் தவறாக ஆகிவிடுகிறது ; ஐயப்பாடு, தெளிவின்மை , தவறாகப் பற்றுதல்