பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநூல் வரலாறு

255

அறநூல் வரலாறு

தற்கான விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தில் காணப்படும் முக்கியமான விதிகளில் ஒன்று ஸ்தாபனங்களின் நலத்துக்கான செலவு போக, எஞ்சும் பொருளை மத சம்பந்தமில்லாத கல்வி, வைத்தியம் போன்ற பொது நலக் காரியங்களுக்காகவும் செலவு செய்யத் தருமகர்த்தர்களுக்கு அதிகாரம் அளித்திருப்பதாகும். மேற்கூறிய சட்டம் தவிர, தரும நிபந்தங்களுக்கும் முஸ்லிம் மத நிபந்தங்களுக்கும் சம்பந்தப்பட்ட சட்டங்கள், 1817ஆம் ஆண்டின் சென்னை நிபந்தங்கள் அனுமானச் சட்டம், 1863ஆம் ஆண்டின் மத நிபந்தங்களின் சட்டம், 1890ஆம் ஆண்டின் தரும நிபந்தங்களின் சட்டம், 1920ஆம் ஆண்டின் தரும-டிரஸ்ட் சட்டம், 1923-ஆம் ஆண்டின் முஸ்லிம் வாக்ப் சட்டம், 1913, 1930 ஆம் ஆண்டுகளின் முஸ்லிம் வாக்ப் செல்லாக்கும் சட்டம், 1908ஆம் ஆண்டின் சிவில் நடை முறைச் சட்டத்தொகுதியின் 92ஆம் செக்ஷன் என்பனவாகும். டி. எம். சி.

அறநூல் வரலாறு : மனித இனத்தின் நடத்தை, ஒழுக்கம், வாழ்க்கையின் நோக்கங்கள் முதலியவைகளைப் பரிசீலனை செய்யும் சாத்திரம் அற நூல் எனப்படும். மனிதர்கள் வழக்கமாகச் செய்யும் காரியங்களில் அடிப்படையான மூலத்தத்துவங்கள் என்ன? எந்த அளவுகோலைக் கொண்டு மனிதனுடைய குணஞ் செயல்களை மதிப்பிடுவது? இக்கேள்விக்கு விடை தருவது அற நூலின் தொழில்.

அறச் செயல் எது? தேர்ந்த அறிவுடன் சிந்தித்துச் சுயேச்சையாய்த் தீர்மானித்த விருப்பத்துடன் சங்கற்ப சக்தியால் இடையூறுகளையும் எதிர்ப்புக்களையும் வென்று எடுத்த காரியத்தை முடிப்பது தான் அறச் செயல் எனப்படும். அறத்திற்கு அடிநிலையாக இருப்பவை அறிவும் சுவாதீனமுமாகும். அறிவும் சுவாதீனமும் இல்லாவிட்டால் பொறுப்பில்லை ; பொறுப்பின்றேல் அறமில்லை. ஆனால் சுவாதீனத்துடன் சங்கற்பித்துச் செய்யப்படும் காரியங்கள் யாவும் அற முறையில் கருதப்படுவதில்லை. தரும காரியங்களில் கடமையுணர்ச்சி ஊறிக் கிடக்கின்றது. ஜீவனோபாயமாகவோ, ஓர் இலாபத்தைக் கருதியோ, அல்லது தண்டனைக்கு அஞ்சியோ வலுக்கட்டாயத்தாற் செய்யப்படும் காரியம் கடமையாகாது. கடமை யுணர்ச்சியே அறநிலையின் உயிர்நாடி.

கடமை சமூகத்தில் தான் பிறக்கிறது. கடமைகளைத் தன்னலங் கருதாது கடமைகளின் பொருட்டே செய்து முடித்தால்தான் ஒருவன் தன் கடமையைச் செய்தவனாவான். நற்செய்கைகளைப் புரியும் வரையில் தான் ஒருவன் தக்கோனெனப்படுவான். எனவே, அறவாழ்க்கையில் ஓய்ச்சல் ஒழிவே இல்லை.

அறவாழ்வின் தோற்றம் : அறவாழ்க்கையின் வரலாறும் மனித வாழ்க்கையின் வரலாறும் ஒன்றே. மனித வாழ்க்கையின் உண்மையை உள்ளபடி அறியவேண்டுமாயின், தொடக்கக் கால முதல் அது எப்படியெப்படி மாறிற்று, எந்தெந்த நிலைகளையடைந்து வளர்ந்தது, தற்காலம் இருக்கும் நிலைக்கு எங்ஙனம் வந்தது என்று விளக்கிக் காட்டுவது மிகவும் அவசியம்.

அறவளர்ச்சியின் மூன்று நிலைகள் : ஆதி மக்களுடைய வாழ்க்கையில் துல்லியமான அறப்பண்பைக் காண முடியாது. அறிவு முதிர்ச்சியும், சீர்தூக்கிப் பார்க்கும் மனப்பான்மையும் அறவுணர்வின் முக்கியக் கூறுகள். இவை இவர்களிடம் இல்லை. அறத்தின் வித்துக்கள் சில காணப்படுகின்றன. அவைகளும் சமுதாயக் கட்டுத் திட்டங்களுக்குள் அழுந்திக் கிடக்கின்றன. குலக் கட்டுப்பாட்டுக்கும் அதன் தண்டனைக்கும் பயந்து காரியங்கள் செய்யப்பட்டு வந்தன. “அவை நேர்மையானவை; சுயமாகவே மதிப்புடையவை ; அவைகளைச் செய்வது நம் கடமை என்ற அறிவுடன் மகிழ்ச்சியோடு செய்து முடித்தால்தான் அவை அறச் செயல்களாகும்” என்று கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் சொன்னதை நாம் உணரவேண்டும். இப்படிப்பட்ட பூரண அறவாழ்க்கை நம்முள் பக்குவமடைவதற்கு மூன்று நிலைகளைத் தாண்டவேண்டியிருக்கிறது.

அறவளர்ச்சியின் முதல் நிலை : காட்டுமிராண்டி, தன் முரட்டுப் போக்கையடக்கிக் கூட்டத்தார் அனுசரிக்கும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றித் தன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தியது மனித முன்னேற்றத்தின் முதற்படி யெனலாம். இது மனிதனுடைய அறிவையும், துணிவையும், குறிக்கோள்களையும் உயர்த்தியதோடு, அறவாழ்க்கையின் உயிர்நிலையான சமூக அமைப்பிற்கு அடிப்படையாகவும் அமைந்தது.

இந்நிலையில் அறத்தின் கூறுகள் தோன்றிய போதிலும், அவை இயற்கை இச்சைகளின் தூண்டுதல்களாகவோ, அல்லது புறக் கட்டுப்பாட்டின் விளைவுகளாகவோ இருக்கின்றன. பகுத்தறிவினால் ஏற்பட்ட நன்னெறி வாழ்வின் பண்புகளல்ல. ஆயினும் மனித வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் இவை தோன்றியிராவிடின், அவன் விலங்காகவே வாழ வேண்டியிருந்திருக்கும். எனவே மனித குலத்திற்குச் சிறப்புக் குணமாக விளங்குவது அறம் என்பதும், அதன் மூலத் தத்துவங்கள் மனித வரலாற்றின் முதல் நிலையிலேயே தோன்றின என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம்.

அறவளர்ச்சியின் இரண்டாவது நிலை : வழக்கம், ஆசாரம், சம்பிரதாயம், சட்டம், ஸ்மிருதி, தேவகட்டளை என்பவைகளைக் கொண்டு சமுதாயம், தனி மனிதனுடைய நடத்தையைக் கட்டுப்படுத்தி வந்ததால் இந்நிலை சம்பிரதாய தரும நிலை யெனப்படும். இந்நிலையில், வாழ்க்கையின் குறிக்கோள் பொது நலனைப் பயக்கக் கூடியதாயினும், சமூகப் பிரமாணம் என்னும் ஆசாரத்திற்கு அஞ்சி, வழக்கத்தாலும் சம்பிரதாயத் திட்டத்தாலும் கட்டாயத்தினால் தூண்டப்பட்டு வாழ்க்கை நடைபெறுகிறது. ஆசாரம் என்பது சமூக வழக்கம். குழந்தைப் பருவம் முதற்கொண்டே ஒவ்வொருவனும் ஆசாரத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கப் பழக்கப்பட்டான். மனிதன் எழுதக் கற்றுக்கொண்டதும், இந்த ஆசாரங்களை ஒழுங்காக்கிச் சட்டங்களாகத் திட்டப்படுத்தினான். அவை ஸ்மிருதிகளாகவும், தேவ கட்டளை களாகவும், வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. சமூகம் அறத்திற்குப் பிறப்பிடம். சமூக நன்மைக்குக் கருவிகளாயிருந்த ஆசாரங்களே தரும விதிகளாக உருவெடுத்தன. ஆசாரங்களும் அறச்சட்டங்களும் நடுநிலைமை தாங்கி, ஓரமின்றி, பொது நன்மையொன்றையே குறிக்கோளாகக்கொண்டு, அறத்தைக் காத்து வந்தன. முதியோரும், பூசாரிகளும், குலத் தலைவர்களும், சம்பிரதாய தருமத்தைக் காப்பவராக அமர்ந்தார்கள். இறுதியில் பூரண அதிகாரம் சமுதாயத்தினிடமே இருந்தது.

இந்த இரண்டாவது நிலையின் அறக்கூறு ஒருபடி உயர்ந்தது. “இது நல்லது, இது கெட்டது“ என்று துணிவதற்கேற்ற ஓர் அளவுகோல், ஒரு பிரமாணம் இந்நிலையில் விளங்குகிறது ; பகுத்தறிவும் சமூக மனப்பான்மையும் தெளிவாக வெளிப்படுகின்றன. ஆயினும் ஆசார தருமத்தின் மதிப்புக்களும் தீர்ப்புக்களும் பூரணப் பகுத்தறிவுடன் கூடியவை என்று சொல்வதற்கில்லை. சமுதாயம் தன் அங்கத்தினரைக் குல தருமத்திற்குக் கீழ்ப்படியப் பழக்கி, சுயேச்சையைப் போக்கி, சுய-