பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநூல் வரலாறு

256

அறநூல் வரலாறு

நிர்ணயத்தைக் கொன்று, சம்பிரதாயத்திற்கு அடிமைகளாக்கிவந்தது. இதை அறநெறி வாழ்க்கை என்று எப்படிச் சொல்ல முடியும்?

அறவளர்ச்சியின் மூன்றாவது நிலை : அறவாழ்க்கை சம்பிரதாய ஆதிக்கத்தினின்று விடுதலை பெற்றுத் தனிமனித மனச்சாட்சிப் பிரமாணமாகி, பூரணப் பக்குவநிலை எய்துகிறது. “இது நேரான காரியம் ; இதனால் யாவரும் நன்மையடைவர். ஆகையால் இதனை நான் செய்யக் கடவேன்” என்று சுய அறிவோடும், முழுமனத்தோடும் தீர்மானித்து நிறைவேற்றக் கூடிய ஆன்ம சக்தி பெற்றவனைப் பரிபூரணப் பக்குவ அறநிலையை அடைந்து விட்டான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

மனித முன்னேற்றத்திற்கும் அறவளர்ச்சிக்கும் முக்கியக் காரணங்களாயிருப்பவை : 1. அறியாமையையும் மூட நம்பிக்கையையும், ஆசார ஆட்சியையும் விடுத்து, விவேக ரீதியாய், எதேச்சையாய்ப் பொறுக்கியெடுத்த சுயயோக்கியதையுடைய இலட்சியங்களையும் அளவு கோல்களையும் நிருமாணித்தல். 2. கண்மூடித்தனமாய், உணர்வற்று, இயற்கையாலோ, அல்லது பழக்கத்தின் உத்வேகத்தாலோ சமூகத்திற்கு நன்மையான செய்கைகளைப் பொறுக்கி, அவைகளைக் கடமையெனக் கருதி, சுயநன்மையை எதிர்பாராது செய்து முடிக்கும் ஆற்றலுதித்தல். 3. தான் புரியும் அறச் செயல்களாலே மேன்மையான சமூகத்தைத் தோற்றுவித்து, அதில் தான் பொலிவு பெற்று, எல்லோருடைய முன்னேற்றத்திலும் தான் தன் சொந்த முன்னேற்றம் பொருந்தியிருக்கிறது என்ற உறுதியான கொள்கை தோன்றல்.

ஐரோப்பிய அறநூல் வரலாறு : பரிணாம நியதியை அனுசரித்து விவரித்த அறவளர்ச்சி முறைக்கு யூத, கிரேக்க, ரோம மக்களின் தரும அனுபவம் சிறந்த நிதரிசனமாக விளங்குகிறது. யூத மக்களிடம் சரித்திர ஆரம்பத்தில் சம்பிரதாயங்களும், சடங்கு விதிகளும் ஆதிக்கம் செலுத்திவந்தன. பிறகு கடவுள் மோசே வழியாக மக்களுக்கு அருளிய பத்துக் கற்பனைகளுக்கிணங்க வாழ்க்கை செம்மைப்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் வந்த தீர்க்கதரிசிகளும், 'சங்கீதங்களின்' ஆசிரியர்களும், ”வெளிக் காரியங்களும் அவைகளின் விளைவுகளும் அற நிலையின் முக்கிய அமிசங்களல்ல ; அந்தரங்க சுத்தியும் தூய மனமுமே அறத்தின் இருதய ஸ்தானம்; காரியங்கள் எந்த மனப்பான்மையுடன், எங்ஙனம் செய்யப்படுகின்றன என்பதை நிருணயிக்க வேண்டும். கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்து நடந்து விடுவதால் மட்டும் அறவாழ்க்கை வந்து விடாது” என்று போதித்தார்கள். அதன்பின் இயேசு கிறிஸ்து செய்த அறவுரை, பழைய ஆசாரங்களையும் கட்டளைகளையும் விட்டு, உள்ளத் தூய்மையைக் குறிக் கோளாக்கி, அறத்தின் பெருமையை அகவாழ்வில் நிலைநாட்டி, அறவியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கிற்று.

கிரேக்கர்களுடைய அற வாழ்க்கையிலும் சட்டங்களும் தேவ கட்டளைகளுமே ஆதி முதற்கொண்டு மக்களின் நடத்தையைப் பரிபாலித்து வந்தன. ஆயினும் அவைகள் எதையும் வரையறுத்து உத்தரவு செய்யவில்லை ; ஆகையால் அறிவிற்குப் போதிய சுதந்திரம் இருந்துவந்தது. கிரேக்கர்கள் மேதாவிகள் ; விஞ்ஞான நிபுணர்கள் ; தத்துவ ஞானிகள். எனவே அவர்களிடம் அற வளர்ச்சி உன்னத நிலையடைந்தது. சாக்கிரட்டீஸ், பிளேட்டோ , அரிஸ்டாட்டில் ஆகிய சான்றோர், அறத்துக்கு ஒப்பற்ற பணி செய்தனர். அறிவும், சிந்தனையும், சுய நிருணயமும் அறத்தின் உயிர் நாடிகள் என்றார் சாக்கிரட்டீஸ். ஏற்புடைய சூழ்நிலையையும், சிறந்த அரசியல் திட்டத்தையும் அமைத்து, உத்தம இலட்சியங்களைத் தருக்க முறையில் நிரூபணம் செய்து, மக்களை அறவாழ்க்கையில் ஈடுபடச் செய்யவேண்டுமென்றார் பிளேட்டோ. நல்லறிவும் நல்லெண்ணமும் இருந்தால் மட்டும் போதாது ; நற்பழக்கமும், திடமனமும், இடைவிடாப் பயிற்சியும், சங்கற்ப வன்மையுமிருந்தால் தான் இன்னல்களையும் இடையூறுகளையும் வென்று, கருதிய குறிக்கோளை அடையமுடியுமென்று அழுத்தமாக முழக்கம் செய்தார் அரிஸ்டாட்டில். ஞானம், தன்னடக்கம், தைரியம், நியாய உணர்ச்சி இவை அறத்தின் வேர்கள். இவைகளைத் தம்மக்கள் வாழ்க்கையில் ஆழப்பதித்துச் செழுமையாக வளர்த்து, அவர்களை உலகத்தார் எக்காலத்திலும் வியக்கத்தக்க அறம் நிறைந்த குடிமக்களாக்க இந்த ஞானிகள் முயன்றனர்.

இதைவிட ஒரு படி உயர்ந்த இடத்தை ஏற்றிருந்த ரோமர்கள், அரசியல், தலத்தாபனம், பொருளாதாரம், சமுதாயம் முதலிய மக்கள் வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் நீதி நூல்களையும், நியாயப் பிரமாணங்களையும் ஏற்படுத்தித் திட்டமான சட்டங்களை நிறுவி, ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டினார்கள். இவர்கள் சிறந்த அரசியல் நிபுணர்கள் ; தரும சாஸ்திர விற்பன்னர்கள்; பரந்த நோக்குள்ளவர்கள்; தீர்க்க சிந்தனையும், முன்யோசனையும் உடையவர்கள்; சமபாவமும் பெருந்தன்மையும் படைத்தவர்கள். எனவே, இவர்கள் வகுத்த அறநெறித் திட்டம் தங்கள் சொந்த சாதியினர்க்கு மட்டுமேயன்றி, உலக மக்கள் யாவர்க்கும் ஏற்றதாக அமைக்கப்பட்டது. தற்கால ஐரோப்பிய நாகரிகமும் பண்பாடும் ரோம நன்னெறித் திட்டத்தின் விளைவுகளாகும்.

தருமப் பிரமாணங்களின் ஆராய்ச்சி : அற வாழ்க்கை வளர்ச்சியின் பல நிலைகளைக் கவனித்தால் பற்பல குறிக்கோள்கள் அவ்வப்போது அறத்தின் அளவுகோல்களாக அங்கீகரிக்கப்பட்டு வந்தன என்பதை அறியலாம்.

மனச்சாட்சி : நம்முள்ளிருந்து நம்மை நல்வழியிற் செலுத்தும் மனச்சாட்சியின் கட்டளைப்படி நடந்தால் அதுவே அறநெறி. சட்டமும் சம்பிரதாயமும் வெளிப்புறத்தவை ; அச்சத்தையும் தண்டனையையுங் கொண்டு வலுக்கட்டாயமாக மனிதர்களை நல்வழியிற் செலுத்துபவை. ஆனால் உளச்சான்றோ உட்புறத்தது ; நம்முடன் பிறந்தது ; தூயதும் மேலான மறைபொருளுமான சக்தி. அது நன்மை, தீமை என்பதை விவாதித்தற்கிடமின்றி, காட்சிப் பிரமாணமாகக் காட்டி, நல்வழி புகட்டும் சக்தியுடையது என்பர்.

எல்லாருக்கும் ஒரேவிதமான மனச்சாட்சி கிடையாது. அவரவருடைய விருப்பு வெறுப்புக்களும், தன்னலமும், பட்சபாதமுந்தான் மனச்சாட்சிகளாக இருந்து வருகின்றன. கல்வியறிவும், சமூகக் கட்டுப்பாடும், நல்லொழுக்கமும் முதிர்ச்சியடைந்த பின்னர்த்தான் உண்மையான மனச்சாட்சி தோன்ற முடியும். அது தானாகப் பிறக்கும்போதே தோன்றியதன்று; தண்டனை, கல்வி, நட்பு முதலியவைகளால் பக்குவமடைந்த சக்தியே யாகும்.

இன்பம்: கிரேக்க ஞானி எபிக்யூரஸ் இன்பத்தை நாடி அடைவதே அறத்தின் நோக்கம் என்று போதித்தார். இன்பத்தைத் தரும் செயல் அறம் ; துன்பத்தைத் தரும் செயல் மறம் என்பது இவர் கொள்கை. இந்தக் கொள்கை ஐரோப்பிய நாடுகளில் பரவி, தாமஸ் ஹாப்ஸ், ஜான் ஸ்டூவர்ட் மில், ஜெரிமி பெந்தம் முதலிய ஆங்கில அறிஞர்களால் பெருமையடைந்து, சமூக வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத்தரத்தின் உயர்-