பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநூல் வரலாறு

257

அறநூல் வரலாறு

விற்கும் காரணமாக இருந்துவருகிறது. இந்தக் கொள்கையில் பலவகைகள் உண்டு.

1. இயற்கை இன்பவாதம் : இது நாம் இன்பம் ஒன்றையே விரும்புகிறோம்; அதுதான் நம் செயல்கள் எல்லாவற்றையும் தூண்டுகிறது என்னும் கொள்கை. இவ்வாதம் சரியன்று. இன்பத்திற்காக நாம் செயலில் ஈடுபடுவதில்லை. நம் தேவையைத் தீர்த்து வைக்கும் பொருளை நாடியே நாம் செயலில் இறங்குகிறோம். பசியைப் போக்க உண்கின்றோமேயொழிய, இன்பத்தையடைய அன்று. தேவையின்றேல் செயல் இல்லை. செயல் இன்றேல் விருப்பம் நிறைவதில்லை. விருப்ப நிறைவின்றேல் இன்பமுமில்லை. ஆகையால் இன்பந்தான் மனித வாழ்க்கையின் நோக்கம் என்பது சரியன்று. மேலும் நான் இன்பம் அடையப் போகிறேன் என்று முழு உணர்வுடன் ஒரு செயலில் இறங்குவது, இன்பம் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் முடியும். குறிக்கோளைக் கருதியே ஒரு வேலையைத் தொடங்குகின்றோம். அந்தக் குறிக்கோள் உன்னதமானது, துல்லியமானது, வசீகரமானது என்று நினைக்க நினைக்க நாம் ஆனந்தப்படுகிறோம். குறிக்கோளை நினைக்கையில் உண்டாகும் ஆனந்தத்தில், மரணத் துன்பத்தைக்கூடத் திருணமாக மதித்து விடுகிறோம். எனவே இந்த இயற்கை இன்பவாதம், இயற்கைக்கும் உளவியலுக்கும் ஒவ்வாதது என்பது வெளிப்படை.

2. அற இன்பவாதம் : “இன்பம் ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள். அதை அடைவதே நமது கடமை. அதற்கு மாறாக நடப்பவன் தகுதியற்றவன்“ என்று அற இன்பவாதிகள் கூறுகிறார்கள். எனவே, இன்பத்தை நாடுவதே அறச்செயலாக ஆகிறது. ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒருவருக்கு இன்பந்தருவது பிறர்க்குப் பிடிக்காமலிருக்கலாம். அதனால் அவனவன் தன் தன் இன்பத்தைத்தான் நாடக் கடமைப்பட்டவன் என்றே தருக்க நியாயப்படி இன்பவாதிகள் கூற வேண்டியது அவசியமாகிறது. ஆனால் அது முற்றும் தன்னலவாதமேயாகும். தர்மஸ் ஹாப்ஸ் என்ற ஆங்கில அறிஞர் ஒருவர் தாம் இக்கொள்கையைக் கடைப்பிடித்தார். ஆனால் பிற இன்பவாதிகளான ஜெரிமி பெந்தம், ஜான் ஸ்டூ வர்ட் மில் என்னும் ஆங்கில அறிஞர்கள், “மிகப்பல மக்களுக்கு மிகப்பல இன்பந்தரும் செயலே அறம்“ என்றும், தன் சொந்த இன்பத்தை நாடிப் புரியும் காரியம் அதருமம் என்றும் போதித்தார்கள்.

இன்பக்கணிதம் : நாம் தீர்மானித்த அறச்செயலானது 1. உறுதியாக, 2. ஆழ்ந்த, 3. நீடித்த, 4. தூய (துன்பங்கலவாத), 5. வளப்பமுள்ள (வேறு இன்பங்களை அளிக்கவல்ல), 6. விரைவில் (உடனடியாக), 7. பலர் அனுபவிக்கக்கூடிய இன்பம் பயப்பதாக இருக்கவேண்டும் என்று கணித்துத் துன்பத்தைவிட இன்பத்தை அதிகமாகத் தரக்கூடிய காரியங்களையே மனிதன் செய்யக் கடவன் என்று பெந்தம் கூறினார். ஆனால் 1. இன்பம் உள்ளத்தில் எழும் அனுபவம்; அளக்கக்கூடிய வஸ்துவன்று. 2. எல்லா இன்பங்களும் ஒரே தன்மையானவையல்ல. ஒரே பண்புடையனவா யிருந்தால்தான் இன்பக் கணிதப்படி அளக்க இயலும். 3. இன்பக் கணிதப்படி பெறப்பட்ட மொத்த இன்பத்தை மக்களுக்குள் எந்த முறைப்படி பங்கிட்டுத் தரவேண்டு மென்பதற்கு, பெந்தம் உத்தம சமத்துவ முறையைப் போதிக்கிறார். ஆனால் ஒரு குறிப்பிட்ட இன்பத்தை அனுபவிக்க எல்லாருக்கும் சமமான தகுதியும், பயிற்சியும், விருப்பமும் இருக்கின்றனவா?

தருமானுசாஸனங்கள் : ஏன் பிறரின்பத்திற் காகப் பாடுபடவேண்டும் என்று இயல்பாகத் தோன்றும் கேள்விக்குப் பெந்தம் கீழ்க்கண்டவாறு விடை கூறுகிறார் : 1. இயற்கை விதி : பிறருடன் கலந்து கொள்ளாமலும், அதிகமாகவும் அனுபவிக்கும் இன்பங்கள் பல நோய்களை உண்டாக்குவது நிச்சயம். 2. அரச விதி : பொது நன்மைக்குத் தீங்கிழைத்தால் தண்டனையையும், பொதுநன்மைக்குப் பாடுபட்டால் பட்டம் பதவிகளையும் அரசாங்கம் அளிக்கிறது. 3. சமூக விதி : பொதுமக்கள் பரோபகாரிகளைப் புகழ்வர்; சுயநலக்காரர்களை வெறுப்பர். 4. சாய விதி : கடவுள் எல்லோரும் இன்புற்றிருக்க உழைப்பவர்க்கு மோட்சத்தையும், சுயநலத்தையே நாடி மக்களுக்குத் தீங்கிழைப்பவர்களுக்கு நரகத்தையும் கொடுப்பர். 5. மனச்சான்று விதி : மனச்சாட்சி என்னும் அறச் சக்தி பிறர் இன்பத்தை நாடினால் அகவின்பமளிக்கிறது. பிறர்க்குத் துன்பந்தரும் செயல்களைப் புரிந்தால், வேதனை உண்டாக்கி, உள்ளத்தின் அமைதியையழித்து, வாழ்க்கையைக் குலைத்துவிடுகின்றது.

இந்த ஐந்துவித தரும விதிகளுக்குக் கீழ்ப்படிந்து செய்யப்படும் காரியங்கள் பிறர்க்கு இன்பந்தந்தாலுங் கூட, அறச் செயல்களாகிவிடுமா என்பது கேள்வி. துன்பத்திற்கும் தண்டனைக்கும் அஞ்சிச் செய்யப்படும் செய்கை அறநிலை எய்தாது. புகழையும் சம்மானத்தையும் இலாபத்தையும் கருதிச் செய்யப்படும் செய்கைகளும் அறமாகா. மேலும் பிறர் இன்பத்தை நாடினால் தான் நமக்கு இன்பம் உண்டாகும் என்று கூறினால் பிறரின்பம் ஒரு கருவி; நம் சொந்த இன்பந்தான் நம் குறிக்கோள் என்று ஆகும். இது ஒரு மெருகிட்ட தன்னலவாதமே. இதனை அறநிலையெனக் கூறுவது சிறிதும் பொருந்தாது.

இன்பவாதத்தின் அடிப்படையான குற்றம் அதன் மனோ தத்துவப் பிழையாகும். “மனிதன் கேவல உணர்ச்சியுடைய பிராணி ; அவன் நாடுவது துன்ப நிவிர்த்தியும் இன்ப நுகர்ச்சியும் தான்“ என்று மனிதத் தத்துவத்தைத் தவறாக அனுமானித்தது தான் இந்த வாதத்தின் குற்றங்களுக்கெல்லாம் முதற் காரணம். மனிதன் அறிவும் உணர்ச்சியும் கலந்த ஜீவன் ; உணர்ச்சிகளை அடக்கி, உயர்ந்த குறிக்கோள்களை நாடி, வாழ்க்கையைச் செலுத்துவதே அறிவின் தொழில் என்ற உண்மையை இன்பவாதம் புறக்கணித்து விடுகிறது.

பரிணாம இன்பவாதம் : உயிரியலின் முக்கியக் கொள்கையான பரிணாமவாதம் எங்கும் பரவியதும், இன்பவாதிகள் அதைத் தங்களுக்குத் துணையாக ஏற்றுக் கொண்டு, இயற்கையின் விதிகளைப் பின்பற்றி வந்தால் இன்பம் தானே எய்தும் என்று போதிக்கலாயினர். இந்தக் கொள்கையை ஹெர்பர்ட் ஸ்பென்சர், அலெக்சாண்டர், சர் லெஸ்லி ஸ்டீபன் முதலிய ஆங்கில அறிஞர்களும், நீச்சே என்னும் ஜெர்மன் தத்துவ ஞானியும் உபதேசித்தார்கள். இவர்கள் இயற்கையோடியைந்த வாழ்க்கை என்கிற குறிக்கோள் இயற்கைக்கு முற்றிலும் எதிராவது என்பதை உணரவில்லை. இயற்கை வழியை அடக்கி, அறத்தினாலும் விவேகத்தினாலும் உயரிய வழியில் வாழ்க்கையை நடத்துவதில் தான் மனிதப் பெருமை அமைந்திருக்கிறது.

நிபந்தனையற்ற கடப்பாடு : இம்மானுவல் கான்ட் என்ற உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் தத்துவஞானி, பகுத்தறிவினால் தெரிந்தெடுக்கப்பட்ட காரியங்களை, அவற்றின் பொருட்டே செய்வது தான் கடமை அல்லது நிபந்தனையற்ற கடப்பாடு என்று உபதேசித்தார். பொதுவாகவும், சாசுவதமாகவும், விலக்கற்றதாகவு முள்ள கடமை, “இதைச் செய்; அதைச் செய்யாதே“