பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநூல் வரலாறு

259

அறநூல் வரலாறு

இனி ஒரு செயலைச் சீரானது என்றும், ஒரு செயலைத் தவறானது என்றும் கூறுவதற்கும், ஒரு செயலை நல்லதென்றும், ஒரு செயலைத் தீயதென்றும் கூறுவதற்கும் காரணம் யாது? சீரானது, தவறானது என்னும் சொற்கள் சட்டத்தைக் குறிக்கும் ; நல்லது, தீயது என்னும் சொற்கள் குறிக்கோளைக் குறிக்கும்.

அறிவு முதிராத தாழ்ந்த மக்களுக்காகச் சட்டங்கள் அல்லது விதிகள் வகுக்கப்படுகின்றன. கடவுள் கூறும் இந்த விதிப்படி நடந்தால் நன்மை உண்டாகும், நடவாவிட்டால் தீமை உண்டாகும் என்று கூறுவர். ஆனால் மனிதன் அறிவு முதிரும்போது இந்த நன்மை தீமைகளைப் பொருட்படுத்தமாட்டான். கடவுள் கூறுகிறார் என்று சொல்வதும் அவனுக்கு மனநிறைவை உண்டாக்காது. அதற்காகவே இந்து மதமானது அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு உறுதிப் பொருள்களைக் குறிக்கோள்களாகக் கூறுகிறது. பொருளும் இன்பமும் அறத்தைத் தேடவும், அறம் வீடு அளிக்கவும் பயன்படும் என்பர். இந்தக் குறிக்கோள்களை அடையச் செய்யும் செயல்களே அறச்செயல்களாகும்.

இனி இந்த அறச்செயல்களை வருண அறச்செயல்கள் ஆச்சிரம அறச்செயல்கள், சாமானிய அறச்செயல்கள் என மூன்றாகப் பிரித்துள்ளார்கள்.

மனிதனிடம் சத்துவம், ராஜசம், தாமசம் என மூன்று குணங்கள் காணப்படும். சத்துவம் மிகுந்தவன் பிராமணன், ராஜசம் மிகுந்தவன் க்ஷத்திரியன், தாமசம் மிகுந்தவன் வைசியன், மூன்று குணங்களும் முதிராதவன் சூத்திரன் என்பர். இந்தக் குணங்கட்கு ஏற்ற செயல்கள் எழுமாதலால், குணத்தையும் செயலையும் வைத்து நான்கு வருணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பிராமணன் அறிவை வளர்க்கவும், க்ஷத்திரியன் சமூகத்தைப் பாதுகாக்கவும், வைசியன் பொருள் தேடித் தரவும், சூத்திரன் உடல் உழைப்பு நல்கவும் கடவர். இந்த நான்கு சாதிக்குப் புறம்பாக ஒரு சாதி கிடையாது. தந்தையின் குணம் மக்களிடம் காணப்படும் என்று எதிர்பார்க்கலாமாதலால், மக்களுடைய வருணம் தந்தையின் வருணம் என்றும், மக்கள் தந்தையின் தொழிலைச் செய்யக்கடவர் என்றும் வருணாச்சிரம தருமம் கூறும். ஆனால் பிராமணனுக்குப் பிறந்தாலும் வேதங்களைக் கற்காதவன் பிராமணன் ஆகான், சூத்திரனே என்றும், சூத்திரன் தன்னுடைய ஒழுக்கத்தால் யிராமணன் ஆவான் என்றும் மனு ஸ்மிருதி முதலிய பண்டைத் தரும சாஸ்திரங்கள் வற்புறுத்துகின்றன. அதனால் வருணம் என்பது பிறப்பை மட்டும் பற்றியதன்று. அதன் அடிநிலை குணமும் ஒழுக்கமுமேயாகும். மாணவர்கள் ஆசிரியருடன் குருகுலவாசம் செய்வர். பதவி வேறுபாடு பாராட்டாமல் நடந்துகொள்வர். கல்வி கற்றும், ஒழுக்கம் பயின்றும், குருகுலவாசம் முடிந்தபின் வீடு சென்று மணம் செய்துகொண்டும் இல்லறம் நடத்துவர். இல்லறநிலை மற்ற மூன்று நிலைகட்கும் ஆதாரம் என்று கருதப்படும். இல்லறத்திலுள்ளோர் பொருள் தேடி, வேதியர்,தெய்வம், பிதிரர், பிராணிகள், மனிதர் ஆகியோர்க்கு உதவி செய்யக்கடவர்; தம் மக்கள் வளர்ந்ததும், இல்லாளுடன் காடு சென்று ஆன்ம விசாரணை செய்வர்; அதன்பின் துறவிகளாகி யோகம் செய்து வீடு பெறுவர்.

இனி எல்லோரும் எந்த வருணமாயினும், எந்த ஆச்சிரமத்தில் இருப்பினும், செய்யவேண்டிய அறச்செயல்களைச் சாமானிய தருமம் என்பர். இந்த அறச்செயல்களுள் தூய்மை, அடக்கம், பற்றின்மை, உண்மை, கொல்லாமை என்பன தலையானவை. உடம்பையும் உள்ளத்தையும் தூய்மையாகச் செய்பவன் மனத்தை ஆசைவழிச் செலுத்தாது அடக்குவான். மனத்தை அடக்கியவன் பற்றில்லாதவன் ஆவான். பற்றில்லாதவனே உண்மையாக ஒழுக இயலும். உண்மையாக ஒழுகுபவன் எவ்வுயிர்க்கும் ஊறு செய்யான். இவ்வாறு பற்றின்றி எல்லோருக்கும் நன்மை செய்வது ஆகாமியம் சேராதவாறு தடுக்கும். இத்தகையவனே யோகம் பயின்று, ஆன்மகுணம் பெற்று வீடு பெறுவான். வீடு பேறு அளிக்கும் செயலே அறச்செயல் என்பது இந்து அறநூலின் முடிபாகும்.

தமிழர் அறநூல் வரலாறு: தமிழர் வாழ்க்கையில் அறத்தாறு மிக்க பழமையானது. இப்போதுள்ள நூல்களுள் மிக்க பழமையுடையதான தொல்காப்பியத்திலேயே அறத்தாறுகள் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளன. புறத்திணை இயலில் வாகைத்திணையிலும் காஞ்சித்திணையிலும் அறத்தாறுகள் காணலாம். அற நூல்களால் கட்டுதலமைந்த ஒழுக்கத்தோடு பொருந்தும் காட்சி எனக் 'கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை' என்று தொல்காப்பியம் அறத்தாறு கூறுகின்றது. இவ்வொழுக்கங்களை உளத்தால் குறிக்கொண்டு, ஐம்பொறியையும் வென்று தடுத்தல் வேண்டும் என்பது அதன் கருத்து. இவ்வொழுக்கங்களுள் இல்லறத்தார்க்கு உரியனவாகக் கூறப்படுவன : அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, பிறர்மனை நயவாமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறையுைடமை முதலியனவாம். இடையீடில்லாத 'வண்புகழைப் பயக்கும் கொடையையுடையான் மூப்புப் பிணி, சாவு இவற்றிற்கு அஞ்சான்' எனவும், தன்னைப் பிழைத்தோரைப் பொறுத்தலோடு அவர்க்குத் துன்பம் வராமல் காத்தல் வேண்டும் எனவும், ஒருயிர்க்குத் துன்பம் வரும்போது தன் உயிரைக் கொடுத்துக் காத்தலும், அதன் வருத்தம் தனதாக வருந்தலும், பொய்யாமை, கள்ளாமை முதலியனவும் ஏற்படின் துறவுள்ளம் பிறக்கும் எனவும், அது பிறந்த பின்னர் எப்பொருள்களிலும் பற்றறும் எனவும், இவையெல்லாம் வெற்றிச் சிறப்புக்களாக வாழ்க்கையில் சிறப்பிக்கப்படும் எனவும் வாகைத் திணையில் தொல்காப்பியம் துறவறத்தாறு உணர்த்துகின்றது. வீடு ஏதுவாக உலகியற் பொருள்கள் நிலையில்லாதன என்று கருதும் கருத்தே அறத்தாற்றில் மக்களை ஈடுபடுத்தும் என்பது காஞ்சித் திணையில் தொல்காப்பியத்தால் உணர்த்தப்படுகின்றது.

எவ்விடத்தில் மக்கள் அறநெறிபற்றி நல்லவர்களாக இருக்கின்றனரோ, அவ்விடமே நல்ல இடம் எனக் கூறப்படும் எனவும், சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்தின் வழியே தோற்றம் பெறும் எனவும், பகைவர் நாட்டின்மீது அரசர் படையெடுக்குங்கால், ஆவும் பார்ப்பனரும் பெண்டிரும் பிணியுடையரும் புதல்வரைப் பெறாதவரும் பாதுகாவலான இடத்திற்குப் போய்த் தம்முயிரைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று முன்பாக அறத்தாறு நுவலும் மேற்கோள் உடையவர் எனவும், “மற்ற அறங்களைப் போற்றாத வர்க்குக் கழுவாய் உண்டு, செய்ந்நன்றி போற்றாதவர்க் குக் கழுவாய் இல்லை” என அறம் பாடிற்று எனவும், மழை பெய்யவும், மிக்க மழை பெய்யின் அஃது ஒழியவும் முருகனுக்குப் பலி தூவிக் குறவர் தெய்வ வழிபாட்டறம் போற்றுவர் எனவும், மகளிர் தம் கற்புடைமையால் மழை பெய்விக்கும் ஆற்றல் பெறுவர் எனவும் சங்க நூல்கள் அறத்தாறுகளை ஆங்காங்கு உணர்த்துகின்றன.

அறங்களையெல்லாம் தொகுத்து உணர்த்தும் நூல்களாகத் திருக்குறள் முதல் ஆத்திசூடி ஈறாக அளவற்ற நூல்கள் தமிழில் உள்ளன. அறம், சிறப்பு எனப்படும்