பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிதிறன்

261

அறிதிறன்

டிருக்கும். அவர்கள் தமது செய்கையின் விளைவு கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் ஒட்டித் தம்மையும் தம்முடன் தொடர்புள்ளவர்களையும் எவ்வாறு பாதிக்கும் எனப் பகுத்தறிய முடிகிறது. அறிதிறன் என்பது பாரம்பரியத்தைப் பொறுத்துப் பிறவியில் தோன்றும் அமிசம் என்பதே பெரும்பான்மையோரது கருத்து. அறிதிறனை மூன்று கோணங்களிலிருந்து ஆராய்ந்திருக்கிறார்கள். குழந்தைப் பருவத்திலிருந்து முதுமைவரை அது எவ்வாறு அபிவிருத்தி அடைகிறது என்று சோதனைகளின் வாயிலாக அறிய முயன்றிருக்கிறார்கள், ஒவ்வொருவருடைய திறமைகளிலும் உள்ள வேறுபாடுகளை ஆராயும் சோதனைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளையின் எப்பகுதிகள் அறிதிறனின் சிறப்பான இயக்கங்கள் நடைபெறக் காரணமாக உள்ளன என அறிய முயன்றிருக்கிறார்கள்.

புளௌரன்ஸ் (Flowrens) என்ற அறிஞர் சென்ற நூற்றாண்டில் பெருமுளை முழுதுமே அறிதிறன் இயக்கத்தில் ஈடுபடுகிறது என வாதித்தார். ஆனால் தற்காலத்தில் விலங்குகளைக் கொண்டு செய்யப்பட்ட சோதனைகளிலிருந்து சிந்தனைத் திறன்போன்ற பண்புகள் பெருமூளையின் முன்பகுதிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளவை எனத் தெளிவாகியுள்ளது. புறணியின் வேறு சில பகுதிகளில் பழுது நேர்ந்தால் மொழியைக் கற்குந்திறன், இடவெளியை மதிப்பிடும் திறன் முதலியவை கெடுகின்றன. ஆகையால் புறணியின் சில பகுதிகளின் தன்மை மானிடனது திறமைகளை முடிவு செய்கிறது என நம்ப இடமுள்ளது.

அறிதிறன் சோதனைகள்: பண்டைக் காலமுதல் மக்கள் ஒருவர்க் கொருவர் அறிதிறனை மதிப்பிட்டே வந்துளர். சிலரை மந்த அறிவினர் என்றும், சிலரைச் சாமர்த்தியசாலிகள் என்றும், சிலரை மேதைகள் என்றும் கூறி வந்திருக்கிறார்கள். இப்பொழுதும் பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களைச் சோதனை செய்து, அவர்களுடைய அறிதிறனை அளவிட்டு வருகிறார்கள். நமக்குத் தோன்றியவாறு மதிப்பிடுவதைவிட இவ்வாறு ஆசிரியர்கள் மார்க்குகள் கொடுத்து மதிப்பிடுவது ஓரளவு மேலானதேயாகும். இவ்வாறு அளந்து அறியும் முறையை மிகவும் துல்லியமானதாகச் செய்கின்றது உளவியற் சோதனை முறை. அது மனிதனுடைய அறிதிறனை அளப்பதற்குப் பல சோதனைகளை வகுத்துள்ளது.

அறிதிறன் என்பது அளந்துபார்க்கக்கூடிய பௌதிகப் பொருளன்றே, அதை எப்படி அளப்பது என்ற ஐயம் எழக்கூடும். அப்படியானால் சூடும் மின்சாரமும் பௌதிகப் பொருள்கள் அல்லவே, அப்படியிருந்தும் அவற்றைப் பௌதிகர்கள் துல்லியமாக அளக்கின்றார்கள் அல்லவா? சூடு என்பதும், மின்சாரம் என்பதும் இவை என்று விஞ்ஞானிகள் அறியார். ஆனால் அவற்றால் ஏற்படும் விளைவுகளைக்கொண்டு அவற்றை அளக்கின்றனர். அதுபோலவே அறிதிறனையும் அதன் விளைவுகளைக்கொண்டு அளக்கலாம். அதாவது அறிவுடன் கூடிய நடத்தையை அளப்பதன் வாயிலாக அறிதிறனை அளந்து வருகிறார்கள். ஆதலால் பௌதிகர் சூட்டையும் மின்சாரத்தையும் அளந்து கூறுவது எத்துணை நம்பத்தக்கதோ, அத்துணை உளவியலார் அறிதிறனை அளந்து கூறுவதும் நம்பத்தக்கதேயாம். காரியத்தை வைத்துக் காரணத்தை அளக்கும் தத்துவத்தையே இருவரும் கையாள்கிறார்கள்.

அறிதிறனை அளப்பதற்கு வேண்டிய சோதனைகளை வகுத்த பெருமை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த பிரெஞ்சு உளவியலரான ஆல்பர்ட்பினே என்பாரைச் சாரும். அவர் பள்ளிச் சிறுவர்களை அவர்களுடைய அறிதிறனுக்குத் தக்கவாறு பிரித்து வைத்துப் பாடம் கற்பிக்க வேண்டியவராக இருந்தார். குழந்தை வளர வளர, அதன் உடல் வலிமையும் வளர்ந்து வருகின்றது என்பது போலவே அதன் அறிதிறனும் வளர்ந்து வரும் என்று எண்ணினார். இந்தக் கருத்தை ஆதாரமாக வைத்து, நூற்றுக்கணக்கான குழந்தைகளை மிகுந்த கருத்தோடு கவனித்துப் பள்ளிச் சிறுவர்களுடைய மூளையை அளப்பதற்கான சோதனைகளை 1905-ல் வெளியிட்டார். அச்சோதனைகள் மிகுந்த பயனுடையவாக இருந்தமையால் அவற்றைப் பல நாட்டு உளவியலார்களும் கல்வியியலார்களும் தத்தம் நாட்டு நிலைமைக்குத் தக்கவாறு மிகுந்த ஆவலுடன் பயன்படுத்திக்கொள்ளலாயினர். அதன்பின் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிடைத்த அனுபவங்களின் பயனாக அச்சோதனைகள் பல திருத்தங்களைப் பெற்றன.

பிரிட்டிஷ் உளவியலார் சிரில் பர்ட்டு என்பவர் திருத்தியமைத்துக்கொண்ட சோதனைகளுள் சில வருமாறு:

1. மூன்று வயது குழந்தைகட்குரிய சோதனைகள் :
அ. மூக்கு, கண், வாய் இவற்றைக் காட்டல்.
ஆ. இரண்டு நிலை எண்களைப் படிக்கக் கேட்டபின் சொல்லல்.
இ. காட்டப் பெற்ற மூன்று சாதாரணமான பொருள்களின் பெயர்களைக் கூறுதல்.

2. ஆறு வயது குழந்தைகளுக்குரிய சோதனைகள்:
அ. வரிசையாக வைக்கப்பெற்ற 13 நாணயங்களை எண்ணுதல்.
ஆ. வாரத்திலுள்ள கிழமையின் பெயரைக் கூறுதல்.
இ. சாதாரணமான பொருள்களின் பெயர்களுக்கு விளக்கங் கூறுதல்.

3. பன்னிரண்டு வயது சிறுவர்களுக்குரிய சோதனைகள்:
அ. தாறுமாறாக எழுதிய வாக்கியங்களை மனத்திலேயே சரியாக அமைத்தல்.
ஆ. படங்களை விளக்குதல்.

பினே மூன்று வயது முதல் 16 வயதுவரையுள்ள குழந்தைகட்கே சோதனைகள் வகுத்திருந்தார். ஏனையோர் ஒரு மாதக் குழந்தை முதல் 20 வயதுவரையும் கூட வகுத்துளர்.

அறிதிறன் சோதனைகளை விருத்தி செய்யவும் திருத்தி அமைக்கவும் தக்க வாய்ப்புக்கள் கிடைத்தன.

முதலாவது உலகப் போர் சமயத்தில் அமெரிக்கர்கள் எதையும் விரிந்த அளவில் செய்யக்கூடியவர்களா யிருந்தபடியால் ஒரே வேளையில் மிகப் பலருடைய அறிதிறனைச் சோதிக்கத் தகுந்த சோதனைகளை வகுத்தனர். சாதாரணமான காலத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சோதிக்க முடியும். ஆனால் போர் வேளையில் அவசரமாகப் பலரை ஒரே வேளையில் சோதித்து அறியவேண்டிய நிலைமை உண்டாகும். அதற்குத் தனிச் சோதனைகள் போதா, குழுச் சோதனைகளே (Group tests) தேவை. பினேயின் சோதனைகள் தனிச் சோதனைகள்; அமெரிக்கச் சேனைச் சோதனைகள் குழுச் சோதனைகள்.

சில வேளைகளில் நாம் சோதிக்க விரும்பும் மக்களுக்குச் சோதனைகளை அமைத்துள்ள மொழி தெரியாமலிருக்கலாம். மேலும், கிராம மக்களுக்கு எளிதில் எட்டாத உலக விவகாரங்களைப்பற்றியும் சோதிக்கவேண்டிய தேவை ஏற்படலாம். இத்தகைய வேளைகளில்