பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவுமுதற் கொள்கை

268

அறுவடை எந்திரங்கள்

காணப்படுகிறது. அறிவுமுதற் கொள்கையின் இலட்சியமாகிய நல்ல அஸ்திவாரத்தோடு கூடிய அறிவுக்கும் ஐம்புல நுகர்ச்சியை ஆதாரமாகக்கொண்ட வெறும் கருத்துக்கும் மாறுபாடு எப்பொழுதும் இருந்திருக்கிறது. மாயாவாதத்தின் தொடக்கம் என்றுகூட அறிவுமுதற் கொள்கையைச் சொல்லலாம்.

மதத்தில் எல்லா மனிதர்களாலும் ஒப்புக்கொள்ளக் கூடிய முறையில் மத சம்பந்தமான நம்பிக்கைகளை அமைப்பதிலும், மதக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும், புத்தியின் தனிப்பட்ட உபயோகத்தைத் தெரிவிப்பதற்குக் கடவுளைக் குறித்த சாஸ்திரங்களில் புத்தியைப் பிரமாணமாகக் கொண்ட இந்தக் கொள்கை பயன் பட்டிருக்கிறது. மத சம்பந்தமான நம்பிக்கைகளை அழிப்பதற்குப் புத்தியை (Reason) உபயோகிக்கின்ற மதத்தின் பழக்கமானது கடவுளைப்பற்றிய துணிபுகளுக்கு நேர்விரோதமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஏனெனில் மதத்தில்தான் புத்தியினால் துணிந்துரைக்கும் தன்மை மிகத் தெளிவாக உணரப்பட்டது.

தற்காலத்தில் புத்தியைக் கொண்டு ஆராயாமல் (Non-rational) பல விஷயங்களையும் ஏற்றுக்கொள்வதான போக்கைக்கண்டு திருப்தி அடையாததால் 17ஆம் நூற்றாண்டில் டேக்கார்ட் (Descartes) என்ற பிரெஞ்சு தேசத் தத்துவஞானி, தத்துவத்தின் புது அமைப்பை ஏற்றுக்கொண்டார். அவர் எல்லாவற்றையும் சந்தேகிப்பதிலேயே தொடங்கினார். நம்மையெல்லாம் ஏமாற்றுவதாகிய ஐம்புலன்களின் அத்தாட்சியைத் தள்ளினார். ஆனால் ஒன்றை மட்டும் அவரால் சந்தேகிக்க முடியவில்லை. அதுதான் அவர் உயிர் வாழ்ந்திருத்தல் (Existence). அதையும்கூட சந்தேகித்துப் பார்த்தார். ஏமாந்து போவதற்காவது, அல்லது சந்தேகிப்பதற்காவது, அல்லது தப்பு நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்காவது அவர் உயிரோடு இருந்துதான் ஆகவேண்டும் என்று எண்ணினார். அவருடைய பிரசித்தமான, உறுதியான கொள்கை, “நான் நினைக்கிறேன். ஆதலால் நான் உயிரோடிருக் கிறேன்” என்பதுதான். அவர் இதிலிருந்து தமது தத்துவ சாஸ்திரத்தை அமைக்க ஆரம்பித்தார். கடவுளின் உண்மையைப்பற்றிச் சந்தேகமறத் தெளிந்து கொண்டார். பொருள்கள் (Matter), உள்ளம் (Mind) இவைகளுக்குக் கடவுளோடு கூடிய சம்பந்தம் ஆகிய இவற்றையும் உணர்ந்துகொண்டார். ஐம்புலன்களின் நுகர்ச்சியினால் இவைகள் ஒப்புக்கொள்ளப்படவில்லை. ஆனால் அறிவாராய்ச்சியினால் ஏற்பட்ட மிகவும் அவசியமான கருத்துக்கள் என்று ஆதாரங்கள் மூலமாகத் திருப்தி செய்விக்கப்பட்டமையால்தான் இவை ஒப்புக் கொள்ளப்பட்டன. அனுபவத்தினின்றும் வேறுபட்டவையாய் வேறொன்றையும் சாராதனவாயுள்ள சில கருத்துக்களை (Ideas) அவர் நிச்சயமாய் உணர்ந்து கொண்டார். இந்தக் கருத்தைக் காட்டிலும் உயர்ந்ததான ஒரு காரணப் பொருளினால்தான் இந்தக் கருத்துத் தம் மனத்தில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த ஆதி காரண வஸ்துவே கடவுள். அவர் இருந்துதான் ஆகவேண்டும் என்று அவர் வாதித்தார். அவ்வாறே ஒவ்வொரு கருத்தும் ஒரு காரணத்தை உடையதாக இருக்கவேண்டும் என்று கருதினார். இதனை அவர் எவ்வாறு நிரூபித்தார்? அவர் கருத்துப்படி எல்லா அறிவுகளுக்கும் உண்மைக்கும் தோற்றும் இடமான (Source) ஞானத்தின் சுடராயுள்ள பேரறிவுச் சுடரொளியைப்பற்றிச் சிந்திக்கச் சொல்வதன் மூலமாகத்தான் நிரூபித்தார். தத்துவ விசாரணையில், உதவி வேண்டாத புத்தியில் (Unaided reason) நம்பிக்கை கொள்கின்ற அதே முறையைத்தான் ஸ்பினோசா, லைப்நிட்ஸ் என்பவர்களும் பின்பற்றினார்கள். அவர்கள் எல்லோரும் அறிவுமுதற் கொள்கையை உடையவர்கள். இந்திய தத்துவ சாஸ்திரத்தில் பௌத்தமதம் தீவிரமான அறிவுமுதற் கொள்கைக்குச் சிறந்த உறுதியான உதாரணமாக அமைந்திருக்கின்றது.

குணதோஷ ஆராய்ச்சி: கேவலம் புத்தி தத்துவத்திலேயே தோற்றுவதுதான் அறிவுமுதற் கொள்கையின் முக்கிய முறையாகும். தருக்க ரீதியில் ஒற்றுமை யுடைமை (Logical consistency) என்பதைக் கொண்டு மனிதர்கள் திருப்தி அடைவார்கள் என்று இந்தக் கொள்கையினர் கருதுகின்றனர். உணர்ச்சியும் அனுபூதி நிலையாகிய காரணங் காண முடியாத அனுபவங்களும் (Mystical experience) சேர்ந்ததே மதத்தின் உயிர் நாடியாகும். தற்கால உளவியல் ஆராய்ச்சி இந்தக் கொள்கையின் வன்மையை மிகுதியாகக் குறைத்துவிட்டது. பா.

நூல்கள் : G.S. Fullerton, An Introduction to Philosophy ; Dr. S. Radhakrishnan, Indian philosophy.

அறுகம்புல் (அறுகு) விளைநிலங்களிலும் வெற்று நிலங்களிலும் பூமிக்கு மேலும் பூமியினுள்ளும் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் தன்மையுடையது. இது இந்திய நாட்டுப் புல்வகைகளுள் மிக நல்ல ஓரினம் ; புல்தரை அமைக்கச் சிறந்தது; தரையை நீர் அரித்துச் செல்லாமல் மண்ணை நிலையாக நிறுத்துவதற்கு மிகவும் ஏற்றது. இது நிரம்பக் கிளைத்து அடர்த்தியாக நெருங்கி வளரும். மாடும் குதிரையும் இந்தப் புல்லை விரும்பித் தின்னும். பயிர் செய்யும் இடங்களில் மட்டும் இது களையாக மிகவும் இடர் செய்யும். இதை விளைநிலத்திலிருந்து அகற்றப் பெருமுயற்சி வேண்டும். குடும்பம் : கிராமினீ (Gramineaé); இனம்: சைனொடான் டாக்ட்டிலான் (Cynodon dactylon).

அறுகை ஒரு குறுநில மன்னன்; சேரன் செங்குட்டுவனுக்கு நண்பன் ; பழையன் என்னும் மோகூர் மன்னனுக்குப் பகைவன். மோகூர் மன்னனுக்கு அஞ்சிப் பதுங்கியிருந்த அறுகைக்குதவி செய்வதற்கு, மோகூர் மன்னனைச் சேரன் செங்குட்டுவன் வென்று, அவனுடைய காவல் மரமாகிய வேம்பை வெட்டி, வெற்றி முரசையுங் கைக்கொண்டான் (பதிற். 44).

அறுப்புக்கோட்டை இராமநாதபுரம் மாவட்டத்தில் இதே பெயருள்ள தாலுகாவின் தலைநகர். இங்கு நெசவுத் தொழில் முக்கியமானது. மக்: 48,554 (1951), தாலுகா மக்: 2,42,777 (1951).

அறுபட்ட பீடபூமி (Dissected plateau) : ஒரே உயரமுள்ள சில குன்றுகள் ஒன்றையொன்று அடுத்துச் சில இடங்களில் காணப்படும். இவையெல்லாம் முன்னொரு காலத்தில் ஒரு பீடபூமியின் பல்வேறு இடங்களாக இருந்தவை. பிறகு இடையிடையே பூமி அரிமானத்தால் பள்ளத்தாக்குகள் ஏற்பட்டு, எஞ்சிய பகுதிகள் எல்லாம் குன்றுகள்போல் காணப்படுகின்றன. அறுபட்ட பீடபூமி என்பது முன்பு பீடபூமியாக இருந்த இடத்தில் பிறகு இடையே பள்ளத்தாக்குகள் ஏற்பட்டதைக் குறிக்கும்.

அறுவடை எந்திரங்கள் (Harvesting machinery): புல், தானியப் பயிர்கள், வேர்ப்பயிர்கள் ஆகியவற்றை அறுவடை செய்ய வெவ்வேறு வகை எந்திரங்கள் தேவை. அறுவடை என்பது முன்னர்க் கடினமானதும், நெடுநாட் செல்லத் தக்கதுமான செயலாக இருந்தது. அரிவாளும் கருக்கரிவாளுமே