பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறுவை வணிகன் இளவேட்டனார்

271

அன்டிமனி

அமைத்து, இதிலுள்ள பெட்டிக்குள் புல்லைத் திணித்து, மேலிருந்தும் பக்கவாட்டிலும் எந்திரத்தால் அழுத்துகிறார்கள். உள்ளிருக்கும் புல் குறிப்பிட்ட அளவை அடைந்ததும் எந்திரம் அதைத் தானாகவே கட்டிவிடுகிறது.

வைக்கோல் கூட்டி

இரண்டாம் வகைப் புல்கட்டியை டிராக்டர் வயலில் இழுத்துச் செல்லும். அப்போது அது புல்லைப் பொறுக்கி எடுத்து ஒரு பெட்டிக்குள் தள்ளுகிறது. அங்கு அது ஓர் எஞ்சினின் உதவியால் மேலும் பக்கவாட்டிலும் அழுத்தப்பட்டுக் குறிப்பிட்ட அளவை அடைந்ததும் கட்டுக்களாகக் கட்டப்படுகிறது.

கையினால் வைக்கோலை அழுத்தும் எந்திரங்களைக் கொண்டு 1948ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் சோதனைகள் செய்தார்கள். நூறு ராத்தல் நிறையும் 4’×2’×2’ அளவுமுள்ள கட்டைக் கட்ட 15 நிமிடம் ஆகும் எனக் கண்டார்கள். ஆனால் சுமார் ரூ.1,500 விலையுள்ள இந்த அழுத்தியை வழக்கத்திற்குக்கொண்டு வர முடியவில்லை.

அறுவை வணிகன் இளவேட்டனார் கடைச் சங்கப் புலவர். இவரை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்பர். அறுவை–ஆடை. இவர் பாடிய செய்யுட்கள் பத்து (அகம் 56,124,230,254, 272, 302); (புறம் 329); (நற்.344); (குறுந். 185); (திருவள்ளுவமாலை 35).

அறையணி நல்லூர் தென்னார்க்காடு ஜில்லா, திருக்கோவலூர் புகைவண்டி நிலையத்துக்கு மிகவும் அருகில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள சிவத்தலம். இப்போது அரகண்ட நல்லூர் என மருவி வழங்குகிறது. கோயில் ஒரு சிறு குன்றின்மேல் இருக்கிறது. இங்கே பஞ்சபாண்டவர் குகை என்னும் ஐந்து அறைகளும், திரௌபதியிருந்ததென்னும் சிறிய அறையொன்றும் இருக்கின்றன. பிரசண்ட ரிஷி பூசித்த இடம். சுவாமி பெயர் அறையணிநாதேசுரர். அம்மன் அருள் நாயகி. தீர்த்தம் பெண்ணையாறு. பாறைமீது பெரிய கோபுரத்துடன் இக் கோவில் மிக அழகாகத் தோன்றுகிறது. இது திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது.

அன்டார்க்டிக் சமுத்திரம்: தென் துருவத்தைச் சூழ்ந்துள்ள கடலை அன்டார்க்டிக் சமுத்திரம் என்பர். சிலர் இது பசிபிக், அட்லான்டிக், இந்திய சமுத்திரங்களின் தென் கோடிகளின் தொகுதியே யென்றும் கூறுகின்றனர். இச்சமுத்திரத்தில் பெரிய பனிக்கட்டித் திட்டுக்கள் மிதக்கின்றன. இவற்றில் சில, ஆயிரம் அடி திண்ணமும் பல ஏக்கர்கள் பரப்பும் உள்ளவை. இங்குச் சராசரி வெப்பநிலை 30° பா. நாடு காண்பவர்கள் இக்கடலைக் கடந்து தென் துருவத்தை யடைந்துள்ளனர். ஆர்க்டிக் சமுத்திரத்தைச் சூழ்ந்து நிலப் பரப்பு இருப்பதுபோல இக்கடலைச் சுற்றிலும் நிலப் பாகங்கள் ஒன்றும் இல்லை.

அன்டார்க்டிகா என்பது தென் துருவத்தைச் சுற்றியுள்ள நிலத்தையும் சமுத்திரத்தையும் குறிக்கும். அது வட அமெரிக்காவின் பரப்பில் மூன்றில் இரண்டு பங்குடையது. ஆனால் எப்போதும் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். அங்கே வேனிற்காலத்தில் 20° குளிராக இருக்கும். அன்டார்க்டிகா கண்டத்தில் முதன் முதல் கால் வைத்தவர் அங்கு 1895-ல் சென்ற கிறிஸ் டென்ஜென் என்னும் நார்வே நாட்டினர். நிலம் தென் துருவம் வரை உயர்ந்துகொண்டே போகிறது. தென் துருவம் கடல் மட்டத்துக்கு மேல் 10,500 அடி உயரமானது.

பத்துக்கோடி ஆண்டுகட்குமுன் அங்கு இவ்வளவு குளிர் கிடையாது. அக்காலத்தில் தாவரம் செழித்திருந்தது என்பது அங்குக் காணப்படும் பாசில்களாலும் நிலக்கரியாலும் தெரியவருகிறது. இப்போது அந்நிலந்தான் பூமியில் மிகக் குளிர்ந்த பகுதியாகும். அங்குப் பெரும்பாலும் 18° முதல் 68° வரை குளிராக இருப்பதால் மழை பெய்வதேயில்லை. பாசம், பாசிக்காளான் கடலிலுள்ள தாவரம் தவிர வேறு தாவரம் கிடையாது. மைக்கிராஸ்கோப் வாயிலாகவே கண்ணுக்குப் புலனாகும். பெங்குவின் தான் முக்கியமான பறவை. சிறு பூச்சிகளும் காணப்படுகின்றன.

சில நிலக்கரியும் கடல் நாய்களும் (Seal) காணப்பட்டாலும் பயன்படுத்தக் கூடியவையாக இல்லை. இப்போது மக்கள் அங்குப் போவதெல்லாம் அங்கு உள்ளது யாது என்று தெரிந்துகொள்வதற்காகவே. அண்டார்க்டிகா பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நார்வே, நியூஜீலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்சு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றிற்குச் சொந்தமாயிருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் யாருக்கும் அதனால் நலம் இப்போது எதுவுமில்லை.

அன்டிமனி: (குறியீடு Sb. அணு எண் 51. அணு நிறை 121.76.) அன்டிமனி சல்பைடு சௌவீராஞ்சனம் என்ற பெயருடன் இந்தியாவில் வெகு காலத்திற்கு முன்பே ஒரு மருந்துச் சரக்காகவும், கண்ணுக்குத் தீட்டும் மையாகவும் பயன்பட்டு வந்திருக்கிறது. சிறிய அளவில் இது தனி நிலையில் பூமியில் கிடைக்கிறது. அனேகமாகக் கொஞ்சம் ஆர்சனிக்கும் இதனுடன் சேர்ந்திருக்கும். ஆக்சிஜனுடன் கூடி அன்டிமனி புளூம் (Antimony bloom), அன்டிமனி ஆக்கர் (Antimony ochre) போன்ற கனியங்களாகவும், கந்தகத்துடன் கூடிச் சௌவீராஞ்சனமாகவும், ஆக்சிஜனுடனும் கந்தகத்துடனும் கூடிச் செவ்வஞ்சனமாகவும் (Antimony blende) இது கிடைக்கிறது.

தயாரிக்கும் முறை: அன்டிமனி தாதுக்களுக்குள் சௌவீராஞ்சனந்தான் முக்கியமானது. இத்தாதுவைச் சுத்தம் செய்து இரும்புத் துகளுடன் சேர்த்துச் சூடு செய்தால் அயகசல்பைடு உருகிய அன்டிமனியின் மேல் கசடாக மிதக்கும். அன்டிமனியைத் தெளிய வைத்து எடுத்து விடலாம். மறுபடியும் சிறிது வெடியுப்புடன் சூடு செய்தால் கந்தகம் முதலிய பொருள்கள்