பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்டிமனி

272

அன்னபேதி

ஆக்சைடாக மாறி விலகும். சுத்தமான அன்டிமனி பின் தங்கும்.

படிக வடிவங்கள் : அன்டிமனி நான்கு படிக் வடிவங்களில் கிடைக்கிறது. இவற்றுள் முதல் வகையான மஞ்சள் அன்டிமனி ஒரு நிலையற்ற பொருள். அன்டிமனி ஹைடிரடுடன், குளோரினையாவது அல்லது ஓசோனையாவது 90° வெப்ப நிலையில் செலுத்தினால் மஞ்சள் அன்டிமனி கறுப்பு அன்டிமனியாக மாறும். இது அன்டிமனியின் இரண்டாம் வடிவம். இதற்குச் சாதாரண அன்டிமனியைவிட ரசாயன வீரியம் அதிகம். அன்டிமனி குளோரைடை அடர் ஹைடிரோ குளோரிக் அமிலத்தில் கரைத்து மின்சாரத்தைச் செலுத்தினால் வெடி அன்டிமனி (Explosive anti- mony) உண்டாகும். இது மூன்றாம் வகை. இதனுடன் சிறிது குளோரினும் சேர்ந்திருக்கும். இதைச் சூடு செய்தாலும், சுத்திகொண்டு அடித்தாலும், அல்லது கோலால் கீறினாலும், ஓசையுடன் வெப்பத்தையும் வெளியிட்டுச் சாதாரண அன்டிமனியாக மாறும். நான்காம் வகை பீட்டா அன்டிமனி அல்லது உலோக அன்டிமனி எனப்படும். இது வெள்ளிபோல் பளபளப்பும் படிக வடிவமும் கொண்டது.

தன்மைகள் : அன்டிமனி எளிதில் பொடியாகும். இது மின்சாரத்தையும் வெப்பத்தையும் சரிவரக் கடத்துவதில்லை. இதன் உருகுநிலை 630°5. ஒப்பு அடர்த்தி 6.7. ஈரமான காற்றுப்பட்டாலும், ஆக்சிஜனுடன் சேர்த்துச் சூடு செய்தாலும் இது ஆக்சைடாக மாறும். இது உப்பீனிகளுடன் நேரடியாக வீரியத்துடன் கூடும். கந்தகம், பாஸ்வரம், ஆர்சனிக்கு முதலியவைகளுடனும் கூடும். நீர்த்த அமிலங்கள் அன்டிமனியைக் கரைப்பதில்லை ஆனால் அடர் அமிலங்கள் வெகு விரைவில் இதைத் தாக்குகின்றன.

பயன் : உருகிய அன்டிமனி திடமாகும்பொழுது சிறிது பருமன் அதிகப்படுவதால் அதைக் கொண்டு நல்ல அச்சுக்கள் தயாரிக்கலாம். அன்டிமனி சேர்ந்த உலோகக் கலவைகள் சிலவற்றில் மற்ற உலோகங்களின் அளவு கீழே தரப்பட்டிருக்கின்றன.

வெள்ளீயம் காரியம் அன்டிமனி செம்பு
அச்சு உலோகம் (Type metal) 5 75 20
வார்ப்பு அச்சு உலோகம் (Stereotype metal) 2.3 84.2 13.5
இருசுநிலை உலோகம் (Bearing metal) 20 60 20
பிரிட்டானியா உலோகம் 93.4 4.6 2
வெள்ளை உலோகம் 85 10 5
தகரக்கலவை (Pewter) 83.85 0.20 0.7 0.4

ரப்பரை வல்கனாக்கவும், நெருப்புக்குச்சி, பூச்சுக்கள், பீங்கான், கண்ணாடி, நிறங்கவ்விகள் முதலியன தயாரிக்கவும் அன்டிமனியும் அன்டிமனியின் கலவைகளும் பயன்படுகின்றன. அன்டிமனி ஒரு கொடிய நஞ்சாக இருந்தாலும் மருத்துவத்தில் பயன்படுகிறது. டி.ச.

அன்டிமனியின் கூட்டுக்கள்

ஹைடிரைடு (Sb H3) : இது ஸ்டிபைன் (Stibine) எனவும் வழங்கும். அன்டிமனியையும் நாகத்தையும் கலந்து ஹைடிரோ குளோரிக் அமிலத்துடன் வினைப்படுத்தியும், அன்டிமனிக் கூட்டுக்களை ஜனித்த ஹைடிரஜனால் குறைத்தும் இதைப் பெறலாம். கெட்ட மணமுள்ள இவ்வாயு ஒரு நஞ்சு. இது ஊதா நிற ஒளியுடன் எரிந்து சிதையும். உப்பீனிகளாலும், ஹைடிரஜன் சல்பைடினாலும் இது சிதைகிறது.

ஆக்சைடுகள்: அன்டிமனி டிரையாக்சைடு (Sb2O5), அன்டிமனி டெட்ராக்சைடு (Sb2O4), அன்டிமனி பென்டாக்சைடு (Sb2O5) என மூன்று ஆக்சைடுகள் அறியப்பட்டுள்ளன. அன்டிமனியைக் காற்றில் எரித்து டிரையாக்சைடைப் பெறலாம். இது வெண்மையான தூள். இது நீர்த்த ஹைடிரோகுளோரிக அமிலத்திலும், டார்ட்டாரிக அமிலத்திலும் கரையும். அன்டிமனியை நைட்ரிக அமிலத்தால் ஆக்சீகரணித்துச் சுட்டு, டெட்ராக்சைடை வெண்மையான தூளாகப் பெறலாம். இது அமிலங்களில் கரைவதில்லை. அன்டிமனியை நைட்ரிக அமிலத்தில் கரைத்து, 275°க்குச் சூடேற்றிப் பென்டாக்சைடைப் பெறலாம். மஞ்சள் நிறத் தூளான இதைச் சூடேற்றினால் இது ஆக்சிஜனை வெளிவிட்டு டெட்ராக்சைடாக மாறும்.

ஹாலைடுகள் அன்டிமனி உப்பீனிகளுடன் கூடி டிரைஹாலைடுகளையும், பென்டாஹாலைடுகளையும் அளிக்கும். அன்டிமனியைக் குளோரினில் எரித்து, அன்டிமனி டிரைகுளோரைடைப் பெறலாம். இது நிறமற்ற திண்மம். இது டார்ட்டர் உப்பு (த. க.) என்ற மருந்தைத் தயாரிக்கப் பயனாகிறது. இதைச் சூடேற்றி, இதன் மேல் குளோரினைச் செலுத்தினால் பென்டா குளோரைடு கிடைக்கும். இது துர்நாற்றமுள்ள திரவம். இதைச் சூடேற்றினால் குளோரினை வெளிவிட்டு டிரை குளோரைடாக மாறும். நீர்த்த ஹைடிரோபுளோரிக அமிலத்தில் அன்டிமனி டிரையாக்சைடைக் கரைத்து அன்டிமனி டிரைபுளோரைடைப் பெறலாம். அன்டிமனி டிரைபுளோரைடு-அம்மோனியம் சல்பேட்டு (Sb F3, (NH4)2 SO4) என்ற இரட்டை உப்பு 'அன்டிமனி உப்பு' என்ற பெயருடன் சாயத் தொழிலில் பயனாகிறது.

கரிமக் கூட்டுக்கள்: அன்டிமனியின் கரிமக் கூட்டுக்களில் பல மருத்துவத்தில் பயன்படுகின்றன. பொட்டாசியம் அன்டிமானில் டார்ட்டரேட் என்ற டார்ட்டர் உப்பு (த. க.) மருத்துவத்திலும் சாயத் தொழிலிலும் பயன்படுகிறது. ஸ்டிபமைன் குளுகோசைடு என்ற பொருள் நியோஸ்ட்ரம் (Neostram) என்ற பெயருடன் காலா அசார் என்ற கறுப்புக் காய்ச்சலுக்கு மருந்தாகப் பயனாகிறது.

அன்பில் ஆலந்துறை: திருச்சிராப்பள்ளி ஜில்லா, லால்குடி புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கே 3 மைலில் கொள்ளிடத்துக்கு வடகரையில் உள்ளது. இது கீழ்அன்பில் எனவும் வழங்கும். பிரமன் முதலியோர் வழிபட்ட இடம். வாகீச முனிவர் பூசித்த தலம். கொள்ளிடத்துக்குத் தென்கரையில் நின்று திருஞானசம்பந்தரும் அப்பர் சுவாமிகளும் பாடிய பாடல்களைக் கேட்ட இவ்வூர்க் கோவிலின் சுற்றின் தென்மேற்கில் உள்ள விநாயகருக்குச் செவிசாய்த்த விநாயகர் என்று பெயர். சுவாமி சத்தியவாகீசுரர். அம்மன் செளந்தரநாயகி. கொள்ளிட நதி தீர்த்தம்.

அன்னபேதி (குறியீடு Fe SO4, 7H2O) படிகவடிவுள்ள அயச சல்பேட்டு என்ற ரசாயனப் பொருள் இப்பெயருடன் இந்திய மருத்துவத்தில் தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. இது இலேசான பச்சை நிறமும், துவர்ப்பான சுவையும் உடையது. காற்றிலுள்ள ஈரத்தை உறிஞ்சி, இது ஒருவகைப் பழுப்பு நிறமாக மாறும். இரும்புக் கந்தகக் கல்லை ஆக்சீகரணித்து இது தயாரிக்கப்படுகிறது. கறுப்பு