பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனாம்

277

அனுகரணம்

றிய நூல்கள் நச்சினார்க்கினியர், சைவ சித்தாந்த வரலாறு, ஒளவையார், ஏகநாதர், தமிழ்ப் பெருமக்கள் வரலாறு, மாணவர் தமிழகராதி, பழமொழி அகராதி முதலியவை. இவர் பல தமிழ் நூல்களை ஆராய்ச்சிமிக்க முன்னுரைகளுடன் பதிப்பித்திருக்கின்றார். தமிழ்ப் புராணங்கள், தமிழ் மொழி முதலிய பல பொருள்களைப்பற்றிய கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். (பி.20-9-1877-இ. ஏப். 1940).

அனாம் (Annam) பிரெஞ்சு இந்தோ சீனப்பிரதேசத்தின் கீழைக்கரையில் பிரெஞ்சுப் பாதுகாப்பு நாடாயிருந்தது. இப்போது (1936) வியட்நாமின் ஒரு பகுதி. பரப்பு 56.974 மைல். மக் : சு. 71.84,000 (1948). பிரெஞ்சு ஐக்கியத்தில் உட்பட்ட நாடு வியட்நாம். அதன் அரசர் இங்கு வசிக்கிறார். தலை நகர் ஹ்வெ (Hue). மக் : சு. 40.000. முக்கிய விளை பொருள் அரிசி, பட்டு, தாமிரம், நாகம், தங்கம் முதலியனவும் கிடைக்கின்றன. இது இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான் வசம் சிக்கி 1945-ல் மறுபடியும் பிரான்சிற்கு உரிமையாயிற்று.

அனிச்சம் என்பது தமிழ் இலக்கியத்திற் பேசப்படும் மலர். அது மிகவும் மென்மையும் நொய்ம்மையும் வாய்ந்ததாகும். மோப்பக்குழையும் தன்மை வாய்ந்தது அம் மலரென்று திருக்குறள் கூறுகின்றது.

அனிலீன் (Aniline ) முதலில் அவுரிச் சாயமான நீலியிலிருந்து தயாரிக்கப்பட்டதால் இப் பெயர் பெற்றது. இது அரோமாடிக அமின்களில் முக்கியமானது. இது பீனைலமின் என்ற பெயராலும் வழங்கும். நிறமற்ற, எண்ணெய் போன்ற திரவமான இதன் கொதி நிலை 189°; ஒப்பு அடர்த்தி 1.024. இது நீரிற் கரையும். காற்றிலுள்ள ஆக்சிஜனை ஏற்றுச் சிறிது சிறிதாகப் பிசினாகும். இது கொடிய நஞ்சு.

வலிவற்ற மூலமான இது அமிலங்களுடன் கூடி உப்புக்களை அளிக்கும். அனிலீன் ஹைடிரோகுளோரைடு என்ற உப்பை 'அனிலீன் உப்பு' என்று வணிகர் வழங்குகிறார்கள். நிறமற்ற படிகமான இது நீரிற் கரையும்; காற்றுப்பட்டால் பச்சை நிறம் பெறும்.

இதிலுள்ள அமினோத் தொகுதியை நீக்கி, ஓர் அமிலத் தொகுதியை இணைத்தால் அனிலைடு என்ற வகையான பொருளாக ஆகும். இவ்வகைப் பொருள்களில் அசிடனிலைடு என்பதும் ஒன்று. அசிடிக அமிலத்தையும் அனிலீனையும் வினைப்படுத்தி இதைப் பெறலாம். ஆன்டிபெப்ரின் (Antifebrin) என்ற பெயருடன் இது சுரம் தணிக்கும் மருந்தாகப் பயனாகி வந்தது.

அமிலக் கரைவில் அனிலீனை நைட்ரச அமிலத்துடன் வினைப்படுத்திட யசோனிய உப்பாக மாற்றலாம். (பார்க்க: டயசோக் கூட்டுக்கள்). இதை அடிப்படையாகக் கொண்டு முக்கியமான பல சாயப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. (பார்க்க: சாயங்களும், சாய இடைப் பொருள்களும்) பல மருந்துகளும் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஆகையால் அனிலீன் ஒரு முக்கியமான ரசாயன மூலப்பொருள். இரும்புத் தூளையும் ஹைடிரோகுளோரிக அமிலத்தையும் கொண்டு நைட்ரோ பென்சீனைக் குறைத்து இது தயாரிக்கப்படுகிறது. இவ்வினையிற் கிடைக்கும் பொருளை நீராவியில் வாலை வடித்துச் சுத்தப்படுத்தவேண்டும். குளோரோ பென்சீனை உயர்ந்த அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் ஓர் ஊக்கியின் உதவியால் வினைப்படுத்தி அனிலீனைத் தயாரிப்பதுமுண்டு. பார்க்க : அமின்கள். எஸ். ர.

அனுகரணம் (Imitation) ; இயல்பூக்கங்கள் (Instincts) பல. இவை இயற்கையாகவே நம்மில் அமைந்துள்ளன. இவற்றில் ஒத்துவாழும் (Gregarious) இயல்பூக்கமும் ஒன்று. தம் இனத்துடன் ஒருமித்துக் கூடுவது விலங்குகளிலும் மனிதரிலும் காணப்படும் ஒரு செயல். இந்த இயல்பூக்கம் நம் நினைவிலும், உணர்ச்சியிலும், செயலிலும் வெளிப்படும். இரண்டே பேர்கள் கூடினாலும் இதைத் தெளிவாகக் காணலாம். ஒருவருடைய கருத்துக்களும் நினைவுகளும் மற்றவர் உள்ளத்தில் பதிகின்றன. ஒருவர் கூறும் காரணங்களை அறிந்து, ஆராய்ந்து அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வது ஒருவகைச் செயல். அறியாமலேயே, அவருடைய எண்ணங்களை ஏற்றுக்கொள்வது மற்றொரு வகைச் செயல். இதுபோன்ற செயல் உணர்ச்சிகளிலும் நிகழ்கிறது. ஒருவருடைய செயலைப் பார்த்து நமக்கும் அது போலவே செய்யத் தோன்றுகிறது. நடு வீதியில் ஒருவர் எதையாவது குனிந்து பார்த்தால் நாமும் அதுபோலவே செய்கின்றோம். இதுவே அனுகரணம் எனப்படும். நம்மிடத்துள்ள ஒத்துவாழும் இயல்பூக்கம் செயல் வழியாய் வெளிப்படுவதே அனுகரணம்.

இந்த இயல்பூக்கம் இயற்கையிலேயே உயிர்களிடத்தில் அமைந்திருப்பதனால், அனுகரணமும் அவைகளிடத்தில் இயற்கையாகக் காணப்படுகின்றது. இது இரண்டு பேர்களிருக்குமிடத்தில் தோன்றினும், இதைப் பல பேர்கள் சேரும் இடங்களில் தெளிவாகக் காணலாம். ஒரு கூட்டத்தில் ஒரு தலைவரிருந்தால் அவரைப் பின்பற்றி எல்லோரும் தங்கள் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், செயல்களையும் மாற்றிக்கொள்வதை யாவரும் காணலாம். குழந்தைகளிடம் அனுகரணம் நன்றாகக் காணப்படுவதைக்கொண்டு, அது குழந்தைகட்கே உரியதென நினைப்பது தவறு. அது வயதானவர்களிடத்தும், குழந்தைகளிடத்தும், விலங்குகளிடத்தும் இயற்கையாகவே உள்ளது.

அறியாமல் செய்வது (Unwitting), அறிந்து செய்வது (Witting) என அனுகரணம் இரண்டுவகைப்படும். வேறு குழந்தைகளைப் போலவோ, பெரியவர்களைப் போலவோ பேசுவதும் நடிப்பதும் குழந்தைகட்குத் தம்மை யறியாமலே வரும். தவிரவும், மற்றவர்களின், முக்கியமாகப் பெரியவர்களின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்தறிந்து அவற்றைப் பின்பற்றுவது குழந்தைகளின் இயல்பு. இதுபோலவே பெரியவர்களும் நடப்பதுண்டு. நாலுபேர் ஓர் இடத்தை நோக்கி ஓடினால், அதைக் கண்ட மற்றவர்களும் அதே இடத்திற்கு ஓடுகிறார்கள். இது அறியாமல் செய்வதாகும். அறிந்து செய்வதில், நாம் ஒருவரின் நடத்தையையோ, பேச்சையோ கவனித்து, அதைப்போல் செய்ய முயலுகிறோம். அவருடைய பேச்சைக் கவனித்துப் பல தடவைகள் முயற்சி செய்து, அதைப்போல் பேசப் பழகுகிறோம். ஆனால் இதில் நமக்கு முடிகின்றவற்றையே செய்யலாம். நமது சக்திக்கு மேற்பட்டவைகளை எவ்வளவு கவனமாகப் பார்த்துச் செய்ய முயன்றாலும் இயலாது. பறவையைப்போல் பறக்க நினைத்தால், நம்மால் முடியாது.

இவ்விதம் மனிதனிலும் விலங்குகளிலும் அனுகரணம் இயற்கையாகக் காணப்படுவதால் இது ஓர் இயல்பூக்கம் என்று கூறத் தோன்றும். ஆனால் அப்படிக் கூறுவது சரியன்று. ஓர் இயல்பூக்கம் ஒரு தனிப்பட்ட (Specific) தூண்டுதலினாலேயே (Stimulus) ஒரு துலங்கலாக (Response) வெளிப்படும். அவ்வாறு வெளிப்படும் துலங்கல் ஒரு தனிப்பட்ட வகையைச் சேர்ந்ததாயிருக்கும். சான்றாக, சண்டையிடும் இயல்பூக்கம் (Combat Instinct) நம்மிடத்திலுள்ளது. நமது எண்ணத்திற்கு இடையூறு உண்டாக்குவது