பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுடம்

278

அனுபூதிக்கலை

எதுவோ அது இந்த இயல்பூக்கத்தைத் தூண்டிவிடும். இந்த இடையூற்றை மாற்றுவதே இதன் துலங்கலாகும். இது போலவே மற்ற இயல்பூக்கங்களும். அனு கரணம் இவ்விதமான ஓர் இயல்பூக்கமன்று; அது ஒரு தனிப்பட்ட தூண்டுதலினால் வெளிப்படுவதுமன்று; தனிப்பட்ட துலங்கலுடையதுமன்று.

அனுகரணம் குழந்தைப் பருவத்திலிருந்தே நம்மிடம் தோன்றுவதால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதை அறிந்து குழந்தைகள் நல்வழியில் நடக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அ. சு. நா. பி.

அனுடம் (Scorpii δ, β, π) : இது வடமொழியில் அனுராதா என்று வழங்கும் 17ஆம் நட்சத்திரம். அனுராதா என்பது வெற்றி அல்லது நலன் என்று பொருள்படும். வில், முடப்பனை அல்லது விரித்த குடை போல இருப்பதாகக் கூறுவர். இது விருச்சிகராசியில் உள்ளது. இதன் நடுவிலுள்ள அன்டாரஸ் என்று மேனாட்டார் கூறும் நட்சத்திரம் முதன்மையானது. தீப்போல் சிவந்த நிறமுடையது. அதன் பக்கத்திலுள்ள நட்சத்திரம் பச்சை நிறமுடையது. விருச்சிக ராசியிலுள்ள இந்த நட்சத்திரத்தொகுதி மேனாட்டு வான அட்டவணையில் ஸ்கார்ப்பியோ என வழங்கும் நட்சத்திரங்கள் அடங்கியது. இவை சுமார் 390 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன.

அனுநாதம் (Resonance) : இருமுனைகளும் திறந்திருக்கும் குழல் ஒன்றை ஒரு முனை நீரில் அமிழ்ந்திருக்குமாறு பொருத்திவைத்து, அதன் மறு முனையில் ஓர்

அனுநாதம்

இசைக்கவையைப் பிடித்துக் கொண்டு அதை ஒலிக்குமாறு செய்தால் குழாய்க்குள்ளிருக்கும் காற்று இசைக்கவையின் அதிர்வெண்ணுடன் அதிர்ந்து ஒலி தரும். இப்போது காற்று இயற்கையாக அதிரும் அதிர்வெண் வேறாக இருந்தால் ஒலியின் அழுத்தம் குறைவாக இருக்கும். அதிர வைக்கும் பொருளின் இயற்கை அதிர்வெண்ணுடன் காற்று அதிர்வதால் இது பலவந்த அதிர்வு எனப்படும். குழலைச் சரிப்படுத்தி, அதற்குள் இருக்கும் காற்றின் நீளத்தை மாற்றினால், அது குறிப்பிட்டதோர் அளவு இருக்கும்போது காற்றின் இயற்கை அதிர்வெண் இசைக்கவையின் அதிர்வெண்ணுக்குச் சமமாக இருக்கும். இப்போது காற்றின் அதிர்வின் வீச்சு உச்ச நிலையை அடையும். இதனால் ஒலியின் அழுத்தமும் உச்சமாக இருக்கும். இவ்விளைவு அனுநாதம் அல்லது பரிவதிர்வு எனப்படும். ஒரே அதிர்வெண் கொண்ட இரு இசைக்கவைகளில் ஒன்றை அதிரச் செய்து, அதனருகே மற்றதை வைத்தால் அது தானாகவே அதிர்வதைக் காணலாம். இது இயற்கையில் மிகப் பொதுவாக நிகழும் விளைவு. இசைக் கருவிகளின் அனுநாதக் கலங்களில் (Resonators) அனுநாத விளைவு நிகழ்வதால் இசையின் அழுத்தம் அதிகமாகிறது.

மின்சார அனுநாதம் : தடை, தூண்டுமின் தடை, ஏற்புத்திறன் இம்மூன்றும் கொண்டமாறு மின்னோட்டச் சுற்றின் இயற்கை அதிர்வெண் குறிப்பிட்ட ஓர் அளவு இருக்கையில், சுற்றில் நிகழும் மின்னோட்டம் மிக அதிகமாக இருக்கும். இப்போது அச்சுற்றில் அனுநாதம் நிகழ்வதாகவும், இந்த அதிர்வெண் சுற்றின் அனுநாத அதிர்வெண் எனவும் கூறப்படும். தொடராக உள்ள தடை R எனவும், தூண்டுதடை L எனவும், ஏற்புத்திறன் C எனவும் கொண்டால், சுற்றின் மாறுமின் தடை

இதில், அடைப்புக்குள்ளிருக்கும் உறுப்பு, குறிப்பிட்டதோர் அதிர்வெண்ணுக்குச் சுன்னமாகலாம். இப்போது

சுற்றின் மாறுமின் தடை R என்ற மின்தடைக்குச் சமமாகும். இப்போது மாறு மின்தடையின் அளவு நீசமாக இருந்து மின்னோட்டம் உச்ச அளவை அடையும். அதிர்வெண்ணின் இந்த அளவே சுற்றின் அனுநாத அதிர்வெண்ணாகும். ஒரு தூண்டுமின் தடையையும், ஏற்புத் திறனையும் இணையாக இணைத்து அதிர்வெண்ணை மாற்றினால், குறிப்பிட்டதோர் அதிர்வெண்ணில் இவ்விரண்டின் விளைவுகள் ஈடாய்விடலாம். இப்போது இணை அனுநாதம் நிகழ்வதாகக் கூறப்படும். இணை அனுநாதச் சுற்றின் மாறுமின்தடை மிக அதிகமாக இருக்கும். தொடர் அனுநாதத்தில் சுற்றின் அதிர்வெண்ணுக்கும் மின்னோட்டத்தின் அளவுக்கும் உள்ள தொடர்பை வரைப்படம் காட்டும்.

அனுபூதிக்கலை என்பது ஆன்மாவானது கடவுளை அனுபவித்து அறிவதாகும். கடவுள் உண்மையை அறிவினால் காண முடியாது. அனுபவித்தே காண முடியும். இந்த அனுபவம் சிலர்க்கு மட்டுமே ஏற்படும் என்பதில்லை. முயன்றால் எல்லோரும் இதைப் பெற முடியும். எல்லா நாட்டு அனுபூதிமான்களும் கூறும் அனுபவம் ஒன்றுபோலவே காணப்படுவதால் அவர்கள் அனுபவம் பெற்றவர்கள் என்பதில் ஐயமில்லை. அதனுடன் கடவுள் அனைவரிடமும் இருப்பதால் அனைவரும் அவருடன் ஐக்கியமாகி அவரை அனுபவிப்பது சாத்தியமே. அனுபூதிமான்கள் பெறும் அனுபவத்தை மொழிகளால் சொல்ல முடியாது. அதனால் அவர்கள் குறியீடுகள் வாயிலாகவே வெளியிடுகிறார்கள். அவர்கள் கையாளும் முக்கியக் குறியீடுகள் காதல், கலியாணம், கள்வெறி ஆகியவையாகும். தம் அனுபவ வேளையில் அனுபூதிமான்கள் வெளியீடுவதெல்லாம் அவர்கள் வாயிலாகக் கடவுள் வெளியிடுவதேயாம்.

ஆனால் இத்தகைய அனுபூதியைப் பெற விரும்புகிறவர் மூன்று விதமான யோகங்களைப் பயில வேண்டும். முதலாவதாகக் கருமயோகம் பயின்று, ஆசையையும் ஆணவத்தையும் அகற்றி, மனத்தைத் தூய்மை பெறச் செய்தல் வேண்டும். இரண்டாவதாக ஞானயோகம் பயின்று, தம்மைத் துறந்து, தியானத்தின் வாயிலாகக் கைவல்லிய சாந்தியை அடைதல் வேண்டும். மூன்றாவதாகப் பக்தியோகம் பயின்று, கடவுளை நேரில் கண்டு, அவருடன் ஐக்கியப்பட்டு நிரதிசய ஆனந்த வெள்ளத்தில் மூழ்கவேண்டும். இதுவே அனுபூதிநிலை.