பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஜராட்டம்

286

அஷ்டாதச ரகசியங்கள்

யைச் சார்ந்த ஓவியமாகும். அவலோகிதேசுவரர் உருவம் காதணிகளையும், அழகிய முத்துக்கோவையையும் அணிந்து ஒரு நீல அல்லியைக் கையில் ஏந்தியுள்ளது. மங்கலான அல்லது அழுத்தமான வர்ணப் பூச்சினால் ஒளியும் இருளும் போன்ற தோற்றங்களும் காண்கின்றன. 1,2 குகைகளில் உள்ள ஓவியங்கள் குப்த ஓவிய நெறியைப் பின்பற்றியுள்ளன. அவற்றில் முதற்குகையில் மேற்கூறிய அவலோகிதேசுவரர், மாரன் தோல்வி, களியாட்டக் காட்சிகள், காதற் காட்சிகள், சிபி, நாகர் ஜாதகக் கதைகள், கூரையின் அடிப்பரப்பில் செய்துள்ள வேலைப்பாடுகள் முதலியவையும், இரண்டாம் குகையில் அரண்மனைக் காட்சிகள், இந்திரலோகம், சிராவஸ்தியின் சாதனை, சாந்திவாதி, மைத்ரிபாலா கதைகள், கூரை அடிப்பரப்பு வேலைப்பாடுகள் முதலியவையும் முக்கியமானவை. அஜந்தா ஓவியங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்தது அவலோகிதேசுவரர் ஓவியந்தான். மிகச் சிறந்த நிகரற்ற கலையென்று கூறி உலகம் புகழ்வது அஜந்தாவிற்கு இவ்வோவியத்தாலேயே கிடைத்துள்ளது.

7ஆம். நூற்றாண்டைச் சார்ந்த 26ஆம் குகை பொது அமைப்பில் கார்லே குகைக்கோயிலைப் போலவே இருப்பினும், தூண்களின் உச்சியில் பல பகுதிகளில் காணப்படும் உருச் சித்திரவேலைப்பாடுகளில் மிகவும் முக்கியமானவை. இங்குள்ள தூபசிற்பத்தில் புத்தர் பிரலம்பபாத ஆசனத்தில் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. காண்போர் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மையது இங்குள்ள புத்த நிருவாண சிற்பம். பூத்துநிற்கும் இரண்டு சால மரங்களுக்கிடையே, வலப்புறம் சாய்ந்து, பாதத்தின் மீது பாதத்தை வைத்துக்கொண்டு ததாகதர் (புத்தர்) படுத்தபடியே நிருவாணம் அடைகின்றார். அவருடைய சீடர்கள் சுற்றியிருந்து புலம்பு கின்றனர். கந்தர்வர்களும் தேவர்களும் இன்னிசை செய்துகொண்டு அந்தரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். டி. என். ரா.

அஜராட்டம் தோட்டத்தில் வளர்க்கும் பூச்செடி. வெண்மை நிறமானது. சிலவற்றில் சிவப்பு நிறமுள்ள பூக்கள் உண்டு. சாமந்திக் குடும்பத்தைச் சேர்ந்தது. பூக்கள் எல்லாம் குழாய் வடிவமான மண்டலச் சிறு பூக்கள். காய் முதிர்ந்தால் அதன்மேலுள்ள புல்லி மாறுபட்டு மயிர்க் குச்சம் போலாகிறது. விதை பறந்து பரவுவதற்கு இந்தக் குச்சம் உதவியாகிறது. இந்தச் செடிகளில் ஓர் இனம் சாதாரணமாகத் தோட்டங்களிலும் தெருப்பக்கங்களிலும் வளர்ந்திருக்கும். ஒரு வித நல்ல மணமுள்ளது. இதற்குப் பூம்புல் என்று பெயர். இதன் தண்டிலும் இலையிலும் மயிர் நிறைந்திருக்கும். இது 1-3 அடி உயரம் வளரும். இந்தியாவில் கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரம் வரையில் எங்கும் இதைக் காணலாம். வெட்டுக் காயத்துக்கும் புண்ணுக்கும் இதன் இலையை மருந்தாகப் பயன் படுத்துகிறார்கள். குடும்பம்: கம்பாசிட்டீ (Compo- sitae); பூம்புல் என்பது அஜராட்டம் கோனிசாய்டிஸ் (Ageratum conyzoides).

அஜாதசத்துரு: முதல் மகத சாம்ராச்சியத்தைத் தாபித்த பிம்பிசாரன் (சு. கி.மு. 525-500) மகன். இவன் தன் தந்தை ஆண்ட சமயத்தில் சம்பாவில் இளவரசனாக ஆட்சி செலுத்தினான். இவன் பிம்பிசாரனைக் கொன்று இராசக்கிருகத்தில் அரியணை யேறினான் என்று சொல்லப்படுகிறது. இவன் சமணனாகையால் பௌத்தர்கள் இவனைப் பற்றி இவ்வாறு கூறி வந்தனரென்று சிலர் எண்ணுகிறார்கள். கோசல நாடும் வைசாலியும் சேர்ந்து சுமார் பதினாறு ஆண்டுகள் அஜாதசத்துருவுடன் போர்புரிந்தன. அஜாதசத்துரு இரு நாடுகளின் மக்களிடை மனவேறுபாட்டை உண்டாக்கிக் கடைசியில் வென்றான். வைசாலி தன் குடியரசை இழந்தது. இரு நாடுகளும் மகதராச்சியத்துடன் இணைக்கப்பட்டன. இப்போர் நடந்தகாலத்தில் அஜாதசத்துரு பாடலிக்கிராமத்தில் ஒரு பெருங்கோட்டையைக் கட்டினான். இதுதான் பிறகு பாடலிபுரம் என்ற சிறந்த நகரமாக மேன்மையடைந்தது. மகதப் பேரரசைப் பலப்படுத்தினவன் இவனே. இவன் சமணனாக இருந்தாலும் புத்தரிடம் மதிப்பு வைத்தவன். கி.மு.487-ல் புத்தர் இறந்த பிறகு இராசக்கிருகத்தில் இவன் முயற்சியால் பௌத்த சங்கத்தின் முதல் மாநாடு கூடிற்று. கே. ஆர். வெ.

அஜாய்கர் விந்தியப் பிரதேசத்தில் கேதார பருவதத்தின் மேல் உள்ள நகரம். இதே பெயருள்ள சமஸ்தானம் இந்த இராச்சியத்துடன் இணையுமுன் இது அதன் தலைநகராக இருந்தது. 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற வரலாற்றுப் புகழுள்ள கோட்டையொன்று உடையது. இதில் கட்டடச் சிற்ப அழகுள்ள சமணக்கோயில்கள் உள்ளன.

அஜின்கோர்ட் போர்: வடபிரான்சிலுள்ள அஜின் கோர்ட்டில் 1415-ல் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் பெரும்போர் நடந்தது. ஆங்கில அரசனான V-ம் ஹென்ரி பிரான்சில் படையோடு இறங்கிக் கலேயைக் கைப்பற்றும் எண்ணத்தோடு அந்நகரை நோக்கிச் சென்றான். அஜின் கோர்ட்டில் இடைமறித்த பெரிய பிரெஞ்சுப் படையை ஆங்கிலேயப் படைகள் எளிதில் தோற்கடித்தன.

அஜிஜியா அல்லது ஆல் அஜிஜியா என்பது டிரிபோலிடானியாவிலுள்ள ஓர் ஊர். இதுவே உலகத்தில் மிகுந்த வெப்பமுள்ள இடம். இதன் வெப்பநிலை 136.4° பா.

அஷ்காபாத் (Ashkhabad) சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த டர்க்கோமன் குடியரசின் தலைநகரம். போல்டோராட்ஸ்க் என்பது இதன் பழைய பெயர். மக்: 1,26,580(1939).

அஷ்டக்கிராமம்: மைசூரை யாண்டுவந்த ஜைன சமயத்தினனான பிஜ்ஜளன் என்னும் ஹொய்சள அரசனை இராமானுசர் வைணவனாக்கினார். அவன் அப்போது விஷ்ணுவர்த்தனன் என்னும் பெயர் பூண்டான். அந்தச் சமயத்தில் அவன் ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கருகே காவிரியின் இருகரையிலும் உள்ள எட்டுக் கிராமங்களை அவருக்குப் பரிசாக அளித்தான். இவை அஷ்டக்கிராமம் என வழங்கின. 1863-ல் இவை மைசூர், ஹாசன் மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டன. இங்குச் சர்க்கரை உற்பத்தித் தொழில் பிரசித்தமானது. இங்கிருந்து வரும் சர்க்கரை 'அஷ்டக்கிராமம்' என்றே பெயர் பெறும்.

அஷ்டமங்கலம் ஒருவகைத் தமிழ்ப் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனைக் காக்கவேண்டும் என எண்வகையான ஆசிரிய விருத்தங்களால் தெய்வத்தை வழிபடுதல்.

அஷ்டாதச ரகசியங்கள் இரகசியமாகக் கேட்டு உணரத்தக்க பதினெட்டு வைணவ நூல்களின் தொகுதி. இப்பதினெட்டும் மணிப்பிரவாள நடையில் அமைந்த உரைநடை நூல்கள். இவற்றை இயற்றியவர் பிள்ளை லோகாசாரியர் (த.க.)