பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஸ்தூரியாஸ்

289

அஸ்ஸாம்

ஒரு பண்டைய ஊர். கௌரவர்களுடைய தலைநகரமாயிருந்தது என்பர். அஸ்தின் என்னும் அரசன் நிருமாணித்ததால் இப்பெயர் பெற்றது என்ப. யானைகள் (அஸ்திகள்) மிகுந்திருந்தமையால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

அஸ்தூரியாஸ் வடமேற்கு ஸ்பெயினின் ஒரு பகுதி; இது ஓவிடோ என்னும் ஒரே மாகாணம் அடங்கிய ஒரு பிரிவு. ஸ்பெயினிலேயே மிகவும் பயன் தரும் பழத் தோட்டங்கள் இங்குள்ளன. நிலக்கரி, யூக்கலிப்டஸ், பீச் (Beech) மரங்கள், ஆடுமாடுகள் முதலியவற்றிற்குப் பெயர்போனது. மு. ஆ .

அஸ்மாரா வடகிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள எரிட்டிரியாவின் தலைநகர். இதற்கு 65 மைல் தொலைவில் செங்கடலில் மசாவா என்னும் முக்கியத் துறைமுகம் உள்ளது.

அஸ்ஸாம் இந்தியாவில் வடகிழக்கேயுள்ள இராச்சியம். பதினொரு மாவட்டங்கள் உடையது. மக் : 90,43,707 (1951). ஆண்கள் 48,12,166. பெண்கள் 42,31,541. அவர்களுள் இந்துக்கள் 58 இலட்சம், முஸ்லிம்கள் 19 இலட்சம், சீக்கியர் 4,107. பௌத்தர் 22 இலட்சம், கிறிஸ்தவர் 6 இலட்சம், ஆதிக்குடிகள் 5 இலட்சம். பரப்பு : 85,012 ச.மைல்.

அஸ்ஸாம்

விவசாயம்: நதி தீரங்கள் மிகச் செழிப்பானவை. மழை மிக அதிகம். ஆண்டில் சராசரி 569.50 அங்குலம் மழை பெய்யும். செரபுஞ்சி உலகத்தில் மிகவும் மிகுதியாக மழை பெய்யுமிடங்களில் ஒன்றாகும். ஆறுகளில் வரும் பெரும் வெள்ளங்கள் நிலங்களைப் பாழ்படுத்தாதிருக்கப் பார்த்துக்கொள்வதே நீர்ப்பாசனத்தைவிட முக்கியப் பிரச்சினையாம். அரிசி முக்கிய உணவுப் பொருள். தேயிலையும் சணலும் முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள். தேயிலைத் தோட்டங்கள் பெரும் பாலும் ஐரோப்பியர் வசம் உள்ளன. சுமார் 5 இலட்சம் ஏக்கர் பூமியில் தேயிலை பயிராகிறது.

சுரங்கங்கள்: முக்கியமாகக் கிடைக்கும் தாதுக்கள் பெட்ரோலியமும், நிலக்கரியும், சுண்ணாம்புக் கல்லுமாகும். பிரமபுத்திரா வடிநிலமும் சூர்மா வடிநிலமுமுள்ள இடத்தில் 800 மைல் தொலைவரை பெட்ரோலியம் காணப்படுகிறது. நிலக்கரிச் சுரங்கங்கள் நாகமலையிலும் இலக்குமிபுர மாவட்டத்திலும் உள்ளன. சுண்ணாம்புக்கல் காசி மலையிலும் செயிந்தியா மலையிலும், பெட்ரோலியம் இலக்குமிபுரத்திலும் கச்சாரிலும் எடுக்கப்படுகின்றன.

கைத்தொழில்கள் : விவசாயமே முக்கியத் தொழில்; 80 சதவிகித மக்கள் அதை நடத்துகிறார்கள். கைத்தொழில்களுள் முக்கியமானது பட்டு நெய்தல். அது குடிசைத்தொழிலாகவே இருக்கிறது. நடத்துபவர்கள் பெரும்பாலும் பெண்களே. தீக்குச்சி செய்தல், எண்ணெய் ஆட்டுதல் முதலிய வேறு தொழில்களும் நடைபெறுகின்றன. வியாபாரம் பெரும்பாலும் பக்கத்திலுள்ள நாடுகளுடனும், குன்றுவாழ் ஆதிக்குடிகளுடனும் நடைபெறுகின்றது.

போக்குவரத்து: வியாபாரப் போக்குவரத்துப் பாதைகள் பெரும்பாலும் ஆறுகளேயாம். மற்ற இராச்சியங்களிலுள்ளதைவிட இங்கே சாலைகள் குறைவு. அஸ்ஸாமை இந்தியாவின் மற்றப் பகுதிகளுடன் இணைப்பதற்குத் தேவையான புகைவண்டிப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நாடோறும் கௌகத்திக்கும் கல்கத்தாவுக்குமிடையில் ஆகாய விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. கௌகத்திக்கும் நவகாங்குக்குமிடையே உள்ள ஐம்பது மைல் தொலைவிலும் அரசாங்கமே மோட்டார் போக்குவரத்து நடத்திவருகிறது. பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் இந்தியாவில் மற்றப் பாகங்களுடன் இணைக்கக்கூடிய சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

கல்வி: மத்தியதரப் பாடசாலைகள் 645ம், உயர் தரப்பாடசாலைகள் 163ம், இன்டர்மீடியட் கல்லூரிகள் 7ம், பட்டதாரிக் கல்லூரிகள் 6ம், சட்டக் கல்லூரி 1ம், பொறியியல் பாடசாலைகள் 16ம், வியாபாரப் பாடசாலைகள் 3ம், வயதுவந்தோர் பாடசாலைகள் 452ம், ஆசிரியர் பயிற்சிப் பாடசாலைகள் 10ம் இருக்கின்றன. கௌகத்தியிலுள்ள பல்கலைக்கழகம் 1948-ல் நிறுவப் பெற்றதாகும்.

ரேடியோ: அகில இந்திய ரேடியோ நிலையம் ஷில்லாங்கிலும் கௌகத்தியிலும் இருக்கின்றது. டெல்லி நிலையமும் அஸ்ஸாம் மொழியில் ஒலி பரப்புகின்றது. காடுகள் : 6.645 ச. மைல் காடுகள் ஒதுக்கப்பட்டுள. அவற்றில் கிடைக்கும் முக்கியமான மரம் ஆச்சாவாகும். யானைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. அதைப் பிடிக்கும் உரிமையை அரசாங்கம் குத்தகைக்கு விடுவதோடு தானும் பிடிக்கிறது. பலவிதமான பறவைகள் கிடைப்பதால் வேட்டையாடப் பல பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். காடுகளில் கிடைக்கும் முக்கியமான பொருள்கள் ரப்பரும், யானைத் தந்தமும், காண்டா மிருகத்தின் கொம்புமாகும்.

அரசாங்கம் : அஸ்ஸாம் தனி இராச்சியமாக ஆக்கப்பட்டது 1874-ல் ஆகும். அது பல மாறுதல்கள் அடைந்து, 1919-ல் கவர்னர் மாகாணமாக ஆயிற்று. சுதந்திரம் வந்த பிறகும் அவ்விதமே இருந்துவருகிறது.