பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஸ்ஸே

292

அஹிம்சை

19ஆம் நூற்றாண்டிலிருந்த புலவர்களுள் தலைசிறந்தவர்கள் ஹேமசந்திர பரூவா (1835-1896) என்பவரும், குணாபிராம பரூவா (1837-1895) என்பவருமாவர். ஹேமசந்திர பரூவா அபினியின் தீமைகளை வைத்துக் காணியார் கீர்த்தனம் என்னும் நாடகம் எழுதினார். அதுவே நவீன காலத்து முதல் நாடகமாகும். அவரே புரோகிதர்களுடைய பித்தலாட்டங்களை வைத்துப் பாகிரே ரங்சங் பிதரே கொவாபாதுரி என்னும் நவீன காலத்து முதல் நாவலையும் இயற்றியுள்ளார். அவரே முதன்முதலாக விஞ்ஞான அகராதியும் தயார் செய்தார். அதனுடன் அவர் சுயசரிதம் எழுதும் வழக்கத்தையும் தொடங்கி வைத்தார். குணாபிராம பரூவா நாட்டின் வரலாற்றை மேனாட்டு முறையில் எழுதினார். சமூக விஷயங்களை வைத்துச் சில நாடகங்களும் இயற்றினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அஸ்ஸாமிய இலக்கியமானது செழித்து வளரத் தொடங்கிற்று. இந்தக் காலத்து எழுத்தாளர்களுக்குள் மிகச் சிறந்தவர்கள் லட்சுமிநாத பெஸ்பரூவா (1868-1938), சந்திரகுமார் ஆகர்வாலா (1867-1937), ஹேமந்திர கோஸ்வாமி (1879-1928) ஆகிய மூன்று நண்பர்களாவர். இம் மூவருள் பெஸ்பரூவா பலதுறைப் புலவராக இருந்தார். அவர் சங்கர தேவருடைய வாழ்க்கை வரலாறும், மாதவதேவருடைய வாழ்க்கை வரலாறும், சில நல்ல சிறு கதைகளும், வரலாற்று நாடகங்கள் சிலவும், ஒரு வரலாற்று நாவலும், மிகச் சிறந்த சில இசைப்பாக்களும் இயற்றியுள்ளார். அவர் புகழ் பெற்ற பத்திரிகை எழுத்தாளராகவுமிருந்தார். அவருடைய வசன நடை நகைச்சுவையும் எள்ளித்திருத்தற் சுவையும் நிரம்பியது. ஆகர்வாலா அருள் நிரம்பிய கவிஞர். அவர் செய்த மிகப் பெருந்தொண்டு அஸ்ஸாமியா என்னும் பத்திரிகையை நிறுவியதாகும். கோஸ்வாமி கவிஞராயினும், பிற்காலத்தில் பண்டைப் பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடலானார். பெஸ்பரூபா நாடோடிக் கதைகள் சிலவற்றைப் புது உருவத்தில் எழுதி, நாடோடி இலக்கியத்தில் அக்கறை எழுமாறு செய்தார். இளவேனிற் காலத்தில் நடைபெறும் பிகு (Bihu) விழாவில் பாடப்பெறும் பிகு பாடல்களே மக்களின் குறிக்கோளைக் காட்டுவதாகக் கருதப்படுகின்றன.

இந்த எழுத்தாளர்களுக்குப் பின் வந்த எழுத்தாளர்களுள் கீழ்க்கண்டவர்கள் முக்கியமானவர்கள். ரஜனிக்காந்தா பர்தலை என்பவர் சிறந்த நாவலாசிரியர். சிறுகதை எழுதுவதில் சிறந்தவர்கள் சரத்சந்திர கோஸ்வாமியும், மஹிபொராவுமாவர். ஹிதேசவர் பர்பவோவும், சந்திரதர பரூவாவும், அகவற்பாவைச் செய்யுள் எழுதுவதற்குப் பொதுவாக அனைவரும் கையாளும் யாப்பாகும்படி செய்தார்கள். ஐதின்துவாரா உமர்கையாம் பாடல்களை மொழிபெயர்த்தார். நகைச்சுவை ததும்பும் பாக்களும் இயற்றினர். அம்பிகாகிரி ராய்சௌத்ரியின் பாக்கள் துன்புறுவோர் துயரங்களைச் சித்திரிப்பனவாகும். ஜோதி பிரசாத் ஆகர்வாலா மிகச்சிறந்த நாடகாசிரியராக இருக்கின்றார். உரைநடையில் சிறந்தவராக இருப்பவர்கள் சத்யநாத பொரா என்பவரும் நீல்மணிபூகன் என்பவரும் ஆவர். இக்காலத்து இலக்கியமானது உள்ளதை உள்ளபடி கூறுவதிலும் சமூக உணர்ச்சியை எழுப்புவதிலும் கவனம் செலுத்துவதாக இருக்கிறது. பி.கா. - பி. கோ.

அஸ்ஸே ஐதராபாத் இராச்சியத்திலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற சிற்றூர். இங்கு 1803 செப்டம்பர் 23ஆம் தேதி பான்சலே, சிந்தியா ஆகிய மகாராஷ்டிர அரசர்களுடைய கூட்டுச் சேனைக்கும் ஜெனரல் வெல்லெஸ்லி என்ற வெல்லிங்டன் பிரபுவின் தலைமையின் கீழ் இருந்த பிரிட்டிஷ் சேனைக்கும் பெரும்போர் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரச் சேனை தோல்விஅடைந்தது.

அஹிம்சை என்பதன் பொருள் இன்னா செய்யாமை என்பதாகும். இன்னா செய்யாமைக்கு அடிப்படையாகவுள்ள அன்புடைமை என்னும் பண்பைத் தமிழ்மக்கள் உயிரினும் விழுப்பமுடையதாகப் போற்றி வந்துளர். திருவள்ளுவர் தமது திருக்குறளாகிய தமிழ் மறையில், “அன்பின் வழியது உயிர்நிலை” என்று அறிவுறுத்துகின்றார். திருமூலர், அன்பே சிவம் என்றும், அன்பு செய்வார்க்கே அருள் கிட்டும் என்றும், அருள் கிட்டியவரே முத்தியின்பம் துய்ப்பர் என்றும் கூறுகின்றார். பாரதியாரும், “துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் - அன்பிலழியுமடி - கிளியே - அன்பிற்கு அழிவில்லை காண்“ என்று பாடுகின்றார்.

அன்புடையவர்கள் இன்னா செய்யமாட்டார்கள். “அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதினோய்-தந்நோய் போற் போற்றாக் கடை“ என்று குறள் கூறுகிறது. எதற்காக இன்னா செய்தலாகாது என்று கேட்பின், “இறப்பநுமக்கு அடுத்த வெப்பநோய் யாவும் - பிறர்க்கும் அஃதாம் என்று கொண்மின்“ என்று பாரதமும், “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா -பிற்பகல் தாமே வரும்“ என்று குறளும் விடை கூறுகின்றன.

பிறர் இன்னா செய்தால் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும் தமிழ்ப் புலவர்கள் தெளிவாகக் கூறியுளர். “பொறுத்தல் இறப்பினை என்றும், அதனை - மறத்தல் அதனினும் நன்று“ என்பது குறள். அவ்வாறு பிறர் இன்னா செய்யினும் தாம் மறுத்தின்னா செய்யாமையே மாசற்றார்கோள். இன்னா செய்யாதிருப் பதுமட்டும் போதாது; அதை உடனே மறந்துவிடவும் வேண்டும். “நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது- அன்றே மறப்பது நன்று“ என்பதும் குறள். துன்பத்தை மறக்க முடியுமோ என்று வினவின், “இன்பமும் துன்பந்தானும் உள்ளத்தோடு இயைந்தவன்றே“ என்று கம்பர் கூறுகிறார். வள்ளுவர், “கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த -ஒன்றுநன் றுள்ளக் கெடும்“ என்று மறப்பதற்கு வேண்டிய உபாயத்தைக் கூறுகிறார்.

இன்னா செய்யாதிருக்க வேண்டும் என்று கூறுவது போலவே, கொலை செய்யாதிருக்க வேண்டும் என்றும் செந்தமிழ்ப் புலவர்கள் கூறுகிறார்கள். கொல்லாமையே தலையாய அறம் என்று வள்ளுவர் பன்முறை வற்புறுத்திக் கூறுகின்றார். பிற உயிர்களைக் கொல்லக்கூடாது என்று கூறுவதுடன் அமையாது, தன்னுயிர் நீங்கினும் தனக்கு நன்மை வருவதாயினும் கொலை செய்யற்க என்று வள்ளுவர் உரைக்கின்றார்.

இன்னா செய்தாரை ஒறுக்கவேண்டாவோ என்னின், “ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண்ணோடிப் - பொறுத்தாற்றும் பண்பே தலை“. “ஒறுத்தார்க் கொருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்-பொன்றுந் துணையும் புகழ்“ உண்டாகும். ஒறுக்க வேண்டியது அவசியமாகத் தோன்றினால், “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து“ விடுவதேயாகும். அவ்வாறு இன்னா செய்தார்க்கு இனியவை செய்வதே சால்பின் பண்பாம். சான்றோர்கள் தமக்கு இன்னா செய்தவர்க்கு இனியவை செய்ய“ முடியாவிட்டாலும், “தம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் உம்மை