பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஹிம்சை

293

அஹிம்சை

எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்” என்று வருந்துவார்கள் என்று நாலடியார் கூறுகின்றது.

இவ்வாறு இன்னா செய்தார்க்கும் இனியவை செய்யும் அன்புடைமையே சீவகாருண்யம் என்றும், சீவகாருண்யம் உடையவரே கடவுள் அருள் பெறுவர் என்றும், கடவுள் அருள் பெறுபவரே முத்தி அடைவர் என்றும் இராமலிங்க சுவாமிகள் கூறுகின்றார்.

மேலும் தமிழ்ச் சான்றோர்கள் தங்கள் கொள்கையின் உண்மையை நிலைநாட்டும் பொருட்டுத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தவறியதில்லை. திருநாவுக்கரசர் சைவத்தைப் போற்றியதற்காக அவர்க்குச் சமண அரசன் பலவகையான துன்பங்களைச் செய்தபோதும், அவர் அத்துன்பங்களையும் இன்பமாக ஏற்றுக்கொண்டார்; அரசனுக்கு அணுவளவு துன்பமும் எண்ணவில்லை. மெய்ப்பொருள் நாயனார், சிவவேடம் தரித்துவந்து தம்மைக்கொன்ற பகைவனையும் கொல்லாது பாதுகாத்துச் சிவவேடமே மெய்ப்பொருள் என்னும் தமது கொள்கையை நிலைநாட்டினார்.

இவ்வாறு தமது கொள்கைக்காகப் பிறர் துன்பம் செய்தால் அதை ஏற்றுக்கொள்வதும், துன்பம் செய்தார்க்கு மறுத்துத் துன்பம் செய்யாதிருத்தலுமே நலமாகும் என்று வள்ளுவர் கூறுகின்றார். இத்தகைய அறத்தையே மகாத்மா காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்று அழைத்தார். இவ்வாறு தவம் செய்வார் தம்முடைய கொள்கையை ஆதரிப்பவர்க்கு நலம் தேடவும், வெறுப்பவரை வெல்லவும் கூடியவராவர் என்று வள்ளுவர் உறுதி கூறுகின்றார்.

இத்தகைய அஹிம்சையே தமிழர் பண்பாட்டில் தலையாயது என்று கூறின், தமிழ் மக்கள் போர் புரிந்தது எதனால்? ஆம், போர் புரிந்தார்கள். ஆனால் அவர்கள் போரையும் அறநெறியினின்றே ஆற்றினார்கள். “மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்“ என்று மதுரை மருதனிளநாகனார் கூறுகின்றார்.அதனாலேயே அக்காலத்துத் தமிழ் மறவர்கள் போர் தொடங்குமுன் பசுக்களையும், பார்ப்பார், பெண்டிர், பிணியாளர், மூத்தோர், குழந்தைகள், பிள்ளை பெறாத ஆடவர் ஆகியவரையும் பாதுகாத்துப் பகைவீரர்களுடன் மட்டுமே போர் செய்தார்கள். அதனாலேயே அக்காலத்து மன்னர்கள், “அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர்“ என்று அழைக்கப்பட்டனர். திருவள்ளுவ நாயனாரும், “அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை“ என்று விளக்குகின்றார்.

ஆகவே தமிழர்களுடைய பண்பாடு அஹிம்சையை முதலாகவுடையது என்பதில் ஐயமில்லை. அதனாலன்றே அவர்கள் பெயக்கண்டும் நஞ்சுண்டு அமையும் நயத்தக்க நனி நாகரிகம் வேண்டுபவராயினர்.

இந்து தருமத்தில் அஹிம்சை : அஹிம்சை என்பது இந்திய நாட்டில் பண்டைக் காலம் முதற்கொண்டே ஓர் உன்னதமான ஆன்ம குணமாக மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. “ஒரு பிராணியையும் ஹிம்சிக்கக் கூடாது“ என்பது வேதவாக்கு. சில வேள்விகளிலே உயிர்வதை செய்தது உண்மைதான். ஆனால், இதை விலக்காக எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர, விதியாகக் கொள்ளலாகாது. வைதிக காரியங்களிலேயும் பிராணி ஹிம்சை செய்வது தவறு என்பதை இந்தியர்கள் வெகு விரைவிலேயே உணர்ந்தார்கள். உதாரணமாக, மகாபாரதத்தின் ஒரு பகுதியில் 'யஜ்ஞ நிந்தை' யென்னும் தலைப்பின் கீழ் ஓர் உபாக்கியானம் கூறப்படுகிறது. காட்டில் வசிக்கும் ஒரு வைதிகப் பிராமணர், பிராணி ஹிம்சை செய்ய மனம் இல்லாதவராய்த் தாம் புரியும் வேள்விகளில் தானியங்களை யுபயோகிக்கின்றார். தருமமானது மான் உருக்கொண்டு வந்து அந்தப் பிராமணரைப் பார்த்து, “வெறுந் தானியங்களினால் தேவதைகளைத் திருப்தி செய்ய முடியாது. என்னை நீர் பலியிட்டு உம் வேள்வியைப் பூர்த்திசெய்வீர்“ என்று சொல்கின்றது. பிராமணர் முதலில் தயங்கினார்; பிறகு வேள்வியைச் செய்பவனும், பலியிடப்பட்ட விலங்கும் மேலான பதவியையடையும் என்று எண்ணித் தம் மனத்தைச் சாந்தப்படுத்திக்கொண்டு அம்மானைப் பலியிட்டார். அப்போது அவர் முன் செய்த நல்வினையெல்லாம் அழிவுற்றன. மானும் தன் உண்மை உருவத்தை யெடுத்துக்கொண்டு, அஹிம்சையின் மகிமையை அவருக்கு உபதேசித்தது, உயர்ந்த தருமம் அஹிம்சையே என்பது இக்கதையின் கருத்து. மகாபாரதம், அனுசாசன பருவத்தில் “அஹிம்சை மேன்மையான தருமம் ; அஹிம்சை மேன்யைான தவம் ; அஹிம்சை மேன்மையான சத்தியம் ; அதனின்றும் தருமம் பெருகுகின்றது“ என்று கூறுகின்றது.

பகவத் கீதையை ஹிம்சையை ஆதரிக்கும் நூல் என்று கருதுவோர் உளர். ஆனால், அவ்வாறு எண்ணுவது தவறு. கீதையின் நோக்கம் போர் புரிவிப்பது அன்று; பிறவிக்குக் காரணமாயுள்ள சோகத்தையும் மோகத்தையும் போக்குவதே. கீதையின் முதல் அத்தியாயத்திலும், இரண்டாவது அத்தியாயத்தின் தொடக்கத்திலும், அர்ஜுனன் சத்தியாக்கிரகியாகிப் “போர்புரிய மாட்டேன்” என்று சொல்லவில்லை; “எதிரே நிற்பவர்கள் என் உறவினர். ஆகையால் அவர்களைக் கொல்லமாட்டேன்“ என்கிறான். 'நான், எனது' என்பது துன்பத்திற்குக் காரணம். அதை அகற்றுவதுதான் கிருஷ்ணன் நோக்கம். விருப்பும் வெறுப்பும் இன்னா செய்தலுக்குக் காரணம். அவையகன்றால் எவ்வாறு இன்னா செய்ய முடியும்? ஞானத்தின் இலட்சணத்தைக் கூறும்போது, அஹிம்சையை ஒரு முக்கிய அமிசமாகக் குறிப்பிடுகின்றது கீதை.

எல்லாவிதத்திலும் எப்பொழுதும் எல்லாப் பிராணிகளிடத்தும் வெறுப்பின்மை அஹிம்சையென்று யோகசூத்திரத்தின் வியாச பாஷ்யம் உரைக்கின்றது. மனத்தாலும் சொல்லாலும் செய்கையாலும் உயிர்களுக்கு இன்னா செய்யாமை அஹிம்சை. “ஒருவன் அஹிம்சையில் நிலைத்து நின்றால் அவனுடைய மனத்தில் வைரம் சிறிதும் இராது.“ இது யோக் சூத்திரம். ரிஷிகளின் ஆச்சிரமங்களில் விலங்குகள்கூடத் தம் கொடுமையையும் வைரத்தையு மிழந்து சமாதான வாழ்க்கையில் ஈடுபட்டன என்று சொல்வதுண்டு. யோக வழியின் 'இயமம்', 'நியமம்' என்ற படிகள் அஹிம்சையை ஆதாரமாகக் கொண்டுள்ளன. பத்மபுராணத்தில் எட்டுவிதமான மலர்கள் ஈசுவரனுக்குப் பிரியமானவை யென்று சொல்லப்படுகின்றன. அவை : அஹிம்சை, புலனடக்கம், தயை, பொறுமை, சாந்தி, தவம், தியானம், சத்தியம்.

அஹிம்சை யென்பது இன்னா செய்யாமை மாத்திரம் அன்று; எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவதுமாம். அன்பே சிவம்; ஆனந்தமே ஆத்மா. நாம் வேறு, மற்றவர் வேறு என்ற தவறான அபிமானதான் வெறுப்புக்குக் காரணம். எல்லா உயிரிலும் ஆன்மா வொன்றே என்று உணர்ந்தால் நம் உள்ளத்தில் அன்புப் பெருக்குத் தானாகவே யுண்டாகும். மற்றவர்கள் நமக்கு எதைச் செய்தால் நாம் விரும்பமாட்டோமோ, அதை மற்றவர்களுக்கு நாம் செய்யாதிருந்தால் போதாது. மற்றவர்கள் நமக்கு எது செய்தலை