பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஹிம்சை

294

அஹிம்சை

விரும்புவோமோ, அதை நாம் மற்றவர்களுக்குச் செய்யவேண்டும். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பது இந்து மதத்தின் அடிப்படையான பிரார்த்தனை. எல்லாவிடத்திலும் உயிர்கள் சுகமாக இருக்க வேண்டும்; எல்லோரும் நோயற்று வாழவேண்டும்; யாவரும் நன்மையை யடையவேண்டும்; ஒருவரும் தீமையைப் பெறக்கூடாது; ஒருவிதத் துக்கமும் ஒருவரும் அடையக் கூடாது என்பதுதான் 'ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி :' என்ற மந்திரத்தின் கருத்து.

அவ்வாறானால் அஹிம்சை என்று எதிர்மறையாகச் சொல்வானேன் என்று கேட்கலாம். அதற்குக் காரணம் என்னவென்றால், ஹிம்சை என்பது அச்சத்தினால் ஏற்படுவது. மற்றப் பிராணிகள் வேறு, நாம் வேறு; அவற்றால் நமக்குத் தீங்கு உண்டாகலாம் என்ற எண்ணத்தினால் அச்சம் எழுகின்றது. வேற்றுமை எண்ணம் அஞ்ஞானத்தினால் உண்டாகிறது. ஆகையால் எப்பொழுது அஞ்ஞானம் ஒழிந்து ஆன்மஞானம் உதயமாகின்றதோ, அப்பொழுது ஹிம்சைக்கு ஏது இருக்காது. இந்த உண்மையைப் போதிப்பதுதான், 'அஹிம்சை, அபயம், அத்வயம்' என்ற எதிர்மறைச் சொற்களின் நோக்கம்.

இதனின்று இன்னொரு விஷயத்தை நாம் உணர வேண்டும். அதாவது: ஆன்மஞானிக்குத்தான் பூரணமான அஹிம்சை சாத்தியமாகும். “அஹிம்சா வாதத்தை எப்பொழுதும் அப்பியசிக்கும் யதிகளும் சில சமயம் ஹிம்சையைச் செய்கிறார்கள்; ஆனால் முயற்சியினால் இதைக் குறைத்துக் கொள்ளலாம்” என்று பாரதத்தின் வனபருவம் கூறியிருக்கின்றது. அஹிம்சையை நோக்கிச் செல்வதுதான் மனிதன் கடமை. இயன்ற வரையில் இந்தக் குணத்தை நாம் பெற முயல் வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும், அஹிம்சா தருமத்தைப் பின்பற்றினால் முத்தி பெறலாம்; உலகத்திற்கும் நலம் உண்டாகும். டி.எம்.பி.ம.

ஜைனர் கொள்கை : அஹிம்சை என்பது தடை அமிசம், செயல் அமிசம் என இரண்டு அமிசங்களை உடையது. எல்லா மதமும் தடை அமிசத்தை ஏற்றுக் கொள்வது போலவே ஜைன மதமும் ஏற்றுக் கொள் கிறது. “எவரையும் எதையும் கொல்லாதே, துன்புறுத்தாதே, அடிமையாக்காதே“ என்றும், “யாரிடமும் பகைமை கொள்ளாதே, யாரையும் அச்சுறுத்தாதே, ஆட்சி கொள்ளாதே“ என்றும் மகாவீரர் கூறுகிறார்.

ஜைனத்துறவிகள் யாரிடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஹிம்சையைக் கையாளக் கூடாதென்று தடுக்கப்படுகிறார்கள். அவர்கள் மனம் வாக்குக் காயம் மூன்றாலும் அஹிம்சையைக் கைக்கொள்ள வேண்டும். அவர்கள் கொல்லவோ அல்லது கொல்லும்படி செய்யவோ அல்லது கொல்லுவதற்கு இசையவோ கூடாது. ஹிம்சையானது இடம் பொருள் ஏவல் என்பவற்றுள் எதையும் பொறுத்ததன்று. அபாய காலத்தில் ஹிம்சை செய்யலாம் என்பதை ஜைன மதம் ஏற்றுக்கொள்வதில்லை.

சிலர் ஹிம்சை செய்யாமல் இருக்க முடியாத சந்தர்ப்பங்களில் ஹிம்சையைக் கையாள வேண்டியது அவசியமே என்று கூறுவர். ஆனால் அதை ஜைன மதம் ஏற்றுக்கொள்வதில்லை என்று ஜைன சுவேதாம்பர தேராபந்தியை நிறுவிய பிக்கான்ஜி ஆச்சாரியார் (Acharya Bhikhanji) வற்புறுத்துகிறார். இல்லறத்திலுள்ளவர்கள் சில சமயங்களில் ஹிம்சை செய்யாமலிருக்க முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால் அத்தகைய சமயங்களில் ஹம்சை செய்தே தீரவேண்டுமென்று கூறுவது அஹிம்சைத் தருமத்துக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். அத்தகைய சந்தர்ப்பங்களில் கையாளப்பெறும் ஹிம்சையைச் சமூக மக்கள் பாதகமில்லை என்று கூறிவிடலாம். ஆனால் சமயவாதிகள் அவ்விதம் கூற முடியாது.

சகல மதங்களும் அஹிம்சையின் தடை அமிசத்தில் எந்தக் கருத்துடையனவாகத் தோன்றினும், செயல் அமிசத்தில் அவ்விதமில்லை. செயல் அஹிம்சையின் சில பண்புகள் அன்பு, இரக்கம், சேவை, பரோபகாரம் என்பனவாகும்.

அன்பு என்பது ஆசையோ,பற்றோ, பகைமையோ இல்லாத மன நிலைமையும் அதனால் உண்டாகும் செயல்களுமாம். இதுவே ஜைன மதக்கொள்கை.

ஜைனர்கள் அஹிம்சைத் தருமத்தை ஆன்ம விமோசன சாதனமாக மட்டுமே கருதுகிறார்கள். அதனால் கருணையோடு கூடிய சாதாரணச் சமூக சேவைகள் அதன்பாற்படா. ஆன்ம லாபம் தரும் சமூக சேவை ஒன்றே அஹிம்சைத் தருமத்தைச் சேர்ந்ததாகும். அஹிம்சையை மேற்கொள்ளுமாறு கூறுவதெல்லாம் ஆன்மா சமுசார பந்தத்தினின்று வீடு பெறுவதற்காகவே. ஆன்ம விடுதலை எண்ணம் இல்லாதவிடத்து அஹிம்சை பூரணமானதாக ஆகாது. ஆன்மாவைத் தூயதாகவும் செய்யாது. சாதாரண மக்கள் நாடோறும் கையாளும் அஹிம்சைச் செயல்களை ஸ்தித பிரக்ஞை நிலையின் அஹிம்சைத் தருமத்துக்குச் சமானமானதாகச் சொல்லுதலாகாது.

ஆனால் இத்தகைய அஹிம்சையை எல்லோரும் கையாள இயலாது. இது துறவிகளுக்குத்தான் சாத்தியமானது. ஆயினும் உலகத்தில் துன்பம் இல்லாமல் செய்யும் அளவுக்கு எல்லோரும் அஹிம்சைத் தருமத்தைக் கைக்கொள்ளுதல் அவசியமேயாகும். ஆதலால் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் ஹம்சை நிலையை மாற்றி அஹிம்சைச் சமூகத்தை நிறுவுவது ஒவ்வொருவருடைய கடமையுமாகும். து. க.

காந்தீய அஹிம்சை : அஹிம்சை தொன்றுதொட்டு ஒரு சிறந்த ஆன்ம குணமாக மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. தனிப்பட்ட மனிதர்கள் அதைப் பேணி யிருக்கின்றனர். ஆனால் சமூகம், அரசியல் என்னும் துறைகளில் அஹிம்சையை உன்னத முறையில் முதன்முதல் கையாண்டவர் காந்தியடிகள்தாம். அவர் தென் ஆப்பிரிக்காவில் இந்தக் கருவியை முதன் முதல் கையாண்டார். அங்கே வெள்ளையர்கள் இந்தியர்களை நிறவேற்றுமையினால் துன்புறுத்தி வந்தார்கள் ; மனிதர்கள் என்றே அவர்களை மதிக்கவில்லை. வெள்ளையருக்கு ஒரு நீதியும், ஏனையோர்க்கு இன்னுரு நீதியும் வழங்கப்பட்டு வந்தன. இந்த வேற்றுமையைப் போக்கவேண்டி மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற இயக்கத்தைத் துவக்கினார். சத்தியாக்கிரகம் என்றால் உண்மையைப் பற்றுவது என்பது பொருள். உண்மையிருக்கும் இடத்தில் ஹிம்சை இராது. ஹிம்சை உள்ளவரையில் உண்மைக்கு இடம் இல்லை. ஆகையால் நல்லது ஒன்றை நாம் சாதிக்க வேண்டுமானால், உண்மையையும் அஹிம்சையையும் பின்பற்றுவது அவசியம். வெள்ளையர் இந்தியர்களுக்குச் செய்துவந்தது அநீதி. ஆனால் அநீதியை அநீதியால் போக்க முடியாது; ஹிம்சை ஹிம்சையால் நீங்காது. இந்தத் தத்துவத்தையுணர்ந்து, மகாத்மா காந்தி சத்தியாக்கிரக இயக்கத்தை வகுத்தார். தவறான சட்டங்களையும் வழக்கங்களையும் எதிர்க்கவேண்டும். அவற்றையே துணையாகக் கொண்டவர்களோடு ஒத்துழைக்கக்கூடாது. இதனால்