பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆக்சைடுகள்

300

ஆக்டினோமைகோசிஸ்

நீரில் மூழ்கியோ, நச்சுக் காற்றைச் சுவாசித்தோ, தீ விபத்திலோ மூச்சடைத்துப் போனவர்களை ஆக்சிஜனைச் சுவாசிக்குமாறு செய்து அவர்களது உயிரைக் காக்கலாம். இதற்காக அவர்களை ஆக்சிஜன் கூடாரம் என்ற அமைப்பினுள் படுக்க வைக்கிறார்கள். இதில் ஆக்சிஜனை உள்ளே செலுத்தவும், வெளி மூச்சில் வரும் கார்பன் டையாக்சைடை உறிஞ்சவும், வெப்ப நிலையையும், ஈரப்பதனையும் கட்டுப்படுத்தவும் அமைப்புக்கள் உண்டு. நிமோனியா, காசம்போன்ற கோளாறுகளின்போது நோயாளி தேவையான அளவு காற்றைச் சுவாசிக்க முடியாமல் கஷ்டப்படலாம். அப்போது அவரை ஆக்சிஜன் கூடாரத்தில் கிடத்துவதால் துன்பம் தணியும். ஆழ்கடலுள்ளே மூழ்கிச் செல்வோரும், அதிகமான உயரத்தில் பறப்போரும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனைத் தம்முடன் கொண்டு செல்கிறார்கள். நைட்ரிக் அமிலத் தயாரிப்புப் போன்ற பல ரசாயனத் தொழில்களிலும் ஆக்சிஜன் பயன்படுகிறது.

திரவ ஆக்சிஜன் மிக முக்கியமான வெடி மருந்தாகப் பயன்படுகிறது, சுரங்கங்களிலும் குடைவுகளிலும் தகர்த்தல் வேலைகளுக்கு இது மிக ஏற்றது. ஏனெனில் இது வெடித்தபின் அபாயகரமான பொருளொன்றும் தோன்றுவதில்லை.

ஆக்சைடுகள் (Oxides) ஒரு தனிமம் ஆக்சிஜனுடன் கூடுவதால் தோன்றும் பொருள் ஆக்சைடு எனப்படும். பெரும்பான்மையான தனிமங்களுடன் ஆக்சிஜன் கூடி ஆக்சைடை அளிக்கும். மற்றத் தனிமங்களின் ஆக்சைடுகளை மறைமுகமான (Indirect) முறைகளால் தயாரிக்கலாம். சடவாயுக்களையும், புரோமினையும் தவிர மற்றெல்லாத் தனிமங்களுக்கும் ஆக்சைடுகள் உண்டு என அறியப்பட்டுள்ளது. பல தனிமங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்சைடுகளையும் அளிப்பதுண்டு. பல ஆக்சைடுகள் நீருடன் கூடி ஹைடிராக்சைடுகளை அளிக்கும்.

ஆக்சைடுகளைப் பலவகைகளாப் பிரிக்கிறார்கள். (1) உப்பு மூல ஆக்சைடுகள் என்பவை அமிலங்களுடனும் அமில ஆக்சைடுகளுடனும் வினைப்பட்டு உப்புக்களை அளிக்கும். உலோகங்களின் ஆக்சைடுகளில் பெரும்பான்மையானவை இவ்வகையைச் சேர்ந்தவை. (2) அமில ஆக்சைடுகள் என்பவை உப்பு மூலங்களுடனும், உப்பு மூல ஆக்சைடுகளுடனும் வினைப்பட்டு உப்புக்களை அளிக்கும். பெரும்பான்மையான உலோகங்களின் ஆக்சைடுகள் இவ்வகையைச் சேர்ந்தவை. (3) இருதலை ஆக்சைடுகள் என்பவை உப்புமூலங்களுடன் வினைப்படும்போது அமில ஆக்சைடுகளைப் போலவும், அமிலங்களுடன் வினைப்படும்போது உப்பு மூல ஆக்சைடுகளைப்போலவும் இயங்குகின்றன. அலுமினிய ஆக்சைடு இவ்வகைக்கு நல்ல உதாரணமாகும். (4) நடுநிலை ஆக்சைடுகள் மற்றப் பொருள்களுடன் கூடி அமிலங்களையோ உப்புக்களையோ அளிப்பதில்லை. கார்பன்மானாக்சைடு இவ்வகை ஆக்சைடுகளுக்கு ஓர் உதாரணமாகும். (5) ஒரு தனிமத்தின் உபஆக்சைடு என்பது உப்புக்களை அளிக்கும் அதன் ஆக்சைடைவிடக் குறைவான அளவு ஆக்சிஜனையுடையது. இவ்வகைக்கு வெள்ளீய உப ஆக்சைடு உதாரணமாகும். (6) ஒரு தனிமத்தின் சிறப்பான ஆக்சைடைவிட அதிகமான ஆக்சிஜனை உடைய ஆக்சைடை அதன் பெராக்சைடு எனப்படும். இவை எளிதில் ஆக்சிஜனை வெளிவிடுவதால் நல்ல ஆக்சிகரணிகளாக இயங்குகின்றன.

ஆக்சொலாட்டில் (Axolotl) வடஅமெரிக்காவிலுள்ள ஆம்பிளிஸ்டோமா என்னும் ஒரு நீர்நிலவுயிரியின் லார்வா நிலை. இந்த நிலையைக் கடந்து முதிர்ச்சி நிலை அடையாமலே இதே இளம்பருவ நிலையிலேயே இந்தப் பிராணியில் இனப் பெருக்கம் நிகழ்கிறது. இது பிள்ளைநிலை யினப் பெருக்கம் (Paedogenesis) எனப்படும். ஆக்சொலாட்டில்கள் முட்டையிலிருந்து பொரிக்கின்றன. இப்படி இனம் பெருக்கும் ஆக்சொலாட்டில்கள் சில பிராந்தியங்களில் மட்டும் இருக்கின்றன. மற்றப் பிரதேசங்களில் அவை உருமாறிச் சாதாரண முதிர்நிலையான ஆம்பிளிஸ்டோமா ஆகின்றன. பார்க்க: ஆம்பிளிஸ்டோமா.

ஆக்டியம் (Actium) கிரீஸ் நாட்டின் மேற்குக் கரையிலுள்ள ஒரு மேட்டு முனை. இப்போது ஆக்ரி என்று வழங்குகிறது. இங்குத்தான் கி. மு. 31-ல் அக்டேவியசின் சேனைக்கும் அந்தோனி, கிளியோபாத்ராவின் சேனைக்கும் கடற்போர் நிகழ்ந்தது. அக்டேவியஸ் வென்றதன் காரணமாக ரோமானியக் குடியரசு மறைந்து ரோமானிய சாம்ராச்சியம் தோன்றிற்று.

ஆக்டினோசோவா (Actinozoa) ஆந்தோ சோவா (Anthozoa) என்றும் பெயர் கடற்சாமந்தி (Sea anemone), பவளம், கடற்பேனா முதலியவை இந்த வகுப்பைச் சேர்ந்தவை. சிலென்ட்ரேற்றா (Coelenterata) என்னும் குழியுடலித் தொகுதியிலுள்ளவை. மெடுசா தலைமுறைநிலை இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் இல்லை. இவற்றின் பாலிப்பு (Polyp) நிரம்பச் சிக்கலான அமைப்புள்ளது. மேல்தோல் வாய்ப்புறத்தில் மடிந்து உள்ளே போவதால் வாய்க்குழல் ஒன்று உண்டாயிருக்கிறது. இதற்கு ஸ்டோமொடீயம் (Stomodaeum) என்று பெயர். உள்ளறையில் பக்கங்களில் நெடுக்குத் திரைகள் பல உண்டு. இவை தடுக்குக்கள்போல உள்ளிருக்கும் வயிற்றறையைப் பல பாகங்களாகப் பிரிக்கின்றன. இத்தடுக்குக்கள் எண்ணிக்கையில் ஆறு அல்லது எட்டு முதன்மையாகத் தோன்றும். ஆகவே, முறையே ஆறு தடுக்குக்கள் உள்ளவை, எட்டுத் தடுக்குக்கள் உள்ளவை என இந்தவகைப் பிராணிகள் இரண்டு பெரிய கூறுபடும். ஆறு தடுக்குக் கூட்டத்தில், சிறு திரைகள் இடையே உண்டாவதால், 12 தடுக்குக்களையும், இவற்றிற்கு மேற்பட்ட தடுக்குக்களையும் காணலாம். பார்க்க: சிலென்டரேற்றா.

ஆக்டினோப்டெரிஜியை கதிர்த் துடுப்பு மீன்கள் (Actinopterygii): பொதுவாக மீன்களில் இரண்டு முக்கிய வகைகள் இருக்கின்றன. ஒரு வகை மீன்கள் சுறா, திருக்கை போன்றவை. இவற்றின் சட்டகம் குருத்தெலும்பால் (Cartilage) ஆனது. இன்னொரு வகை மிகப் பெரிய பகுதி. சாதாரணமான மீன்களெல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றின் சட்டகம் பெரும்பாலும் எலும்பாலானது. இவற்றின் உட்பிரிவுகளில் ஒருவகை கதிர்த் துடுப்பு மீன்கள். இவற்றின் துடுப்புகளில் துடுப்புக் கதிர்களுக்கு சுறாவுக்கு இருப்பதுபோன்ற அச்சுப்போன்ற பாகம் கிடையாது. இவற்றின் மூக்குத் தொளைகள் உட்பக்கமாகத் தொண்டையுள் திறப்பதில்லை. 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டெவோனியன் காலத்துப் பாறைகளில் இம் மீன்களின் பாசில்கள் முதன்முதல் காணப்படுகின்றன.

ஆக்டினோமைகோசிஸ் (Actinomycosis). மழைக்காலங்களில் சுவரில் படரும் பாசியைப் போன்ற ஆக்டினோமைசிஸ் என்னும் ஒருவிதத் தாவர இனத்-