பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/348

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆக்ரா

302

ஆக்லந்து பிரபு

யடைந்து, படிப்படியாகப் பல பொருள்களைத் தருகிறது. இதில் U11 என்பதும் ஒன்று. இது Uy என்ற தனிமமாக மாறிப் புரோடோ ஆக்டீனியம் என்ற பொருளாகிறது. இது ஒரு பீட்டாதுகளை வெளியிட்டு ஆக்டீனியமாகிறது. இதுவும் படிப்படியாகப் பல மாறுதல்களை அடைந்து, கடைசியாக வெள்ளீயத்தின் ஐசோடோப்பாகிறது. இந்த மாறுதல்கள் ஆக்டீனியத்தொடர் எனப்படும். பார்க்க : கதிரியக்கம்.

ஆக்ரா உத்தரப் பிரதேசத்து மூன்றாவது பெரிய நகரம். இந்தியாவின் பண்டைய நகரங்களுள் ஒன்று. யமுனையாற்றங் கரையில் உள்ளது சிக்கந்தர் லோடி 1500-ல் இந்நகரைத் தனது தலைநகராக்கிக் கொண்டான். 1526-ல் பாபர் இந்நகரைக் கைப்பற்றினான். இவ்வூரருகேயுள்ள அக்பராபாத் என்னும் கோட்டை அக்பரால் கட்டப்பட்டது. ஒளரங்கசீப் காலத்தில் தலை நகரம் மறுபடியும் டெல்லிக்கு மாற்றப்பட்டுவிட்டதால் ஆக்ராவின் தலைமை சிறிது குறைந்தது. ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் (த.க.) என்னும் உலகப் புகழ் பெற்ற சலவைக்கல் கட்டடம் இங்கே இருக் கிறது. இங்குள்ள முத்து மசூதியும் ஜம்மா மசூதியும் புகழ் வாய்ந்தவை. கோட்டையின் சுற்றளவு ஒரு மைல். மதில் சுவர் உயரம் 70 அடி. தங்கம், வெள்ளி. சித்திரத் தையல் வேலைகள் நடைபெறுகின்றன; சிறந்த கம்பளங்களும் செய்யப்படுகின்றன. சர்க்கரை, தானியம் ஆகியவை முக்கிய வியாபாரம். இருப்புப் பாதை நடு நிலையம் உள்ளது. இங்கு ஒரு பல்கலைக் கழகம் உண்டு. மக்: 3,75,665 (1951).

தொல் பொருளியல் : முகலாயர்கள் காலத்திய (1550-1660) அழகிய கட்டடங்கள் பல இங்கு உண்டு. இவற்றில் அக்பர் காலத்துக் கட்டடங்களில் கோட்டை மதிலும், ஜகாங்கீர் மகாலும் எஞ்சியுள்ளன. இவ்வூரின்

கலைக்களஞ்சியம் 1.pdf

தாஜ்மகால்

அருகிலுள்ள சிக்கந்திராவில் ஜகாங்கீர் காலத்தில் கட்டப்பட்ட ஐந்தடுக்குக் கொண்ட புதிய முறையிலான அக்பரின் சமாதிக் கட்டடமும், ஆக்ராவில் ஜகாங்கீரின் மாமனார் இதிமத் உத்தௌலாவின் சமாதிக் கட்டடமும் இருக்கின்றன. இச்சமாதிக் கட்டடங்கள் சலவைக் கல்லாலும் இரத்தினத்தாலும் இழைக்கப்பட்டுள்ளது. இவற்றைவிடப் பன்மடங்கு அழகு மிகுந்ததும், ஷாஜகானால் கட்டப்பட்டதுமான முத்து மசூதியும், உலகமே வியக்கும் வனப்புமிக்க தாஜ்மகா லும் இங்கு இருக்கின்றன. தாஜ்மகால் சலவைக்கற்களாலும் இரத்தினங்கள் இழைத்தும் கட்டப்பட்டுள்ளது. இதைக்கட்டி முடிக்க நாள்தோறும் 20,000 ஆட்கள் வேலை செய்து, 20 ஆண்டுகளுக்கு மேலாயிற்று என்றும், சுமார் 4 கோடி ரூபாய்க்குமேல் செலவாயிற்று என்றும், இதன் அமைப்பை வகுத்தவர் ஒரு ஐரோப்பியச் சிற்பி என்றும், கட்டி முடித்தவர் துருக்கி தேசத்திய உஸ்தாத் ஈசா என்ற சிற்பி என்றும்சொல்லுகிறார்கள். பி. ஆர். ஸ்ரீ.

ஆக்ரா பல்கலைக் கழகம் : 1921-ல் இயற்றப்பட்ட அலகாபாத் பல்கலைக் கழகச் சட்டத்தின்படி அலகாபாத் பல்கலைக் கழகமானது பல கல்லூரிகள் இணைக்கப்படாமல் தனியான குருகுலவாசக் கலைக் கழகமாக அமைக்கப்பட்டது. அதனால் அலகாபாத் பல்கலைக் கழகத்திலிருந்து பத்து மைல் சுற்றுவட்டாரத்துக்கு அப்பாலுள்ள கல்லூரிகளை இணைப்பதற்காக 1927-ல் உத்தரப் பிரதேசச் சட்டசபை ஒரு சட்ட மியற்றியது. அதன் பயனாக ஆக்ரா பல்கலைக் கழகம் அமைக்கப்பெற்றது. அதன் அதிகார வரம்பு உத்தரப் பிரதேசம், மத்திய இந்தியா, குவாலியர், அஜ்மீர்-மேர்வாரா, இராஜபுதனம் ஆகிய பகுதிகள்வரை எட்டியிருந்தது. அண்மையில் இராஜபுதனப் பல்கலைக் கழகம் நிறுவப்பெற்றுவிட்டதால் இராஜபுதனத்திலுள்ள கல்லூரிகள் அப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன. ஆக்ரா பல்கலைக் கழகம் தொடங்கியபோது அதில் பதினான்கு கல்லூரிகள் இணைந்திருந்தன. இப்போது அவற்றின் தொகை அறுபத்திரண்டாகும். இக்கழகத்தில் முதலில் கலைகள், விஞ்ஞானம், சட்டம், வாணிபம் ஆகிய துறைகள்மட்டு மிருந்தன. பின்னால் விவசாயம், மருத்துவம், கால்நடை விஞ்ஞானம், பொறியியல் ஆகிய துறைகளும் அமைக்கப்பட்டன.

ஆக்ரான் (Akran) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஓஹியோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள நகரம். உலகத்திலுள்ள ரப்பர்க் கைத்தொழில் நகரங்களுள் இதுவே பெரியது. வேறு கைத்தொழில்களும் நடைபெறுகின்றன. ஆக்ரான் என்பதன் பொருள் உயரமான இடம் என்பதாகும். இது கடல் மட்டத்துக்கு 950 அடி உயரத்திலிருக்கிறது. மக்கள் தொகையில் 2·5% நீக்ரோக்கள். அமெரிக்காவின் பெரிய ஆகாய விமான நிலையங்களுள் ஒன்று இங்கே இருக்கிறது. நகராண்மைக் கழகத்தால் நடத்தப்பெறும் பல்கலைக் கழகம் ஒன்று உண்டு.

ஆக்லந்து பிரபு (1784-1849) பென்டிங் பிரபுவுக்குப் பிறகு, 1836-ல் இந்தியாவிற்குக் கவர்னர் ஜெனரலாக வந்தவர். ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ்தானத்தில் காலூன்ற முயல்வதாகக் கருதி, ஆக்லந்து பிரபு ஆப்கானிஸ்தானத்தில் அனாவசியமாகத் தலையிடத் தொடங்கினார். அப்போது ஆப்கானிய மன்னராக இருந்த டாஸ்ட் முகம்மது ஆங்கிலேயர்களுக்கு இணங்கிவராததால் ஆப்கானிஸ்தானத்தின்மீது படையெடுக்க ஆக்லந்து தீர்மானித்தார். தோஸ்த்து முகம்மது ஓடி விட்டாராயினும், மற்ற ஆப்கானியர்கள் செய்த தொந்தரவால் ஆங்கிலப்படை மிகுந்த நஷ்டத்தோடு திரும்ப வேண்டியதாயிற்று. ஆங்கிலத் தளபதி மெக்நாட்டன் கொலையுண்டார். 16,000 வீரர்களில் ஒருவனே எஞ்சினான். ஆப்கானிஸ்தானத்தின் உள்நாட்டு விஷயத்தில் இவ்வாறு தலையிட்டது ஆக்லந்து செய்த பெருந்தவறு என்று கூறப்படும். இவர் காலத்தில் கர்நூல் ஆங்கிலேயர் ஆட்சிக்குள் வந்தது. அமைதிக் கால ஆட்சிக்கு ஏற்றவராயினும், போரை வெற்றிகரமாக