பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆக்லஹாமா

303

ஆகமம்

நடத்தத் திறமையற்றவர். இவர் ஆட்சியில் கம்பெனிக்கு மிகுந்த நஷ்டமுண்டாயிற்று. தே. வெ. ம.

ஆக்லஹாமா அமெரிக்க ஐக்கிய நாட்டு இராச்சியங்களில் ஒன்று. அது சிவப்பு மனிதர் நிலம் என்று பொருள்படும். அங்குள்ள நதிகள் ஆர்க்கன்சாஸ், சிவப்பு நதி ஆவன். வெள்ளையர்க்கும் நீக்ரோக்களுக்கும் தனித்தனிப் பாடசாலைகள் உள. செம்பு, இரும்பு, ஈயம், ஆஸ்பால்ட், கண்ணாடி, எண்ணெய், நிலக்கரி முதலிய பொருள்கள் கிடைக்கின்றன. மண்ணெண்ணெய் சுத்தம் செய்தல், மாவு அரைத்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. பரப்பு : 69.283 ச.மைல். மக் : 22,33,351 (1950)

தலைநகரம் ஆக்லஹாமா. இங்கு முக்கியமான அமெரிக்க மண்ணெண்ணெய்க் கிணறுகளுள் ஒன்று உளது. இராச்சியத்தில் உண்டாகும் பொருள்கள் இங்கிருந்தே பல ஊர்களுக்கும் செல்லுகின்றன. மக்: 2.43.504 (1950)

ஆக்ஸ்பர்க் (Augsburg) தென் ஜெர்மனியில் பவேரியாப் பகுதியிலுள்ள நகரம். அகஸ்டஸ் சக்கரவர்த்தி கி.மு.12-ல் நிறுவிய ஒரு பழைய குடியேற்றம் இருந்த இடத்தில் இருக்கிறது. இப்போது இங்கே கண்ணாடி, பீங்கான், கடிகாரம், ரசாயனப் பொருள்கள் செய்யப்படுகின்றன. இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்னர் இங்குத்தான் டீசல் நீர்மூழ்கி எஞ்சின்கள் அதிகமாகச் செய்யப்பட்டு வந்தன. மக் : 1,85,374 (1934).

ஆக்ஸ்போர்டு இங்கிலாந்தில் லண்டனுக்குச் சுமார் 50 மைல் வடமேற்கே தேம்ஸ் ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ் மிக்க பழைய நகரம். இங்குள்ள பல்கலைக் கழகமே இங்கிலாந்திலுள்ள பல்கலைக் கழகங்களுள் மிகப் பழைமையானதும் மிகுந்த புகழ் வாய்த்ததுமாகும். இந்நகர்ச் சுற்றுப்புறத்தில் பல மோட்டார்த் தொழிற்சாலைகள் உண்டு. மக்: 108,420 (1950)

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இங்கிலாந்திலுள்ள பல்கலைக் கழகங்களுள் மிகப் பழமையானது. லண்டனுக்கு வடமேற்கில் ஐம்பது மைல் தூரத்திலுள்ள ஆக்ஸ்போர்டு பட்டணத்திலுள்ளது. எப்போது தோன்றியது என்பது தெளிவாகத் தெரிய வழியில்லை. 1214 முதலே பல்கலைக் கழக அமைப்புடையதாம். இப்போது இருபத்திரண்டு கல்லூரிகள் இதைச் சார்ந்தவை. 1881 முதல் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு வருகிறார்கள். ஆயினும் 1920 முதலே பட்டங்கள் தரப்படுகிறார்கள். பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் பிரசங்கம் செய்வர். மாணவர் படிக்க வேண்டியவை, பரீட்சை கொடுக்க வேண்டிய ஆகியவைவற்றை ஆசிரியர் குறிப்பிடுவார். பிரசங்கத்தைக் கேட்டே தீரவேண்டுமென்னுங் கட்டாயமில்லை. ஆண்டுதோறும் ஏறக்குறைய ஐயாயிரம் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இங்குள்ள பாட்லியன் நூல்நிலையம் 1602-ல் நிறுவப் பெற்றது. அதில் 12,50,000 நூல்களும், 40,000 கையெழுத்துப் பிரதிகளும் உள.

ஆகமம் என்னும் வடமொழிப் பதத்தின்பொருள் தொன்று தொட்டு வரும் அறிவு என்பதாகும். அது பொதுவாக வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் அமைந்த பெயராக இருப்பினும், சிறப்பாகக் கடவுளுடைய வழிபாட்டை இரகசியம், மந்திரம், மூர்த்தி, ஆலயம் ஆகிய முறைகளில் விரித்துக் கூறும் தொகுதியின் பெயராக வழங்கி வருகின்றது. வழிபடும் கடவுளின் பெயரை வைத்து ஆகமம் பலவகைப்படும். சிவ னுடைய வழிபாட்டைக் கூறுவது சைவாகமம். விஷ்ணுவின் வழிப்பாட்டைக் கூறுவது வைஷ்ணவாகமம். சக்தியின் வழிபாட்டைக் கூறுவது சாக்தாகமம்.

சைவ ஆகமங்கள் ஆன்மாக்கள் மலத்தை அகற்றி இன்பம் பெறும் மார்க்கத்தைக் குறித்துச் சிவன் அருளிய நூல்களே என்பர். கடவுள் சொல்லுக்கும் மனத்திற்கும் எட்டாத பொருளாயிருப்பதால் அவரை மிகச்சிலரே மறைகள் கூறும் வண்ணம் வழிபட முடியும். பெரியோர்கள் தம் உடலையே ஆலயமாகக் கொண்டு தம்மையே இறைவனாக வழிபடுவர். ஏனையோர் வழிபடுவதற்காகவே கோயில்களை அமைக்குமாறு ஆகமங்கள் கூறுகின்றன. ஆலயம் என்பதன் பொருள் ஆன்மாக்களை இறைவனிடம் லயிக்கும்படி செய்யும் இடம் என்பதாம்.

சிவாலயத்தில் இறைவன் உள்ள இடம் மூலஸ்தானம். அங்கு லிங்கமே காணப்படும். அதற்குக் காரணம் கடவுள் உருவமாயும் அருவமாயும் இருப்பதேயாகும். சிவன் ஒருவனே பரமாத்மா. அதனால் அவனுக்கே லிங்கம் உரியது என்று சைவாகமம் கூறும். அதனாலேயே மூலஸ்தானத்தில் மற்றத் தேவர்க்கெல்லாம் உருவமே அமைக்கப்படுகின்றது.

ஆலய அமைப்பு: மூலஸ்தானம் அல்லது கர்ப்பக்கிருகம் ஆலயத்தின் பிற பகுதிகளைவிட மிகச் சிறியதாக இருக்கவேண்டும். அருச்சகர் மட்டும் நின்று அபிடேகம் செய்து, உடை உடுத்திச் சந்தனம் அணிந்து, அலங்காரம் செய்யவும், வலம்வரவும் இடமிருந்தால் போதும்.

அதற்கு அடுத்தபடி அமைக்கப்படுவது அர்த்த மண்டபம். இது கர்ப்பக் கிருகத்தைவிடச் சற்று விசாலமானது. அங்கு நின்றே அருச்சகர் அலங்கார தீபாராதனை செய்வார்; பரிசாரகர் தீபமேற்றித் தருவார். பக்தர்கள் அர்த்த மண்டபத்தைவிடப் பெரியதான மகா மண்டபத்தில் நின்று தரிசனம் செய்வர்.

அர்த்த மண்டபத்தில் சிவலிங்கத்துக்கு எதிர்முகமாக நந்தி விக்கிரகம் அமைந்திருக்கும். மூலஸ்தானத்தின் வாசலின் வலது புறம் விநாயகரும் இடது புறம் சுப்பிரமணியரும் இருப்பர். அவர்களருகே துவாரபால மூர்த்திகள் இருவர் நிற்பர். கர்ப்பக் கிருகத்தின் வெளிப்புறம் தெற்குச் சுவரில் தட்சிணாமூர்த்தி உருவமும், மேற்குச் சுவரில் லிங்கோத்பவ மூர்த்தி உருவமும், வடக்குச் சுவரில் துர்க்காதேவி உருவமும் காணப்படும். துர்க்கைக்கு எதிரில் எதிர் முகமாகத் தனியே சண்டிகேசர் இருப்பர்.

ஆலயத்தை வலம் வருமாறு அமைக்கப்படும் இடம் பிராகாரம் எனப்படும். மூன்று அல்லது ஐந்து பிராகாரங்களை அமைத்தல் வேண்டும். வெளிப் பிராகாரத்தில் வாயிலுக்கு நேரே பலிபீடம், கொடிமரம், பெரிய நந்தி ஆகியவைகளை அமைப்பர்.

முதல் வாயிற்படியில் கோபுரம் கட்டப்பெறும். கோபுரம் இறைவன் எங்கும் தங்கி எல்லாமாக இருக்கிறான் என்னும் உண்மையைக் காட்டுவதாகும். மூலஸ்தானத்தின் மீதும், கோபுரத்தின் மீதும் பொற்கலசங்களை அமைக்க வேண்டும். மதிற் சுவர் மீதும், கோபுரத்திலும் சிவாலயம் என்று குறிப்பிடும் பொருட்டு நந்தியையேனும் சிவகணங்களையேனும் அமைத்தல் வேண்டும்.

இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறும் பொருட்டுப் புதிய ஆலயங்களை அமைக்குமாறும், பழைய ஆலயங்களைப் புதுப்பிக்குமாறும் ஆகமங்கள் கூறுகின்றன். சிவஸ்தல யாத்திரை, சிவாலயத் தொண்டு, ஆலய நிர்மாணம், மண்டப நிர்மாணம், திருக்குளம் அமைத்தல், விக்கிரங்களை அமைத்தல், பூசைக்குரிய பொருள்களை வழங்கல், உற்சவம் நடத்து-