பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகமம்

307

ஆகாச கங்கை

ஆகவே மெய்யுணர்வாகும் தத்துவ ஞானத்தையும், இதற்குச் சாதனமான யோகத்தையும் கூறும் ஞானம், யோகம் என்னும் ஆகம பாகங்களில் ஒழுக்கக் குறைபாடுகளுக்கு இடமேயில்லை. சாக்த ஆகமங்கள் தந்திர பேதங்கள் அறுபத்து நான்கென்று பெரியோர் வரையறுத்துள்ளார்கள்.

சாக்த ஆகமங்களின் சிறந்த சித்தாந்தம் வருமாறு: சூரியனிடத்தில் கதிர்களைப் போலவும், பூவில் மணம் போலவும், சந்திரனிடத்தில் நிலவு போலவும், இரத்தினங்களில் ஒளியைப் போலவும் கடவுள் அல்லது செம்பொருளிடத்தில் ஞானம், விமரிசம், சுதந்திரம், ஆநந்தம், அருள் எனப் பல படியாகக் கூறப்படும் ஓர் ஒப்பற்ற சக்தியுண்டு. செம்பொருளும் அருட் சக்தியும் ஒன்றே. கடவுளையும் சக்தியையும் எவ்வகையாகவேனும் வேறு பிரிக்க முடியாது. ஆதலின் அது அபின்னை. சூரிய கிரணங்கள் உலகை விளக்க வேண்டிச் சூரியனை விட்டுப் பகிர்முகமாய் வியாபித்து, வெயில் என்னும் பெயரைப் பெற்றதுபோலக் கடவுளின் அருட் சக்தியும், பிரபஞ்ச சிருஷ்டியின் பொருட்டு அக்கடவுள் வடிவத்தினின்றும் பகிர்முகப்பட்டுச் சட சக்தி யென்னும் பெயரை எய்தியது. இந்தச் சட சக்தியே மாயை என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

பேய்த்தேரில் புனல் தோன்றுவதைப் போல, அருட் சக்தியாகும் சிற்சத்தியில் உண்மையில் என்றும் இல்லாத சடமாயா சக்தி கற்பிதமாகத் தோன்றிற்று. இது கடவுளுக்குப் பின்னமானது ; வேறானது. செம்பொருள் இந்தப் பின்னச் சக்தியோடு கூடித்தான் இவ்வுலகைப் படைத்தது. உலகப் படைப்பின் நிமித்தமாகத்தான் அறிவானந்த வடிவ அருட்சக்தியினின்றும் சடமாயா சக்தியின் தோற்றம் உண்டாயது.இந்த மாயா சக்திக்குச் சம்பவிக்கக் கூடாதவற்றை யெல்லாம் சம்பவிக்கும்படி செய்யும் திறமை உண்டு. இதனின்றும் எண்ணிறந்த சக்திகள் தோன்றின. அவற்றுள் ஆதிசக்தி, பராசக்தி, ஞானசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்திகள் முக்கியமானவையாகும். மாயையோடு கூடிய கடவுளுக்கு உலகப் படைப்பின் நிமித்தமாகவுள்ள அறிவுக்கு ஞான சக்தியென்றும், படைக்க வேண்டும் என்னும் நினைப்பிற்கு இச்சா சக்தியென்றும், படைத்தலாகிய கிரியைக்குக் கிரியா சக்தியென்றும் பெயர்.

இவ்வுலகம் முப்பத்தாறு தத்துவங்களோடு விளங்குகின்றது. அவை சிவ தத்துவம், வித்யா தத்துவம், ஆன்ம தத்துவம் என மூன்று பெரும் பிரிவுகளை யுடையனவாகும். ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கு. நிலம், நீர் முதலிய பூதங்கள் ஐந்து; கந்தம் முதலிய தன்மாத்திரைகள் ஐந்து ; கை கால் முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்து ; கண் காது முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்து; ரஜோகுணப் பிரதானமான அகங்கார விருத்தியொன்று; சத்துவகுண வடிவ புத்தி விருத்தியொன்று; தமோகுணமான மனோ விருத்தி யொன்று; குணங்களின் சமஷ்டி வடிவப் பிரகிருதி யொன்று ; ஆக இருபத்து நான்கு. இவை அசுத்த சடசொரூபங்களாகும். சீவன் போகத்தை அனுபவிக்கக்கூடிய சரீர வடிவினவாகும்.

வித்தியா தத்துவங்கள் ஏழு. இவற்றின் விளக்கமாவது: சித்தத்தோடு கூடிய சீவனே புருஷனெனப்படுவன். பேதத்தையுண்டாக்கும் ஆற்றலையுடையது மாயையெனப்படும். கலை, அவித்தை, ராகம், காலம், நியதி யென்னும் ஐந்து தத்துவங்களும் மறைப்புக்களாகும். ஐந்து கஞ்சுகங்களோடு கூடிய மாயையானது இறைவனுக்கு எள்ளளவும் பின்னப்படாத புருஷனை மயக்கி வேறுபடுத்துகின்றது.

சிவ தத்துவங்கள் ஐந்து. சுகம், சீவன், பரம் என்னும் இவற்றின் பரஸ்பர பேதத்தை யொழிக்கும் பகுத்தறிவே சுத்த வித்தை யெனப்படும். 'காணப்படும் இவ்வுலகு என் வடிவமே' என்று அறிவிப்பது ஈசுவர தத்துவமெனப்படும். 'நானே உலகாய்ப் பிரகாசிக்கின்றேன்' என்னும் அறிவுக்குச் சதாசிவ தத்துவ மென்று பெயர். பேரொளியாயும், அசங்கமாயும், அகர்த்தாவாயுமுள்ள செம்பொருளை உலகப் படைப்பில் சம்பந்தப்படுத்துவது சக்தி தத்துவமென்றும், சக்தி தத்துவத்தோடு கூடிய சக்தியினைச் சிவதத்துவமென்றும் சாஸ்திரங்கள் கூறும்.

இம் முப்பத்தாறு தத்துவங்கள் சைவாகமத்திலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்தத்துவங்களுக்கு அதீதமாய் விளங்குவன சிற்சத்தியும் செம்பொருளுமாம். ந. சு.

நூல்கள் : Sir Arthur Avalon, Principles of Tantra Parts 1 & 2; Sadhana Mata Vol. 2, Gaekwad's Oriental Series.

ஆகமெம்னன் (Agamemnon) கிரேக்க மகாகவி ஹோமர் எழுதிய கதையில் டிராய் நகர முற்றுகை நடத்திய வீரர்களின் தலைவன். இவனைத் தலையான பாத்திரமாக வைத்துக் கிரேக்க நாடகாசிரியர் எஸ்கிலஸ் மூன்று நாடகங்கள் எழுதியுளர்.

ஆகன்காகுவா: 1 தென் அமெரிக்காவிலிருக்கும் சிலி நாட்டின் இடைப்பகுதியிலுள்ள ஒரு மாகாணம். இது பெரும்பாலும் மலைப்பாங்கான இடம். ஆயினும் இங்கு மழை மிகக் குறைவாகவே பெய்கிறது. இங்குள்ள பள்ளத்தாக்குக்கள் செழிப்பானவை. திராட்சை முதலிய பழங்களும், காய்கறிகளும் உற்பத்தியாகின்றன.

2. இதே பெயருள்ள அவிந்த எரிமலை, சிலி நாட்டுக்கும் ஆர்ஜென்டீனாவிற்கும் இடையே ஆண்டீஸ் மலைத்தொடரில் அமைந்துளது. மேற்கு அர்த்த கோளத்திலேயே இதுதான் மிக உயரமான சிகரம் (23,080 அடி).

ஆகா கான் (Aga Khan) என்பது இஸ்மாலி முஸ்லிம் வகுப்பினரின் சமயாசாரியரான ஹாசன் அலிஷா தாம் பிறந்த பாரசீக நாட்டினின்றும் வந்து பம்பாயில் குடியேறிய பொழுது அவ்வகுப்பினர் அளித்த பட்டப்பெயராகும். ஆகா என்பது தளபதி என்று பொருள் படும். இவரைச் சமயாசாரியராக ஏற்றுக் கொள்பவர் தொகை ஆறுகோடிக்கும் மிகுதியாம். இவர்கள் இந்தியா, நடு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, மொராக்கோ, சீனா, ஆப்கானிஸ்தானம், பாரசீகம், அரேபியா ஆகிய நாடுகளில் உளர்.

ஆகா கான் I ஹாசன் அலிஷா (1800-1881) நபி நாயகத்தின் மகளான பாத்திமாவின் சந்ததியில் வந்தவர். பாரசீக அரச குடும்பத்தினர். பாரசீகத்தின் கவர்னர்ஜெனரலாக இருந்து, மன்னர் கோபிக்கவே, பம்பாய்க்கு வந்துவிட்டார். பிரிட்டிஷாருக்கு ஆப்கானியப்போரில் உதவி செய்தார். பிரிட்டிஷார் அவருக்குச் சமஸ் தானாதிபதி (His Highness) என்னும் பட்டம் அளித்தார்கள்.

ஆகா கான் II: ஆகா அலிஷா (இ. 1885). முந்தியவரின் புதல்வர். நான்கு ஆண்டுகளே பதவி வகித்தார். தந்தையின் கொள்கைப்படியே நடந்தார். விக்டோரியா அரசி இவருக்குச் சர் பட்டம் அளித்தார். இவருக்குப்பின் இவருடைய புதல்வர் முகம்மது ஷா பதவி ஏற்றார்.

ஆகாச கங்கை (Milky way) : பார்க்க: வான பௌதிகவியல் (Astro-Physics).