பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகாசத்தாமரை

308

ஆகாயக்கப்பல்


ஆகாசத்தாமரை நீரின்மேல் மிதந்து கூட்டமாக வளரும் தாவரம். இலைகள் ஆப்பு வடிவமாக இருக்கும். அவை ரோசாப் பூவின் இதழ்களைப்போல நெருக்கமாக அடுக்கியிருக்கும். இந்த இலையடுக்கின் அடியில் வேர்கள் கொத்தாகக் குஞ்சம்போலத் தொங்கிக்கொண்டிருக்கும். இலைக்கணுச் சந்திலிருந்து சிறு ஓடுதண்டுகள் (Stolons) கிளைக்கும். அவற்றின் நுனியிலும் இலைக்கொத்துக்கள் உண்டாகும்.

ஆகாசத்தாமரை
1. செடி. a. பூங்கொத்து.
2. பூங்கொத்து நெடுக்குவெட்டு, a. பெண்பூ. b. ஆண் பூக்கள். G. அலிப்பூக்கள்.

இந்தச் செடி குளங்குட்டைகளில் பொதுவாக உண்டு. இந்தியா, இலங்கை முதலிய அயனமண்டல நாடுகளில் வளர்கிறது. குடிப்பதற்கு உதவும் ஊருணிகளில் இந்தச் செடியிருப்பது நல்லது என்பார்கள். நீரில் மிதக்கும் அழுக்கு இதன் வேரில் ஒட்டிக்கொள்ளும் என்பார்கள். அதற்கேற்ப இந்தச் செடியின் வேர் அழுக்குப் படிந்ததுபோல இருக்கும். இது ஒரு சிறந்த மூலிகை.

குளம் முதலிய நீர்நிலைகளில் காடுபோலக் களையாக வளர்ந்திருக்கும் ஐக்கார்னியா (Eichhornia) என்னும் அழகிய பூண்டையும் ஆகாசத்தாமரை என்பதுண்டு. அதைப்பற்றிப் பிசாசுத் தாமரை என்னும் தலைப்பில் பார்க்க. குடும்பம்: ஆரேசீ (Araceae). இனம் : பிஸ்டியா ஸ்ட்ராட்டியோட்டிஸ் (Pistia stratiotes).

ஆகாயக்கப்பல் (Airship) : காற்றில் தொழிற்படும் மிதப்பு விசையின் உதவியால் வானத்தில் மிதந்து செல்லும் ஊர்தி. காற்றைவிட இலேசான வாயு இதில் நிரப்பப்படுவதால் இது காற்றைவிட இலேசான ஊர்தி. ஆகாய விமானம் காற்றைவிடக் கனமான ஊர்தி ஆகும். விரும்பிய திசையில் ஓட்டிச் செல்ல ஏற்ற அமைப்பு இல்லாத ஆகாயக் கப்பல் பலூன் எனப்படும். இத்தகைய பலூன்களிலிருந்தே ஆகாயக்கப்பல் தோன்றியது.

பலூன்கள்

வரலாறு: காற்றில் மிதக்கவேண்டுமென்னும் ஆசை நெடுங்காலமாகவே மானிடனுக்கு இருந்து வந்துள்ளது. மெல்லிய செப்புத் தகட்டினால் ஒரு கோளத்தை அமைத்து, அதற்குள் இலேசான வாயுவை நிரப்பி, அதை வானத்தில் மிதக்க விடலாம் என ரோஜர் பேக்கன் (13ஆம் நூ.) என்ற தத்துவஞானி நம்பினார். 1670-ல் பிரான்கிஸ்கோ தலானா என்ற அறிஞர் ஒரு கோளத்திலிருக்கும் காற்றை வெளியேற்றிவிட்டால் அது காற்றை விட இலேசானதாகி மேற்செல்லும் என்ற கருத்தை வெளியிட்டார். ஆனால் காற்றகற்றப்பட்ட கோளம் காற்று மண்டலத்தின் அழுத்தத்தைக் தாங்காது. என்பதை அவர் அறியவில்லை. நடைமுறையில் இயலாத இத்தகைய பல கருத்துக்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டன.

இதற்குச் சுமார் நூறாண்டுகளுக்குப் பின்னரே உண்மையாகவே காற்றில் மிதந்து சென்ற பலூனை அமைக்க முடிந்தது. மான்கால்பியர் (Montgolfier) என்ற பெயருள்ள இரு சகோதரர்கள் அன்னொனே என்ற பிரெஞ்சு நகரில் 1783-ல் காகிதத்தாலான பலூனை அமைத்து, அதன் கீழ்ப்பாகத்தில் தீயை எரித்துக் காற்றைச் சூடேற்றிப் பலூன் மேலெழுமாறு செய்தார்கள். அதுவரை எவரும் கண்டறியாத இவ்விந்தை அனைவரது கருத்தையும் கவர்ந்தது. மான் கால்பியர் சகோதரர்கள் அமைத்த பலூன் பறந்த காரணத்தைச் சார்லஸ் என்னும் பௌதிக அறிஞர் ஆராய்ந்து, காற்றைவிட இலேசான ஹைடிரஜன் வாயுவை இலேசான கோளத்தில் நிரப்பி அதைப் பறக்க விட்டால் அது இன்னும் நன்றாக மேலே செல்லும் எனக் காட்டினார். அவர் 1783-ல் 13 அடி விட்டமுள்ள ரப்பர் கோளத்தில் சூடான காற்றை நிரப்பி அதைப் பறக்க விட்டார்.

அதே ஆண்டில் மான்கால்பியர் சகோதரர்கள் அமைத்ததைப் போன்றதொரு பலூனில் த ரோசியர் (De Rosier) என்ற அறிஞர் தாமே அமர்ந்து மேலே சென்றார். முதன் முதலில் ஆகாயத்தில் மிதப்பதில் வெற்றி பெற்ற மானிடர் இவரே எனலாம். இவர் 500 அடி உயரம் மேலே சென்று, சுமார் அரைமணி நேரம் வானத்தில் இருந்தார். இதன் பின் சார்லஸும் தாம் அமைத்த பலூனில் பலமுறை பறந்தார். ஒரு முறை இவர் தமது பலூனில் சுமார் இரண்டு மைல் உயரம் சென்றார். 1785-ல் டாக்டர் ஜெப்ரீஸ் என்ற அமெரிக்க மருத்துவரும், பிளான்ஷார்டு என்னும் பிரென்சுக்காரரும் பலூனில் இங்கிலீஷ் கால்வாயைத் தாண்டுவதில் வெற்றி பெற்றனர். இதன் பின்னர் வேறு பலரும் பலூன்களில் ஏறிப் பல நூறு மைல்வரை சென்றனர். அப்போது தோன்றிய பலூனின் வடிவம் இன்றும் மாறாது இருந்து வருகிறது.

அமைப்பும் தத்துவமும்: தற்காலப் பலூன் தனிப்பட்ட வகையான பட்டுத் துணியால் ஆன பெரிய பை, அதற்குள் ஹைடிரஜன் வாயுவை நிரப்புகிறார்கள். பையைச் சுற்றிலும் உறுதியான கயிற்றைப் பின்னி, அதிலிருந்து கூடைபோன்ற அமைப்பைத் தொங்க