பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகாயக்கப்பல்

309

ஆகாயக்கப்பல்

விட்டுத் தேவையான கருவிகளுடன் மனிதர்கள். இக் கூடைக்குள் ஏறிக்கொள்கிறார்கள்.

ஒரு பலூன் எவ்வளவு எடையைச் தூக்கிச் செல்லும் என்பதும், எவ்வளவு உயரம் போகும் என்பதும், அதன் நிறையையும், அதன் பருமனளவு

பலூன்

உள்ள காற்றின் நிறையையும் பொறுத்திருக்கும். திரவத்திலோ, வாயுவிலோ ஒரு பொருள் மூழ்கி இருக்கும்போது அதன்மேல் இரு விசைகள் தொழிற்படுகின்றன. முதலாவதான அதன் எடை அதைக் கீழ்நோக்கிச் செலுத்த முயல்கிறது. இரண்டாவதான

அதன் மிதப்பு விசை அதை மேலெழுப்ப முயல்கிறது. இந்த மிதப்பு விசை அப்பொருளுக்குச் சமமான பருமனுள்ள காற்றின் எடையாகும். ஆகையால் இரண்டாவது விசை முதலாவதைவிட அதிகமானால் பொருள் மிதக்கிறது. பலூனுக்குள் காற்றைவிடப் பன்மடங்கு இலேசான வாயு நிறைந்திருப்பதால் அதன் நிறையைவிடக் காற்றின் மிதிப்பு விசை அதிகமாக இருக்கும். இதனால் அது மேலெழுகிறது. இவ்வாறு அது உயரம் செல்லச் செல்லச் சுற்றிலுமுள்ள காற்றின் அடர்த்தி குறைகிறது. ஆகையால் பலூன் குறிப்பிட்டதோர் உயரத்தை அடையும்போது அங்கு மேற்கூறிய இரு விசைகளும் சமமாக இருக்கும். அந்த உயரத்தில் பலூன் மிதக்கும்.

வானிலே மிதக்கும் பலூனை இரு வகைகளில் கட்டுப்படுத்தலாம். அதன் உறையின்மேல் ஒரு மடிப்பு இருக்கும். இம்மடிப்பில் ஒரு கயிற்றைக்கட்டி, அதைத் தொட்டிலிலிருந்துகொண்டே இழுக்குமாறு அமைத்திருப்பார்கள். கயிற்றை இழுத்தால் அது மடிப்பைத் திறந்து பைக்குள் இருக்கும் ஹைடிரஜனை வெளிவிடும். இவ்வாறு ஹைடிரஜனை வெளியேற்றினால் அதன் மிதப்பு விசை குறைந்து அது கீழிறங்கும். பலூனை இன்னும் அதிகமான உயரத்திற்குக் கொண்டுபோக, அதன் எடையைக் குறைக்கவேண்டும். மணலைப் போன்ற பொருளை அதில் வைத்திருப்பார்கள். அதை வெளியே எறிந்து நிறையைக் குறைத்துப் பலூனை உயரமாகக் கொண்டுபோகலாம்.

பலூனும் விஞ்ஞான ஆராய்ச்சியும்: பலூனின் உதவியால் வானத்தில் செல்லலாம் என்பது தெளிவான நாள் முதலே இது விஞ்ஞான ஆராய்ச்சியில் பயனாகி வந்துள்ளது. விஞ்ஞானி சார்லஸ் தமது பலூனில் மேலே செல்கையில் அவ்வப்போது வெப்ப நிலையையும் காற்று மண்டல அழுத்தத்தையும் அளவிட்டுக் கொண்டே சென்றார். இவற்றையும் காற்றின் ஈர நிலையையும், புவியின் காந்த மண்டல வேறுபாடுகளையும் ஆராய வேறு பல விஞ்ஞானிகளும் பலூன்களிற் பறந்து சென்றார்கள். உயரமாகச் செல்லச் செல்ல, மனித உடலில் விளையும் மாறுதல்களைக் கிளெய்ஷர் என்ற ஆங்கில விஞ்ஞானி ஆராய்ந்தார். விசுவக் கதிர்களின் (த.க.) ஆராய்ச்சியிலும் பலூன்கள் பயனாகின்றன. காற்றுப் புகாத கூண்டுகளைப் பலூனில் தொங்க விட்டு, அதற்குள் இருந்துகொண்டு 50,000 - 60,000 அடி உயரம்வரை பேராசிரியர் பேக்கார்டு, அவர் சகோதரர், அவர் மனைவி ஆகியோர் பறந்து முக்கியமான விஞ்ஞான உண்மைகளைக் கண்டறிந்தார்கள். ‘ஆராய்வோன் II’ (Explorer II) என்ற பெயருள்ள அமெரிக்க ராணுவப் பலூன் 1935-ல் 72,395 அடி உயரம் வரை சென்று ஆராய்ச்சி நடத்தியது.

ரேடியோக் கருவிகளைக் கொண்ட பலூன் ரேடியோச் சாண்டே எனப்படும். இது உயரத்தில் செல்லச் செல்ல அங்குள்ள வானிலை நிலையைத் தரைக்கு அறிவிக்கிறது. இக்கருவி நமது நாட்டிலும் வானிலை அளவுகளுக்கு அன்றாடம் பயன்படுகிறது.

பலூனும் போரும் : பிரெஞ்சுப் புரட்சிப் போரின் போதே போர்க்களத்தி பலூன்களைப் பயன்படுத்தும் முறை வழக்கத்திற்கு வந்தது. உயரத்தில் இருந்து கொண்டு எதிரிகளின் இயக்கத்தை அறியவும், பீரங்கிகளைச் சுடவேண்டிய திசையை அறியவும் பலூன்கள் பயனாயின. முற்றுகையிலுள்ள இடங்களில் உள்ளவர்கள் வெளியிலுள்ளோருடன் கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்ளவும், உதவிகள் பெறவும்

பலூன் தடை

பலூன்கள் பயன்பட்டன. கப்பலுடன் கட்டப்பட்ட பலூன்களில் இருந்துகொண்டு நீர் மூழ்கிகளைக் கண்டு பிடிக்கும் முறை முதலாம் உலகப்போரில் வழங்கியது. மூன்று பெரிய பலூன்களை 10,000 அடி உயரத்தில், பறக்கவிட்டு, அவற்றைக் கம்பியால் பிணைத்து, அக்கம்பியிலிருந்து பற்கள் போன்ற கம்பி வலைகளைத் தொங்கவிட்டுப் ‘பலூன் தடையை’ (Baloon barrage) அமைக்கும் முறை இரண்டாம் உலகப் போரின்போது வழங்கியது. நகரங்களைச் சுற்றி இத்தடைகளை அமைப்பதால் எதிரி விமானங்கள் இந்த உயரத்திற்குக் கீழாகவோ மேலாகவோ வர நேரும். கீழே வரும் விமானத்தை எளிதில் சுட்டு வீழ்த்தலாம். மேலே செல்லும் விமானம் குறி பார்த்துச் சரியாகக் குண்டுபோட இயலாது.

ஆகாயக்கப்பல்

காற்றின் போக்கிலேயே செல்லும் பலூன் நடை முறையில் ஊர்தியாகப் பயனாக வழியில்லாதுபோயிற்று. அதனால் அது தோன்றிய நாள் முதலே அதை வானத்தில் ஓட்டிச் செல்லும் முறையைக் கண்டுபிடிக்கவும் பலர் முயன்றனர். துடுப்பையும் பாய்மரங்களையும் அமைத்து அதை இயக்க முயன்றார்கள். ஆனால் இது இயலவில்லை. சக்தி வாய்ந்த எஞ்சின்களைக் கூடியவரை இலேசாக அமைக்க முடிந்த பின்னரே ஆகாயத்தில்