பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகாயக்கப்பல்

310

ஆகாயக்கப்பல்

ஓட்டிச் செல்ல ஏற்ற ஆகாயக்கப்பல்சுளை அமைக்க முடிந்தது.

ஆகாயக்கப்பலை ஓட்டுவதில் முதன்முதல் வெற்றியடைந்த பெருமை ஹென்ரி கிபார்டு என்ற பிரெஞ்சு அறிஞரைச் சாரும். இவர் முட்டை வடிவான பலூன் ஒன்றை அமைத்து, அதன் முன்புறத்தில் ஒரு செலுத்தியை (Propeller) அமைத்தார். தாம் அமைத்த நீராவி எஞ்சின் ஒன்றன் உதவியால் செலுத்தியை இயக்கி ஆகாயக்கப்பலை 1852-ல் ஓட்டினார். கப்பலின் திசையை மாற்ற இவர் பாய்மரம் போன்றதொரு சுக்கானையும் அமைத்தார். இந்த ஆகாயக்கப்பல் மணிக்குச் சுமார் 6 மைல் வேகத்தில் பறந்தது.

இவரைத் தொடர்ந்து வேறு பலரும் இம் முயற்சியில் ஈடுபட்டனர். ஹான்லீன் என்ற ஜெர்மானியர் வாயு எஞ்சினைப் பயன்படுத்தி ஆகாயக்கப்பலை ஓட்டினார். இவரது ஆகாயக்கப்பல் மணிக்குச் சுமார் பத்து மைல் வேகத்தில் சென்றது. இதன்பின் திசாந்தியர் சகோதரர்கள் மின்சார அக்யூமுலேட்டர்களின் உதவியால் இயங்கிய மோட்டாரை அமைத்து ஆகாயக்கப்பலை ஓட்ட முயன்றனர். இவர்கள் காட்டிய முறையை ரேனார்டு, கெர்ப்ஸ் என்ற இரு பிரெஞ்சு ராணுவ அதிகாரிகள் பின்பற்றி, ஓர் ஆகாயக்கப்பலை அமைத்து, அதை மணிக்குப் பத்து மைல் வேகத்தில் சுமார் அரை மணி நேரம் ஓட்டினர். இவர்கள் அமைத்த கப்பல், வடிவத்தில் தற்கால ஆகாயக் கப்பல்களை ஒத்திருந்தது. ஆனால் இம்முறையால் அதை அதிக நேரம் ஓட்ட இயலாதது இவர்களது முறையின் பெருங்குறையாக இருந்தது.

ஆகாயக்கப்பலில் பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்திய பின்னரே இத்துறையில் உண்மையான முன்னேற்றம் நிகழ்ந்தது எனலாம். ஸ்வார்ஷ் என்ற ஆஸ்திரிய அறிஞர் 1897-ல் இலேசான அலுமினியத் தகடுகளால் ஆகாயக்கப்பலை அமைத்து, அதைப் பெட்ரோல் எஞ்சினைக்கொண்டு ஓட்டினார். சான்டாஸ் டியூமான்ட் என்னும் அறிஞர் தமது தாய்நாடான பிரேசிலிலிருந்து பாரிஸ் நகரை யடைந்து, அங்கு இத்துறையில் ஆர்வங் கொண்டார். இவர் மணிக்கணக்காகப் பறந்த பல ஆகாயக்கப்பல்களை அமைத்தார். இவர் செய்த திருத்தங்களால் ஆகாயக்கப்பலின் அமைப்புச் சீரடைந்தது. இதே சமயத்தில் ஜெப்பலின் பிரபு என்ற ஜெர்மானிய ராணுவ அதிகாரி இத்துறையில் ஆர்வங்கொண்டு ஆராய்ச்சிகள் தொடங்கினார். அதுவரை அமைக்கப்பட்ட. ஆகாயக்கப்பல்கள் அனைத்தும் வாயு நிரம்பிய பையைப் போன்றவை. ஆகையால் இவை விறைப்பின்றி இருந்தன. ஆனால் ஜெப்பலின் பிரபு இதன் அமைப்பில் பெரியதொரு மாறுதலைச் செய்தார். இவர் உறுதியான கூண்டொன்றை அமைத்து, அதன்மேல் துணியைப் போர்த்து மூடி, கூண்டிற்குள் வாயுப் பைகளை அமைத்தார். ஆகையால் இந்த அமைப்பு விறைப்பானதாக இருந்தது. இதனால் இவர் மிகப்பெரிய ஆகாயக் கப்பல்களையும் அமைக்க முடிந்தது. இந்த நாளிலிருந்து விறைப்புள்ள ஆகாயக்கப்பல்களும், விறைப்பற்ற ஆகாயக் கப்பல்களும் வெவ்வேறாக வளர்ந்தன.

விறைப்பற்ற ஆகாயக்கப்பல்: விறைப்பற்ற பொருளினாலான உடலமைப்பைக் கொண்ட ஆகாயக் கப்பல் விறைப்புடன் மிதக்க, அதற்குள் தொழிற்படும் அழுத்தம் காற்றின் அழுத்தத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும். ஆனால் அதை இவ்வாறு அமைப்பதில் ஒரு தொல்லையுள்ளது. வெளியிலுள்ள காற்றின் அழுத்தம் மிகக் குறைவாக இருப்பதால் அழுத்தமான வாயுவை யுடைய இந்த ஆகாயக்கப்பல் உயரத்திற்குச் செல்லும்போது வெடித்துவிடக் கூடும். உயரத்தில் வாயுவை வெளிவிட்டு இதைத் தவிர்க்க முயன்றால் ஆகாயக்கப்பல் மீண்டும் கீழே வந்தபின் அது போதிய விறைப்புடன் இராது. ஆகையால் இத்தகைய ஆகாயக்கப்பலில் பல காற்றுப் பைகள் இருக்கும். ஆகாயக்கப்பல் மேலே செல்லுமுன் இவற்றில் காற்று நிறைந்திருக்கும். அது மேலே செல்லச் செல்ல, அவற்றிலுள்ள காற்று வெளியேற்றப்பட்டு, உள்ளிருக்கும் காற்றின் அழுத்தத்திற்கும் வெளிக்காற்றின் அழுத்தத்திற்கும் உள்ள வேறுபாடு ஒரே மாதிரியாக வைக்கப்படுகிறது. ஆகாயக் கப்பல் கீழ் இறங்கும்போது பைகளில் மீண்டும் காற்று நிரம்பும். இது தாமாக இயங்கும் வால்வுகளினால் செய்யப்படுகிறது. இக்காற்றுப் பைகள் 'பலூனெட்டுகள்' என அழைக்கப்படுகின்றன. வாயுவின் அழுத்தத்தினாலேயே விறைப்பைப் பெறும் இவ்வகை ஆகாயக்கப்பலைக் குறிப்பிட்டதோர் அளவிற்கும் பெரிதாக அமைக்க முடியாது. 260 அடி நீளமும், 60 அடி அகலமும் இதன் உச்ச எல்லைகளாகும். இதை மணிக்கு 70 மைல் வேகத்திற்குமேல் செலுத்த முடியாது.

ஓரளவு விறைப்புள்ள உடலையுடைய வேறொருவகை ஆகாயக்கப்பல் உண்டு. இதில் அதன் கீழ்ப்பாகத்தில் கப்பலின் ஏராக்கட்டையைப் (Keel) போன்ற அமைப்பொன்று இருக்கும். இது ஆகாயக்கப்பலின் பாரத்தைத் தாங்கி யிருக்கும். இத்தகைய ஆகாயக்கப்பலை விறைப்பற்ற கப்பலைவிடப் பெரிதாக அமைக்கலாம். இதை இன்னும் வேகமாக ஓட்டலாம். சான்டாஸ் டியூமான்ட் அமைத்த இவ்வகை ஆகாயக் கப்பல்களில் பெரியது 157 அடி நீளம் கொண்டிருந்தது. பிரான்ஸிலிருந்த லெபாதி சகோதரர்களும் சிறந்த ஆகாயக் கப்பல்களை அமைத்தனர். இவர்கள் அமைத்த ஆகாயக்கப்பல்கள் மிகத் திருப்திகரமாக வேலை செய்ததால் பல ஐரோப்பிய அரசாங்கங்களும் இவற்றை இவர்களிடமிருந்து விலைக்கு வாங்கின. இவற்றுள் பெரியது 338 அடி நீளமும், 39 அடி அகலமும் கொண்டு 3.53,000 கன அடி கொள்ளளவை உடையதாக இருந்தது. இதை மணிக்கு 36 மைல் வேகத்தில் ஓட்ட முடிந்தது. இவர்களைப் பின்பற்றி வேறு பலரும் இத்தகைய ஆகாயக்கப்பல்களை அமைத்தனர். முதல் உலகப்போரில் ராக்கட்டை அமைப்புள்ள ஆகாயக்கப்பல்கள் வெகுவாகப் பயன்பட்டன. ஆனால் இவ்வகை ஆகாயக் கப்பலையும் மிகப் பெரிதாக அமைக்க முடியாததால், ஜெப்பலின் பிரபு அமைத்த விறைப்புள்ள ஆகாயக் கப்பல் வழக்கத்திற்கு வந்தபின் இதன் பயன் குறைந்துவிட்டது.

விறைப்புள்ள ஆகாயக்கப்பல்: விறைப்புள்ள ஆகாயக்கப்பலில் கூண்டின்மேல் போர்த்தப்படும் துணி வாயுப்பைகளைக் காற்றின் அழுத்த மாறுதல்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆகாயக்கப்பலின் பாரம் அவற்றின் மேல் தொழிற்படாதபடி அதைக் கூண்டு தாங்குகிறது. விறைப்பற்ற ஆகாயக்கப்பலைக் குறிப்பிட்டதோர் அளவிற்குப் பெரிதாக அமைக்க முடிவதில்லை. அதைப் போலவே விறைப்புள்ள ஆகாயக்கப்பலையும் குறிப்பிட்டதோர் அளவிற்கும் சிறிதாக அமைக்க முடிவதில்லை. சுமார் 10,00,000 கன அடியைவிடக் குறைவான கொள்ளளவுள்ளதாக இவ்வகை ஆகாயக்கப்பலை அமைக்க முடியாது. ஏனெனில் அப்போது அதன் கூண்டின் கனத்தைத் தாங்கும் அளவு அதற்கு மிதப்பு விசை இருப்பதில்லை.

முதலிலிருந்தே ஜெப்பலின் பிரபு ஆகாயக்கப்பலைப் பெரிதாக அமைப்பதில் உள்ள நலனை உணர்ந்திருந்தார். அவர் முதன்முதல் கட்டிய ஆகாயக்கப்பல்