பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகாயக்கப்பல்

311

ஆகாயக்கப்பல்

420 அடி நீளமும், 38 அடி விட்டமும், 40,00,000 கன அடி கொள்ளளவும் கொண்டிருந்தது. அலுமினியத்தாலான தூலங்களைக் கிராதிபோல் அமைத்து அவர் கூண்டினைச் செய்தார். இத்தூலங்களுக்கிடையே அவர் வாயுப்பைகளைப் பிணைத்து வைத்தார். கூண்டிற்கு ஓர் ஏராக் கட்டையை அமைத்து, அதற்குள் இரண்டு அலுமினியப் பெட்டிகளைத் தொங்கவிட்டார். காற்றுத் திருகுகளை ஒட்டும் எஞ்சின்களை இவற்றில் அமைத்தார். இவர் கட்டிய எல்லா ஆகாயக் கப்பல்களும் பொதுவாக இந்த அமைப்பையே கொண்டிருந்தன. இவை ஜெப்பலின்கள் என்று அழைக்கப்பட்டன. 1898-லிருந்து 1924 வரை இவர் கட்டிய ஒவ்வொரு புது ஆகாயக்கப்பலிலும் ஏதாவதொரு சீர்திருத்தம் இருந்தது. 1910-ல் இவர் பறக்கவிட்ட ஜெப்பலின் முதன் முதலாகப் பிரயாணிகளையும் ஏற்றிச் செல்லத்தக்க அமைப்பைக்கொண்டிருந்தது. இதன் பின்னர் ஜெர்மானிய நகரங்களுக்கிடையிலும், உல்லாசப் பிரயாணத்திற்கும் பிரயாணிகளை ஏற்றிச் செல்ல ஒரு கம்பெனியும் நிறுவப்பட்டது.

ஆகாயக்கப்பல்

முதல் உலகப் போரின் துவக்கத்திற்குள் நூற்றிற்கும் அதிகமான ஜெப்பலின் கட்டப்பட்டன. இவற்றுள் பெரியது 743 அடி நீளமும், 79 அடி விட்டமும், 25,00,000 கன அடி கொள்ளளவும் உடையது. இது மணிக்கு 70 மைல் வேகத்தில் பறந்தது. போரின் போது இத்தகைய ஆகாயக்கப்பல்கள் தொடர்ச்சியாகப் பல ஆயிரம் மைல் பறந்ததுண்டு.

முதல் உலகப் போர் முடிவடைந்தபின் ஜெர்மனியில் ஆகாயக்கப்பல்கள் கட்டக்கூடாது என்று ஒரு தடை இருந்தது. இத்தடை நீங்கியபின் 1926-ல் இதுவரை கட்டப்பெற்ற ஜெப்பலின்களை விடப் பெரிய ஆகாயக் கப்பலொன்றைக் கட்டத் தொடங்கினார்கள். இதன் பெயர் ‘கிராப் ஜெப்பலின்.’ இது 772 அடி நீளமும், அகலமான பாகத்தில் 100 அடி விட்டமும், 37,10,000 கன அடி கொள்ளளவும் உள்ளது. இதன் கூண்டு டூராலுமின் என்ற அலுமினியக் கலவையால் ஆனது. இது ஐந்து எஞ்சின்களால் இயங்கியது. ஒரு புதுவகை வாயு எரிபொருள் இந்த எஞ்சின்களை ஒட்டப் பயனாகியது. பிரயாணிகள் உட்கார ஒரு கூடமும், சாப்பாட்டு அறையும், பத்துப் படுக்கையறைகளும் இதில் இருந்தன. 15 டன் நிறையுள்ள பிரயாணிகளையும் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு, மணிக்குச் சுமார் 70 மைல் வேகத்தில் இது 6,200 மைல் செல்ல ஏற்றவாறு அமைந்திருந்தது. 1928-ல் இது அட்லான்டிக் சமுத்திரத்தைக் கடந்ததோடு, 1929-ல் சுமார் 12 நாட்கள் பறந்து உலகத்தைச் சுற்றி வந்தது. 1933-லிருந்து 1937 வரை இது ஜெர்மனிக்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையே விமானப் போக்குவரத்திற்குப் பயன்பட்டது.

இதன் பின்னர் 1936-ல் இதைவிடப் பெரிய ஜெப்பலினான ‘ஹிண்டன்பர்க்’ என்ற ஆகாயக் கப்பல் இதன் பின்னர் பெற்றது. இது 803 அடி நீளமும், 135 அடி விட்டமும், 70,00,000 கன அடி கொள்ளளவும் கொண்டது. இது சக்தி வாய்ந்த நான்கு டீசல் எஞ்சின்களால் ஓட்டப்பெற்றது. இதன் கூண்டின்கீழ் 50 பிரயாணிகள் ஏறிச்செல்ல விசாலமான இடம் இருந்தது. இது சில மாதங்களுக்குள் பலமுறை அட்லான்டிக்கைக் கடந்து சென்றது. 1937-ல் இது நியூயார்க்கில் இறங்கும் தருணத்தில் தீப்பிடித்து எரிந்து போயிற்று. இதன்பின் ஆகாயக்கப்பல் போக்குவரத்தே நின்றுவிட்டது.

முதல் உலகப்போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு ஜெப்பலினை மாதிரியாகக் கொண்டு விறைப்புள்ள ஆகாயக் கப்பல்கள் பல இங்கிலாந்திலும் கட்டப்பெற்றன. இவற்றுள் ‘R - 100.’ ‘R - 101’ என்பவை புகழ் வாய்ந்தவை. இவை 1929-ல் கட்டப்பெற்றன. இவற்றுள் இரண்டாவதன் நீளம் 724 அடி, அகலமான பாகத்தில் விட்டம் 132 அடி, கொள்ளளவு 50,00,000 கன அடி. இதன் கூண்டின் அமைப்பு ஜெப்பலின் அமைப்பின் வேறானது. இது எஃகு சட்டங்களாலானது.