பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகாய விமானம்

312

ஆங்கிலம்

இது விமானிகளைத் தவிர நூறு பிரயாணிகளை ஏற்றிச் செல்லவல்லது. 'R - 100' என்ற ஆகாயக் கப்பலும் இதைப் போன்றதே. இது 1930-ல் கானடா சென்று திரும்பியது. ஆனால் R - 101' இந்தியாவை நோக்கி வருகையில் பிரான்ஸில் ஒரு மலையின் மேல் மோதிக் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் பிரிட்டிஷ் விமான மந்திரியும் இன்னும் 46 பேரும் இறந்தனர். இதன் பின்னர் இங்கிலாந்தில் ஆகாயக்கப்பலை விமானப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் முயற்சி கைவிடப்பட்டது.

நூல்கள் : Sprigg, The Airship; J. L. Nayler, and E. Ower, Aviation of Today; H. Allen, The Story of the Airship.

ஆகாய விமானம்: பார்க்க: விமானம்,

ஆகூரா மஸ்தா சாரதூஷ்டிரரால் நிறுவப்பெற்ற மதத்தில் தலைமைக் கடவுள். இந்து மதத்தில் 'அசுரர்' என்னும் சொல் தேவர்களின் பகைவர்களைக் குறிக்கிறது. அவர்கள் மதத்தில்'ஆகூரா' என்னும் சொல் பூரண அறிவு படைத்த கடவுளைக் குறிக்கிறது. ஆயினும் இவ்விரு சொற்களுக்குமிடையே தொடர்பு உண்டு என்று கருதப்படுகிறது. ஆகூரா மஸ்தா என்பது பாரசீக மொழியில் 'ஆர்மது' என்று சிதைந்து வழங்குகிறது. ஆகூரா மஸ்தா ஆதிக் கடவுளாகக் கருதப் படுகிறார் இவருக்கு எதிரிடையாக அங்கிரானமனு என்னும் சாத்தானும் உண்டு. தே. வெ. ம.

ஆங்காரா ஆறு சோவியத் ரஷ்யாவின் ஆசியப் பகுதியிலுள்ள பைக்கால் ஏரிக்கு வடகிழக்கே உற்பத்தியாகி, இர்க்குட்ஸ்க் நகரத்தின் வழியே வந்து, அவ்வேரியைச் சேர்கிறது. இது சு.1,300 மைல் நீளமுள்ளது.

ஆங்கிலம்: மொழி: இது இங்கிலாந்தில் தோன்றி வளர்ந்து தற்போது அந்நாட்டிலும், கானடா, அமெரிக்க ஐக்கியநாடுகள், ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து போன்ற பல பகுதிகளிலும் உள்ள 27 கோடி மக்களது தாய்மொழியாக இருப்பது. இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் பல கோடி மக்கள் இம் மொழியைப் பயின்றிருக்கிறார்கள். சீனமொழிக்கு அடுத்தபடியாக மிக அதிகமான மக்கள் பேசும் மொழி இதுவே. பல மொழிகளிலிருந்து வந்த சொற்களைக் கொண்ட ஆங்கிலம் சர்வதேச மொழியாவதற்கு மற்றெல்லா மொழிகளையும் விடத் தகுதி வாய்ந்தது. பிறமொழிக் கலப்பினால் இதில் எக்கருத்தையும் எளிதிலும், நேரடியாகவும், சுருக்கமாகவும், அழகாகவும் வெளியிடமுடிகிறது.

சிறந்த நெகிழ்வும் இசையும் ஆங்கிலத்தின் சிறப்பியல்புகளாகும். இதன் சொற்றொகையும், சொற்றொடர் இலக்கணமும் (Syntax) சிறப்பான வகையில் அமைந்திருப்பதால் இது இத்திறமையைப் பெற்றுள்ளது. வேற்று மொழிச் சொற்களையும் சொற்றொடர்களையும், வழக்குக்களையும் ஏற்கவோ, தனது மரபிற்கேற்றவாறு அவற்றை மாற்றியமைத்துக் கொள்ளவோ இது எப்பொழுதும் தயங்கியதில்லை. பிறமொழிக் கருத்துக்களையும். இது ஏற்று வளர்ந்துள்ளது. விஞ்ஞான வளர்ச்சியும் நாட்டின் வரலாறும் இதன் வளர்ச்சிக்குத் துணையாயிருந்துள்ளன. இங்கிலாந்தின் சமூக வரலாற்றின் சாயலை ஆங்கில மொழியின் வரலாற்றிலும் காணலாம். ஆதியில் ஆல்பிரிக் (Alpric) என்ற கவிஞரும், இடைக்காலத்தில் சாசரும் (Chaucer), பின்னர் வந்த ஷேக்ஸ்பியரும், மொழி வளர்ச்சியின் போக்கையே மாற்றினார்கள். மில்ட்டன், போப் போன்ற கவிவாணரும், பர்க், சர்ச்சில் போன்ற பேச்சாளரும் மொழிக்குப் புதுச்சொற்களையும், சொற்றொடர்களையும் தந்துதவியுள்ளனர். இத்தகையோரது பணியினால் தற்கால ஆங்கில மொழியில் சுமார் 4,00,000 லிருந்து 6,00,000 சொற்கள் வரை உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் சில ஆயிரம் சொற்களே சாதாரணமாக நடைமுறையில் பயன்படுகின்றன. ஆங்கில மொழியின் வளர்ச்சி இன்னும் முடிவடையவில்லை. இன்னும் அதில் புதுச் சொற்களும் புது வழக்குக்களும் வந்து புகுந்த வண்ணம் உள்ளன. தேவைக்கேற்றவாறு அதில் புதுச்சொற்களைத் தோற்றுவிக்க முடிகிறது.

வரலாறு: இதைப் பழங்காலம், இடைக்காலம், தற்காலம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆராய்வது நலம். இந்த மூன்று காலங்களிலும் முக்கியமாக மூன்று வகைகளில் முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. 1. பிற மொழிக் கலப்பற்ற பழங்காலமொழி, வேற்றுமொழிச் சொற்கள் ஏராளமாகக் கலந்த கலப்பு மொழியாகியது. 2. ஆதியில் ஏராளமாக இருந்த உருமாற்றங்கள். (Inflexions) காலப்போக்கில் மெல்ல மறைந்தன. 3. ஆதியில் எதேச்சையான வகையில் அமைந்திருந்த சொல் வரிசை நிலைப்பட்டது.

பழைய ஆங்கிலம் (கி.பி.500-1100): பிரிட்டனில் 5ஆம் நூற்றாண்டுவரை கெல்ட்டுக்கள் என்ற ஆதிக்குடிகள் வாழ்ந்தனர். இவர்கள் கெல்ட்டிக் மொழி பேசினர். இப்போது ஆங்கில மொழியில் காணப்படும் தொட்டி (Bin), பாறை (Crag) போன்ற சில சாதாரணச் சொற்கள் அம்மொழியிலிருந்துவந்தவை. பல ஊர்களின் பெயர்கள் கெல்ட்டிக் மொழியிலிருந்து வந்தவை.

இவ் வாதிக்குடிகளை வென்று அரசாண்ட ரோமானியர் பிரிட்டனை விட்டுச்சென்றபின் ஆங்கில்கள், சாக்சன்கள், ஜூட்டுகள் ஆகிய ஜெர்மானியக் குடிகள் குடியேறினார்கள். இவர்கள் தாம் குடியேறிய பகுதியை இங்கிலாந்து என்றும், தாம் பேசிய மொழியை இங்கிலிஸ்க் (Englisc) என்றும் அழைத்தார்கள். இவர்கள் பேசிய மொழியை ஆங்கிலோ - சாக்சன் என்றும் கூறுவதுண்டு. இவர்கள் பிரிட்டனுக்கு வருமுன் வெவ்வேறு திசை மொழிகளைப் (Dialects) பேசிவந்தனர். இங்கிலாந்தை அடைந்தபின் இம்மொழிகளுக்கிடையே இருந்த வேறுபாடுகள் அதிகமாயின. அக்காலத்திய திசைமொழிகளில் நான்கு முக்கியமானவை. இவை நார்த்தம்பிரியன், மெர்சியன், கென்ட்டு, சாக்சன் எனப்படும்.

இவர்கள் தாம் ஜெர்மனியிலேயே பயன்படுத்திய ரூனிய நெடுங்கணக்கைப் பயன்படுத்தினார்கள். இங்கிலாந்தில் கிறிஸ்தவ மதம் பரவியபின் ரோமானிய லீபி வழக்கத்திற்கு வந்தது. அக்காலத்தில் சொற்களின் ஓசைக்கேற்றவாறு அதை எழுத்துக்கூட்டி எழுதினார்கள். உயிரெழுத்துக்களை இரட்டித்து நெடில்களைக் குறித்தார்கள். இரு மெய்யெழுத்துக்களை ஒன்று சேர்த்துக் கூட்டு மெய்யெழுத்து ஓசைகளைக் குறித்தார்கள். ஜெர்மானிய மொழியிலிருந்த உருமாற்றங்கள் அனைத்தும் பழைய ஆங்கிலத்தில் கையாளப்பட்டன. வேற்றுமை, பால், காலம் முதலியவற்றைக் குறிப்பதற்குச் சொல்லில் மாற்றங்கள் செய்யப்பட்டன. சொல்லின் பொருளிலிருந்து பாலைக் குறிக்காமல் ஓர் இலக்கண விதியிலிருந்து அதை முடிவு செய்தார்கள். அக்கால இலக்கணத்தில் பெண், கன்னி ஆகிய சொற்களைப் பொதுப்பாலாகவும், கை என்ற சொல்லைப் பெண்பாலாகவும், கால் என்ற சொல்லை ஆண் பாலாகவும் குறித்தார்கள். சொல்லின் முதல் அசையை அழுத்தி உச்சரித்தார்கள். உருமாற்றங்கள் நிறைந்த மொழியில் இறுதி அசைகளை அழுத்தமாக உச்சரிக்காதது பெரிய தடுமாற்றங்களை விளைவித்தது. பழைய ஆங்கில வினைச்-