பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

315

ஆங்கிலம்

பியர்ஸ் (Piers Ploughman) என்ற காவியம் 14ஆம் நூற்றாண்டின் வாழ்க்கையைத் தெளிவாக விவரிக்கிறது. செல்வர்களின் செருக்கு, கொடுமை போன்ற தீமைகளையும், ஏழைகளின் துயரத்தையும், அவர்களது சோம்பேறித்தனம், பொய் பேசுதல் போன்ற குற்றங்குறைகளையும் பற்றி இவர் ஒளிவுமறைவின்றியும், நகைச்சுவையுடனும் எழுதுகிறார். சமூகத்தில் இருந்த குறைகளை நீக்க விக்லிப் (Wycliffe) என்ற சீர்திருத்தவாதி முயன்றார். இவர் நூல்களில் இவருடைய அப்பழுக்கற்ற நேர்மையைக் காண்கிறோம். விவிலிய நூல் மக்களுக்குப் பயன்படுமாறு செய்ய அதை ஆங்கிலத்தில் முதன்முதல் மொழிபெயர்க்க முயன்றவர் இவரே ஆவர்.

சாசர் காலத்திலிருந்து மறுமலர்ச்சி வரை : ஆங்கில இலக்கியத்தில் புதிய சகாப்தத்தைத் தொடங்கிய சாசர் அம்மொழியின் தற்கால வடிவத்திற்குக் காரணராவார். கவிதையின் வாயிலாகக் கதை சொல்லும் இவருடைய கலையை இக்காலத்தவரும் சிறப்பாகப் போற்றுகிறார்கள். இவருடைய நகைச்சுவையும் தனிச் சிறப்புடையது. ஆங்கிலோ-சாக்சன் கவிதையின் அடிப்படையான மோனையை இவர் உணர்ச்சிவேகத்தைக் காட்டும் அணியாக மட்டும் கையாண்டு, எதுகை, சந்தம் ஆகியவற்றை ஆங்கில யாப்பிலக்கணத்தின் அடிப்படையாக ஆக்கிவிட்டார். இவர் நூல்கள் பிற ஐரோப்பிய மொழி நூல்கள் பலவற்றை மூலமாகக்கொண்டிருந்தாலும், அவை ஒவ்வொன்றையும் இவர் தக்கபடி மாற்றியமைத்துச் சிறப்புறச் செய்கிறார். இவருடைய டிராய் லசும் கிரெசிடாவும் என்ற காவியம் காதல், பிரிவு ஆகிய ரசங்களை நன்கு எடுத்துக்காட்டுகிறது. இவர் எழுதிய கான்டர்பரிக் கதைகள் இவருடைய அழியாத புகழுக்குக் காரணமாக விளங்குகின்றன. இவற்றில் இவர் பலவேறு கவிதை முறைகளையும் நடைகளையும் திறமையுடன் கையாள்கிறார். 'ஹிரோயிக் ஈரடிச் செய்யுள்' (Heroic couplet) என்னும் யாப்பு வடிவத்தை இவர் திறமையுடன் கையாண்டார். இதை இவரைவிடத் திறமையுடன் கையாண்டவர்களே இல்லை எனலாம். மிகைப்படுத்திக் கூறுவதையும், கூறாமல் கூறுவதையும் அடிப்படையாகக்கொண்ட இவரது நகைச்சுவை அக்காலத்தில் போலவே தற்காலத்திலும் இன்பம் தருகிறது.

சாசர் காட்டிய வழியில் சென்ற வேறு பல கவிஞர்களுள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சில கவிஞர்களே வெற்றி கண்டார்கள். இவர்களுள் முதலாம் ஜேம்ஸ் அரசர் குறிப்பிடத்தக்கவர். சாசர் எழுதிய டிராய்லசும் கிரெசிடாவும் என்ற கவிதையின் தொடர்ச்சியாகக் கிரெசிடாவின் உயில் (Testament of Criesyde) என்ற பாட்டை ராபர்ட் ஹென்ரிசன் எழுதினார். சோகரசம் மலிந்த இப்பாட்டு ஸ்காட்லாந்து மொழியிலுள்ள கவிதைகளில் தலைசிறந்தது என்று கூறலாம். இதே காலத்தில் இங்கிலாந்தில் இருந்த சர் தாமஸ் மாலரி என்பவர் ஆர்தர் என்ற பழங்காலக் கற்பனைப் பாத்திரத்தைக் கதாநாயகனாகக் கொண்ட சிறந்த வசன காவியத்தை இயற்றினார். மத சம்பந்தமான உணர்ச்சிப் பாடல்களும், மகிழ்ச்சிப் பாடல்களும் (Carols), கதைப் பாட்டுக்களும் (Ballads) இக்காலத்தில் ஏராளமாகத் தோன்றின. ஆகவே பதினைந்தாம் நூற்றாண்டு, கதைப் பாட்டு இயற்றும் கலை உச்ச நிலையை அடைந்த காலமாகும்.

விவிலியக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, நகைச்சுவை ததும்பப் பாமரரது வாழ்க்கைச் சம்பவங்களை இடையில் கொண்ட நாடகங்கள் இக் காலத்தில் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன. ஒட்டுவமையினால் (Allegory) அறநெறியை அறிவுறுத்தும் நாடகங்களும் இக்காலத்தில் தோன்றின.

இக்காலத்திய உரைநடை நூல்களில் குறிப்பிடத்தக்கவை மிகக் குறைவானவை. சாசரின் முன்னுரைகளிலும், வேறு சில நூல்களிலும் இவரது உரைநடையின் நயத்தைப் பார்க்கிறோம். பேகாக் (Peacock), பார்ட்டெஸ்க்யூ (Fortescue) தெளிவான நடையில் எழுதினர். இவர்கள் மனித உள்ளத்தின் சிக்கல்களைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய முயன்றார்கள். அச்சடிப்பு முறையை வழக்கத்திற்குக் கொண்டுவந்த வில்லியம் காக்ஸ்டன் பல நூல்களைச் சிறந்த வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மொழிப்பணி செய்தார்.

எலிசபெத் காலம் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் எதிரொலியாக இங்கிலாந்தில் தோன்றிய இலக்கிய வளர்ச்சியின் காலமாகும். இது எலிசபெத் அரசிக்கு முன்னரே தொடங்கி அவருடைய சந்ததியார்களுடைய காலத்தில் முடிவடைகிறது. இது இதற்குமுன் இருந்த இலக்கியப் பரம்பரையினின்றும், இதையடுத்துத் தோன்றிய பரம்பரையினின்றும் பல வகைகளில் வேறானது. அக்காலத்தில் இங்கிலாந்தில் அரசியலிலும், சமூகத்திலும், மதத்திலும் நிகழ்ந்த பெரு மாறுதல்கள் இலக்கியத்திற்கும் அடிப்படையாக விளங்கின. புது இலக்கிய வடிவங்களும், புதுக் கற்பனைகளும், புதுப் பரம்பரைகளும் தோன்றின.

அச்சடிக்கும் முறை தோன்றுமுன் இலக்கிய இன்பத்தைப் பிரபுக் குலத்தைச் சேர்ந்த சிலரே துய்க்க முடிந்தது; அச்சு முறை வந்தபின் வாணிபத்தால் வளம்பெற்ற நடுத்தர வகுப்பு மக்களும் இவ்வின்பத்தைத் துய்க்க முடிந்தது. மதப் புரட்சியின் விளைவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட விவிலிய நூல் இந்த மாறுதலுக்குத் துணையாக அமைந்தது. மானிட வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்ட இலக்கிய மரபு தோன்ற இவை காரணமாயின. இந்த இயக்கம் மக்கள் நலக்கொள்கை (Humanism) என்று அழைக்கப்படுகிறது.

மக்கள் நலக்கொள்கை இயக்கத்தின் தொடக்கத்தில் எட்டாம் ஹென்ரி அரசரின் மந்திரியான சர் தாமஸ் மோர் என்பவர் புகழ் மிக்கு விளங்குகிறார். பழங்கால இலக்கியத்தில் இவருக்கிருந்த பரந்த புலமையையும், சாவை இன்முகத்துடன் வரவேற்ற இவரது நெறி தவறாத நேர்மையையும், மானிட வர்க்கத்தின்மேல் இவர் கொண்ட அளவற்ற அன்பையும், அதன் எதிர்காலத்தில் இவர் வைத்திருந்த திடமான நம்பிக்கையையும் இவர் நூல்களில் காண்கிறோம். இவரது சிறப்புக்குக் காரணமான கற்பனை உலகு (Utopia) என்ற நூல் லத்தீனில் எழுதப்பெற்றது. இக் காலத்தில் டிண்டேல் (Tyndale) விவிலிய நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இது பல முறை திருத்தப்பட்டு, 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிகாரபூர்வமான வடிவத்தைப் பெற்றது. இதன் எளிய நடை பிற்கால உரை நடைக்கே ஒரு வழிகாட்டியாக விளங்கியது. மூலத்தின் பெருமையையும் அழகையும் இது பூரணமாகக் கொண்டுள்ளது. பூகோளம், இயற்கை இயல், பௌதிகம், ரசாயனம் போன்ற பல துறைகளில் நடைபெற்ற அறிவு வளர்ச்சியைப் பிரான்சிஸ் பேக்கன் சொற் சிக்கனம் மிக்க நடையில் அழகுபட விவரித்தார்.

எலிசபெத் அரசியின் அவைப் புலவரான எட்மண்டு ஸ்பென்சரைச் சாசரின் நேர்வாரிசு எனலாம். கவிதையில் இவர் செலுத்திய ஆட்சியின் அறிகுறிகள் இந்நாளி-