பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

317

ஆங்கிலம்

போன்ற கவிதைகளை இயற்றினார். கனிவும், இரக்கமும், உணர்ச்சியும் அற்புதமாகக் கலந்த பாழான கிராமம் (Deserted Village) என்ற பாட்டு, கோல்டுஸ்மித்திற்கு அழியாப் புகழைத் தேடித் தந்துள்ளது. ஸ்காட்லாந்தின் தேசியக் கவிஞரெனப் புகழப்படும் ராபர்ட்பர்ன்ஸ் (Robert Burns) இசை நயமும்,சொற்சிக்கனமும், உணர்ச்சி வேகமும் மலிந்த பாடல்கள் பல இயற்றினார். சித்திரக் கலைஞரான வில்லியம் பிளேக் (William Blake), களங்கமற்ற நடையில் தமது சொற்சித்திரங்களைச் செதுக்கினார். இவரது புனிதப் பாடல்கள் (Songs of Innocence), அனுபவப் பாடல்கள் (Songs of Experience) போன்ற சிறந்த உணர்ச்சிப் பாடல்கள் கற்றறிந்தோரைத் தவிரச் சிறுவர்கட்கும் இன்பம் பயக்கின்றன.

நாடகத் துறையிலும் கோல்டுஸ்மித் சிறப்புற விளங்கினார். இவரது நாடகங்களில் நல்ல நகைச்சுவையும், திறமையான குண அமைப்பும் காணப்படுகின் றன. ஆபாசமும், ஒழுங்கீனமும் அற்ற நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாக ஷெரிடன் விளங்குகிறார். இவருடைய போட்டியாளர் (Rivals), அவதூறுப் பள்ளி (School for Scandal) போன்ற நாடகங்கள் இன்றும் இங்கிலாந்தில் நடிக்கப்படுகின்றன.

எலிசபெத் காலம் நாடகத் துறையில்போல் உரைநடையிலும் புகழ்பெற்று விளங்குகிறது. ஜான் லாக் தமது தத்துவ நூற் கருத்துக்களைச் சரளமானதும், திருத்தமானதுமான நடையில் வெளியிட்டார். லண்டனைச் சூறையாடிய பிளேக் நோயின் கொடுமையை டானியல் டீபோ (Daniel Defoe) நேரில் கண்டாலொப்ப வருணித்தார். இவர் எழுதிய கற்பனை வரலாறான ராபின்சன் குரூசோ என்ற நூலைப் படியாத ஆங்கிலச் சிறுவரே இருக்க முடியாது. ஸ்விப்ட்டின் தொட்டியின் கதை (Tale of a Tub). கலிவரது பிரயாணங்கள் (Gulliver's Travels) போன்ற நூல்கள் கற்பனைக் கதை இலக்கியத்திற்குச் சிகரமாக விளங்குகின்றன.

கட்டுரையும் இக்காலத்தில் உருப்பெற்றது. ஸ்டீல், அடிசன் ஆகியோர் ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவான நடையில் விளக்கும் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார்கள். செஸ்டர்பீல்டு பிரபு தம் மகனுக்கு எழுதிய கடிதங்களையும் கட்டுரைகளாகவே கொள்ளவேண்டும். நகைச்சுவையும் இரக்கமும் இணைபிரியாது இருந்த தனிநடையில் கோல்டுஸ்மித் தம் உரைநடை நூல்களை எழுதினார். 'இலக்கிய சர்வாதிகாரி' என்ற புகழ்மாலையுடன் விளங்கிய சாமுவெல் ஜான்சனுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய பாஸ்வெல் (Boswell) ஆங்கில இலக்கியத்துக்கு அமர நூல் ஒன்றை ஆக்கித் தந்தார்.

எட்வர்டு கிப்பன் (Edward Gibbon) போன்ற வரலாற்று நூலோரும், எட்மண்டு பர்க் (Edmund Burke) போன்ற நாவலரும் வாழ்ந்த காலமிது. அமெரிக்கச் சுதந்திரப் போரின் முன்னணியில் நின்ற தாமஸ் பெயின் புரட்சிக் கருத்துக்கள் நிறைந்த மனித உரிமைகள் (Rights of Man), பகுத்தறிவு யுகம் (Age of Reason) போன்ற நூல்களை எழுதிப் பாமர மக்களது சிந்தனையைத் தூண்டினார். அரசியலைப் போலவே பொருளாதாரத் துறையிலும் தேசங்களின் செல்வம் (Wealth of Nations) போன்ற அடிப்படையான நூல்கள் தோன்றின.

பாவனை நவிற்சி இயக்கம் (Romanticism) 18ஆம் நூ. இறுதியிலிருந்து அரை நூற்றாண்டுவரை நீடித்த இலக்கிய இயக்கமாகும். இது இயற்கையையும், தனி மனிதனது மாண்பையும், வரம்பற்ற கற்பனையையும், தீவிர உணர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டது.

வர்ட்ஸ்வர்த்தும் (Wordsworth) கோல்ரிஜும் (Coleridge) சாதாரணமான சம்பவங்களும் வியப்புணர்ச்சி எழுப்புமாறு கவிகள் புனைந்தார்கள். பைரன் (Byron) உணர்ச்சி மிக்க கவிதா சக்தியைப் பயன்படுத்திக் கொடுங்கோன்மையுடன் போரிட்டார். அழகுணர்ச்சி மிக்க பாடல்களை ஜான் கீட்ஸ் உருவாக்கினார். ஷெல்லி கற்பனையும் கவிநயமும் மிக்க அழகிய பாக்களை இயற்றினார். புதுமைக் கருத்துக்களைப் பாடிய இவரைப் புரட்சிக் கவிஞர் என்று கூறுவோர் உண்டு.

படிப்பினையைவிட உணர்ச்சி வேகத்தையும், இலக்கியப் பண்பையும் முக்கிய நோக்கமாகக் கொண்ட கட்டுரைகள் இக்காலத்தில் தோன்றின. ஹாஸ்லிட், லாம் (Lamb) போன்ற சிறந்த கட்டுரை ஆசிரியர்கள் இக்காலத்தவர். தாமஸ் டி குவின்சி (Thomas De Quincey) அபூர்வமான கற்பனை மலிந்த நூல்களை எழுதினார். பாமர மக்களின் பிரதிநிதியாக வில்லியம் காபெட் (William Cobbett) தம் கிராமியச் சவாரிகள் (Rural Rides) என்ற குறிப்புக்களை எழுதினார்.

வாழ்க்கைச் சம்பவங்களையும் உணர்ச்சிகளையும் எழுப்பும் நீண்ட கதைகளைப் புனையும் வழக்கம் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. இதிலிருந்து 'நாவல்' என்ற புது இலக்கிய வடிவம் பிறந்தது. ஆங்கில நாவல் ரிச்சர்ட்ஸன் (Richardson), ஹென்ரி பீல்டிங் (Henry Fielding) என்ற நூலாசிரியர்களால் முதலில் உருப்பெற்றது. வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பாத்திரங்களைக் கொண்ட நாவல்களை இவ்விருவரும் எழுதினர். பாவனை நவிற்சி இயக்கம் உச்சநிலையை அடைந்திருந்த காலத்தில் வாழ்ந்த ஜேன் ஆஸ்டென் என்ற பெண்மணி இந்த மரபிற்கு நேர் எதிராகத் தமது நாவல்களை எழுதினார். வரலாற்று நாவல்களை சர் வால்ட்டர் ஸ்காட் எழுதினார்.

விக்டோரியாக் காலம்: விக்டோரியா அரசியின் காலத்தில் அமைதியும், மன் நிறைவும், மாறுதல் வேண்டா மனப்பான்மையும் தோன்றின. விக்டோரியாவின் அரசவைப் புலவராக இருந்த டெனிசன் இக்கால மக்களின் உண்மையான பிரதிநிதியாகத் தமது கவிதையை இயற்றினார். சந்தமும் மெருகும்மிக்க இவருடைய கவிதைகளைச் சொற் சித்திரங்கள் எனவேண்டும். ராபர்ட் பிரௌனிங் என்பவருடைய நீண்ட கவிதைகளைவிட உணர்ச்சிப் பாடல்களும், சிறு காதற் பாக்களும் சிறப்பு வாய்ந்தவை. இயற்கை அழகு மிளிரும் கவிதைகளையும், சிந்தனை நிறைந்த உணர்ச்சிப் பாடல்களையும் மாத்தியு ஆர்னால்டு பாடினார். ஸ்வின்பர்ன் (Swinburne) பொருளைவிடச் சந்தத்தையே கவனித்தார்; புரட்சிக்கீதம் பாடினார், பிரான்சிஸ் தாம்ப்சன் ஆத்மிகத் துறைப்பாடல்கள் பாடினார். ஆழ்ந்த அனுபவத்தையுடைய ஹாப்கின்ஸ் புதிய பாவங்களையும், புதிய நடையையும் கையாண்டு, பிற்காலக் கவிகளுக்குப் புதுவழி காட்டினார்.

விக்டோரியாக் காலம் ஆங்கில நாவலின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. தாக்கரே 'நல்லது வெல்லும்; தீயது அழியும்' என்ற நீதியை வற்புறுத்தும் கதைகள் பல புனைந்தார். சோகத்தைச் சித்திரிப்பதில் இவர் இணையற்று விளங்கினார். ஆன்டனி டிராலப் கதை சொல்லும் திறமை சிறந்து விளங்கினார்.