பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

328

ஆங்கிலம்

கிய மறுமலர்ச்சியிலும் ஈடுபட்டுப் புராதன வீரர்களின் வாழ்க்கையையொத்த சம்பவங்களில் தேறின அயர்லாந்துக் கவிகள் இந்தச் சோர்வை உணரவில்லை. அவர்கள் பாடலில் துணிவும் மகிழ்ச்சியும் துலங்கின. ஏட்ஸ் பிறப்பில் அயர்லாந்துக்காரராயிருந்தும் கவிதைப் பரம்பரையில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அவர் கவிதையில் இரு நாட்டுப் பண்புகளும் கலந்திருந்தன. அவர் முதலில் எழுதிய பாடல்களிற் சில, வாழ்க்கையை வெறுத்து, அயர்லாந்தின் புராதனக்கதைகளின் அழகில் தஞ்சமடையும் கருத்தை வெளியிட்டன. இதைச் செஸ்ட்டர்ட்டன் விகடமாய் ஏளனம் செய்தார். ஏட்ஸின் கவிதை, காலம் செல்லச் செல்லக் கவர்ச்சியும் வன்மையும் சிறந்து விளங்கியது. கவிதையில் எலியட் காலம் தோன்றியபின், அவர் புது நடையில் தம் கருத்தையும் கற்பனையையும் எளிமையும் உறுதியும் கொண்ட பாடல்களில் அமைத்தார்; தற்காலக் கவிகளிற் சிறந்தவராய் விளங்கினார்.

ஏட்ஸ் நீடித்து வாழ்ந்து இரண்டு தலைமுறைகளைக் கண்டார். இக்காலத்தின் முற்பகுதியில் கவி எழுதிய மெரிடித், ஹார்டி, கிப்ளிங், மேஸ்பீல்டு, லாரன்ஸ், ஹவுஸ்மன், டெலமேர் ஆகியோரில் லாரன்ஸைத் தவிர மற்றவர்கள் புதிய வடிவில் கவிதை இயற்றவில்லை. எனினும், 19ஆம் நூற்றாண்டுக் கவிதைக்கு மாறான பண்புகள் அவர்களின் கவிதையில் தோன்றுகின்றன. மெரிடித் நாவலாசிரியர், தம் பாடலில் பிரௌனிங்கைப் பின்பற்றி உளவியல் ஆராய்ச்சியை வெளியிடப் பார்த்தார். அவருடைய இன்னிசைப் பாடல்கள் சில அழகும் இனிமையும் வாய்ந்தவை. ஹார்டி நாவல்கள் எழுதிப் பெயர்பெற்றபின் முதுமையில் கவிதை எழுதினார். வாழ்க்கையில் எதிர்பாராத விபரீத நிகழ்ச்சிகளால் தீராக்கொடுமை நேர்வதுண்டு என்பதை இரக்கமும், ஏளனமும், சோகத்துணிவும் கலந்த பாவனையில் அவர் சித்திரித்தார். அவருடைய கடைசிக் கதையின் சோக முடிவு பலருக்கு ஏற்காமல் போகவே, அவர் கதை எழுதுவதை விட்டுக் கவிதைத் துறையில் இறங்கினார். ஹார்டி இயற்கைக் காட்சிகளை நுட்பத்துடனும் ஆர் வத்துடனும் கவனிப்பவர். ஆனால் வர்ட்ஸ்வர்த்தின் தத்துவத்துக்கு மாறாக, “இயற்கை மனிதனை அணைத்து அறிவூட்டும் செவிலித்தாயன்று; மனிதனுக்கு நேரும் தீராத இன்னல்களை இயற்கை உணராது, தெய்வம் பாராட்டாது“ என்ற சோக உறுதி கொண்டவர்; தம் கருத்தை விளக்குவது ஒன்றையே முக்கியமாகக் கொண்டு, இலக்கிய மொழிகளையும் நாடோடிச் சொற்களையும் கலந்து கையாண்டார்; சொல் ஆட்சியிலும் கருத்திலும் தற்காலத்தவருக்கேற்ற புதுமையைச் சில வேளைகளில் அவர் பாடலிற் காணலாம்.

கிப்ளிங்கும் கதை ஆசிரியரே, பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் பெருமையைப் பாடியவர், சித்திரித்தவர் என்று அவரைப்பற்றிச் சொல்வதுண்டு. கதைப் பாட்டைப் போன்ற நாடோடிப் பாடல் வகைகளை அவர் திறமையுடன் கையாண்டார்; பொதுமக்களது பேச்சின் ஒலி தொனிக்கும்படி சில பாடல்களை இயற்றினார்.

மேஸ்பீல்டு கவிதையும் நாவல்களும் எழுதியவர். மக்களின் சாதாரணப் பேச்சில் உள்ள முரட்டு வசனங்களை அவர் கவிதையிற் காணலாம். வாழ்க்கையின் இன்னல்களையும் அபாயங்களையும் சொல்லால் மெருகிடாமல் அவர் சித்திரிக்க முயன்றார். இந்த இயற்கைப்போக்கு அவர் கவிதைக்குச் சிறப்பளிப்பது.

லாரன்ஸ் தம் வாழ்க்கையிலும், தாம் இயற்றிய கதை, கவிதையிலும், தனிப்போக்கை வெளியீடுபவர்; ஒரு குழுவிற் சேர்ந்தவரல்லர். மக்கள், விலங்குகள், பறவைகளின் உடலிலும் உள்ளத்திலும் மறைந்துகிடக்கும் உணர்ச்சிகளைப்பற்றித் தாம் அவற்றை நேரிற் கண்டவர் போன்ற துணிவுடனும் விவரத்துடனும் கதை எழுதினார்; கவிதை எழுதினார். பழைய முறையிலும், கட்டுப்பாடற்ற கவிதை என்ற முறையிலும் அவர் எழுதிய பாடல்கள் முக்கியமாய் உள்ளுறையாலேயே, புரட்சியையும் புதுமையையும் தோற்றுவிப்பன.

டெலமேர் (De La Mare) விந்தையுணர்ச்சியைக் குழந்தையுள்ளத்திலும், அறியாப் பிரதேசங்களிலும் தேடித் தம் கவிதையில் உருவகப்படுத்தினார். ஹவுஸ்மன்,இன்னிசைப்பாடல்களில் சோகத்துணிவை வெளியிட்டார். பாடலின் இனிமைக்கு மாறாகக் கருத்தின் ஏக்கமும் வறட்சியும் அவர் பாடலுக்கு வன்மை அளித்துத் தற்காலத்தவருக்கு உகந்ததாய் அமைந்தன.

இவ்வாறாகப் பல கவிகள், வர்ட்ஸ்வர்த் காலக் கவிதையின் பெருமிதமும் டெனிசன் காலக் கவிதையின் அமைதியும் கானல் நீரைப் போலப் பொய்த் தோற்றமளிப்பன என்று கொண்டவராய், வாழ்க்கையின் அவகேடுகளை இயற்கைப்போக்கில் சித்திரித்தும், அழகையும் மகிழ்ச்சியையும் கற்பனை உலகில் தேடியும், தம் மன நிலையை வெளியிட்டனர். இந்த மனப்பான்மை கவிதையில் மட்டுமன்று; 20ஆம் நூற்றாண்டின் இலக்கியத்தில் எங்கும் தோன்றியது. மனத்தின் இயல்பைப் பற்றியும், அதன் மறைவிடங்களிற் பொதிந்த உணர்ச்சிகளும் பிம்பங்களும் எவ்வித மாறுவேடம் கொண்டு வெளித்தோற்ற மளிக்கின்றன என்ற ஆராய்ச்சிகளைப் பற்றியும் உளவியலார் புதிதாகக் கண்ட விஷயங்கள் இலக்கியத்தில் இடம்பெற்று அதன் போக்கை மாற்றின.

இக்காலத்துக் கவிகளுள் பிளெக்கர்: (Flecker), ஆபர்க்ரோம்பி (Abercrombie), பின்யன் (Binycn), டிரிங்க்வாட்டர் (Drinkwater), டேவிட்ஸன் (Davidson) முதலியோர் பெரும்பாலும் கவர்ச்சியையும் தீரத்தையும், தம் சூழ்நிலையிலின்றி வேறு காலங்களிலும் நாடுகளிலும் உள்ளனவாய்ப் பாவித்தனர். டேவிஸ், ஸ்டிபன்ஸ் முதலிய வேறு சிலர் இயற்கைக் காட்சிகளைச் சித்திரித்தனர். கிரென்பெல் (Grenfell), சசூன் (Sassoon ) முதலியோர் முதல் உலக யுத்தத்தின் அதிர்ச்சிகளைப் பற்றி எழுதினர் ; போரிலும் போருக்குப்பின்னும் உலகமே சீர்குலைந்ததென்ற கருத்தை அதற்கேற்ற சிதைவுண்ட வடிவங்களில் பிரதிபலிக்க முயன்றனர்.

இவ்வாறாகப் பெருகிய தற்காலக்கவிதை, தொடக்கத்தில் சிறப்படையவில்லை. எலியட் காலத்திலேயே தனி அமைப்புப் பெற்றது. பழைய இலக்கணத்துக்கு இந்த அமைப்புப் புறம்பானது எனினும், இதற்குந் தனி இலக்கணங்கள் உண்டு. தற்காலக் கவிதையின் சிறப்பிலக்கணம் கட்டில்லாத சொற் பெருக்கமன்று. கவிதையினின்றும் பொருளை வேறாகப் பிரித்தெடுக்க முடியாதென்பதே. கவிதையின் பொழிப்புரை என்றுமே கவிதையாகாது என்பது ஆர்னல்டு உதாரணம் காட்டி விளக்கிய உண்மை. இதனாலேயே விஞ்ஞானக் கட்டுரை ஒன்றை வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பதுபோலக் கவிதையை மொழிபெயர்க்க இயலாது. எனவே, தற்காலக் கவிதை பொழிப்புரையைத் தவிர்த்துத் தன் அமைப்பாலேயே கருத்தைப் பிரதிபலிப்பது. இதை உதாரணங்களாலன்றி, வருணனையால் எடுத்துரைக்க முடியாது. இந்த அமைப்புத் தோன்றிய காரணங்கள் சிலவற்றைப் பிரெஞ்சுக் கவிதையின் மாறுதலில் காணலாம்.

ஆங்கிலக்கவிதை என்றும் தனித்து வளர்ந்தகில்லை. முக்கியமாகக் கிரேக்க லத்தீன் இலக்கியத்துக்கும்,