பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

329

ஆங்கிலம்

பிரெஞ்சு இலக்கியத்துக்கும் அது கடன்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் கடைசியில், பிரான்சிலும் புதுமையை விரும்பும் கவிகள் தோன்றினார்கள். அவர்கள் பிரெஞ்சுக் கவிதையின் போக்கை மாற்றிப் புத்துருவம் அமைக்கும் திறமை வாய்ந்தவர்களாயிருந்தார்கள். இவர்களுள் பாடிலே (Baudelaire) என்பவரே தற்காலப் பிரெஞ்சுக் கவிதையைத் தொடங்கியவர் எனலாம். அவர் பழைய வடிவங்களிலேயே, புதிய சொற்களையும் கருத்தையும் அமைத்துப் பிரெஞ்சுக் கவிதையில் ஒரு புரட்சிகரமான மாறுதலை உண்டு பண்ணினார். அவருக்குப் பின் தோன்றிய ராம்பா (Rimbaud), மலார்மி (Mallareme), வலேரி (Valery) முதலியோர் புதுக்கவிதைகளால் கவிதையின் இலக்கணத்தையும் இலட்சியத்தையும் மாற்றிவிட்டனர். “கவிதையில் வரும் சொல் பேச்சில் வழங்கும் சொல்லாயிருந்தாலும், அதன் குறிப்பே வேறு. சாதாரண மொழிகளால் வெளியிடும் கருத்து, கவிதையின் கருத்தன்று. எனவே செய்தி சொல்லவும், உள்ளதை வருணிக்கவும் வேண்டிய சொற்கோவை இலக்கணம் கவிதைக்குரியதன்று. வசனத்தவிைட ஆர்வமும் வேகமும் உள்ளதாய் எழுதப்பட்டாலும் அவையாவும் கவிதையாகா. இதுவரை எழுதப்பட்ட பெருங் கவிதைத் தொகுதிகளின் சிறு பாகமே உண்மைக்கவிதை” என்று இவர்கள் சார்பாக மலார்மி, புதுக்கொள்கைகளை விளக்கினார். மேலும், ”கவிதையில் வரும் மொழிகள் சங்கேத மொழிகள் ; அவை கவிஞனது உள் மனத்தில் தோன்றும் சொல்லற்ற உணர்ச்சிகளை உருவகப்படுத்திப் படிப்போர் மனத்தில் அவ்வுணர்ச்சிகளைப் பிரதிபலிக்கச் செய்யும் கருவிகளே யன்றி வேறில்லை. இதற்கேற்ற சொற்கோவை முழுவதும் பொருள் விளங்குவதாயிராது. கவிதை, தன் ஓசையாலும் அமைப்பாலும் தன்னிடம் பொதிந்து கிடக்கும் உணர்ச்சியைப் பிறர் உணருமாறு சில சின்னங்களே கொண்டிருக்கும். உண்மைக் கவிதையின் உட்பொருளை ஒருவாறாக உணரலாமன்றிப் பொழிப்புரை பெறக்கூடிய கவிதை, கவிதையன்று. அது கவிதை வேடம் புனைந்த உரைநடையே” என்று மலார்மி விளக்கினார். இந்தப் புதுக் கவிதை உருவகக் கவிதை, மனத்தோற்றக்கவிதை என்றெல்லாம்பெயர் பெற்றது. ஒப்பற்ற திறமையுடனும் சிருஷ்டி வன்மையுடனும். பிரெஞ்சுக் கவிஞர் சிலர் இம்முறையில் கவிதை எழுதினார்கள்; இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் வகுக்கவும் முடிந்தது.

கவிதையின் சிறப்பைச் சீர் தூக்கும் பழைய ஆராய்ச்சி இலக்கண முறைகள், புதிய கவிதைக்கு ஏலாதன ஆகிவிடவே, பொருளும் வடிவமும் அற்ற போலிக் கவிதைகள் எங்கும் மலிந்தன. முக்கியமாய் ஆங்கிலத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் கவிதைகள் பல வினோத வகைகளில் எழுதப்பட்டன. ”கனவிற் குழறிய சொற்களால் அமைந்ததுபோன்ற கவிதையை எழுதியவனும் இன்னதென்று விளக்கமாட்டான்; அதைச் சீர்தூக்கும் உரிமை உடையவர் எவருமில்லை” என்ற நிலைமை ஏற்பட்டவுடன் இக்கவிதைக்கு எதிர்ப்பு வலுத்தது ”கவிதையின் முக்கிய நோக்கம் பிறர் உள்ளத்தில் நிறைவு தோன்றச் செய்வது. இந்த இலட்சியத்தைச் சிறிதேனும் பாராட்டாத கவிதையைப் பிரசுரிக்க வேண்டியதே யில்லை” என்று பலர் ஆட்சேபித்தனர். பொருள் விளங்காமலிருப்பதே கவிதையின் சிறப்பு என்ற கோட்பாடு மாறிற்று. எனினும், குறிப்புணர்த்துவதும், எளிதில் கூறமுடியாத பல உணர்ச்சிகளைப் படிப்போர் மனத்தில் தோற்றுவித்துச் சொல்லோடு கருத்து முடிவதாயின்றிக் கவிதை எழுதுவதும் இந்த இலட்சியங்கள் நிறைவேறும்பொருட்டுப் புதிய அமைப்பை உண்டாக்குவதும், தற்காலக் கவியின் உரிமைகளெனக் கருதப்பட்டன. எஸ்ரா பவுண்ட் (Ezra Pound), எலியட், ஈடித் சிட்வெல், ஏட்ஸ், டர்னர், டாரதி வெல்லஸ்லி முதலியோரின் கவிதையில் புதுமுறை சிறந்து விளங்கியது. காம்பெல், டெசிமாண்டு (Tessimond), எம்சல், பாட்ரல் (Bottral), ஹிகின்ஸ் (Higgins), ஆடென் (Auden), டே லூயி (Day Leuis), மக்நீஸ், ஸ்பெண்டர், டைமன்ட், (Dyment) டிலன் தாமஸ் ஆகியவர் தற்காலக் கவிதையைத் திறமையுடன் ஆளுபவரின் எண்ணிக்கையில் சேருவர். மரபைத் தழுவிய கவிதையின் அமைப்பையும் ஓசையையும், சீர், தளைக் கட்டுப்பாடுகளையும் வேண்டிய பொழுது ஆளும் திறமை வாய்த்தும், இவர்கள் அவை தம் கருத்துக்கு ஒவ்வாதன எனப் பெரும்பாலும் அவற்றைத் தவிர்த்தவர்; கவிதை கலை உருக்களில் ஒன்றாதலால் அதன் ஒவ்வொரு பகுதியும் இன்றியமையாத இலக்கணத்தை விளக்குவது எனக் கொண்டு, தம் கருத்துக்கேற்ற மொழிகளையும் அமைப்பையும் அரிதில் தேடிப்பெறுபவர். புது முறையைப் பலருக்கும் விளக்கும் பொருட்டுத் தற்காலக் கவிதைத் தொகுதிகளும், கவிதைப் பத்திரிகைகளும், விமரிசனங்களும் பலவாகப் பெருகி வெளிவந்தன; கவிகள் சிலரும் கவிதையைப் பற்றிய தம் கோட்பாடுகளைப் பற்றிக் கட்டுரைகள் எழுதினார்கள்.

ஆராய்ச்சியாளர் எழுதும் கட்டுரைகளைவிடக் கவிகள் தம் கலையைப் பற்றி எழுதும் கட்டுரைகள் எழுதியவரின் மனப்பான்மையையும், கவிதையின் நுட்பங்களையும் விளக்கிப் பயன் தருவன. எலியட் எழுதிய கட்டுரைகளிலிருந்து புதுமைப் புரட்சிக் கவியாக எண்ணப்படும் அவருடைய சிந்தனையில் பழமையின் ஆர்வம் வேரூன்றியிருந்தமை வெளியாகிறது. எலியட்டின் கொள்கைகளை ஆடென் முதலியோர் முழுவதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவர்களுடைய கட்டுரைகளில் விளங்குகிறது. இதுமட்டுமன்றித் தாம் மேற்கொண்ட குறைகளைப்பற்றி அவர்கள் எழுதியதும் கவிதையின் நுட்பங்களை அறியத் துணைபுரிகிறது. வழக்கில் ஒப்பிய முறைகளைத் தவிர்த்துப் புதுவழியிற் செல்லும் கவி தன் இலட்சியத்தைப் பிறருக்கு விளக்கக் கட்டுரைகளும் எழுதத் துணிகிறான். சாமானியச் சொற்களும் வசன நடையுமே கவிதைக்கேற்றன என்று வர்ட்ஸ்வர்த் தம் முதற் பாடல்களின் முகவுரைக் கட்டுரையில் எழுதினார். அதில் வற்புறுத்திய விதிகளை மீறியே, வர்ட்ஸ்வர்த் கவிதையின் சில பாகங்கள் சிறப்புற்று விளங்குகின்றன. இது போலவே, தற்காலக் கவிகளின் பாடல்கள், அவர்களுடைய கொள்கைகளுக்கு ஏற்றனவாயும், அவைகளுக்குப் புறம்பாயும் தோன்றுகின்றன. இந்தக் கொள்கைகளிற் சிலவற்றைப் பின்வருமாறு கூறலாம்:

(1) கவிதைக்கு ஏற்காத சொல் மொழியில் கிடையாது; அதனால்பேச்சில் வழங்கும் சொற்கள் கவிதையில் வழங்கச் சிறப்புரிமை பெற்றன ; இந்தச் சொற்கள் பேச்சு வழக்கிற்போல எண்ணத்தை ஏகதேசமாய்க் குறிக்காமல், கருத்தின் அளவும் நுட்பமும் தெரியும்படி எள்ளளவேனும் இலக்குப் பிசகாமல் குறிப்பது கவிதையின் சொல்லாட்சி இலக்கணம்.

(2) கவிதைக்குரிய உருவகங்கள் அதன் அமைப்பின் வெளித்தோற்றங்களாக இருத்தல் தகும்; அணியாகத் தோன்றுவன கவிதைக்கு ஒவ்வாதன.

(3) ஓசையும் அமைப்புமே கவிதையாகும் ; இவைகளைப் பற்றிய தனிக்கட்டுப்பாடுகள் எவற்றையும் கவி

ஏற்கவேண்டிய அவசியமில்லை.