பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

331

ஆங்கிலம்

கின்றன என்பதை உணர்ந்து, ஆடென் அவ்வாழ்க்கையை ஏளனமாய்ச் சித்திரித்தார். பலருக்கும் தம் கருத்து விளங்க, நாடக வியலைப் பின்பற்றினார். ஆடென் பாடல்கள் அமைப்பில் புதுமை வாய்ந்தனவே. எனினும், சமூகத்தைச் சித்திரிக்கும் முறையிலும், எளிதில் வன்மைபெற்றுத் தோன்றுவதிலும், போப்பும் பைரனும் எழுதிய கவிதையினத்தையும் ஒருவாறு சார்ந்தவை. இந்தக் குழுவில், ஸ்பெண்டர், டே லூயி முதலியோர் ஆடெனுடைய அளவு நடையை மாற்றும் திறமையும் வன்மையும் வாய்ந்தவரல்லர். ஆனால் அவர்கள் பாடல்கள் ஆடென் பாடலைவிடக் கற்பனையில் சிறந்து தோன்றின.

வேறு பலரின் பாடல்கள் இன்னும் புதிய கருத்துக்களையும், அவைகளுக்கேற்ற அமைப்பையும் கவிகள் நாடுவதைத் தெரிவிப்பன. இவைகளில் கருத்துத் தெளிவாகத் தென்படுவது முன்னிலும் அதிகமாகப் பாராட்டப்படுகிறது.

பொதுவாகத் தற்காலத்தின் பிற்பகுதியில் உணர்ச்சிப் பாடல்கள் சிறந்து தோன்றவில்லை. காதல், அழகுணர்ச்சி, தேசாபிமானம், பக்தி ஆகிய பல உணர்ச்சிகளின் பெருந்தன்மையை ஒப்பாது, அவ்வுணர்ச்சிகளின் அடிவேர்களாய்க் கிளைத்த இயல்பூக்கங்களின் தன்மையை நினைவிற்கொண்டு, “காதல் காமத்தின் தோற்றம்”, பயம் தேடும் கொள்கொம்பு பக்தி”, ”தேசாபிமானம் தற்பெருமையின் விரிவு” என்று கூறிக் கவிகளும் உளவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டதே இதற்கு ஒரு காரணம். பிரூபராக்கின் காதற்பாட்டு (The love song of Alfred Prufruck) என்று எலியட் முதலில் எழுதிய பாடல், தற்கால மனத்தின் ஐயப்பாட்டையும், தன்னையும் தன் காதலையும் பற்றியே ஒருவன் எண்ணக்கூடிய பல்வேறான ஏளனம் கலந்த சிந்தனைகளையும் காட்டுவது. ஆடென் இயற்றிய பாடல்கள் சிலவும், ஓர் உள்ளுறையைச் சிறப்பிக்கும்போதே அச்சிறப்பு வெளித்தோற்றமே என்ற இகழ்ச்சியும் தோன்றும் பண்பு வாய்ந்தன. இம்முறை புதுமையாயிருக்கும்போது பலர் விரும்புவதாயிருந்தது. பின், இது ஜாலவித்தை போன்ற வெறும் சாமர்த்தியமே என்று இகழவும்பட்டது. கவிதையின் கருத்துக் கேள்வியாகவும், ஐயம் தொனிக்கும் விடையாகவும் தோன்றவேண்டியதில்லை. இதுவே மெய் என்ற உறுதி தோன்றக் கவி வன்மையுடன் எழுதுவதே உண்மை என்ற கோட்பாடு எழுந்தது. டைலன் தாமஸின் பாடலில் இவ்வித உறுதியைக் காணலாம். அவர் கவிதையின் அமைப்பும் எழிலும் 17ஆம் நூற்றாண்டு அனுபூதிக் கவிதைகளை நினைப்பூட்டுவன. தற்காலக் கருத்துக்களையும் புதிய அமைப்பின் முறைகளையும் தன்னில் ஏற்று, உறுதியும் மெய்ம்மைப் பண்பும் தோன்ற எழுதப்படும் பாடல் வகை (Apocalyptic verse) ஒரு புதுப் பிரிவினையாகத் தோற்றுவது. இம்முறையை விளக்குபவரில் டைலன் தாமஸ் சிறந்தவர்.

ஒரு காலத்தில் சிறந்து தோன்றிய கவிதை வரம்புகளுக்குள்ளேயே அடுத்தடுத்துக் கவிதை தோன்றுவது இயலாதென்றும், இதனாலேயே போப் கவிதையை வர்ட்ஸ்வர்த்தும், 19ஆம் நூற்றாண்டுக் கவிதையைத் தற்காலத்தவரும் குறைத்து மதிப்பிட நேர்ந்ததென்றும், இனித்தோன்றும் கவிதை எலியட் காலக் கவிதையினின்றும் வேறுபட்டு, அதனினும் தெளிவு வாய்ந்து, புதுமுறைகளை விளக்குவதாயிருக்குமென்றும், மரபில் வந்த வடிவங்களைப் புதுமுறையில் அது ஏற்கக் கூடுமென்றும், சில ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். “சூழ்நிலையாலும் கோட்பாடுகளாலும் மாறுதலடையும் கவிதை முதலில் கவி வரம் பெற்றவனின் உள்ளத்தில் தோன்றுவது; அதன் பண்புகளை ஊகித்துக் கூறமுடியாது“ என்பாரும் உளர். மா. ல.

இந்தியர்கள் எழுதிய ஆங்கில இலக்கியம் : 1835-ல் ஆங்கில மொழிக்கு இந்தியாவில் அதிகார தோரணை ஏற்பட்டதென்று கூறலாம். அப்பொழுது வங்காளத்தில் பிரபலராகவிருந்த ராஜா ராம்மோஹன் ராய், கேசவசந்திரசேன் ஆகியவர்களாலும். கிறிஸ்தவப் பாதிரிமார்களாலும் ஆங்கிலக் கல்வி வளர்ந்து வந்தது. அதன் பயனாக இந்திய மக்களில் சிலர் ஆங்கில இலக்கியச் சுவையை நுகர்ந்து அம் மொழியை எளிதாகக் கையாளத் தொடங்கினர். ஹென்ரி லூயிஸ் விவியன் டெரோசியோ (1809-31) என்பவரை இந்தோ-ஆங்கில இலக்கியத்தின் ஆதி கவியாகச் சொல்லுவது மிகையாகாது. இவர் உணர்ச்சிகளை உள்ளத்தில் தோன்றியவாறு அழகாக வரைந்திருக்கிறார். ஜங்கீராப் பக்கிரி (The Fakir of Jangira) என்பதில் ஒரு பிராமண விதவையின் பரிதாப நிலைமையை இவர் அழகாகச் சித்திரித்துக் காட்டியிருக்கிறார்.

மதுசூதன தத்தர் வங்காளத்தில் ஒரு பெருங்கவியாக விளங்கினார். சிறையிடப்பட்ட சீமாட்டி (The Captive Lady) என்பதில் இராஜபுத்திர வீரர் தலைவனாகிய பிருதிவிராஜனையும் அவன் காதற் கதையையும் ஆங்கிலக் கவிகளில் தெளிவாக எடுத்துக் காட்டினார். கழிந்த காலக் காட்சிகள் (Visions of the east) என்னும் நூலையும் வெளியிட்டார்.

பின்னர் தோரு தத், ஆரு தத் என்ற இரு சகோதரிகள் மிக்க இளமைப் பருவத்திலேயே ஆங்கிலக் கவி பாடுவதில் திறமை வாய்ந்தவர்களெனப் பேர்பெற்றனர். இவர்களில் முக்கியமாகத் தோரு தத்தே சிறந்த கவிஞர். பிரெஞ்சு வயல்களிலிருந்து பொறுக்கி எடுத்த ஒரு கதிர்க்கற்றை (A Sheaf gleaned in French Fields) என்னும் நூலில் இவ்விரு சகோதரி களும் சேர்ந்து சில பிரெஞ்சுப் பாடல்களை ஆங்கிலத்தில் ஆக்கி இருக்கிறார்கள். மேலும் தோரு தத் 'பியான்கா' என்று ஒரு நாலும் பல கவிகளும் புனைந்துள்ளார். ஆனால் இவ்விரு சகோதரிகளும் இளமையிலேயே இறந்துவிட்டார்கள். ஆதிகாலத்து இந்தியக் கதைப் பாடல்களும் கதைகளும் (Ancient Ballads and Legends of Hindustan) என்னும் தோரு தத்தின் நூல் அவர் இறந்தபின் வெளியிடப்பட்டது.

தத் குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ் சந்திர தத்தர் அதிகார வர்க்கத்தில் பெரும் பதவி வகித்து வந்தது மன்றி, இந்திய சரித்திர ஆராய்ச்சியிலும், இந்தியக் கதைக் கருவூலத்திலிருந்து சிற்சிலவற்றை ஆங்கிலக் கவிகளாக மாற்றி அமைப்பதிலும் ஈடுபட்டுப் பேரும் புகழு மடைந்தார். இராமாயணத்தையும் மகாபார்தத்தையும் இவர் ஆங்கிலக் கவிகளில் இயற்றியது போற்றற்பாலது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மான்மோகன் கோஷ், அரவிந்தகோஷ் என்ற சகோதரர்கள் ஆங்கில மொழியில் கவிகள் வரையும் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் முக்கியமானவர் அரவிந்தகோஷ். அரவிந்தர் எழுதிய கவிகளில் சாவித்திரி, ஊர்வசி, காதலும் சாதலும் (Love and Death), பாஜிப் பிரபு, விமோசனம் கொடுத்த பெர்சியன் (Persian the Deliverer) ஆகியவை முக்கியமானவை. மான்மோகன் கோஷ் எழுதியவற்றுள் அமர ஏவாள் (Immortal Eve), ஆர்பிக் மர்மம்(Orphic Mystery) என்பவற்றைக் குறிப்பிடலாம்.

வங்காளத்தில் பிறந்து ஆங்கிலக் கவிகள் புனைந்து இந்தியாவுக்குப் புகழ்மாலை சூட்டியவர் ரவீந்திரநாத