பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்கமகாதேவி

3

அக்காந்தேசீ

என வருதல்‌ காண்க. சுழியோடு தொடங்காத அகரமே எட்டிக்‌ குறிக்கும்‌ என்பர்‌ சிலர்‌. இதன்‌ வடிவ வரலாற்றினைக்‌ கீழே காண்‌க:

அ என்பதற்குக்‌ கடவுள்‌ என்பதே பொருள்‌ என்பர்‌. அது திருமாலையும்‌ சிவனையும்‌. குறிக்கும்‌. [அவ்வென்‌ சொற்‌ பொருளாவான்‌ (பாகவதம்‌ சிசுபா. 90). அகாரம்‌ அவன்‌— (திருமந்திரம்‌ 751)] அகரம்‌ என அறிவாகி (விநாயக புராணம்‌-1) என்பதனால்‌ கடவுளறிவுக்கும்‌ அது பெயராம்‌. தெ.பொ. மீ.


அக்கமகாதேவி (அக்கமாதேவி, மகாதேவியக்கா) : கன்னட நாட்டுப்‌ பெண்மணி. சிவபக்தியிற்‌ சிறந்தவர்‌. அனுபூதியிலாழ்ந்தவர்‌. பசவண்ணருடனிருந்து அவர்‌ கல்யாண்‌ என்னும்‌ நகரத்‌தில்‌ நிறுவிய வீரசைவ நிலையமாகிய சிவானுபவ மண்டபத்தில்‌ தொண்டுபுரிந்து வந்த புண்ணியவதி. அவர்‌ பெற்ற அனுபவத்தின்‌ சாரத்தைத்‌ தெளிவான கன்னடத்தில்‌ இனிமையாகவும்‌ நெஞ்சிற்‌ புகுந்து அழுந்துமாறும்‌ உபதேச மொழிகளாகிய வசனங்கள்‌ என்னும்‌ வடிவில்‌ வெளியிட்டார்‌.

பசவண்ணரும்‌ இவரும்‌ ஒரே காலத்தவராதலால்‌, இவருடைய காலம்‌ ஏறக்குறைய 1160 ஆகும்‌. வீமலர்‌, சுமதி என்போர்‌ இவருடைய தந்தையும்‌ தாயும்‌ ஆவர்‌ என்பதும்‌ அவர்கள்‌ தக்காணத்து உடுதடி, என்னும்‌ ஊரில்‌ வாழ்ந்து வந்தனர்‌ என்பதும்‌ சாமரசன்‌ என்னும்‌ கன்னடக்‌ கவி எழுதிய பிரபுலிங்கலீலையிலிருந்து தெரிகின்றது. சமண மதத்தினனான கௌசிகன்‌ என்னும்‌ அரசன்‌ வலக்கட்டாயத்தினாலே இவ்வம்மையை மணந்தனனென்றும்‌, இவருடைய தூய வாழ்க்கையின்‌ முன்பு காமுகனான கௌசிகன் தன்‌ வலியிழந் தொழிந்தனென்றும்‌, எல்லாச்‌ செல்வங்களையும்‌ துறந்து இவர்‌ கல்யாண்‌ நரத்தை யடைந்து பசவேசுவரருடைய திருமுன்பு இறைவனுக்குத்‌ தொண்டு செய்துவந்தனர்‌ என்றும்‌ வரலாறு வழக்குகின்றது. பிறகு இவர்‌ ஸ்ரீசைலம்‌ என்னும்‌ திருப்பருப்பதம்‌ சென்று தாம்‌ விரும்பி வழிபடு மூர்த்தியாகிய மல்லிகார்ச்சுனரை வணங்கி அவருடைய பெயரை ஒவ்வொரு வசனத்தின்‌ இறுதியிலும்‌ முத்திரையாக வைத்துப்‌ பல வசனங்களை இயற்றிப்‌ பாடி, மகிழ்ந்தார்‌. கன்னட மக்களையும்‌ மகிழ்வித்தார்‌. வாழ்க்கையின்‌ இரகசியத்தை மக்களுக்கு மிகமிக எளிதாகத்‌ தெளிவுறுத்தினர்‌. வீரசைவ வசன இலக்கியத்தில்‌ அக்கா அவர்களுடைய இடம்‌ இணையற்றதாகும்‌. எம்‌. எம்‌. ப.


அக்கரோட்டு (Walnut) அழகிற் சிறந்தவையும்‌ பெரும்‌ பயன்‌ தருபவையுமான உத்தம மரங்களிலே ஒன்று. இது நேர்த்தியான மரச்‌ சாமான்‌ செய்வதற்கு மகாகனி, ஓக்‌ மரங்களுக்குச் சமமானது. சிலவகை அக்கரேட்டு மரங்களைத்‌ தகடுபோல அறுத்து உயர்ந்த மரச்சாமான்களின்‌ மேல்‌ ஓட்டு வேலை (Vencer) செய்வதுண்டு. இதன்‌ கனி மிகச்‌ சிறந்த கொட்டைகளில்‌ ஒன்று. அதிலுள்ள பருப்பு சுவை மிகுந்தது. உணவுப்‌ பொருள்‌ நிறைந்தது. இந்தச்‌ சாதி மரங்கள்‌ ஆசியாவின்‌ தெற்கிலும்‌, கிழக்கிலும்‌, தென்கிழக்கு ஐரோப்பாவிலும்‌, வடஅமெரிக்காவிலும்‌, தென்‌ அமெரிக்காவிலும்‌, மேற்கு இந்தியத்‌ தீவுகளிலும்‌ வளர்‌கின்றன. 17 இனங்கள்‌ உண்டு. அவற்றுள்‌ சிலவற்றின்‌ பருப்பே நாம்‌ உண்ணத்‌ தகுந்தது. மற்றவற்றின்‌ பருப்பு, விலங்குகளுக்கும்‌ பறவைகளுக்கும்‌ உணவாகும்‌. அக்கரோட்டில்‌ கறுப்பு, வெள்ளை அல்லது வெண்ணை, பாரசீகம்‌ என்னும்‌ மூன்று வகைகள்‌ முக்கியமானவை. இந்ததச்‌ சாதி மரங்களெல்லாம்‌ ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு போகப்பட்டவை. இப்போது அங்கு ஏராளமாகப்‌ பயிர்‌ செய்யப்படுகின்றன.

இந்த மரங்கள்‌ சிலநூற்றாண்டுகள்‌ உயிருடனிருக்கும்‌. பெரிய மரங்கள்‌ 100-150 அடி உயரமும்‌, மார்பு உயரத்‌தில்‌ 6 அடிச்‌ சுற்றும்‌ உள்ளவை. இவை மிகவும்‌ கம்பீரமாகத்‌ தோன்றும்‌. அதனால்‌ பூங்காக்களிலும்‌ சாலைகளிலும்‌ இவற்றை வைத்து வளர்ப்பதுண்டு. இலைகள்‌ 1-2 அடி நீளம்‌. இறகுபோன்ற ஒற்றைக்‌ கூட்டிலைகள்‌. நறுமணமுள்ளவை, மருந்துக்குப்‌ பயன்படும்‌. பூக்கள்‌ சிறியவை. இம்‌ மரத்தின்‌ சாற்றிலிருந்து சர்க்கரை எடுக்கப்படுகிறது.

குடும்பம்‌; ஜூக்லண்டேசி (Juglandaceae). இனம்‌: ஜூக்லன்ஸ்‌ ரீஜியா (]uglans regia) முதலானவை.


அக்காந்தேசீ (Acanthaceae) ஆடாதோடைக்‌ குடும்பம்‌. இந்தக்‌ குடும்பத்டைச்‌ சேர்ந்தவை பெரும்‌பாலும் சிறு செடிகளும்‌,குற்றுச்செடிகளுமே.சில கொடிகளும்‌,அருமையாகச் சிலமரங்களும்‌ உண்டு. இலைகள்‌

ஆடாதோடை

எதிரொழுங்கும்‌, முழு வடிவுமுள்ளவை. இலையடி்ச் செதிலில்லை. பூங்கொத்து பெரும்‌பாலும்‌ வவரா நுனிக்‌ கதிர். பூக்காம்பிலைகளும்‌, பூக்காம்‌புச்‌சிற்றிலைகளும்‌ பலவற்றில்‌ பெரியவையாயும்‌ நிறமுள்ளவையாயும்‌ இருக்கும்‌. இச்‌சிற்றிலைகள்‌ சில சமயம்‌ பூவை மூடிக்கொண்டிருக்கும்‌. அப்‌போது இவை புல்லி வட்டம்‌ போல்‌ பூவைக்‌ காக்க உதவும்‌. பூ பெரும்பாலும்‌ இருபால்‌ உள்ளது; வட்டத்துக்கு 4-5 உறுப்புக்கள்‌ உடையது; ஒருதளச்சமமானது. அல்லி இணைந்தது. கேசரம்‌ 4 அல்லது 2; பல இனங்களில்‌ 1-3 போலிக்‌ கேசரங்கள்‌ (Staminodes) உண்டு. மகரந்தப்பை அறைகள்‌ சமம்‌ அல்லது ஒன்று சிறிதும்‌ ஒன்று பெரிதுமாகவும்‌, ஒன்று மேலும்‌ ஒன்று கீழுமாகவும்‌ இருக்கலாம்‌. மகரந்தத் தூள்‌ பலவிதச்‌ சித்திர அமைப்புள்ளது. பொதுவாக இந்தத்‌ தூளின்‌ தோற்‌றம்‌ ஒரு சாதிக்குள்‌ ஒரேமாதிரியாக இருப்பதால்‌ சாதிகளைப்‌ பிரித்தறிய இது அடையாளமாகிறது. சூலகத்‌தின்‌ அடியில்‌ நன்றாக வளர்ந்த ஆதான மண்டலம்‌ (Disc) உண்டு. அதில்‌ பூந்தேன்‌ சுரக்கும்‌. சூலகம்‌ இரண்டு சூலிலைகள்‌ கூடியது; இரண்டறைகளுள்ளது. அச்சுச்‌ சூலொட்டுமுறை. சூல்கனள் பல-2, கனி அறைவெடி கனி. விதைகள்‌ பெரும்பாலும்‌ கடினம்‌; சப்பையானவை. கனி வெடிக்கும்போது ஒலியுண்டாகலாம்‌.

பூவின்‌ அமைப்பு பூச்சிகள் வருவதற்கு ஏற்றதாக இருக்கிறது. தேனீக்கள்‌ வருகின்றன. சேசரம்‌ சற்று முன்னாடி முதிர்கின்றது. சூல்முடி கேசரத்துக்கு அப்‌பால்‌ வெளியே நீட்டிக்‌ கொண்டிருப்பதால்‌ பூச்சி நுழையும்போதே அதன்‌ உடல்‌ அதிற்‌ படுகிறது. அதனால்‌ அயல்‌ மகரந்தச்‌ சேர்க்கை உண்டாகிறது.