பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசியா

338

ஆசிரியத்துறை

என்பவரும், ஆமுர் ஆற்றுவாய்ப் பிரதேசத்தில் வாழும் எல்கெம்பியர் (Elkembeye அல்லது நெகிர்டலர் (Negidals; தொகை : 680); நானியர் (Nani அல்லது உல்சி Ulchi அல்லது ஒரோக்கி Oroki தொகை: 887); நானே (Nany அல்லது கோல்டியர் Golds ; தொகை: 5,309); ஊடியர் (Ude) என்பவர்களும் ஆவர். டி. ஈ. ஆ.

தென்கிழக்கு ஆசியா : தென்கிழக்கு ஆசியா என்பதில் பர்மா, தாய்லாந்து, இந்தோசீனா, மலேயா, இந்தோனீசியா, பிலிப்பீன் தீவுகள், தென்கிழக்குத் தீவுகள் ஆகியவை அடங்கும். இந்தோனீசியாவில் வியாட்நாம், கம்போடியா, லேவோஸ் ஆகியவை அடங்கும். தென்கிழக்கு ஆசிய மக்களும் பல திறத்தினர். அவர்கள் பண்பாடும் பல திறத்தது. இவர்கள் மலேயர், வியாட்நாமியர், தாயர், பர்மியர் என நான்கு இனமாகப் பிரிவர். இவர்களுள் மலேயரே மிகுந்த தொகையினர். அவர்கள் வாழ்ந்து வருவது இந்தோனீசியா, மலேயா, பிலிப்பைன் தீவுகள் ஆகிய இடங்களிலாகும். இந்தோசீனாவில் முக்கியமான நாடு வியாட்நாம். அதிலுள்ள வியாட்நாமியரை அன்னாமியர் என்று கூறுவர். தாயர் என்பவர் தாய்லாந்திலும் லேவோஸிலும் பெரும்பான்மையாக உள்ளவர்கள். அவர்கள் பர்மாவிலுமுளர். ஆனால் அங்கு ஒரு முக்கியமான சிறுபான்மைக் குழுவினராகவே உளர். பர்மாவிலுள்ள தாயரை ஷீனர் என்று கூறுவர். பர்மியர் பர்மாவின் நடுப்பகுதியிலும் தென் பகுதியிலுமே நிறைந்துளர்.

அவர்கள் அனைவரும் வேறு வேறு இனத்தவராயினும், அவர்களிடையே சில பொதுப்பண்புகள் காணப் பெறுகின்றன. அவர்கள் எல்லோரும் ஆசிய மக்கள்; மங்கோலாயிடு இனப் பண்புகள் உடையவர்கள்; ஏறத்தாழ ஐந்தடிக்கு அதிகமான உயரமில்லாதவர்கள். தென்கிழக்கு ஆசியாவில் வேறு சில இன மக்களும் உளர். ஆனால் அவர்கள் மிகச் சிறிய தொகையினர். இவர்கள் தவிரத் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியரும் சீனரும் குடியேறிய பகுதிகளும் உள.

மேற்கூறிய மக்கள் வேறு வேறு இனத்தவராயிருப் பதோடு அவர்களுடைய மதங்களும் பண்பாடும் வேறுபட்டிருக்கின்றன. இந்தோனீசிய மக்களும் மலேயரும் முஸ்லிம்கள். பிலிப்பீன் மக்களில் பெரும்பாலோர் ரோமன் கத்தோலிக்கர். பர்மியர், தாயர், கம்போடியர் ஆகியோர் பௌத்தர்கள். வியட்நாமியர் கன்பூஷிய மதத்தினர். அவர்களிடையே பொதுமொழி, பொதுவெழுத்து, வரலாற்று முறை எதுவும் காணப்படவில்லை. அவர்கள் அரசியல், சமூக விஷயங்களிலும் வேறுபட்டவராக இருக்கிறார்கள். அவர்களுடைய உணவும், வீடும், வீடுகட்டும் முறையும் வேறு வேறானவையே. ஆயினும் சில தலையாய பண்பாட்டுக் கூறுகள் பொதுவாகவே உள்ளன. அவர்களுடைய முக்கியமான உணவு அரிசி. முக்கியத் தொழில் நெற்பயிரிடுதல். அவர்களுடைய நாடுகளில் பயிர்த்தொழிலே முதன்மையானது, கைத்தொழில் இன்னும் முன்னேறவில்லை. அவர்கள் ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் எருதையும் எருமையையுமே பயன்படுத்துகின்றனர். அவர்கள் இப்போது பல உலக மதங்களைத் தழுவின போதிலும், தேவதைகள் உண்டு என்னும் நம்பிக்கையுடையவராகவே காணப்படுகின்றனர். தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றைப் பார்த்தால் அதன் பண்பாட்டின் கூறுகளிற் பல இந்திய நாகரிகத்தினின்றும் சீன நாகரிகத்தினின்றும் வந்தவை என்பது புலனாகும். சீன நாகரிகத்தின் அமிசங்கள் வியாட்நாமிலும், இந்திய நாகரிகத்தின் அமிசங்கள் பிலிப்பீன் தவிர ஏனைய இடங்களிலும் அதிகமாகக் காணப்படும். தாய்லாந்து, கம்போடியா,பர்மா மூன்றும் பௌத்த மதத்தை மட்டுமன்றி, எழுத்தையும் சொற்களையும், சமூக அமைப்பையும் இந்தியாவிலிருந்தே பெற்றன என்று தெரிகிறது. இந்தோனீசியாவில் பாலி (Bali) என்னுமிடத்தைத் தவிர மற்ற இடங்களிலெல்லாம் 15ஆம் நூற்றாண்டு முதல் இஸ்லாம் மதமே காணப்படினும், அந்த நாடும் இந்தியாவின் நாகரிகத்தால் பண்பட்டதாகவே கூறவேண்டும்.

சென்றசில நூற்றாண்டுகளாகத் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகள் மேனாட்டாருடைய ஆட்சியிலிருந்து வந்தமையால் பலவிதமான மேனாட்டுப் பண்பாட்டுத் தொடர்புடையவாயின. பிலிப்பீன் தீவுகள் ஸ்பானிய ஆட்சிக்கும், அமெரிக்க ஆட்சிக்கும், இந்தோனீசியா டச்சு ஆட்சிக்கும், பர்மாவும் மலேயாவும் ஆங்கில ஆட்சிக்கும், இந்தோசீனா பிரெஞ்சு ஆட்சிக்கும் உட்பட்டிருந்தன. இவ்வாறு தென்கிழக்கு ஆசிய நாடுகள் பல்வேறு மேனாட்டு நாடுகளின் ஆட்சிக்குட்பட்டிருந்தபடியால், அவை மற்ற ஆசிய நாடுகளினின்றும் வேறுபட்டிருந்ததோடு, தத்தமக்கிடையிலும் வேறுபட்டேயிருந்தன. ஆயினும் அடிமைத்தனத்தை முற்றிலும் நீக்கி விடுதலை பெறவேண்டும் என்ற ஆசை அவை அனைத்திடமும் பொதுவாகக் காணப்படுவதால் அவை இனவேறுபாட்டையும் பண்பாட்டு வேறுபாட்டையும் மறந்து ஒன்றுபட ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரி. ஜே. கா.

ஆசியாகோ (Asiago) கிழக்கு இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளின் தென் பகுதியிலுள்ள ஓர் ஊர்; யாத்திரிகர்கள் பலர் கூடுமிடம். கடல் மட்டத்திற்கு 3.278 அடி மேலேயுள்ளது. முதல் உலக யுத்தத்தில் இத்தாலிக்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையே நடந்த போர்களில் ஆசியாகோவில் நடந்த சண்டை முக்கியமானது. போர் நினைவுச் சின்னம் ஒன்று பெரிதாக இவ்வூரில் கட்டப்பட்டுள்ளது. மக்: 3,051 (1936).

ஆசியா மைனர் கருங்கடலுக்கும் மத்திய தரைக் கடலுக்கு மிடையே மேற்கு ஆசியாவிலுள்ள ஒரு தீபகற்பமாகும். இப்போது இது துருக்கி வசமுள்ளது. இது உலகத்தில் முதன்முதல் நாகரிகமடைந்த நிலப்பகுதிகளில் ஒன்று. இங்கேயே மனிதன் 3500 ஆண்டுகட்கு முன்னர் இரும்பின் உபயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கலாம் என்று கூறுவர். பண்டைக் கிரேக்க நாகரிகம் ஆசியா மைனரிலேயே தொடங்கிற்று. இது கி.மு.50 முதல் ரோமானியர் வசத்திலிருந்து வந்தது. ஏழாம் நூற்றாண்டில் அராபியர் அரசு செய்தனர். 11ஆம் நூற்றாண்டு முதல் துருக்கியர் வசம் இருந்து வருகிறது. அவர்கள் இதை அனட்டோலியா என்று அழைப்பர். அது பெரும்பாலும் பீடபூமியாகும். இங்கு அவிந்த எரிமலை உள. ஆசியா மைனரில் தாதுப் பொருள்கள் மிகுதி. நல்ல தட்ப வெப்ப நிலை. காடுகளில் ஓக் போன்ற சிறந்த மரங்கள் கிடைக்கும். விவசாயம் சிறப்பாக நடைபெறவில்லை. ஒட்டகங்களும் கழுதைகளும் பாரம் சுமக்கப் பயன்படுகின்றன. இங்குள்ள அங்கோரா ஆட்டின் மயிர் மிகப் பேர்போனது.

ஆசிரியத்தாழிசை ஆசிரியப்பாவின் இனம். தம்முள் அளவொத்த மூன்றடியாய்த் தனித்தும், ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கியும் வரும்.

ஆசிரியத்துறை ஆசிரியப்பாவின் இனம். நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வருவனவும், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வருவனவு நான்கடியாய் இடையிடை குறைந்து வருவனவும், நான்கடியாய் இடையிடை குறைந்து இடைமடக்காய் வரு-