பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்காந்தொசெபலா

4

அக்காந்தோடியை

இந்தக் குடும்பத்தில் பல செடிகளில் விதைத்தாளிலிருந்து கொக்கிபோல் வளைந்த பாகம் ஒன்று வளரும். இது விறைப்பாக இருக்கும். கனி வெடிக்கும்போது இது வில்போல நிமிர்ந்து விதையைத் தூரத்தில் எறியும்.

அக்காந்தொசெபலா
அக்காந்தொசெபலஸ் ரானீ. (ஆண்) [படம் இயற்கை அளவிற்கு பெரியது. பாக் என்பவர் எழுதியதைத் தழுவியது]
1. உறிஞ்சி
2. உறிஞ்சியுறை
3. லெம்னிஸ்கஸ் சுரபி
4. நரம்பணுத்திரள்
5. 6, உறிஞ்சியை உள் இழுக்கும் தசைகள்
7. விந்தணுச் சுரப்பிகள்
9. பைபோன்ற கலவியுறுப்பு வெளியே பிதுங்கி யிருக்கும்

இது மிகப்பெரிய குடும்பம், இந்தியாவில் பல சாதாரணச் செடிகள் இதைச் சேர்ந்தவை. இவற்றுள் சில கொடிகள்; சில தரையில் படிந்து கிடப்பவை; சில பாலை செடிகள்; சில கடற்கரைச் சதுப்புச் செடிகள்.

இந்த குடும்பத்தில் சில நன்கறிந்த செடிகள். தன் பெர்ஜியா (Thunbergia) என்னும் அழகான பெரிய பூக்கள் உள்ள பெருங்கொடி, டபாஸ்காய் (Ruellia), முள்ளி, படிகம், கனகாம்பரம் முதலிய பலவகைச் செடிகள் (Barleria), காட்டுக் கிராம்பு (Justicia suffruticosa), கருநொச்சி (Justicia gendarussa), ஆடாதோடை முதலிய பல உண்டு. நீலமணிபோன்ற பூக்களுடள்ள கழிமுள்ளி (Acanthus ilicifolius) நெய்தல் நிலத்துக் கழிகளிலும் சதுப்பு நிலங்களிலும் காடுபோல் வளர்ந்திருக்கும். இதன் இலை முட்கள் உள்ளது. நீர்முள்ளி (Hygrophila) குளக்கரைகளிலும்,வயல்களிலும் வாய்க்கால் ஓரங்களிலும் வளர்ந்திருக்கும். இவை எல்லாவற்றிலும் வினோதமானது நம் நாட்டு மலைகளில் வளரும் குறிஞ்சி (strobilanthus) என்னும் காட்டுப்புதர். இது 10-12 ஆண்டுகளுக்குப் பூவாமலே வளர்ந்து ஓராண்டில் எல்லாச் செடிகளும் ஒன்றாகப் பூவிடும். அக்காந்தேசீ குடும்பத்தில் பல மூலிகைகள் உண்டு. அவற்றில் ஆடோதோடை மிகச் சிறந்தது. பார்க்க: ஆடாதோடை, நீர்முள்ளி, கனகாம்பரம், குறிஞ்சி, கருநொச்சி.


அக்காந்தொசெபலா (Acanthocephala): முள் தலைப் புழுக்கள். இவை யெல்லாம் ஒட்டுண்ணி வாழ்க்கைக்கே அமைந்திருக்கின்றன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் ஒரு நிலையிலேனும் உணவு உட்கொள்ளுவதற்கான சிறப்பான உறுப்பு ஒன்றும் காணப்படுவதில்லை. இவற்றில் ஆண் வேறு, பெண்வேறு. முதிர்ச்சியடைந்த புழுக்கள் முதுகுத்தண்டுள்ள பிராணிகளின் குடலில் வாழ்வன. அங்கிருக்கும் உணவைத் தம் உடலின் மேற் சுவர் வழியாகவே உள்ளுக்கு இழுத்துக்கொள்ளுகின்றன. சில வகைகள் மிகச் சிறியவை. இரண்டு மில்லி மீட்டர்கூட இருப்பதில்லை. மற்றும் சில இனங்கள் 500 மில்லி மீட்டர் அல்லது இருபது அங்குலத்துக்குமேல் இருக்கும். பெண்ணைவிட ஆண் சிறியதாக இருக்கும். இந்த ஒட்டுண்ணிகள் தமது ஆதாரப் பிராணிகளுக்குள்ளே அவற்றின் உணவின் வழியாகத்தான் கப்போதும் புகுகின்றன. இவற்றின் முதல் ஆதாரப் பிராணி ஒரு கணுக்காலி (Arthropoda). அதிலிருந்து அதை இரையாகக் கொள்ளும் மற்றொரு பிராணி இதற்கு இடையாதாரப் பிராணியாக இருக்கலாம் (intermediate host).அந்தப் பிராணியிலிருந்து அதை யுட்கொள்ளும் முழுகெலும்புப் பிராணியின் உடம்புக்குள் வரலாம்.

இந்தப் புழுக்களில் காணும் சிறப்பான உறுப்பு உடலின் முன்முனையிலுள்ள நாக்குப்போல நீட்டத்தக்க உறிஞ்சி (Proboscis) என்பது. இதை வெளியே நீட்டவும் உள்ளே இழுத்துக்கொள்ளவும் கூடும். இதன் மேலெல்லாம் கொக்கி போன்ற முட்கள் இருக்கும். இவற்றின் உதவியால் புழு ஆதரப் பிராணியின் குடற் சுவரை நன்றாகப் பற்றிக்கொண்டிருக்கும். பல இனங்களில் புழுவின் உடம்பின்மேலும் முட்கள் இருக்கலாம். ஆண் பெண் புழுக்கள்சேர்ந்து, பெண்ணின் உடலுக்குள் முட்டைகருவுற்று வெளியாகி ஆதாரப்பிராணியின் மலத்துடன் புறம்பே வரும். இந்தக் கருப்பட்ட முட்டையை நிலத்திலுள்ள வண்டுகளின் லார்வாக்கள் தின்னலாம். அவற்றின் உணவுப்பாதையில் முட்டை பொரித்து அக்காந்தர் என்னும் நிலைமை அடைகிறது. அது வளர்ந்து உருமாறி அக்காந்தெல்லா நிலையடைகிறது. இந்த நிலையில்தான் இது வேறு பிராணிகள் உடலில் ஒட்டுண்ணியாகப் பற்றக்கூடிய ஆற்றில் உடையது. வண்டின் லார்வாவில் உள்ளவரையிலும் அக்காந்தெல்லா முதிர்நிலை யுறுவதில்லை. அந்த லார்வாவைப் பன்றியோ வேறு யாதோ ஒரு முதுகுத்தண்டுப் பிராணி தின்றால் அதன் குடலில் அக்காந்தெல்லா நிலையைக் கடந்து முதிர்ச்சி நிலையடைகிறது.அப்போதுதான் இந்தப் புழுவின் வாழ்க்கை வட்டம் பூர்த்தியாகிறது.


அக்காந்தோடியை : பாறையடுக்குக்களில் பாசில் (Fossil)களாகப் புதைந்து கிடக்கும் மிகப்

அக்காந்தோடியை [படம் சுவின்னர்ட்டன் என்பவர் எழுதியதைத் தழுவியது]
1. கிளைமாட்டியஸ்
2. அக்காந்தோடிஸ்
3. கற்பித மீன் : ஜதை துடுப்பு ஒரே மடிப்பாகக் காட்டப்பட்டுள்ளது
4. சுறா போன்ற மீன் :ஜதைத் துடுப்புக்கள் முன்னும் பின்னும் உள்ளவை

பழங்கால மீன்வகை. இதுவரையில் அறிந்திருக்கும் மீன்களிலெல்லாம் காலத்தால் முந்தினவை. இவற்றில் பல இனங்கள் காணப்படுகின்றன. இவை ஸ்காட்லாந்தில் கெய்த்னெஸ், போர்பார் என்னும் இடங்களில் அகப்படும் பழைய செம்மணற் பாறை (Old red sand stone)யில் அகப்படுகின்றன. இந்தப் பாறைகள் டெவோனியன் காலத்தைச் சேர்ந்தவை. அந்தக் காலம் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகலாம். அக்காலத்தில் இவை செழித்திருந்தனவெனத் தெரிகிறது. அது முதல் 10 கோடி ஆண்டு கரிக்காலத்தின் பகுதியாகிய கீழ்ப்பெர்மியன் காலம்வரையில் இவைவாழ்ந்து வந்திருக்கின்றன, இவை சிறு மீன்கள். இவற்-