பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்டவா

346

ஆட்டோ

சிறு குளமும், களைத்த பின் இளைப்பாற நிழலுள்ள இடங்களும் இருக்கவேண்டும்.

இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு ஆட்டங்களில் நாட்டம் செல்வதால் அவர்களுக்கு மைதானத்தில் வெவ்வேறு பிரிவுகள் இருக்கவேண்டும். பெண்களது பிரிவில் ஆட்ட வசதிகளோடு நடனத்திற்கும், பூவேலை, பின்னல் வேலைபோன்ற பொழுதுபோக்குகளுக்கும் வசதி தரலாம். பெண்களைவிட இளைஞர்களே அதிகமாக விளையாட வருவதால் அவர்களது பிரிவில் அதிகமான இடவசதி இருத்தல் வேண்டும். எளிய கருவிகளையும், தட்டுமுட்டுக்களையும் செப்பனிடும் வசதிகளை இங்கு அமைப்பதால் இந்த வேலைகளில் இளைஞர்களுக்கு ஆர்வம் பிறக்கும்.

ஆட்டமைதானத்தில் முதிர்ந்தோர்க்கும் இடம் இருந்தால் தம் குழந்தைகளுடைய விளையாட்டுக்களில் பெற்றோர்களுக்குச் சிரத்தை ஏற்படுவதோடு அவர்களது பொழுதுபோக்குக்கும் உதவும். இப்பிரிவில் பெற்றோர் குழந்தைகளுடன் அளவளாவவும், சிற்றுண்டிகள் அருந்தவும், இசை கேட்கவும் வசதிகள் செய்யலாம்.

ஆட்டவா (Ottawa) கானடாவின் தலைநகரம். அந்நாட்டுப் பெரிய நகரங்களுள் ஆறாவது. ஆட்டவா என்பது அங்கு முன்னால் வாழ்ந்த சிவப்பு இந்தியர்கள் வாணிபத்துக்கு வழங்கிய அடவே என்னும் சொல்லிலிருந்து பிறந்ததாம். இதன் அருகில் இரண்டு நீர்வீழ்ச்சிகள் உள. இங்கே பல்கலைக்கழகம் உண்டு. காகிதம் செய்தலும் மரம் அறுப்பதும் முக்கியத் தொழில்கள். ஆட்டவா ஆறு செயின்ட் லாரென்ஸ் ஆற்றின் முக்கிய உபநதியாகும். இது கானடாவிலுள்ள பெரிய ஆறுகளில் ஒன்று. மக் : 1,54,951 (1941).

ஆட்டவா ஒப்பந்தம் (Ottawa agreement) : 1929-ல் ஏற்பட்ட உலக வியாபார மந்தத்தினால் பிரிட்டனும் பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாடுகளும் தங்கள் நாட்டு வாணிபத்தைக் காத்துக் கொள்வதற்கு வழி தேடலாயின. அம்முயற்சியின் பலன் ஆட்டவாவில் 1932-ல் நடந்த ஒரு மாநாட்டில் தோன்றியது. பிரிட்டன், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, கானடா, நியூஜீலாந்து, தென் ரோடீஷியா ஆகிய நாடுகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டன. டொமினியன் அந்தஸ்து பெறாத நாடுளின் சார்பாகப் பிரிட்டனே பிரதிநிதித்துவம் வகித்து இம்மாநாட்டில் பேச்சுவார்த்தைகளை நடத்திற்று. பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திலுள்ள நாடுகள் அச்சாம்ராச்சியத்திலுள்ள மற்ற நாடுகளுக்கு முதல் சலுகையளிக்க வேண்டும் என்பதே இம்மாநாட்டில் ஏற்பட்ட பதினொரு ஒப்பந்தங்களின் முடிவு. சுதேசப் பொருள்களுக்கு முதல் சலுகை, பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாட்டுப்பொருள்களுக்கு இரண்டாவது சலுகை, உலத்திலுள்ள மற்ற நாட்டுச் சரக்குக்களுக்கு மூன்றாவது சலுகை என்னும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாட்டின் முடிவுகள் உருவாக்கப்பட்டன. இம்மாநாட்டின் கொள்கை சர்வாதிகாரிகள் ஆண்ட இத்தாலி, ஜெர்மனி முதலிய மற்ற நாடுகளின் சர்வதேச வாணிபக் கொள்கைகளையும் ஓரளவு உருவாக்கின எனின் தவறாகாது. சாம்ராச்சியப் பொருள்கள் பிரிட்டனில் தடையின்றிப் புகவேண்டுவதற்கான தலையாய நோக்கம் எனின் அதுவும் தவறாகாது. இவ்வேற்பாடுகளில் சில இந்தியாவில் பெரிய எதிர்ப்பைக் கிளப்பியதால், 1935-லும் 1939-லும் பிற்சேர்க்கைகளாகச் சில ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. சாம்ராச்சியச் சலுகை முறையை மிகவும் ஆதரித்த சில நாடுகள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உலக வாணிபத்தில் மிகுதியாக ஈடுபடவேண்டியதன் தேவையை உணரலாயின. அச்சாம்ராச்சியச் சலுகைக் கொள்கைகள் தற்காலத்தில் பெரும்பாலும் ஒரு நாட்டிலும் நடைமுறையில் இல்லை என்றே கூறலாம்.

ஆட்டனத்தி ஒரு சேர நாட்டரசன். பார்க்க: ஆதிமந்தி.

ஆட்டிக்கா (Attica) : ஈஜியன் கடலுக்குள் முக்கோண வடிவமாகச் செல்லும் தீபகற்பம். பண்டை அதீனியர்கள் வாழ்ந்த நிலம். கி. மு. 8ஆம் நூற்றாண்டு முதல் ஆதன்ஸ் அதன் தலைநகரம். இங்குத்தான் கிரீசின் பண்பாடு சிறந்து விளங்கியதாகும். இங்குள்ள பார்தினன் கோயில் வெண்சலவைக் கல்லாலாயது. வரலாற்றுப் புகழ் பெற்றது. கடற்கரையில் துறைமுகங்கள் இருந்து கப்பல் வியாபாரத்துக்குத் துணை செய்தன. மலைகளில் இரும்பும் ஈயமும் வெள்ளியும் கிடைத்தன. இப்போது ஆட்டிக்கா கிரீசின் ஒரு பகுதியாக இருந்துவருகிறது.

ஆட்டோ, நிக்கலஸ் ஆகஸ்ட் (Otto, Nikolous August 1832-1891): ஜெர்மானியப் பொறியியல் அறிஞர். இவர் நேசா நகரின் அருகிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். பள்ளிப் படிப்பு முடிந்ததும் இவர் வியாபாரியானார். ஆனால் அப்போது கண்டுபிடிக்கப்பட்ட உள்ளெரி எஞ்சின் (த. க.) இவரது கருத்தைக் கவர்ந்ததால் இவர் இதுபற்றிய ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். அதன் விளைவாக 1876-ல் நாலடி எஞ்சினை (Four- Stroke Engine) இவர் கண்டுபிடித்தார். இது இன்னும் இவர் பெயரால் வழங்குகிறது. அக்காலத்தில் பாரிஸ் நகரில் நடந்த சர்வதேசக் கண்காட்சியில் இவருடைய எஞ்சினுக்குத் தங்கப் பதக்கம் பரிசளிக்கப்பட்டது.

ஆட்டோ I, மகா (912-973) புனித ரோமானியப் பேரரசனான I-ம் ஹென்ரியின் மகன். இவன் 936-ல் ஜெர்மன் அரசனாக ஆக்கனில் முடி சூட்டப்பெற்றான். இவன் ஆட்சி தொடங்கிய காலத்தில் பல கலகங்களை அடக்க வேண்டியிருந்தது. பிரபுக்கள் கலகம் செய்ததால், படை மானியங்களைத் தன் குடும்பத் தலைவர்களிடையே பகிர்ந்து கொடுத்தான். தன் அதிகாரத்தை எதிர்த்துக் கலகம் செய்து, தன் தம்பியான வென்சஸ்லாஸ் என்பனைக் கொன்ற போலசிலாவை 950-ல் அடக்கினான். 951-ல் ஆல்ப்ஸைக் கடந்து, லம்பர்டியில் 'லம்பர்டுகளின் மன்னன்' என்று முடி சூட்டிக் கொண்டான். இறந்துவிட்ட லொதேர் மன்னன் மனைவியான அடிலேடு என்பவளை மணந்துகொண்டான். 952-ல் ஜெர்மனியில் நிகழ்ந்த ஒரு கலகத்தை யடக்கச் சென்று, 954-ல் அதை அடியோடு நசுக்கினான். 954-ல் ஜெர்மனி மீது படையெடுத்த மாஜியர்களை ஆக்ஸ்பர்க் என்னுமிடத்தில் பெருந்தோல்வியுறச் செய்தான். அப்போது அவன் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவிற்று. 961-ல் ரோமிற்குச் சென்று, அங்குப் போப் XII-ம் ஜானால் பேரரசனாக 962-ல் முடிசூட்டப்பெற்றான். 968-ல் மாக்டிபர்கில் ஒரு பிஷப்பு மடத்தை ஏற்படுத்தினான். 973-ல் மெமல்பென்னில் இறந்துபோனான்; அவன் உடலம் மாக்டிபர்கில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆட்டோ II (955-983) I-ம் ஆட்டோவின் மகன். 961-ல் ஆக்கனில் ஜெர்மன் மன்னனாகவும், 967-ல் ரோமில் தந்தையுடன் கூட்டுச் சக்கரவர்த்தியாகவும் முடிசூட்டப்பெற்றான். 974-ல் சாக்சனி மேற்சென்ற ஹரால்டு நீலப்பல்லன் என்னும் டேனிஷ் மன்னனைத் தோற்கடித்தான். பாவேரியா டியூக்கான ஹென்ரி