பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடிப்பூரம் திருவிழா

349

ஆடு

கோள ஆடிகளில் தோன்றும் பிம்பங்களில் சில குறைகள் இருக்கலாம். அவற்றுள் முக்கியமானது கோளப்பிறழ்ச்சி என்பது. ஆடியின் அச்சிலிருந்து மிகுதொலைவில் விழும் ஒளிக்கதிர்கள் குவியத்தில் குவியாததால் இக்குறை தோன்றுகிறது. இதை நீக்க ஆடியின் முன்னால் தொளைகளுள்ள இடைத்திரைகளை இட்டு, ஆடியின் மையத்தின் அருகில் மட்டும் ஒளிக் கதிர்கள் விழுமாறு செய்யவேண்டும்.

பரவளைய ஆடி ஒரு பரவளையத்தை அதன் அச்சை யொட்டிச் சுழற்றுவதால் கனபரவளையம் (Para Boloid) என்ற கன உருவத்தைப் பெறலாம். இவ்வடிவுள்ள ஆடிகளில் கோளப் பிறழ்ச்சி தோன்றுவதில்லை.

பரவளைய ஆடி

ஆகையால் பரவளைய ஆடி அளவிற் பெரிதாக இருந்தாலும் தெளிவான பிம்பங்களை அளிக்கும். இதன் குவியத்தில் ஒரு விளக்கை வைத்துவிட்டால் சீரான இணை ஒளிக்கற்றையொன்றைப் பெறலாம். ஆகையால் துருவு விளக்குக்களிலும், வான நிலைய டெலிஸ்கோப்புக்களிலும் பரவளைய ஆடியே பயனாகிறது.

ஆடிப்பூரம் திருவிழா ஆடித் திங்களில் பூர நட்சத்திரத்தில் நடைபெறுவது. பார்வதியை வழிபடுவது.

ஆடிப்பெருக்கு ஆடித் திங்களில் முதன்முதலாக ஆறுகளில் நீர் பெருகி வருவதைக் களிப்புடன் வரவேற்று இந்துக்கள் கொண்டாடும் விழா. இது ஆடி 18ஆம் நாளில் கொண்டாடப்படுவதால் இதைப் பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவர். அன்று சித்திரான்னங்கள் செய்துகொண்டு, ஆற்றங்கரைக்கு ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் சென்று, நீரிலும் கரையிலுமாக நின்றுகொண்டு உண்டு களிப்பர். இது பழந் தமிழ் இலக்கியங்கள் கூறும் ‘புனலாடல்’ என்ற விழாவுடனும், பண்டைய சமஸ்கிருத இலக்கியங்கள் கூறும் ‘நவோதகாப்புத்கமம்’ (புதுநீர் வரவேற்கை) என்ற விழாவுடனும் தொடர்புடையதென்று கூறலாம். வே. ரா.

ஆடு மனிதன் வளர்க்கும் முதன்மையான விலங்குகளிலே ஒன்று. முதன்முதலாக அவன் வளர்த்துப் பெருக்கியது இதுவேயாகலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். அவனுக்கு உண்பனவும் உடுப்பனவுமாகப் பாலும், நல்ல மெல்லிய இறைச்சியும், பல பொருடகுதவும் தோலும், மெல்லிய மயிருந் தந்து இன்றும் உதவி வருகிறது. ஆடு இல்லாவிட்டால் மனித வாழ்க்கை பெரிதும் இடர்ப்பாடுடையதாகும்; பல ஆடு ஆதிக்குடிகளுக்கும் நாடோடிச் சாதியினருக்கும் ஆடில்லாவிட்டால் வாழ்வதே அரிதாகிவிடும்.

ஆடு பாலூட்டு விலங்குகளிலே கொம்பும் இரட்டைக் குளம்பும் உடைய அசைபோடும் வகையைச் சேர்ந்தது. இதன் கொம்பானது உள்ளேயிருக்கும் எலும்பை உறைபோல் மூடிக்கொண்டிருக்கும். ஆடுகள் உலகத்தின் எல்லாப் பாகங்களிலும் இருக்கின்றன. இவை சமமான தட்பவெப்ப நாடுகளில் மிகுந்த ஈரமில்லாத பாகங்களில் நன்றாகச் செழித்துப் பெருகுகின்றன. ஆயினும் இவை கரடுமுரடான மலைப்பாங்கான இடங்களில் இயற்கையாக வாழ்பவை. காட்டாடுகளெல்லாம் உயரமான மலைகளிலேயே இன்னும் காணப்படுகின்றன. இந்தியாவில் வருடை அல்லது வரையாடு என்பது நீலகிரி, ஆனைமலை, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர்ந்த அடுக்கல்களில் இருக்கிறது. இமயமலையிலும் காட்டாடுகள் இருக்கின்றன. மத்திய ஆசியாவிலும், ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் பல இனங்களைச் சேர்ந்த காட்டாடுகள் இருக்கின்றன. வட அமெரிக்காவில் ராக்கி மலை ஆடு என்னும் ஓரினம் உண்டு. இவையெல்லாம் உயர்ந்த மலைகளில் வாழ்பவையே.

ஆடுகளில் செம்மறியாடு, வெள்ளாடு என இரண்டு வகைகளுண்டு. இந்த இரண்டு வகைகளிலும் காட்டாடுகள் உண்டு. வளர்க்கும் ஆடுகளில் இந்த இரண்டு வகைகளையும் வேறு பிரித்து உணர்ந்து கொள்ளலாமாயினும், சில வகைகளை அவ்வாறு தெரிந்துகொள்ளுவது எளிதாக இருப்பதில்லை.

சாதாரணமாக வெள்ளாட்டைவிடச் செம்மறி பருத்திருக்கும் ; குள்ளமாக இருக்கும். செம்மறியின் கொம்பு தலையின் இருபக்கத்திற்கும் நீட்டிக்கொண்டு, சுருண்டு முறுக்கிக்கொண்டிருக்கும். கொம்பு நெடுக வரி வரியாகக் குறுக்கு வரிகளிருக்கும். வெள்ளாட்டின் கொம்பு தலையின் உச்சியிலிருந்து மேல்நோக்கியெழுந்து பின்னுக்கு வளைந்திருக்கும். அதில் வரைகள் பெரும்பாலும் தோன்றுவதில்லை. செம்மறியின் வால் சற்று நீண்டு, கீழ்நோக்கித் தொங்கும்; வெள்ளாட்டின் வால் மிகச் சிறியதாக மேல்நோக்கி நிமிர்ந்து நிற்கும். செம்மறியாட்டுக்குத் தாடியிருப்பதில்லை; வெள்ளாட்டுக்கு மோவாயின் கீழே தாடியிருக்கும், தாடியில்லாத வெள்ளாடுகளும் உண்டு. செம்மறியாட்டிற்கு நீளமாக இருக்கும் மயிரோடு அதற்கடியில் தோலுக்கு அருகில் நெருங்கியிருக்கும் ‘மென்மயிர்’ (Fleece) உண்டு ; வெள்ளாட்டில் இந்த மென்மயிர் சிலவகைகளில் இருக்குமானாலும் பெரும்பாலும் இருப்பது நேராக வளர்ந்திருக்கும் மயிரே. செம்மறியாட்டுக் கண்ணின் உள்முனைக்குக் கீழே ஒரு பள்ளம் இருக்கிறது. அதில் ஒரு சுரப்பியிருக்கிறது. இந்தச் சுரப்பி இரலைமான் இனங்களில் நன்றாக வளர்ந்திருப்பதைக் காணலாம்; இது வெள்ளாட்டிற்கில்லை. செம்மறியின் குளம்புக்கு இடையில் ஒரு சுரப்பியுண்டு ; இதுவும் வெள்ளாட்டிற்கில்லை. செம்மறியாட்டில் மொச்சை நாற்றம் அடிப்பதில்லை ; வெள்ளாட்டுக் கடாவுக்கு இந்த மொச்சை நாற்றம் உண்டு. இந்த நாற்றம் வெள்ளாடு இனம் பெருகும் காலத்தில் பலமாக அடிக்கும். செம்மறியைவிட வெள்ளாடு மிவும் செங்குத்தான பாறைகளிலும் திறமையோடும் விரைவாகவும் ஏறிச்செல்லும். சாரமற்ற உணவையும் உண்டு வாழும். செம்மறி பெரும்பாலும் புல் மேயும்; வெள்ளாடு பெரும்பாலும் தழை மேயும்.

செம்மறியாடு: ஊரியல் அல்லது ஷாபு என்னும் காட்டுச் செம்மறியாடு பஞ்சாபிலும், சிந்து, பலுசிஸ்தானம், தென் பாரசீகம் வரையில் மேற்கிலும்,