பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடு

350

ஆடு

வட திபெத்து வரையில் கிழக்கிலும் பரவியிருக்கிறது. இதை மிகப் பழைய காலத்திலேயே ஆதி மனிதன் பழக்கி வளர்த்து வந்தான் என்று துருக்கிஸ்தானத்திலுள்ள ஆனன் என்னும் பழைய ஊர் இருந்த இடத்தில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சியால் அறியக்கிடக்கிறது. இது ஓவிஸ் விக்னியை எனப்படும். இதிலிருந்துதான் ஐரோப்பாவில் வளரும் செம்மறிகளுக்கெல்லாம் தாயினமாகிய ஓவிஸ் ஏரிஸ் என்னும் ஆடு உண்டாயிற்று. இது புதுக் கற்கால முதல் இன்றுவரை மாறாமல் வந்திருக்கிறது. சார்டினியாவில் முவ்லோன் என்னும் காட்டினம் உண்டு. இவ்வினம் மனிதர் வளர்க்கும் ஆடுகளுடன் சேர்ந்து பல்குகிறது. இதன் சந்ததி செம்புக் காலம் முதல் இருந்துவருகிறது. இப்போதுள்ள வளர்ப்புச் செம்மறிகளில் பேரளவின இந்தச் செம்புக்கால ஆட்டினின்று தோன்றிய காட்டுச் செம்மறிகள் நடுஆசியாவில்தான் தொகையிலும் இனத்திலும் பெருகியிருக்கின்றன. பெரு மந்தைகளாகவும் சிறு குடும்பங்களாகவும் இவை உலவும். கிழக்கடாக்கள் பொதுவாக மந்தையினின்று தனித்துச் சஞ்சரிக்கும். இவை சிறப்பாக மலையில் வாழ்பவையாயினும் செங்குத்தான இடங்களில் இருப்பதில்லை. குறிஞ்சியைச் சார்ந்த பள்ளமும் மேடுமாகப் பரந்துள்ள புல் நிறைந்த மலைச்சரிவுகளிலே வாழ்கின்றன.

பாமிர் பீடபூமியில் 16,000 அடி உயரத்தில் ஓவிஸ் போலை என்னும் அழகிய ஆடு இருக்கிறது. 13ஆம் நூற்றாண்டில் மார்க்கோபோலோ என்னும் வெனிஸ் யாத்திரிகர் இதைப் பற்றித் தெரிவித்திருக்கிறார். ஆதலால் இதற்குப் போலை என்னும் இனப் பெயர்கொடுத்திருக்கிறது. முதிர்ந்த கடாக்களின் கொம்பு மிகப் பெரியது. 52 அங்குல நீளமும், அடியில் 15 அங்குலச்சுற்றும் உள்ளது. தோளருகே 44 அங்குலம் உயரம் இருக்கும். சில ஆடுகள் கடா 250 இராத்தல் எடை இருக்கும்.

மார்க்கோபோலோ ஆடு

பாரால் அல்லது நீல ஆடு திபெத்தில் வசிப்பது. சிக்கிம், நேபாளம் இவற்றின் வடக்குப் பகுதிகளிலும் இது காணப்படுகிறது. ஆசியாவில் தியன்ஷன், துருக்கிஸ்தானம், ஆல்தாய், லடக், தீபெத்து, கிழக்கு மங்கோலியக் கோபிபாலைவனம், ஸ்தானவாய், கிழக்குச்சைபீரியா, காமச்சட்கா இங்கெல்லாம் காட்டுச் செம்மறிகள் உண்டு. வட அமெரிக்காவில் ராக்கிமலை, கானடா, அலாஸ்கா, யூகான், மெக்சிகோ முதலிய பாகங்களில் இருக்கின்றன.

வளர்ப்புச் செம்மறி: வேளாண்மை நடக்குமிடங்களிலெல்லாம் மனிதன் இதை வளர்க்கிறான். ஆயினும் சம தட்பவெப்ப வலயங்களிலேயே இது மிக நன்றாகப் பல்குகின்றது. செம்மறியில் பலவகைகள் உண்டு. ஆண் பெண் இரண்டுக்கும் கொம்புண்டு. பெண்ணின் கொம்பு சிறிதாக இருக்கும். சில வகைகளுக்குக் கொம்பே இல்லை. மற்றுஞ் சிலவற்றிற்கு 4, 8 கொம்புகள்கூட உண்டு. கிழக்குத் தேச வகைகளுக்கு முகத்தில் மூக்கெலும்பு உயர்ந்து வளைந்திருக்கும். சிலவற்றிற்கு வால் மிக நீண்டு தரையிற்படும். மற்றுஞ் சிலவற்றின் வாலின் அடியில் இருபுறத்தும் கொழுப்பு மிகத் திரண்டிருக்கும். உடம்பின் வடிவம், கொடுக்கும் மயிரின் அளவு, பண்பு, நிறம், பாலின் அளவு முதலிய பல குணங்களில் செம்மறி வகைகள் மாறுபட்டிருக்கின்றன. இப்படி 200 வகைச் செம்மறியாடுகள் உண்டு. இவற்றில் 36 வகைகள் பெரும்பான்மையாக வளர்ப்பவை. கம்பளி, மென் மயிர்த்தோல், இறைச்சி, பால் இவற்றின் தன்மையைக் கொண்டு அவற்றை ஆறு பிரிவுகளாகக் கருதுகின்றனர். நுண்மயிர், நடுத்தரமயிர், நீண்ட முரட்டு மயிர், மென்மயிர்த்தோல், இறைச்சி, பால் என்பன அபபிரிவுகளின் பெயர்கள்.

நுண் மயிர் கொடுக்கும் வகைகளில், மெரினோ என்பது மிகவுயர்ந்தது. ஸ்பெயின் தேசத்தில் இது முதலில் தோன்றியது. இப்போது இது பல நாடுகளில் வளர்க்கும் முக்கிய வகையாகும். ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, தென்னாப்பிரிக்க யூனியன், ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், ஜெர்மனி முதலிய நாடுகளில் இது மிகுந்துள்ளது. ஆய்ந்து ஆய்ந்து நல்ல ஆடுகளைச் சேர்ப்பதால் பல வகைகளின் பண்பு மேலும் மேலும் சிறப்படைந்து வந்திருக்கிறது.

செம்மறிக்கு வேண்டிய உணவு மிகச் சாமானியமான புல், புதர் முதலியனவே. குதிரையும் மாடும் பன்றியுங்கூட விரும்பாதவற்றை மேய்ந்து வாழும். தண்ணீர் குடிக்காமல் சில வாரகாலம் இருக்கும்; சற்றுக் கொழுமையான புல் பனியால் நனைந்ததே போதும். செம்மறி புல்லை நன்றாக அடிவரையில் ஒட்டக் கடித்துத் தின்னும். ஆடு தழை தின்பதுபோல என்றும், நுனிப்புல் மேய்வதுபோல என்றும் சொல்லுகிற பழிச்சொற்கள் செம்மறிக்குப் பொருந்தா.

செம்மறி மந்தை மந்தையாக வாழும். தலைமையாடு ஒரு முதிய கடாவாக இருக்கும். அது போகும் வழியைப் பின்பற்றி மற்றெல்லாம் தொடர்ந்து போகும். இவை பெரிய கோழை. ஒரு காகிதம் பறந்தாலும் திடுக்கிட்டுவிடும். இடி முழக்கங்கேட்டால் நாலாபக்கமும் சிதறியோடும். ஆனால் இவை சண்டைபோடுவதும் உண்டு. ஒரு பெரிய கடா எருதையும் எதிர்த்துப் பொருது நிற்கும். குட்டிகளை நாய் முதலியவை தொந்தரவு செய்யாமல் பெண்ணாடுகள் காக்கும். இரண்டுமூன்று பெண்ணாடுகள் குட்டிகளோடு வந்துகொண்டிருந்தால் ஓர் ஆடு அந்தக் குட்டிகளை அழைத்துக்கொண்டு போகும். மற்றவை நாயை எதிர்த்து நின்று மடக்கும். நாய் பாய்ச்சல் காட்டினாலும் தடுக்கும். அதற்குள் குட்டிகள் தப்பித்துக் கொள்ளும்.

வெள்ளாடு ஏழைகளின் பசு. கடுமையான வாழ்க்கையையுந் தாளக்கூடியது. செம்மறியைவிடக் கரடுமுரடானதும் செழுமையில்லாததுமான இடத்திலும், செங்குத்தான மலைப்பாகங்களிலும் முரட்டு முட்செடியோ கொடியோ தழையோ புல்லோ, எது கிடைக்குமோ அதைத் தின்று வாழும். இது தொடாத சில செடிகள் உண்டு. அவற்றை ஆடு தீண்டாப்பாளை என்பார்கள். குதிரையும், மாடும், செம்மறியாடுங்கூட தின்று வாழமுடியாத சாரமற்ற உணவையுந் தின்று இது பிழைத்திருக்கும். நிரம்ப ஈரமான இடங்களில் இது செழிக்காது. வெள்ளாட்டில் கறுப்பு, பழுப்பு, வெள்ளை முதலிய பல நிறங்கள் உண்டு. கறுப்பு மிகுதியாக இருக்கும்.

வெள்ளாட்டின் ஆணுக்குக் கடா, தகர், மோத்தையென்று பெயர். ஆட்டுக்குட்டி தாயின் வயிற்றில் 21- 23 வாரம் அதாவது ஐந்து மாதமிருந்து பிறக்கும். ஆடு