பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

352

ஆடை அணிகள்

முதிர்ந்த கடாவின் இறைச்சி மொச்சையடிக்கும்; நன்றாக இராது. பெண்ணாடு, கடாக்குட்டி இவற்றின் இறைச்சி மிக நன்றாக இருக்கும். க.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இமயவரம் பன் நெடுஞ்சேரலாதனுடைய இரண்டாவது மகன். தண்டகாரணியமென்னும் ஓரிடத்திலே வடநாட்டவரால் கவரப்பட்ட பசு நிரைகளை மீட்டுத் தொண்டியில் சேர்ப்பித்ததால் இப்பெயர் பெற்றான். தன்னைப் பாடிய காக்கைபாடினியார் நச்செள்ளையார்க்கு ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் ஈந்தவன் (பதிற். ஆறாம் பத்து).

ஆடு தீண்டாப்பாளை (ஆடுதின்னாப் பாளை) தரையில் படர்ந்து கிடக்கும் சிறு செடி. பருத்தி விளையும் கரிசல் நிலத்தில்

ஆடு தீண்டாப்பாளை

பெரிதும் கொடுமையான களையாக இருக்கிறது. கிளைகள் தரைக்கு கீழேயிருக்கும். தண்டில் இருந்து வளரும். இந்தச்செடி தண்டில்லாத வேரிலிருந்து முளைக்கும். இலையின்மேல் நீலவெண்மை நிறமுள்ள பூசு படிந்திருக்கும். பூ ¾ அங்குல நீளம்; இலைக்கணுச் சந்தில் தனித்தனியாக உண்டாகும். இதழ் குழாய் வடிவமான கூட்டிதழ். குழாய்குள்ளே மயிர்கள் உண்டு. அவையெல்லாம் கீழ்நோக்கி வளர்ந்திருக்கும். கேசரங்கள் 6. சூல் முடிக்கு கீழே சூல்தண்டைச் சுற்றிலும் ஒட்டிக் கொண்டிருக்கும். சூலறை பூவின் மற்ற வுறுப்புகளுக்கு கீழுள்ளது; 6 அறைகளுள்ளது. கனி வெடி கனி. வெடித்த கனி உறிபோலத் தோன்றும். விதைகள் எளிதில் காற்றில் அடித்துக்கொண்டு போகக் கூடியவை.

இதில் மகரந்தச் சேர்க்கை நடப்பது வினோதமாக இருக்கின்றது. ஒரே பூவில் கேசரமும் சூலகமும் இருந்தாலும் சூலகம் முன்னாடி முதிர்கின்றது. சூல் முடி முதலில் பக்குவப்பட்டுவிடுகின்றது. சிறு இதழ்க்குழாய் வழியாக உள்ளே போகும்போது அதிலுள்ள மயிர்கள் கீழ் நோக்கியிருப்பதால் ஈக்கள் தடையின்றிப் போகும். உள்ளே போனதும் இதன் உடம்பு சூல்முடியில் படும். இது கொண்டுவந்த மகரந்தம் பக்குவமாக இருக்கின்ற அந்தச் சூல்முடியில் ஒட்டிக்கொள்ளும். ஈ வெளியே வர முயன்றால் மயிர்கள் அதற்கு வழியில் ஈட்டிகள் போல நீட்டிக் கொண்டிருப்பதால் வர முடிவதில்லை. ஆதலால் அது உள்ளேயே சுழன்றுகொண்டிருக்கும். இந்தக் காலத்துக்குள் சூலடியைச் சுற்றியுள்ள மகரந்தப் பைகள் முதிர்ந்து வெடிக்கும். தூள் அங்குச் சுழலும் ஈயினுடலில் நன்றாக ஒட்டிக்கொள்ளும். இதற்குள் முதலில் ஈ நுழைந்ததும் ஏற்பட்ட மகரந்தச் சேர்க்கையால் சூலில் கருத்தரித்தவுடன் இதழ்க் குழாயிலுள்ள மயிர்களெல்லாம் வாடிவிடும். பூவும் நிமிர்ந்திருந்தது சற்று வளையும். இப்போது ஈ வெளிவருவது எளிது. வந்து வேறொரு பூவுக்குப் போகும். இவ்வாறு அயல் மகரந்தச் சேர்க்கை இந்தப் பூவில் நடக்கிறது. குடும்பம் : அரிஸ்டோலோக்கியேசீ (Aristolochia- ceae); இனம் : அரிஸ்டோலோக்கியா பிராக்டியேட்டா (Aristolochia bracteata).

ஆடுதுறை மாசாத்தனார் சங்ககாலப் புலவர். காவிரியாற்றின் வடக்கிலொன்றும் தெற்கிலொன்றும் வட வெள்ளாற்றங்கரையிலொன்றும் ஆக மூன்று ஊர்கள் ஆடுதுறை என்னும் பெயருடன் இருக்கின்றன. இவற்றுள் ஒன்றில் இருந்த புலவர் இவர். சாத்தன் என்னும் தெய்வத்தின் பெயரைக் கொண்டவர். இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இறந்தபோது வருந்திப் பாடியுள்ளார் (புறம். 227).

ஆடை அணிகள் (மானிடவியல்): அழகு இன்னதென்பதில் மக்களுக்குள் பரந்த மாறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதிலும், இயற்கையாயமைந்த வனப்புக்களை உடையாலும் அணிகளாலும் மேலும் அலங்கரிக்க வேண்டுமென்ற அவா எல்லாச் சமூகத்திலும் இருக்கிறது. உடையில் ஏற்பட்ட படிப்படியான மாறுதல்களை இன்று வாழும் மக்களுடைய உடைகளிலிருந்து நாம் காணலாம். எஸ்கிமோக்களிடையே இன்று நாம் காண்பதுபோலக் கடுமையான குளிரிலிருந்து உடலைக் குளிரிலிருந்து காப்பாற்றிக்கொள்ள மக்கள் ஆதியில் அணிந்தவை தோலும், மென் மயிரடர்ந்த தோலுரியுமே என்பது தெரிகின்றது. செம்மண் போன்ற நிறமுள்ள மண், கிளைகள் இலை, மரப்பட்டை, புல், மலர், விதை, இறகு, பட்டாம்பூச்சியின் சிறகுகள், மணி, கிளிஞ்சல் முதலிய இயற்கையாகக் கிடைக்கும் பொருள்கள் அழகுசெய்து கொள்வதற்குப் பயன்படுகின்றன. மிகுந்த குளிர் நாடுகளில் பூயீஜியர்கள் (Fuegians) மிகவும் சொற்பமான உடைகளையே உடுக்கிறார்கள். அதனால் உடை அணிவதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்பது நமக்கு புலனாகிறது. அவையாவன நாணம், ஒழுங்கு, நற்சுவையுணர்வு, அழகுணர்ச்சியாலுண்டாகும் இன்பம், ஆண பெண் கவர்ச்சி, மந்திர மாய சமய சம்பந்தமான சடங்குகள் போன்றவை ஆகும். உடலின் எந்தப் பகுதிகளை ஆடையால் மூடவேண்டும் என்ற பழக்க வழக்கங்களை ஒவ்வொரு சமூகமும் பின்பற்றுகிறது. உடைகளை தோல், மரப்பட்டை, இலை எதனால் செய்திருந்தாலும் ஆதி மக்கள் பொதுவாக மிகக் குறைந்த அளவில்தான் உடுத்தியிருக்கிறார்கள். ஆடையின்றி யிருப்பது அவர்களுக்கு வெட்கமாகத் தெரியவில்லை. உடலின்மேல் வர்ணங்களைத் தீட்டிக் கொள்வதும், வேறு வழியில் அழகுபடுத்திக்கொள்வதும் வழக்கத்தின் காரணமாய் வற்புறுத்தப்படலாம். ஆப்பிரிக்காவில் பூமியின் நடுக்கோட்டையடுத்த இடங்களில் மரவுரி இடுப்பாடை ஆண்களுக்கும், பனை ஓலைகளாலாகிய சிறு பாவாடை பெண்களுக்கும் ஆடையாகின்றன. பாலினீசியாவில் மரவுரியை ஆண்கள் இடுப்பாடையாக வுடுக்கிறார்கள். பெண்கள் மரப்பட்டையாலாகிய பாவாடையை அல்லது வகிர்ந்து பின்னிய இலையாலாகிய ஆடைகளை உடுக்கிறார்கள். ஆஸ்திரேலிய ஆதிக்குடிகள் மரப்பட்டையாலாகிய ஒரு கச்சையை உடுக்கிறார்கள். அதன் ஓரங்கள் ஒப்போசம் என்னும் விலங்கின் மயிர் அல்லது மனிதர் தலைமயிர் இவற்றினால் பின்னிய கட்டுக்கயிற்றால் ஆனவை. கலகாரியிலுள்ள புதர் மக்கள் (புஷ்மன்) முக்கோண வடிவமான ஒரு தோலைக் கால்களுக்கு இடையில் கோத்து, இடுப்பைச்சுற்றி முடிந்துகொள்கிறார்கள். கலகாரிப் பெண்கள் ஒரு கச்சையையும் தோல் அல்லது மணிகளாலாகிய சிறு முன்றானையையும் அணிகிறார்கள். இந்தியர் எனப்படும் வட அமெரிக்கச் சமவெளியில் வாழும் மக்கள் தம்முடைய ஆடைகளை ஆட்டுமாட்டுத் தோல்களைக்கொண்டு செய்துகொள்கிறார்கள். அரேபியாவில் ஆண்களும் பெண்களும் நீளமாயும் தளர்ச்சியாயுமுள்ள ஆடைகளை உடுக்கிறார்கள். இந்தியாவிலுள்ள காடர்கள், கோண்டர்கள், ஓரோன்கள், இன்னும் மற்றப் பழங்கால இனத்தவர்கள் திருமணம், ஆடல்போன்ற சடங்குகளில் மிகுதியாக ஆடைகளை