பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்காரக்கனி நச்சுமனார்

5

அக்குரன்

ற்றின் தோல் சுறாவின் தோல்போல் சொரசொரப்புள்ளது. அதற்குக் காரணம் அதிலுள்ள முள்போன்ற சிறுசெதில்கள். இவற்றின் கண்ணைச் சுற்றிலும் சிறு தகடுகளாலான வளையம் ஒன்று அமைந்திருக்கிறது. இந்த மீன்களில் சாமானிய மீன்களுக்கு இருப்பதுபோல முன் ஒரு ஜதைத் துடுப்பும் பின் ஒரு ஜதைத் துடுப்பும் இருப்பதல்லாமல் இவற்றிற்கு இடையே வரிசையாக ஜதை ஜதையாக வேறு துடுப்புக்களும் இருக்கின்றன. இப்படி இந்த மீன்களில் முன், பின் துடுப்புகளுக்கு இடையேயும் துடுப்புக்கள் இருப்பதைக் கவனித்தால், மீன்களுக்கு இரண்டு பக்கங்களிலும் தொடர்ச்சியான ஒரு மடிப்பு முதலில் இருந்தது, அது பல துடுப்புக்களாகப் பிரிந்தது, அவற்றில் இப்போது தோள் துடுப்பும், தொடைத் துடுப்பும் மட்டும் எஞ்சியிருக்கின்றன என்னும் கருத்துத் தோன்றுகின்றது. அக்காந்தோடியையின் ஒவ்வொறு துடுப்பின் முன்பும் ஒரு வலுவான முள் உண்டு. அக்காந்தஸ் என்றால் முள் என்று பொருள்.

அக்காரக்கனி நச்சுமனார் கடைச் சங்கப் புலவருள் ஒருவர். உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டவர்.

அக்காரினா (Acarina) அராக்னிடா (Arachnida) என்னும் சிலந்தி வகுப்பு விலங்குகளில் ஒரு வரிசை. உண்ணி, மரவுண்ணி முதலிய வகைகளிடங்கியது. நாய் உண்ணியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் மற்றும் இவற்றில் மனிதனுக்குச் சொரி சிரங்கை யுண்டாக்கும் சிரங்குண்ணியும்,கால்நடைகளுக்குச் செந்நீர்க் காய்ச்சலை (Red Water Fever) உண்டாக்கும் கால்நடையுண்ணியும் சேர்ந்திருக்கின்றன. பார்க்க: உண்ணி

அக்கி (Herpes) தோலின்மேல் தோன்றும் நோய். இது பல வகைப்படும். அவற்றுள் சாதாரண அக்கி, அக்கிப்புடை என்னும் இரண்டு முக்கியமானவை. சாதாரண அக்கி மேல்தோலில் தோன்றுகிறது. இது ஒருவகை வைரசினால் விளைகிறது. இது தோன்றுமுன் நமைச்சலும், எரிச்சலும் உண்டாகும். நோய் தோன்றும் பாகம் சிவந்து காணப்படும். பின்னர் விரைவில் சிறு கொப்புளங்கள் தோன்றும். சாதாரணமாக இது முகத்திலும், கன்னத்திலும், மூக்கின்மெலும் வரும். மார்ச்சளி, வயிற்றுக் கோளாறுகள், நியுமோனியா, மலேரியா, மெனிஞ்ஜைட்ஸ் ஆகிய நோய்கள் பீடித்திருக்கும்போதும் இது உண்டாகலாம். அக்கி ஒருமுறை தோன்றினால் பலமுறை அடுத்துவரும் குணமுடையது. தோல் சிவந்து நமைச்சலும், எரிச்சலும் தோன்றும்போதே நைட்ரச ஈதரை அதன்மேற் பூசி இதைத் தடை செய்யலாம். அக்கித்தோன்றி குணமாகுந் தருவாயில் மின்சாரச்சிகிச்சை செய்து மறுமுறை வராமல் தடுக்கலாம்.

அக்கிப்புடை (Hetepes Zoster) என்ற நோய் அக்கியைவிடச் சிக்கலானது. பயற்றம்மையை விளைவிக்கும் வைரசையொத்த நுண்மம் இதற்கு காரணம். இது தொத்துநோயாகப் பரவக்கூடும். அதிகமான நரம்பு வலிக்குப்பின் திடீரென்று சிரங்கு தோன்றும். பிறகு அங்கங்கே கொத்துக் கொத்தாகக் குருக்கள் தோன்றும். இவை சீழ்ப்பிடித்துச் சில நாட்களில் வறண்டு பொருக்குத் தட்டும். கொப்புளம் தோன்றும்போது நமைச்சலும், எரிச்சலும் மிக அதிகமாக இருக்கும். பொதுவாக இது விலாப்புறத்தில் ஏதாவது ஒரு பாகத்தில் மட்டும் தோன்றும். அக்கிப்புடை மறைந்த பல மாதங்கள் வரை அந்த இடத்தில் வலி இருப்பதுண்டு. இந்நோய் தோன்றும்முன் பலவீனம், காய்ச்சல் முதலிய கோளாறுகள் சிலருக்கு உண்டாகலாம். ஒருமுறை அக்கிப்புடை தோன்றினால் பல ஆண்டுகளுக்கு மீண்டும் வருவதில்லை.

வலியைக் குறைக்க ஆஸ்பிரின் அல்லது அதன் குணமுள்ள மாத்திரை கொடுப்பதுண்டு. ஓரிடத்தில் சிரங்கு தோன்றியதும் போரேட்டெட் டால்க்கம் தூளைத் தூவிப் பஞ்சினால் கட்டிவிடவேண்டும். நச்சு நீக்கும் பசைகளைத் தடவாமல் இருப்பது நல்லது. பிட்யூட்டரி சுரப்பியின் சாற்றை (pituitary extract) உட்செலுத்துவதால் வலிகுறைவதோடு நோயும் விரைவில் குணமாகுகிறது என்று சொல்லப்படுகிறது.

அக்கிலீஸ் (Achilles) கிரேக்க மகாகவி ஹோமர் இயற்றிய இலியாது என்னும் இதிகாசத்து வீரன். ட்ராய் போரில் கலந்துக்கொண்ட வீரர்களுள் தலைசிறந்தவன். குதிக்காலில் அடித்தால் இறந்துபோவான் என்னும் மர்மத்தை அறிந்த பாரீஸ் என்பவனால் இவன் கொல்லப்பட்டான்.

அக்கினி: இவன் வானில் ஞாயிறு ; இடைவெளியில் மின்னல்; பூமியில் நெருப்பு. வேதங் கூறும் தேவதைகளில் ஒருவன். அதில் மற்ற தேவதைகளைவிட இவனுக்கே மிகுந்த துதிகள் கூறப்பட்டுள. தென்கிழக்கு மூலைக்குத் தலைவன். நட்சத்திரமாகவும் இருப்பவன். காண்டவ வனத்தை எரித்தவன். தீச்சுடரை வாளாகவும், புகையைக் கொடியாகவும் உடையவன். ஏழு காற்றுச் சக்கரங்கொண்ட செங்குதிரைத் தேரில் செல்பவன். வேள்வித் தீ இந்தத் தெய்வத்தின் வடிவமே. தீ வணக்கம் வேறு பல நாடுகளிலும் மிகப் பழைய காலந்தொட்டு இருந்து வருகிறது.

அக்கீயா கிரீசின் தென் பகுதியான பெலபொனீசஸ் தீபகற்பத்தில் கொரிந்தியா விரிகுடாவையடுத்துள்ள ஒரு பகுதி. 2000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு 281-146) இப்பிரதேசத்தில் கரையோரமாக இருந்த பன்னிரண்டு நகரங்கள் சேர்ந்து ஒரு நாட்டுக் கூட்டமாக விளங்கின. தற்போது அக்கீயா என்பது கிரீசிலுள்ள பெலபொனீசஸ் ஜில்லாவையே குறிக்கும். இங்குத் திராட்சை உற்பத்தி முக்கியமானது.

அக்கீன் (Achene) என்பது ஒரே விதையுள்ள வெடிக்காத உலர் கனி. விதை வெளியே வருவதற்கு இந்தக்கனி இப்படித்தான் வெடிக்கும் என்னும் நியதியில்லை. இதைச் சாதாரணமாக விதையென்றே சொல்லிவிடுகிறோம். இது சூரியகாந்திக் கனிபோல் மழமழ வென்றிருக்கலாம். இதில் மூக்குத்திப் பூண்டு முதலியவற்றிற்போல் காற்றில் பற்ந்து செல்வதற்குப் பாரஷூட்போல உதவும் மயிர்க்குச்சம் (Pappus) இருக்கிறது. சிலவற்றில் தகடுபோன்ற மெல்லிய பாகங்கள் இறக்கைபோல நீட்டிகொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும் கனி சமாரா (Samara) எனப்படும். மற்றும் சிலவற்றில் கூரிய கெட்டியான முட்கள் இருக்கலாம். இவை பிராணிகளின் காலில்,தோலில் அல்லது மயிரில் குத்திக்கொள்ளும். இந்த விதங்களில் அக்கீன் பலவிடங்களுக்குப் பரவுகின்றது.

அக்குரன் இடையெழு வள்ளல்களில் ஒருவன். குமட்டூர்க் கண்ணணார் பதிற்றுப்பத்து 14 ஆம் பாடலில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்வதிலிருந்து அக்குரன் மகாபாரதத்துக்கு உரிய வீரரில் ஒருவனென்றும் வலிமையும் துணிவும் ஆண்மையு முடையவனென்றும் மிக்க கொடையாளி யென்றும் தெரிகின்றது.