பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடை அணிகள்

353

ஆடை அணிகள்

அணிந்தாலும் மற்றக் காலங்களில் சொற்ப ஆடைகளையே அணிகிறார்கள். தொதவர்களில் ஆண்களும் பெண்களும் உடம்பு முற்றும் மூடும்படி உடுக்கிறார்கள்.

பாலினீசியா, மெலனீசியா, தென் ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அயல்நாட்டுப் பருத்தி ஆடைகளைப் புகுத்தியதால் அங்கேயே செய்து உடுத்திய மரவுரிகள் மறைந்து வருகின்றன. முசுக்கட்டை, அத்தி, ஈரப்பலா போன்ற சில மரங்களுடைய உள்பட்டைகளைத் தண்ணீரில் ஊறவைத்துப் பிறகு அவற்றைத் தவாளிப்புள்ள மரச்சுத்தியால் தட்டி மெதுவாக்குகிறார்கள். அவ்வாறு செய்யப்பட்ட பட்டை சிறிதும் பெரிதுமான தகடு போன்றிருக்கும். அதற்குச் சாயம் கொடுத்து அல்லது அதில் ஓவியம் எழுதி அலங்கரிப்பார்கள். மரவுரி பார்வைக்கு நெய்த துணிபோலிருக்கும். அலங்கரிக்கப்பட்ட நயமான மரவுரிகளுக்குப் பாலினீசியா சிறப்புற்றிருக்கிறது. முக்கியமாகச் சடங்குகளின்போது சில ஆதிக்குடிகள் அதனை இன்றும் உடுக்கிறார்கள். போர்னியோவிலுள்ள காயான்களும் பெல்ஜியன் காங்கோவிலுள்ள நீக்ரோப்பெண்களும் துக்க காலங்களில் மரவுரியை அணிகிறார்கள்.

கூடை பின்னுவதிலிருந்து நெய்யும் தொழில் தெரிந்தது. அதோடு நூற்றலுக்கு வேண்டிய தக்க கச்சாப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை இரண்டும் தறியில் துணியை நெய்வதற்கு ஆதாரமாயின. முதலில் இரண்டு குச்சிகள் மட்டுங்கொண்ட சாமானிய நெசவுத்தறி இப்போது பல நுட்பங்களோடு பொருந்திய யந்திரமாகிவிட்டது. அது பலவகையான துணிகளை வேண்டிய அகல நீளத்திலும் அழகிய முறையிலும் நெய்து கொடுக்கிறது. அதனால் சமூகக்கட்டுப்பாடுகளுக்காக மரவுரியையும் நாணலாலாகிய பாவாடையையும் அணியவேண்டுமென்ற கட்டாயமுள்ள காலங்கள் தவிர மற்றப்படிச் சாதாரணமாக வெட்டித் தைக்கப்பட்ட ஆடைகளை அணிவது நடைமுறையில் வழக்கமாய் விட்டது.

செம்மை, மஞ்சள், வெண்மை, பழுப்பு நிறமான இயற்கை மண்ணைப் பூசிக்கொள்வது மிகப் பழங்காலத்தில் உடலை அலங்கரிக்கும் முறையாயிருந்திருக்கலாம். அம்மண்களைக் கலப்பதால் வெவ்வேறு நிறமுள்ள மண்களையும் பெறலாம். இம்முறையை ஐம்பதினாயிரம் ஆண்டுகட்குமுன் ஐரோப்பாவில் இருந்த பழங்கற்கால வேடர் கையாண்டிருந்தனரெனத் தெரிகிறது. ஆதி பிரிட்டன்கள் போருக்குச் செல்லுமுன் தங்கள் உடலில் நீல நிறத்தைப் பூசிக்கொள்வார்கள் என்று சீசர் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஆதிக்குடிகள் கராபெரி (Corroboree) நடனத்தின்போது தங்கள் உடம்பின்மேல் நன்கு தெரியும்படி பட்டை பட்டையாகவும் புள்ளி புள்ளியாகவும் நிறத்தால் தீட்டிக்கொள்வார்கள். அமெரிக்க இந்தியர்கள் வெற்றியின் அறிகுறியாக நடனமாடும்போது ஒருவித நிறத்தால் உடலை அழகு படுத்திக்கொள்ளுகிறார்கள். உள்நாட்டில் வாழும். அந்தமானியர் முக்கியமாக விருந்துக்குப்பின் உடம்பெல்லாம் வெண் களிமண்ணால் பட்டை தீட்டி அடையாளமே தெரியாதவாறு செய்துகொள்கிறார்கள். பழங்காலந்தொட்டுக் கீழ்நாடுகளில் விரல், உள்ளங்கை, பாதம் இவற்றை மருதோன்றியிலையால் செந்நிறமாக்கிக் கொள்வது வழக்கம். இது இந்தியப் பெண்களிடையே மிகச் சாதாரணம். சந்தனம், நறுமணமுள்ள பட்டைகள், கிழங்குகள் ஆகிய இவற்றை வாசனைக்காக முகத்திலும் உடலிலும் பூசிக்கொள்வார்கள்.

பச்சை குத்தி உடலை அழகு செய்வது அநேகமாக உலக முழுவதும் வழக்கமாயிருக்கிறது. புள்ளிகள், கோடுகள் முதல், மலர்கள், பறவைகள், விலங்குகள் முதலான உருவங்கள் வரை பச்சை குத்துவதில் அடங்கியுள்ளன. நெற்றியிலும், கையிலும், புறங்கையிலும், விரல்களிலும், முதுகிலும், மார்பிலும், கால்களிலும், பச்சை குத்திக் கொள்வது பெண்களிடையே பெருவழக்கமாயிருக்கிறது. மாயோரிகள் (Maoris) முகங்களின்மேல் வளைகோடுகளாகப் பச்சை குத்திக்கொள்ளுகிறார்கள். ஊசியால் குத்தி, புகைக்கரி, மரக்கரித்தூள் அல்லது இலையின் சாறு ஆகிய இவற்றிலொன்றைப் பூசினால் சிவந்த தோலில் பசுமை நிறம் உண்டாகிறது. ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய ஆதிக்குடிகள், அந்தமானியர்கள் போன்ற கறுப்பு நிறத்தினர் பச்சை குத்திக் கொள்வதற்குப் பதிலாகத் தோலைச் சற்றுக் கீறிக் கொள்ளுகிறார்கள். சித்திர உருவங்களைத் தோலின் மேல் கீறி, அழற்சி தரும் பொருள்களை அங்குத் தேய்ப்பார்கள். ஆறினவுடன் அங்கு நிலையான வடு ஏற்படும். அல்லது தசை வீங்கினாற்போல் தழும்பு வெளிவந்துநிற்கும். பல்லைப் பின்னப்படுத்தல், மண்டை ஓட்டை உருக்குலைத்தல், உதட்டில் தொளை செய்தல், மூக்கில் தொளைபோடுதல், இன்னும் இவைபோன்ற மற்ற உருக்குலைவுகளைச் சில சமூகங்களில் அழகு செய்வதற்காகப் பின்பற்றுகின்றனர். ஆப்பிரிக்க நீக்ரோக்கள் சிலர் முன்பற்களைப் பிடுங்கிவிடுகிறார்கள். இந்தியாவில் காடர்கள் பற்களைக் கூர்மையுண்டாக அராவுகிறார்கள். பிரேசிலிலுள்ள பொடொகுடோ சாதிப் பெண்கள் நகை அணிவதற்காகக் கீழ் உதட்டைத் தொளைத்துக்கொள்ளுகிறார்கள். காலடிகளைக் குறுக்கிக்கொள்வது சீனப் பெண்களிடையே மிகச் சாதாரணம். நகை அணிவதற்கு இந்தியாவில் சில பெண்கள் காதுகளின் எல்லா வெளி ஓரங்களையும் மடல்களையும் குத்தித் தொளை செய்துகொள்ளுகிறார்கள்.

ஆதிக்குடிகள் கிளிஞ்சில்களையும், மணிகளையும், மலர்களையும், இறகுகளையும் தலையிலும், தலைப்பாகையிலும், உடலிலும் கவர்ச்சிக்காக அணிய ஆசைப்படுகிறார்கள். அவர்களில் பெண்கள் உச்சிமுதல் உள்ளங்கால்வரையில் கூந்தல் அணிகள், கழுத்து வளையங்கள், மூக்கில் நத்து முதலிய வளைகள், காதணிகள், கடகங்கள், கைக் காப்புக்கள், இரும்பு, பித்தளையாலான கனமான காப்பு முதலிய கால் அணிகள் முதலியவற்றால் அழகு செய்து கொள்ளுகிறார்கள். தேங்காய் ஓடு, கிளிஞ்சில், செம்பு என்னும் இவற்றாலாகிய வளையல்களும், புல்லாலும் நாராலும் செய்த காலணிகளும் உண்டு. ஒட்டியாணங்களும், கை கால் விரல் மோதிரங்களும், ஆரங்களும் பெண்களுக்கு இன்பம் தரும் மற்ற அணிகளாகும். ஆதிக்குடிகள் சமூகத்தில் ஆண்களும் இவ்விதமாகக் காதுகளையும், மூக்கின் நடுச்சுவரையும் நகை அணிவதற்காகத் தொளைத்துக் கொள்வதோடு மோதிரங்களையும் கைக்கடகங்களையும் அணிகிறார்கள். தந்தம், பவளம், வெள்ளி, பொன், விலையுயர்ந்த கற்கள், விலையுயர்ந்த பொருள்கள் இன்று அவர்களுடைய அணிவகைகளைப் பெருக்கியிருக்கின்றன. ஆனால் மந்திர சம்பந்தமான குலிசத்திற்காகக் கிளிஞ்சில்களையும், எலும்புகளையும், பற்களையும், ஆதி மனிதன் அணிந்ததிலிருந்தே இன்றுள்ள அணிகலன்கள் தோன்றியிருக்க வேண்டும். உடைகளும் அணிகலன்களும் ஆதிச்சமூகத்தில் மதிப்பிற்குரிய இடத்தைப் பெற்றிருந்தன. அவை ஆண் பெண் பான்மையையும் அந்தஸ்தையும் வரையறுக்கின்றன. ஹி. ரா.