பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடை அணிகள்

357

ஆடை அணிகள்

அறியும் விஷயங்கள் மிகப்பல. அவைகள் அக்காலத்தில் கிடைத்த பல மாதிரித் துணிகளைக் காட்டுகின்றன. பல கோடுகள், பூ வேலைகள் செய்த சாயத் துணிகள் மிக விரும்பப்பட்டன. இவ்வாறு சோழ, நாயக்க அரசர்கள் காலத்து ஆடைகளைப்பற்றித்

ஆடைகள்-படம் 3
1, 2, 3, 4 பல்லவர் (கி.பி.7-9ஆம் நூ.).
5, 6, 7, 8 சோழர் (,, 9-13 ஆம் நூ.)
9, 10, 11, 12 விஜயநகர் (,, 13-16ஆம் நூ.).
உதவி : வை. மு. ஈரம்மன்

தஞ்சைப் பெரிய கோயில் சித்திரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டுச் சிற்பக் காலங்களில் (7-16 நூ.) மேலே கடைசியாகக் கூறின காலத்தை ஒட்டியே ஆடைகள் இருந்து வந்தன (படம் 3). அதில் சில வகையான சிற்பங்களின் வடிவே காட்டப்பட்டுள்ளன. சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் அவை மிகச் சிறிய சீர்திருத் தங்களை அடைந்தன. பிறகு, விஜயநகர மன்னர் காலங்களில் இன்னும் கொஞ்சம் மாறுதல்களை ஏற்றுக் கொண்டன.

ஆடவர் வேட்டிகள் கச்சத்தைக்கொண்டனவாகி முழங்கால் அல்லது குதிகால் வரையில் தொங்கவிடப்பட்டன. அவைகள் ஒரு பட்டையான இடுப்புச்சுற் றியால் கட்டப்பட்டன. அந்தச் சுற்றிகள் ஒன்று அல்லது பல தொங்கல்களைக் கொண்டனவாக இருக்கின்றன. இன்னும் அவைகளின்மேல் சிறிய துணிபோல ஒன்று முடியப்படும். அதன் முடி சோழ, விஜயநகர மன்னர்கள் காலங்களில் சிங்கமுகம்போலக் காட்டப்பட்டு, முனைகள் கால்களின் பக்கங்களில் தொங்குவது போல் செய்யப்பட்டன. சாதாரணமாக மேல்வேட்டி கிடையாது. ஆனால், விஜயநகர காலத்தில் இடுப்புக்கச்சையின்மேல் அவை பலமாதிரியாக அணியப்பட்டன. பல்லவர், சோழர் காலங்களில் பெண்டிர், இடுப்பிற்கு மேல் ஆபரணங்களை மட்டும் அணிந்து, கீழே பலவிதக் கொய்சகங்களையும் கச்சங்களையும் கொண்ட புடவைகளை உடுத்தி வந்தனர். விஜயநகர காலத்திலிருந்து இரவிக்கைகளை அணிவது சாதாரணமாயிற்று. மற்றைப்படி இடுப்புக்கச்சை ஆடவருடையதை ஒத்தே இருந்தது எனலாம். தலைமயிர் பலவகையாக முடியப்பட்டோ, அல்லது அழகான கரண்ட மகுடத்தால் அலங்கரிக்கப்பட்டோ வந்தது.

அடுத்தபடியாக, முகம்மதிய, ஐரோப்பிய ஆதிக்க காலங்களில் பலவாக மாறுதல்கள் ஏற்படவில்லை. பொதுவாக, அதற்கு முன் ஏற்பட்ட ஆடைகளையே உறுதிப்படுத்தி, தமிழ் நாட்டிற்கெனத் தனிவகைப்பட்ட ஆடைகள் ஏற்பட்டன. அவை நாம் இப்போது நன்கு அறிந்தனவே.

மொகலாயர் வருகைக்கு 1,500 ஆண்டிற்கு முன்பே தைக்கப்பட்ட ஆடைகளைப்பற்றி முன்னோர் நன்கு அறிவராயினும் தட்பவெப்ப நிலையை அனு சரித்து, வேட்டியையும், மேல் துண்டையுமே உடுத்தி வந்தனர். எவ்விதமாக இந்த இரண்டு துணிகளும் மிக அழகாக உடுத்தப்பட்டன என்பதை இந்தியாவின் பண்டைச்சிற்பங்கள் இன்னும் கூறுகின்றன. பார்க்க: தமிழர்.

அணிகள் (சிற்பம், இலக்கியம்) : வரலாற்றுக் காலத்திற்கு முன் தமிழ் நாட்டில் ஆதிச்சநல்லூரில் (த.க.) சவக்குழிகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட நகைகளும், மண் பொம்மைகளின்மேல் காணப்படும் அணிகலன்களும் அக்காலத்து அணிகளை மிகத் தெளிவாகக் காட்டுவதோடு, சோழி வகைகளும், சங்கு வகைகளும் பண்டைத் தமிழரின் மனத்தை மிகுதியுங் கவர்ந்-