பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடை அணிகள்

358

ஆடை அணிகள்

தன எனவும் அவைகள் காட்டுகின்றன. சோழி வகைகளை வெகு நேர்த்தியாகக் கோத்துக் கழுத்து, கை, கால்களிலும் இடுப்பிலும் கட்டி வந்தனர். சங்குகளை மிகத்திறமையுடன் சிறிய வட்டங்களாக அறுத்துக் காப்புக்களாகவும் கடகங்களாகவும் அணிந்தனர் (படம் 1). விலையுயர்ந்த பச்சை, சிவப்பு முதலிய கற்களையும், முத்துக்களையும், பவளங்களையும், பலவகை அணிக

படம் 1 சங்கு வளையல்கள்
(சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் உள்ளவற்றில் சில)
உதவி : வை, மு. நரசிம்மன்

ளாகச் செய்து அணிந்தனர். பொன்னால் செய்யப்பட்ட மணிகளையும் கோத்துப் புனைந்தனர். அந்தக் காலத்தில் இன்றுபோல மிகப் பல அணிகள் தெரிந்திராவிடிலும், தெரிந்த நகைகளை மிகுதியாக அணிந்து வந்தனர். ஆதிச்சநல்லூர் நாகரிகக் காலத்தது சிந்துவெளி நாகரிகம் என்னும் மொகஞ்சதாரோ-ஹாரப்பா நாகரிகம். அங்குக் கிடைத்த பல அணிகள் ஆதிச்சநல்லூர் அணிகளை ஒத்திருக்கின்றன.

வேதகால நாகரிகம் (கி.மு.1500-கி.மு. 500வரை): ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்குப் பிறகு,கி.மு.3000 முதல் கி.மு.1500 வரை, அதாவது வேதகாலம்வரை இருந்த அணிகளைப் பற்றி அறிய எவ்விதச் சான்றுகளும் கிடைக்கவில்லை. அக்கால அணிகளை வேத இலக்கியங்களிலிருந்து தான் ஒருவாறு ஊகிக்க முடியும். அக்காலச் சிற்பங்களோ, அணிகளோ அகப்படவில்லை. அக்காலத்துப் பெண்கள் தலைக்குக் கும்பா அல்லது குரிரா என்ற அணியையும், காதுகளில் வட்டமான கம்மலையும், கால் கைகளில் காப்புக்களையும், விரல்களில் மோதிரங்களையும், தோள்களில் கடகங்களையும் அணிந்தனர். ஆனால், இவைகள் எல்லாவற்றையும் விடக் கழுத்தில் அணியும் காசுமாலை போன்ற அணியை மிக மதித்தார்கள்; மிக முக்கியமானதாகவும் கருதினார்கள்.

அமராவதிக் காலம் : அணிகலங்களின் வரலாற்றில் கி.மு. 500 முதல் கி. மு. 200 வரை, ஒன்றும் தெரியாத காலமாக உளது. கி.மு. 200 முதல் கி.பி. 400 வரை உள்ள காலத்து அணிகளை, அமராவதி நாகரிகம் நன்கு காட்டுகிறது. அமராவதி, நாகார்ஜுனகொண்டா, ஜக்கய்யப்பேட்டை முதலிய இடங்களின் பௌத்த சிற்பங்களின் மேல் காணும் அணிகள் அப்பொழுது இருந்த மக்களின் உயர்ந்த நாகரிகத்தை நன்கு வெளிப்படுத்துகின்றன. உலகப் புகழ்பெற்ற அஜந்தா சுவர்ச்சித்திரங்களின் அமைப்புக்கு இச் சிற்பங்களே மிக்க ஊக்கம் அளித்தன எனலாம். பல வளைவுகள் கொண்ட வளையல்களையும், காப்புக்களையும்,கடகங்களையும் அணிய அமராவதிப் பெண்கள் மிக விரும்பினர். மலர்ந்த தாமரைப் பூவைப்போன்ற திருகைக்கொண்ட அணியால் கூந்தலை அலங்கரித்தனர். தலையைச் சுற்றிப் பொன்னாற் செய்யப்பட்ட ஒரு பட்டையான நகையைத் தரித்தனர். அதிலிருந்து நெற்றியில் தொங்கச் சில தொங்கல்களை அணிந்தனர். காதுகளில் பூ, இலை வட்டம், மீன் போன்ற பல வடிவுகள் கொண்ட மிக வியக்கத்தகுந்த பலவிதக் குண்டலங்களைப் பூண்டனர். காதணியிலிருந்து முத்துச் சரங்கள் தோள்களின்மேல் புரள்வனபோல் சில சிற்பங்களில் காணப்படுகின்றன. மேலே மகரக் கொடி செதுக்கப்பட்டுப் பாம்புகள் போலச் சுற்றப்பட்ட கடக வகைகளையும், சங்குகள், பவளங்கள் தந்தங்கள், இரத்தினங்கள் இவைகளால் செய்யப்பட்டோ, அல்லது ஒரே கெட் டியாகவோ, அல்லது பலவிதமான சந்துகளைக் கொண்டோ உள்ள பல நூதனக் கழுத்துச் சங்கிலிகளையும், அச் சங்கிலிகளிலிருந்து தொங்கும் பலவகையான பதக்கங்களையும், கயிறுகளைப் போன்றோ, அல்லது ஒரே தடிப்பாகவோ உள்ள காப்புக்களையும், பொன் வெள்ளி இவைகளால் செய்யப்பட்ட ஒட்டியாணங்களையும், இடுப்புப் பட்டைகள், உதரபந்தங்கள், சன்னவீரங்களையும் அணிந்தனர். ஆனால் விரல்களில் மோதிரம் காணப்படவில்லை.

கடைச் சங்க காலம்: அமராவதி நாகரிகத்தின் இடைக் காலத்தை ஒட்டியது இக்காலம். இக்காலத்துத் தமிழரின் அணிகளைக் குறிஞ்சிப்பாட்டு, கலித்தொகை, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்கள் அறிவிக்கின்றன. சாதாரணமாகத் தமிழர் மிகப் பல அணிகலன்களை உபயோகித்தனர். பெரிய மிராசுதார்களும், தலைவர்களும், முத்து அல்லது வைரங்கள் கொண்ட ஆரங்களையும், கனமான பொன் கடகங்களையும் அணிந்தார்கள். அரச குலத்தவரும், சிற்றரசர்களும், தங்கள் மதிப்புக்கு ஏற்பக் கால்களில் மணிகள் கட்டிய வீரக்கழலை அணிந்தனர். மற்றோர் சங்கு மாலைகளையும், நீல வெள்ளை மணிகளால் கோக்கப்பட்ட கழுத்தணிகளையும் உபயோகித்தனர்.

சிலப்பதிகாரத்தில் மாதவி யென்னும் நடிகையின் நகைகள் பின்வருமாறு: கால் விரல்களுக்கு மகரவாய் மோதிரம், பீலி, கால் மோதிரங்கள். அடிகளுக்குப் பாதசாலம், சிலம்பு, பாடகம், பரியகம் என்னும் அணிகள். தொடைக்குக் குறங்குசெறி யென்னும் ஓர் அழகிய அணி. இடுப்பில் பூத்தொழிலையுடைய நீலச் சாதர் (Muslin) என்னும் துணியை வெகு அழகாகக் கொசுவிக்கட்டி, அதன்மேல் 32 முத்துச் சரங்களைக் கொண்ட மேகலை. கைகளில் முத்து, பவளம், சங்கு, பொன், இவைகளால் செய்யப்பட்ட பளபளப்பான பலவகை வளையல்கள். கைவிரல்களில் முடக்கு மோதிரம், மரகதத்தை அழுத்திய வட்டப்பூ, மணிகளிழைத்த அடுக்காழி, கழுத்தணிகளாக வீரச்சங்கிலி, நேர்ஞ் சங்கிலி, சவடி, சரப்பளி, முத்தாரம் இவற்றை ஒன்றாய்ப் பின்புறத்தே பிணைத்து,