பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடை அணிகள்

360

ஆடை அணிகள்

3. கண்டிகை: இது பொன்வளையத்தில் கோத்த உருத்திராக்க மணிகளைப் போன்ற ஒரு கழுத்தணி. சாதாரணமாகச் சிற்பங்களில் இவைகளின் மேலும்கீழும் இரண்டு வளையமான அணியாகக் காட்டியிருக்கும்.

படம் 4.
1.நாக பில்லை. 2, 4, 7, 8. முன் பில்லை. 3. சந்திர பில்லை. 5. பின்னல் அணி. 6. ராக்கடி.
உதவி : வை. மு. நரசிம்மன்

4. ஆரங்கள் மார்பின் நடுவரையில் வரும்படி அணியும் ஆபரணங்கள். படம் 6-ல் சில வகைகள் காட்டப்பட்டுள்ளன.

5.கழுத்தணிகள்(சங்கிலிகள் அல்லது ஹ்ருந்மாலா): தஞ்சைக் கல்வெட்டுக்களில் இவைகள் கொண்டுள்ள சரங்களை ஒட்டி ஏகாவளி, திரிசாரி, பஞ்சசாரி, சப்தசாரி என்று கூறப்படுகின்றன. பொதுவாக இவைகளைப் பொன்மாலைகள் எனலாம். இவைகள் கழுத்திலிருந்து தொப்புள்வரை தொங்க அணியப்படும். இவைகள், பொன் அல்லது விலையுயர்ந்த இரத்தினங்கள் புதைத்த பொன் வடங்கள், முத்து வடங்கள், அல்லது முத்துக்கள், பொன்மணிகள், இரத்தின மணிகள் கோத்த வடங்கள் ஆகியவைகளாக இருக்கலாம். இன்னும் பலவித இலைகள் பழங்கள் கொடிகள் போலச் . செய்யப்பட்ட வேலைப்பாடுகளுடன் இருக்கலாம். சாதாரணமாக இவைகளின்கீழே முத்துக்கள் கட்டின பதக்கம் கோக்கப்படும்.

6.ஸ்கந்தமாலா தோள்களின் மேலே அல்லது கழுத்தில் தோள்களின் கீழ்வரை தொங்க அணியப்படும் முத்து அல்லது பொன் பூமாலை. இவை பிற் சோழர் காலத்திலிருந்துதான் காணப்படுகின்றன.

7.உதரபந்தம் மிகப்பழைய அணி. வயிற்றின்மேற் பாகத்தில், உந்திக்கு மேல் கட்டப்படும் இரண்டு, மூன்று அங்குலமுள்ள ஒரு பட்டை. பலவித இரத்தினங்களால் இழைக்கப்பட்டு மிக நேர்த்தியாகக் காணப்படும். சாதாரணமாக, ஆண் சிற்பங்களிலேதான் இவைகளைப் பார்க்க முடியும்.

8.சன்னவீரம் ஒன்றை ஒன்று குறுக்கிட்டுச் செல்லும் இரண்டு பூணூல்களைப் போல், ஆண்களும் பெண்களும் அணிவது. வீரர் அணிவதாகக் காவியங்களில் வந்துள்ளது.

9. கடகம் சன்னவீரம் போல் இருபாலாரும் தோளில் அணிவது. நீண்ட முகப்போடு கூடிய வளையம். முகப்பு மகரக்கொடி அல்லது பாம்புபோல் செய்யப் படலாம். முத்து, இரத்தினங்களால் இழைக்கப்பட்டோ அல்லது முழுவதும் பொன்னிலோ செய்யப்படலாம்.

10.வளையல்கள், மோதிரங்கள்: இவ்விரண்டும் நன்கு தெரிந்திருப்பதால், அவைகளைப்பற்றிக் கூற அவசியமில்லை.

11. கடிசூத்திரமும் ஊருதாமமும் இக்காலத்து ஒட்டியாணங்களையும், அவைகளிலிருந்து தொங்கும் மணிகளையும் போன்றன.ஐந்து அல்லது மூன்று பட்டைகளைக்கொண்டு முன்பக்கம் சிங்கம்போன்ற முகப்-