பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டு

364

ஆத்தூர்

தாகும். இந்த உலோகம் ஆண்டீஸ் மலைகளில் மிகுதியாகக் கிடைக்கிறது.

ஆண்டு : சாதாரண வழக்கத்தில் ஆண்டு எனப்படுவது புவியானது சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம். வானவியலில் பலவகை ஆண்டுகள் உண்டு. அடுத்தடுத்த உத்தராயணங்களில் சூரியன் பூமத்தியரேகைக்கு உச்சமாக இருக்கும் சமயங்களுக்கு இடையிலுள்ள காலம் ஒரு சூரிய ஆண்டு ஆகும். சாதாரணமாக வழக்கத்திலுள்ள ஆண்டு இதுவே. இது 365 நாட்கள், 5 மணி, 48 நிமிடம், 46 செகண்டு உள்ளது. நட்சத்திர ஆண்டு என்பது சுமார் 20 நிமிடம் அதிகமானது. சம இராப்பகல்களின் முன்னிழுப்பினால் (Precession of the Equinoxes) இந்த வேறுபாடு தோன்றுகிறது. நட்சத்திர ஆண்டு வானவியற் கணக்குக்களில் மட்டும் வழக்கத்தில் உள்ளது. பன்னிரண்டு சாந்திரமாசங்கள் கொண்டது சந்திர ஆண்டு எனப்படும். இது 354 நாட்கள் கொண்டது. முஸ்லிம்களும், இந்துக்களில் சில வகுப்பினரும் இந்த ஆண்டைப் பின்பற்றுகிறார்கள். சில ஆண்டுகளுக் கொருமுறை ஒரு மாதத்தை அதிக மாசம் எனச் சேர்த்துக் கொண்டு, இவர்கள் சாந்திரமான ஆண்டிற்கும் சௌரமான ஆண்டிற்கும் உள்ள வேறுபாட்டை ஈடு செய்கிறார்கள்.

நடைமுறையில் பயனாகும் ஆண்டைவிடச் சூரிய ஆண்டு சிறிது அதிகமாக உள்ளதால் ஏற்படும் பிழையை நீக்க, நான்காண்டுகளுக் கொருமுறை 366 நாட்கள் கொண்ட லீப் ஆண்டாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதனால் நடைமுறை ஆண்டின் நீளம் சூரிய ஆண்டைவிட அதிகமாகி விடுவதால் நூற்றாண்டுடைத் தொடங்கும் ஆண்டுகள் லீப் ஆண்டுகளாகக் கொள்ளப்படுவதில்லை. இதிலும் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. நூற்றாண்டுகளிலும் 400ஆல் வகுபடும் ஆண்டுகள் மட்டும் லீப் ஆண்டுகள். அதாவது 1500, 1800 போன்றவை லீப் ஆண்டுகள் அல்ல. ஆனால் 1600, 2000 போன்றவை லீப் ஆண்டுகள். பார்க்க: பஞ்சாங்கம், சகாப்தம்.

ஆணல் (Arnold, 19ஆம் நூ.) யாழ்ப்பாணத்து மானிப்பாய் என்னும் ஊரினர். அருணாசலம் சதாசிவப் பிள்ளையெனவும் பெறுவர். உதயதாரகை என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். இல்லற நொண்டி, கீர்த்தன சங்கிரகம், நன்னெறிக் கதாசங்கிரகம், பாவலர் சரித்திர தீபகம், சாதாரண இதிகாசம், வான சாத்திரம், வெல்லை அந்தாதி, ஏசுநாதர் திருச்சதகம் என்னும் நூல்களின் ஆசிரியர்.

ஆணி பழங்காலத்தி லிருந்தே இந்தியாவில் ஆணிகள் பயனாகி வந்துள்ளன. கொல்லனது உலைக்களத்தில் இரும்பைக் கம்பியாக நீட்டிச் சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு முனையைக் கூராகவும், மற்ற முனையை அகன்ற தலையாகவும் அடித்து அவை செய்யப்பட்டு வந்தன. இம்முறை இன்னும் ஓரளவு வழங்குகிறது.

நீண்ட கம்பிகளிலிருந்து எந்திரத்தினால் ஆணிகளைத் தயாரிக்க முடிவதால் இவற்றை மிக மலிவாக விற்க முடிகிறது. இந்த எந்திரம் முக்கியமான மூன்று உறுப்புக்களைக் கொண்டது. சுருளிலிருந்து வரும் கம்பியை எந்திரக் கத்தரி தேவையான நீளத்திற்குக் கத்தரிக்கிறது. இவ்வாறு கத்தரிக்கப்பட்ட துண்டங்களின் ஒரு முனையை ஒரு குறடு அழுத்தி இழுத்துக் கூர்மையாக்குகிறது. துண்டத்தின் மறு முனையை ஒரு சம்மட்டி அடித்துத் தலையை உருவாக்குகிறது. இந்த எந்திரங்கள் நிமிடத்திற்கு 1000 ஆணிகள் வரை தயாரிக்கும். தகட்டு இரும்பைச் சிறு நாடாக்களாகக் கத்தரித்து, அவற்றிலிருந்து ஆணிகளைத் தயாரிப்பதும் உண்டு.

நூற்றுக்கு மேற்பட்ட ஆணி வகைகள் உண்டு. ஒவ்வொரு வேலைக்கும் சிறப்பாகப் பயனாகும் ஆணி வகைகள் உள்ளன. சில மர வேலைகளுக்குத் திருகாணி ஏற்றதாகக் கொள்ளப்படுகிறது. கம்பியாணியைவிட இது மரத்தை நன்றாக இறுக்கிப் பிடித்துக்கொள்கிறது. இதை உள்ளே செலுத்துவதும் எளிது. சாதாரண அணியைத் தயாரித்து, அதை இரு உருளைகளிடையே அனுப்பி, அதைச் சுற்றிலும் சுருளான தவாளிப்பை வெட்டி இது தயாரிக்கப்படுகிறது.

ஆத்தா இனிமையான பழந்தரும் செடி. சாதாரணமாக இது சீத்தா எனப்படும். வங்காள மொழியிலும் இதற்கு ஆத்தா என்று பெயர். பார்க்க: சீத்தா.

ஆத்தி ஒரு சிறிய மரம். சற்றுக் குணக்கும் கோணலுமாக வளரும். இலைகள் இரண்டு சிற்றிலைகள் சேர்ந்த கூட்டிலைகள். 1-2 அங்குல நீளமிருக்கும். இச்சிற்றிலைகள் நீளத்தில் பாதிக்குமேல் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருக்கும். நரம்புகள் கைவடிவமாக ஓடும். இலையடிச் செதில்கள் சிறியவை, விரைவில் உதிர்ந்துவிடும். பூங்கொத்து சிறு ரசீம். பூ சற்று ஒரு தளச் சமமானது. புறவிதழ்கள் 5 ஒன்றாகக்கூடி மடல்போல இருக்கும் ; நுனியில் 5 பற்கள் காணும். அகவிதழ்கள் 5 சற்றுச் சமமின்றியிருக்கும்; வெளுப்பான மஞ்சள் நிறமுள்ளவை ; தழுவு அடுக்குள்ளவை ; மேற்பக்கத்து இதழ் எல்லாவற்றிற்கும் உள்ளே அமைந்திருக்கும். கேசரங்கள் 10; எல்லாம் செம்மையாக வளர்ந்திருக்கும். சூலகத்திற்குச் சிறு காம்பு உண்டு. பல சூல்கள் இருக்கும். கனி ஒரு சிம்பு. 6 - 12 அங்குல நீளமும், 4-1 அங்குல அகலமும் இருக்கும். வெடிக்காது. மரத்தின் பட்டை சொரசொரப்பாகக் கருமையாக இருக்கும். மரம் பழுப்பு நிறமுள்ளது; கடினமானது. நல்லவிறகு. உள் பட்டையிலிருந்து நல்ல நார் எடுத்து முரடான கயிறு திரிப்பதுண்டு. ஆத்திக்கு ஆர் என்றும் பெயர். இது ஒருவித மந்தாரை ; பாஹீனியா ராசிமோசா (Bauhinia racemosa) எனப்படும். லெகுமினோசீ குடும்பத்தில் சீசால்பீனியீ உட்குடும்பத்தைச் சேர்ந்தது.

ஆத்திசூடி ஔவையார் இயற்றிய அறநூல்; சிறிய தொடர்களால் அரிய கருத்துக்களை விளக்குவது; 'ஆத்திசூடி' எனத் தொடங்குவதால் இப்பெயர் பெற்றது. ஆழ்ந்த கருத்துக்களையுடைய இந்நூலின் தொடர்களையும் பொருள்களையும் அமைத்து, ஆத்திசூடி வெண்பா, ஆத்திசூடி புராணம் என்னும் நூல்கள் பிற்காலத்தே எழுதப்பெற்றன.

ஆத்திரையன் பேராசிரியன் : இவர் ஒரு சிறந்த ஆசிரியராக இருந்திருத்தல் வேண்டும்; நூல் இயற்றியிருக்கவேண்டு மென்பது இவர் கூறியதாக நன்னூல் விருத்தியுரையிலே மேற்கோளாக வந்த பொதுப் பாயிரத்தால் தெரிகிறது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் போலும்.

ஆத்தூர் சேலத்துக்குக் கிழக்கே 32வது மைலில் சேலம், விருத்தாசலம் இருப்புப்பாதையில் உள்ளது. ஆதியில் இது ஆனந்தகிரி என்று வழங்கிவந்தது. ஊரின் நடுவில் ஆறு ஓடுவதால் ஆற்றூர் என்று பெயர் பெற்றது. பின்னர் ஆத்தூர் என மருவியது. ஆற்றுக்கு வடக்கே முதலியார் ஒருவர் கட்டிய கோட்டையிருக்கிறது. சேலம் மாவட்டத்திலேயே நன்-