பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆத்மநாத தேசிகர்

365

ஆதாரக் கல்வி

செய்ச் சாகுபடிக்குப் பேர்போன ஊர். மக் : 22,844 (1951).

ஆத்மநாத தேசிகர் (1650-1728) சோழ மண்டல சதகம் பாடியவர்.

ஆதன் அவினி சேர மன்னரில் ஒருவன்; ஐங்குறுநூறு முதற்பத்து இவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது.

ஆதன் அழிசி ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனுக்கு நண்பர் (புறம். 71).

ஆதன் எழினி : இவன் 'செல்லிக்கோமான்... ஆதன் எழினி' என வழங்கப்படுகிறான் (அகம்.216). செல்லி என்பது சோழநாட்டுக் கடற்கரையோரமாக உள்ள செல்லூர் என்று துணியலாம். 'செல்லூர்க்குணா அது... கோசர் நியமம்' (அகம். 90) என வருவதால் இது உறுதி பெறுகிறது. இவன் கோசர் மரபினன் என்பதைக் 'கோசர் கண்ணி அயரும்... செல்லிக் கோமான்' (அகம். 216) என்று வருவதால் கொள்ளலாம் என்பர். இவன் பெருவீரன் எனவும், வேற்படையினன் எனவும் தெரிகின்றன (அகம்.216).

ஆதன் ஓரி கடையெழு வள்ளல்களில் ஒருவன். வல்வில் ஓரி எனவும் ஓரி எனவும் கூறப்படுவான். கொல்லிமலை நாட்டினை ஆண்டவன். கூத்தாடுவார்க்குப் பணம் கொடுத்துக் காரிப்புரவியைச் செயித்த ஓரி என்னும் குதிரையை உடையவன். இவனைக் கழைதின்யானையார் புறத்திலும், பரணரும் கபிலரும் நற்றிணையிலும் பாடியுள்ளனர் (புறம்.204,நற்.320.326)

ஆதன்சன், மைக்கல் (1727-1806) பிரெஞ்சு இயற்கை விஞ்ஞானி. பிரயாணிகர். தாவரவியலில் நூல்கள் இயற்றியிருக்கிறார். முதன்மையாக ஆப்பிரிக்காவிலுள்ள செனிகால் நாட்டு இயற்கை விஞ்ஞானத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். பயோபாப் (த.க.) என்னும் பெரிய ஆப்பிரிக்காக் கண்டத்து மரம் இவர் பெயரால் ஆதன்சோனியா என்று அழைக்கப்படுகிறது. இவர் தாவரங்களை ஒரு நல்ல புதிய முறையில் பாகுபடுத்தித் தாவரங்களின் இயற்கைக் குடும்பங்கள் (Les Familles Naturelles des Plantes) என்று ஒரு நூல் 1743-ல் வெளியிட்டார்.

ஆதன்ஸ் : கிரேக்க மொழியில் ஆதினாஸ் என்று கூறுவர். இந்தக் கிரேக்க நகரம் பண்டைக் காலத்தில் ஆட்டிகா இராச்சியத்தின் தலைநகராகவும் கிரேக்கப் பண்பாட்டின் நடுநாயகமாகவும் இருந்துவந்தது; அக்ரோப்பலிஸ் என்னும் தட்டையான குன்றின்மீது அமைந்திருந்தது. இந்த நகரம்போல் வேறு எந்த நகரமும் அத்தனை கவிஞர்களையும், கலைஞர்களையும், நாவலர்களையும் மேனாட்டுக்கு அளித்ததில்லை. பிளேட்டோ, பிடியாஸ், பெரிக்ளீஸ், டெமாஸ்தனீஸ், சாக்கிரட்டீஸ் போன்ற பெரியோர்கள் வாழ்ந்துவந்த நகரம் இதுவே. இதுவே மேனாட்டு நாகரிகத்தின் தாயகமாகும். கோயிலும் அதன் சிற்பங்களும் நனி சிறந்தவை. பிளேட்டோவின் அக்காடமியும் அரிஸ்டாட்டிலின் லைசியமும் இதன் அருகில் நடைபெற்று வந்தன. இப்போது கிரீஸ் நாட்டின் தலை நகரம். மக் : 13,15,571 (1951).

ஆதனுங்கன் கள்ளில் ஆத்திரேயனாரால் பாடப்பெற்ற வள்ளல், வேங்கடத்திலிருந்தவன் (புறம். 175,389).

ஆதாம், ஏவாள் : இவர்கள் கிறிஸ்தவ வேதத் ஆதியாகமத்தில் சொல்லியிருக்கிறபடி மனித சாதியின் பெற்றோர். ஆதாம் என்றால் மனிதன் என்று பொருள். பராபரன் தமது சொந்த வடிவிலே ஆதாமைப் படைத்தார். அவனுடைய பழுவெலும்பினின்று ஏவாளை யுண்டாக்கினார் இவர்கள் இருவரும் அழகிய ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்து வந்தனர். கர்த்தர், “அந்தத் தோட்டத்திலுள்ள எல்லாக் கனிகளையும் உண்ணலாம்; நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை மட்டும் உண்ணக்கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆனால், சாத்தான் ஒரு பாம்பு வடிவத்தில் வந்து, அந்த மரத்தின் கனியைத் தின்னும்படி ஏவாளை மயக்கினான். அவள் அக்கனியைத் தின்றாள். ஆதாமுக்கும் கொடுத்தாள். அதையுண்ட பிறகு கர்த்தர் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே ஓட்டிவிட்டார். அதிலிருந்து மனிதச் சாதிக்குத் துன்பம் பரம்பரையாக வந்துகொண்டிருக்கிறது. ஆதாம் ஏவாளுக்குக் காயீன், ஆபேல், சேத் என்னும் மூன்று ஆண் மக்கள் இருந்தனர். ஆதாம் 930 ஆண்டு உயிரோடிருந்தான்.

ஆதாம் சிகரம் இலங்கையில் கொழும்புக்கு 45 மைல் கிழக்கே 7,352 அடி உயரம் உள்ளது. உச்சியிலுள்ள பீடபூமியில் காணப்படும் காற்சுவடு பௌத்தர், முஸ்லிம்கள், இந்துக்கள் அனைவராலும் தத்தம் தெய்வத்தினது என்று பாராட்டப்படுகிறது. இப்போது அது பௌத்தத் துறவிகள் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான யாத்திரிகர் தரிசனத்துக்காகச் செல்கிறார்கள். பல வேளைகளில் வைகறையில் மேகத்தின்மீது காணப்படும் அதன் நிழல் அழகாயிருக்கும்.

ஆதாம் வாராவதி இராமேசுவரம்முதல் மன்னார் தீவு வரை 30 மைல் தூரம் நீண்டு கிடக்கும் பாறையும் மணலும் சேர்ந்த திட்டாகும். இதுவே வானரர்கள் கட்டிய சேது என்பர். கடல் பெருகும் வேளைகளில் சில இடங்களில் மூன்று நான்கு அடி நீர் நிற்கும். ஆதியில் பூசந்தியாக இருந்ததாகப் புவியியலார் கூறுவர். உடைப்பு உண்டானது 1480-ல் என்று கோவில் சாசனங்களிலிருந்து தெரிகிறது. இவ் வாராவதியின் பண்டைய பெயர் 'ஆதி சேது' என்பதாம்.

ஆதாரக்கல்வி காந்தியடிகளால் வகுக்கப்பட்ட புதிய கல்வித் திட்டம். செய்திகளையும் திறமைகளையும் குழந்தைகளுக்கு எளிதில் கற்பிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முறைகளுள் ஒன்றென இதனைக் கருதுதல் தவறு. வாழ்க்கையை முக்கிய மையமாக்கி, அதைச் சுற்றித் தேவைக்குத் தகுந்தபடி கல்வி முழுவதையும் அமைப்பது ஆதாரக் கல்வி.

காந்தியடிகள் தற்காலக் கல்வியிலுள்ள குறைபாடுகளை நன்கு உணர்ந்து, புதியதொரு கல்வி முறையினை வகுக்க வேண்டுமென்று தென்னாப்பிரிக்காவில் பீனிக்ஸ் செட்டில்மென்டிலும், டால்ஸ்டாய் பண்ணையிலும் ஆராய்ச்சி நடத்தினார். இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கத்திற்குப்பின் தேசிய வித்தியா பீடங்களை நிறுவி, அவற்றிலும் தம் எண்ணங்களைச் சோதனை செய்தார்.

1937ஆம் ஆண்டு பல மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, மக்கள் அனைவருக்கும் உடனடியாகச் சிறந்த கல்வி தரும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டுமென்று காந்திஜி வற்புறுத்தினார். செலவை ஈடு செய்யக்கூடிய கல்வி முறையைப்பற்றிய தம் கருத்துக்களை ஹரிஜன் பத்திரிகையில் எழுதினார்.

1937-ல் வர்தாவில் காந்திஜியின் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. கல்வி நிபுணர்களும் கல்வி மந்திரிகளும் கூடினர். வேலை மூலம் கல்வி என்னும் கருத்தைக் காந்தி விளக்கினார். பயிற்சி ஆரம்பகால