பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதாரக் கல்வி

366

ஆதாரக் கல்வி

முதலே பயனுள்ள ஒரு கிராமக் கைத்தொழிலைக் கற்பித்தலின் மூலம் குழந்தையின் பூரண வளர்ச்சிக்கு அடிகோலுவதே ஆதாரக் கல்வியின் அடிப்படை. கைவேலையை ஆரம்பமாக வைத்துப் பின்னர் ஏட்டுக் கல்வியை இணைக்கின்றன வேறு சில செயல்முறைக் கல்வி வகைகள். காந்தி இதனை ஏற்பதில்லை. டால்ஸ்டாய் பண்ணையில் எட்டு மணிநேரம் உடலுழைப்பும் இரண்டொரு மணிநேரமே புத்தகப் படிப்பும் இருந்ததையும் அவர் நினைவூட்டினார். தொழிலைச் சரியான முறையில் கற்பித்தால் அதன் வளர்ச்சியோடேயே குழந்தையின் பரிபூரண வளர்ச்சியும் ஏற்படும் என்பது அவரது அனுபவம். எண் எழுத்துக் கல்வி, குழந்தைகள் செய்யும் தொழிலுக்கு உயர்வும் உற்சாகமும் அளிக்கும் முறையில் அமையவேண்டும். தொழில் செய்யும்போது கூட்டுறவு மனப்பான்மையும், திட்டமிட்டுச்செய்யும் ஆற்றலும், தனித்திறமையும், பொறுப்புணர்ச்சியும் வளரும் என்னும் கருத்துக்களை அவர் சொன்னார்.

தேசியக் கல்வி மாநாடு இக்கருத்துக்களை ஆலோசித்தபின், பின் வரும் நான்கு தீர்மானங்களை நிறைவேற்றிற்று:

1. எல்லோருக்கும் ஏழாண்டுக் காலம் இலவசமான கட்டாயக் கல்வியைத் தேசமெங்கும் பரவக்கூடிய ஒரு திட்டப்படி போதிக்க வேண்டும்.

2. கல்வி போதிக்கிற மொழி தாய்மொழியாகவே இருக்கவேண்டும்.

3. இந்த ஏழாண்டுக்காலக் கல்வியானது பயனுள்ள ஏதேனுமொரு கைத்தொழிலை ஒட்டியதாய் இருக்க வேண்டும். இந்தக் கைத்தொழிலும் குழந்தைகள் வாழ்கிற சூழ்நிலைக்குப் பொருத்தமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். குழந்தையினிடம் அபிவிருத்தி செய்கிற மற்றெல்லாச் செயல்திறனும், குழந்தைக்கு அளிக்கிற எல்லாப் பயிற்சியும், இயன்றவரையில் இந்தக் கைத்தொழிலுடன் முற்றிலும் ஒன்றிய தொடர்பு கொண்டதாய் இருக்கவேண்டும்.

4. இந்தக் கல்வித்திட்டமானது காலக்கிரமத்தில் பள்ளிக்கூடத்தின் தொழில் வருவாய் மூலம், உபாத்தியாயர்களுக்காக ஏற்படும் செலவைச் சரிக்கட்டிக் கொள்ளவேண்டும்.

இதையடுத்து ஹரிபுராவில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாடும் இந்தத் தீர்மானங்களில் முதல் மூன்றையும் ஏற்று, வருங்காலத்தில் இந்தியாவின் தேசியக் கல்வி இம்முறையில்தான் அமையவேண்டுமென்று முடிவு செய்தது. இத்திட்டத்தை அமலுக்குக் கொண்டுவர இந்துஸ்தானி தாலீமி சங்கம் அமைக்கப்பட்டது. இதன் தலைமைக் காரியாலயம் மத்தியப்பிரதேசத்திலுள்ள சேவாக்கிராமத்தில் இருக்கின்றது. இச்சங்கத்தார் வகுத்துள்ள காந்தீயக் கல்வி "நயீ தாலீம் " (புதுக் கல்வி) எனப் பெயர் பெறுகிறது. நயீ தாலீமிற்கு வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு பெயர் உண்டு; 7 வயதுவரையுள்ள கல்வி பூர்வ ஆதாரக்கல்வி; 7 முதல் 15 வயதுவரை உள்ளது ஆதாரக் கல்வி; 15 முதல் 18 வரை உள்ளது உத்தர ஆதாரக் கல்வி; 18 க்கு மேல் உள்ளது பல்கலைக் கழகக் கல்வி.

உடல் உழைப்பு அல்லது வேலை மூலம் கல்வி கற்பித்தல் என்பது ஆதாரக் கல்வியின் சிறந்த கோட்பாடு. காந்திஜி சம்பந்தப்பட்டவரையில் இது புதிய கருத்து. முன்னரே இத்துறையில் உழைத்துச் சிந்தித்தவர்களுடைய முடிவை அறியாமல் அவர் தாமாகவே இம்முடிவுக்கு வந்ததர்கச் சொல்லியுள்ளார். அன்றியும் அன்பையும் சத்தியத்தையும் அடிப்படையாகக் கொண்ட சர்வோதய சமுதாயத்தை நிறுவ உடலுழைப்பும், அதில் பொதிந்துள்ள அறிவாற்றலும் இன்றியமையாதன.

இக்கல்வி முறையைப் பலர் பாராட்டி ஏற்றபோதிலும் சிலர் குறை கூறியுள்ளார்கள். அவர்கள் காட்டும் குறைகள்: 1. பாடசாலைச் செலவைச் சரிக்கட்டக் குழந்தைகளை வேலை செய்யச் சொல்வது சரியல்ல. இது இரக்கமற்ற செயல்; குழந்தைகளை நிர்ப்பந்தப்படுத்தி வேலை வாங்கும் நிலைக்குச் சென்றுவிடும். 2. பள்ளிகளில் பெருவாரியாக உண்டாகும் பொருள்கள் தொழிலாளர்களுக்குப் போட்டியாக வந்தமையும். 3. தொழில் மூலம் கற்பித்தால் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் வேறு அமிசங்கள் தெரியாமலே போய்விடலாம்.

மேற்கண்ட தடைகளுக்கு ஜாக்கிர் ஹுசேன் கமிட்டி பதில் கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் இக்கல்வி முறையின் மூலம் சிந்தனையும் செயலும் ஒன்றுபடும். படிப்பு வாழ்க்கைக்குப் பெரிதும் உதவும். பொருளாதாரச் சுபிட்சம் ஏற்படும். செயலைச் சிந்தித்துச் செய்யும் பழக்கம் ஏற்படும். அறிவுக்கும் உழைப்புக்கும் உள்ள பாகுபாடு ஒழிந்து, அறிவாளி. உழைப்பாளி என்ற பேதம் நாட்டில் நல்லெண்ணம் வளரும்.

இந்திய அரசாங்கம் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. இராச்சிய சர்க்கார்கள் பல இந்த முறையில் கல்வி பயிற்ற ஏற்பாடு செய்து வருகின்றன.

ஆதாரக் கல்வி முறை தனித்தவர் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் சமூக முன்னேற்றத்திற்கும் அடிகோலுகிறது. இக்கல்வித் திட்டத்தில் செயல் திறமை, அறிவு, மனப்பாங்கு முதலியவைகளை ஒருங்கே வளர்ப்பதற்கு ஏற்ற மாதிரி முறையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு கிராமக் கைத்தொழில் மூலம் கல்வி புகட்ட வேண்டுமென்பது ஆதாரக் கல்வித் திட்டம்.

தொழிலைக் கல்வியுடன் இணைக்க முயன்ற வேறு முறைகளும் சில உள் அவைகளைப்பற்றிச் சிறிது தெரிந்துகொள்ளுதல் ஆதாரக் கல்வி முறையின் சிறப்பை உணர உதவும்.

'தொழிற் கல்வி' என்பதில் வெறும் தொழில் மட்டுமே கற்பிக்கின்றனர். இதில் மனிதப் பண்புகள் வளர வழியில்லை.

சிறிது நேரம் தொழிற் பயிற்சியும், பிறகு கொஞ்ச நேரம் புத்தகப் படிப்பும் கொடுப்பது வேறொரு முறை. இதில் அறிவு வளர்ச்சியும் தொழிற் பயிற்சியும் தனித் தனியாகக் கொடுக்கப்படுகின்றன. தொழிற் பயிற்சியும் அறிவு வளர்ச்சியும் நன்கு இணைக்கப்படாமல் தனித்தனியே இருந்தால் அது வாழ்க்கைக்கு உதவாது. கண்கூடாகக் காரியங்களில் ஈடுபடுதல் அறிவைப் பெறுவதற்குத் துணை செய்யுமெனக் கருதிச் சிறுசிறு காரியங்களைச் செய்விப்பதன்மூலம் சிலர் அறிவு புகட்ட முயலுகின்றனர். இம்முறை சுயநோக்க முயற்சி எனப்படும். இதில் வேலைக்கு முதலிடம் கிடையாது. வேலைமூலம் வரும் அறிவுதான் முக்கியமெனக் கருதப்படுகிறது. இதற்கும் ஆதாரக் கல்வி முறைக்கும் பல அமிசங்களில் வேறுபாடு உண்டு.

ஆதாரக் கல்வி முறையில் வாழ்க்கைக்குத் தொடர்புடையதும் பலவகைச் செயல்கள் அடங்கியதுமான ஏதாவதொரு தொழிலின் மூலமே கல்வி கற்பிக்கப்படுகிறது. வாழ்க்கையில் முதல் இடம் உடல் உழைப்புக்கு உண்டென்பதை ஒப்புக்கொண்டால்தான் சமூகம் உருப்படும்; அனைவருக்கும் சமூக நியாயம் கிடைக்கும். இதனை ஏற்றுத்தான் இம்முறையில் கல்விக்குத்