பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதாளை

367

ஆதிக் குடிகள்

தொழில் அடிப்படையாயிருக்கிறது. தொழிலைச் செவ்வையாகச் செய்ய ஆரோக்கிய உடம்பு அவசியம். மூலப்பொருள், கருவிகள், தொழில் செய்யும் இடம் முதலியன பெறும் கவனத்தைவிட அதிகக் கவனம் உடல் பெறவேண்டும். செயல் செய்யச் செய்ய, உடல் வலிமை பெறுகிறது. செயலால் அனுபவம் பெருகும். அனுபவமே திரண்டு முதிர்ந்து அறிவாகப் பரிணமிக்கிறது. அறிவறிந்து உழைக்கும் உழைப்பினால் வரும் பக்குவம் நல்லொழுக்கத்துக்கு வித்தாகி, ஆன்மப் பண்புகளை வளர்க்கிறது.

வாழ்விலுள்ள பிற அமிசங்களான ஓய்வுநேரப் போக்குக்கான கலைப்பணி, களியாட்டம், சமூகத்தொண்டு, இல்லறத்தில் தன் பங்கை ஏற்றுக் கூட்டு வாழ்வு நடத்துதல் முதலிய யாவும் தொழிலைத் திறமையாக நடத்த இன்றியமையாதவை. ஆகவே இதனை வாழ்க்கையை மையமாகக்கொண்ட கல்வி என்றும் கூறுகின்றனர்.

தொழிலையே முறையுடன் கற்பித்தால்தான் பொது வளர்ச்சியுண்டாகும். ஆசிரியர் மிகவும் நுணுக்கமானவைகளும் பொதுவாகக் காணப்படும் சிறியவும் பெரியவுமான எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். இதற்குப்பின் அவர் அவ்விஷயங்களை

1. வரிசைக் கிரமமாகவும் ஒழுங்கான முறையிலும் எழுதி வைக்கவேண்டும்.

2. குழந்தைகளுக்குக் காரணங்களுடன் அவ்வப்போது தெளிவாகவும் எளிய சொற்களிலும் சொல்லி விளக்கவேண்டும்.

3. மற்றக் குழந்தைகளைச் சொல்லச் செய்யவேண்டும்.

4. குழந்தைகளுக்கு விளக்கும் சமயத்திலோ, விளக்கிய பிறகோ, அல்லது அதற்கு முன்னரோ, உசிதப்படி அக்காரியத்தை நேரில் செய்து காட்டவேண்டும்.

5. குழந்தைகளைக்கொண்டு சொல்லச் செய்யும்பொழுதோ, அல்லது அதற்கு முந்தியோ பிந்தியோ உசிதப்படி தனிப்பட்ட முறையிலும், வகுப்பு முழுவதற்குமாகவும் இச்செய்கையைச் சரியான முறையில் செய்விக்க வேண்டும்.

6. இச் செய்கைகளைச் செய்வித்தபின் குழந்தைகளின் திறமைக்குத் தகுந்தாற்போல் அவர்களை எழுதச் செய்யவேண்டும்.

7. தாம் செய்யும் வேலைகளை வாழ்க்கைத் தொழிலாகச் செய்பவர்கள் அக்கம் பக்கத்தில் இருந்தால் அவர்கள் அவற்றை எப்படிச்செய்கிறார்கள் என்பதைக் குழந்தைகள் பார்க்கவேண்டும். முடியுமானால் அவர்களைத் தம் செய்முறைகளைக் குழந்தைகளுக்கு விளக்கிக் கூறுமாறு கேட்டுக் கொள்ளலாம். பிறரின் அனுபவத்தைப் பயன்படுத்தும் அவசியம் இதன் மூலம் குழந்தைகளுக்குப் புலப்படும். ஒரே காரியத்தைப் பல வழிகளில் செய்யலாம் என்ற அறிவும் உண்டாகும்.

8. தொழிற்பயிற்சி தரும்போது தொழில் வரம்புக்குள்ளேயே கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டியதில்லை. தொழிலின் நாற்புறமுள்ள பரந்த உலகத்தைப் பார்க்கவேண்டும். உடற்பயிற்சி, கழிவுப் பொருள்களை உபயோகித்தல், அழகுணர்ச்சி, சமூக உணர்ச்சி, ஒத்தவைகளையும் மாறானவைகளையும் கவனித்தல், விஞ்ஞான அறிவு முதலியவற்றைத் தொழிலைக்கொண்டு ஏற்படுத்துவதே ஆதாரக் கல்வி முறையாகும். க. அ.

ஆதாளை எலி ஆமணக்கு எனவும்படும். இது கடற்கரையை யடுத்த இடங்களில் நிரம்ப வளர்ந்திருக்கும். இதை வேலிச் செடியாக வைப்பதுண்டு. இது காட்டாமணக்குப் போலவே இருக்கும். அதுதானோ என்று எண்ணுவதுமுண்டு. ஆனால் இதன் இலை பச்சையாக இருக்கும். இலையடிச் செதில்கள் நீண்டு பிரிவுபட்டு இருக்கும். பிரிவுகளின் முனையில் சுரப்பிகள் இருக்கும். இலை அரவாய் விளிம்புள்ளது. விளிம்பிலும் முனையிலும் சுரப்பிகள் இருக்கும். பூக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறமானவை. இலையிலிருந்து துணிகளுக்குப் போடும் பச்சைச் சாயம் எடுக்கிறார்கள். விதையிலிருந்து எடுக்கும் எண்ணெய் கீல்வாதம், குடைச்சல், பாரிசவாயுவு ஆகியவற்றுக்குப் பயன்படும்.

குடும்பம்: யூபோர்பியேசீ (Euphorbiaceae); இனம்: ஜட்ரோபா கிளாண்டுலிபெரா (Jatropha glandulifera).

ஆதி அருமன் கள்ளிலாத்திரையனாராலும் நக்கீரனாராலும் பாராட்டப்பெற்ற மருதநிலத் தலைவன் (குறுந்.293; நற்.367).

ஆதிக் குடிகள் (Tribes) : பண்டை நாட்களில் வாழ்ந்த ஆதிக் குடிகள் முதலில் ஓர் இடத்திலும் நிலைத்து வசிக்காமல் அலைந்து திரியும் வழக்கத்தையே மேற்கொண்டிருந்தனர். உணவுக்கென்று மிருகங்களை வேட்டையாடுவதற்கும், அவர்கள் வளர்த்து வந்த ஆடுமாடுகளுக்குப் பசும் புல்லைத் தேடிக் கொடுப்பதற்கும் அவர்கள் இடம் விட்டு இடம் செல்ல வேண்டியதாயிற்று. இந்த நிலைக்குப்பின் ஓரிடத்திலேயே தங்கி நிலச் சாகுபடி செய்யும் கலையைக் கற்றார்கள்; நாகரிகமும் தொடங்கியது.

ஆதிக்குடிகள் எனப்படும் மக்கள் தொகுதி அதை விட மிகச்சிறிய

ஆஸ்ரேலிய ஆதிக்குடி
உதவி : ஆஸ்திரேலிய ஹை கமிஷனர், புதுடெல்லி.

இனங்கள் ஒன்று சேர்ந்ததால் உருவெடுத்தது. பண்டைக்காலக் கிரேக்க, ரோமானிய வரலாற்றுத் தொடக்கத்தில் மக்கள் பல குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர். பல குடும்பங்களின் இனம் (Clan) தோன்றியது. இதைப்போன்ற பல இனங்கள் ஒன்று சேர்க்கையால் சேர்ந்ததால் ஆதிக் குடிகள் என்ற பெரியதொரு மக்கள் தொகுதி உண்டாயிற்று. நாளடைவில் இவ்வாறு பல தொகுதிகள் இணைக்கப்பட்டதிலிருந்து அரசாங்கம் நிறுவப் பெற்றது.

இன்னும் உலகின் பல பகுதிகளில் நாகரிகத்தில் முன்னேறாத மக்கள் ஆதிக்குடிகள் நிலையிலேயே இருந்து வருகிறார்கள். ஆப்பிரிக்காக் கண்டத்திலும், பசிபிக் தீவுகளிலும், ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலிய இடங்களிலும், இந்தியாவின் சில பாகங்களிலும் இவர்களைக் காணலாம். நாகளிக வழிகளே தெரியாத இவர்களிடையும் ஒழுங்கு முறைகள் உள. தங்கள் பொது வாழ்வைச் சீராக நடத்தத் தேவையான விதிகளை இவர்கள் தவறாது பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்-