பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதிக் குடிகள்

370

ஆதிக் குடிகள்

முடியரசு (Monarchy), பிரபுக்கள் ஆட்சி (Aristocracy), குடியாட்சி (Democracy) என்னும் பிற்காலத்தில் உருவெடுத்த ஆட்சித் திட்டங்களின் இயல்புகளையும் சாயலையும் இச் சமூகங்களில் பார்க்கிறோம்.

பண்டைக் குடிகளின் வாழ்க்கை முறைகள் இந்தியாவில் முற்காலச் சரித்திரத்திலும் வேரூன்றியிருந்தன. 'கிராம சமுதாயங்கள்' (Village Communities) பலதிறப்பட்டவை. அவைகளில் நிலவுரிமைகள் கிராம மக்கள் எல்லோருக்கும் பொதுவானவை. கிராம ஆட்சியைக் கண்காணிக்க ஒரு சிறு சபை (Council) இருந்தது. சபைக்கு யாரை எப்படித் தேர்ந்தெடுக்கலாம் என்பது பற்றித் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஒவ்வொரு கிராமத்திலும் பொது வேலைகளைக் கவனிக்கத் தலைவர்களிருந்தார்கள். இத்தகைய மக்களாட்சி கிறிஸ்தவ சகாப்தத்துக்குப் பல நூற்றாண்டுகள் முன்னிருந்தே இந்தியாவில் நீடித்து வந்தது. 'கிராமணி' (கிராமத் தலைவன்) என்ற பதம் ரிக்வேதத்திலேயே காணப்படுகிறது.

புத்தர் காலத்துக்கு முன்னிருந்தே பலவிடங்களில் மக்கள் தொகுதிக் குடியரசுகள் (Tribal Republics) வட இந்தியாவின் கீழ்ப்பாகத்தில் செழித்திருந்தன. புத்தர் பெருமானை உலகுக்கு ஈந்த கபிலவாஸ்துவிலிருந்த சாக்கிய இனம் ஒன்று; வைசாலியிலிருந்த லிச்சவி இனம் மற்றொன்று. இவைகளின் பொது விஷயங்கள் சீராகக் கவனிக்கப்பட்டு வந்தன. எல்லா மக்களும் கொண்ட கூட்டம் திறந்த வெளியிலோ, ஒரு மண்டபத்திலோ கூடும். இதன் முடிவுகள் எல்லோராலும் ஆதரிக்கப்பட்டவைகளாயிருக்க வேண்டும். கூட்டத்துக்கு மக்களைக்கொணர்ந்து சேர்க்கக் 'கணபூரகர்கள்' இருந்தார்கள்; வோட்டுக்களைத் திரட்டச் 'சலாகாக்ராஹகர்' களுமுண்டு. அரசியல் நிருவாகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசன் பொறுப்பிலிருந்தது. பயிரிடுதலும், ஆடு மாடு வளர்த்தலுமே முக்கியத் தொழில்கள். சில கிராமங்கள் முழுவதிலும் ஒரு தொழிலைப் பயில்பவர்களே இருப்பார்கள். இத்தகைய குடியரசின் இனம் ஒவ்வொன்றிலும் எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் பல கிராமங்களில் வசித்து வந்தன.

மக்கள் வரலாற்றிலேயே மிகப் பழமையான ஆட்சி முறை முடியரசுதான். பண்டைக் குடிமக்கள் ஒருவரோடொருவர் போரிடும்போதும், பின்னர்ப் பெரிய தொகுதிகளில் அரசியல் வாழ்க்கை தொடங்கிய போதும் தங்களில் ஒருவரைத் தலைவராக்கிக் கொண்டு அவரிடம் நிருவாகம், நீதி வழங்குதல், கடவுளை வழிபடுதல் போன்ற பல ஆட்சியுரிமைகளை ஒப்படைத்தனர். போருக்குத் திறன் வாய்ந்த தலைவர் அவசியம். அமைதிக் காலங்களில் ஒருவரிடம் நிருவாகப் பொறுப்பை வைப்பது மக்களின் ஒற்றுமைக்குத் துணையாகவும், அதை அறிவுறுத்தும் அடையாளமாகவும் விளங்கியது. இதைத் தவிர, ஒரு சிலர் ஆட்சி, மக்களின் ஆட்சி முதலான திட்டங்களின் முளைகளும் பண்டைக் குடிமக்களிடையே இருந்து நாளடைவில் வெளிக்கிளம்பி வளரத் தொடங்கின. ஸ்ரீ. தோ.

ஆதிக்குடிகள் ஆட்சி முறை : சமூக அமைப்பும் பொருளாதார அமைப்பும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைவது போலவே அரசியல் அமைப்பும் ஓரளவு சூழ்நிலைக்கு ஏற்றவாறே அமைகின்றது. ஆதியில் மக்கள் ஆடையின்றி உணவு தேடும் நிலையில் இருந்தபொழுது, போர்புரிய நேரும் போதுமட்டுமே அவர்களுக்குத் தலைவன் தேவையாயிருந்தான். பின்னர் நாளடைவில் நாகரிகக் கூறுகள் தோன்றின. மக்கள் தொகை பெருகிற்று. பல குடும்பங்கள் சேர்ந்து கூட்டமாக வசித்தனர். கூட்டங்கள் நில ஆக்கிரமிப்புக்காகச் சண்டையிட்டன. வயதானவர்களையும் பலவீனர்களையும் பாதுகாக்க வேண்டிய நிலைமை உண்டாயிற்று. அத்தகைய காரணங்களால் காவலன் ஒருவன் வேண்டியதாயிற்று.

இந்தக் காவலன் 'பெரியவன்' என்று அழைக்கப்பட்டான். அவன் மக்களைக் காப்பாற்றும் பொருட்டுச் சண்டையிடும்போது மக்களும் அவனுக்குத் துணை புரிந்தனர். நாளடைவில் அவன் இவர்களைத் தனக்குத் துணை புரியுமாறு கேட்கும் உரிமையைப் பெற்றான். வேளாண்மை முதலிய நிலையான தொழில்கள் ஏற்பட்டபோது மக்கள் துணைபுரிவதற்குப் பதிலாகத் தலைவனுக்குக் காணிக்கை செலுத்தலாயினர். தலைவனே சமூகத்தைக் காப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். இதனுடன் சமூகக் கட்டுப்பாடுகளை நிறைவேற்றவும், சட்டத்திட்டங்களை வகுக்கவும், சன்மார்க்க விரோதமான செயல்களைத் தடுக்கவும் வேண்டிய நிலைமை உண்டாயிற்று. இவை யெல்லாம் சேர்ந்து அரசாங்கம் என்ற அமைப்பை உண்டாக்கின.

ஆதிக்குடிகள் சுதந்திரப் பிரியர்களாகவும் ஜனநாயகவாதிகளாகவு மிருந்தார்கள். எல்லோரையும் ஒன்று போல் மதித்து வந்தார்கள். எதையும் சமூக நன்மையை எண்ணியே செய்தார்கள். அதனால் தலைவன் என்பவன் பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சமூகத்துக்குக் கேடுவராமல் பாதுகாக்கவும். நல்வாழ்வு பெறுதவற்கு வேண்டிய காரியங்களைக் காட்டவும் கூடியவனாயிருந்தால் போதும். அப்படிப்பட்டவனையே ஆதிக்குடிகள் தங்கள் தலைவனாகத் தெரிந்தெடுத்துக் கொண்டார்கள். இதுதான். அவர்களுடைய சூழ்நிலைக்கு உகந்த முறையாயிருந்தது.

இந்தியாவிலுள்ள ஆதிக்குடி சமூகங்களில் அரசியல் தலைவன், சமயத் தலைவன் என்று இருவகைத் தலைவர்கள் காணப்படுகிறார்கள். இவர்கள் பரம்பரைத் தலைவர்களாகவுமிருப்பார்கள்; தேர்ந்தெடுக்கப்பெற்ற தலைவர்களாகவு மிருப்பார்கள். பரம்பரைத் தலைவன் தேர்ந்தெடுக்கப்பெற்ற தலைவனைவிட மிகுந்த அதிகாரம் உடையவனாயிருப்பான். ஒரிஸ்ஸாவிலுள்ள கடபர்கள் போன்ற சில சமூகங்களில் தலைவனே புரோகிதனாகவும் இருப்பதுண்டு.

தலைவனே தலைமை அதிகாரியும் நியாயாதிபதியுமாவான். சகல சமூக காரியங்களிலும் அவனே தலைமை வகிப்பான். மதத் தலைவனுடைய காரியங்களை மேற்பார்க்கும் அதிகாரமும் அவனுக்கு உண்டு. அவனுடைய இசைவின்றிச் சமூக பலியும், சமூக தேவதைகள் வழிபாடும், சமூக விழாக்களும் நடைபெறலாகாது. அவன் நடுநிலையில் நின்று சமூகத்தார் அனைவருடைய நலத்தையும் தேடுபவனாகக் கருதப்படுவான். அதற்காக அவனுக்குச் சில அதிகாரங்கள் அளிக்கப்படுகின்றன. அவன் குற்றவாளிகளைத் தண்டிக்கலாம்; சமூகவிரோதிகளைச் சமூகத்தினின்றும் நீக்கலாம். பொதுப்பந்தியில் அவனே தலைமைத்தானம் வகிப்பான். திருமணங்களில் அவனே முதல் தாம்பூலம் பெறுவான்; சமூக விளையாட்டுக்களில் தலைமை வகிப்பான்.

செஞ்சு,கடபர் போன்ற குடிகளின் தலைவன் ஊதியம் எதுவும் பெறுவதில்லை. முண்டா, ஹோ போன்ற குடிகளின் தலைவன் ஊதியம் பணமாகவோ பொருளாகவோ பெறுவான். கோயா போன்ற குடிகளின் தலைவன் விழாக்காலங்களில் மட்டுமே மதுவும் ஆடையும் பெறுவான். சமூக வழிபாட்டுக் காலங்களில் அவனுக்கு ஒரு சோடி வேட்டியும் ஒரு சேவலும் தருவர். வேட்டையில் கிடைப்பவற்றில்குறிப்பிட்ட ஒருபகுதியும்