பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதிச்சநல்லூர்

371

ஆதிச்சநல்லூர்

அவனுக்கு உண்டு. மற்றும், அவன் யாரையும் தனக்கு ஊழியம் செய்யுமாறு கூறலாம். அபராதத் தொகையில் ஒரு பகுதியை உபயோகித்துக் கொள்ளலாம்; விழாக்காலங்களில் சிறு தொகைகள் வசூலித்துக் கொள்ளலாம்.

ஆதிக்குடிகள் பெரும்பாலும் ஜனநாயக நம்பிக்கை யுடையவர்களாதலால் தலைவன் இத்துணை அதிகாரங்கள் பெற்றிருப்பினும், மனம் போனவாறு நடந்து கொள்ள முடியாது. சமூகச் சம்மதம் பெறாத காரியங்களைச் செய்ய இயலாது.

வழக்குக்களைத் தலைவன் பஞ்சாயத்து என்னும் மூத்தோர் அவையின் துணைகொண்டு விசாரித்து முடிவு செய்வான். மக்களே அம் மூத்தோரை நல்லொழுக்கமுடையவர்களாகவும், நடுநிலைமையில் நிற்பவர்களாகவும் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்கள். கிராமப் புரோகிதரும் பஞ்சாயத்தில் ஓர் உறுப்பினராக இருப்பார். அவர் தேவதைகளுக்கு வழிபாடு செய்யவும், தேவதைகளால் ஏற்படும் கோளாறுகளுக்குப் பரிகாரம் செய்யவும் கடமைப்பட்டவர். பஞ்சாயத்தார் சொத்து, வழக்கம், ஒழுக்கம், மணிமந்திரம் முதலியவை பற்றிய சிக்கல்களை விசாரித்து நியாயம் வழங்குவர். மக்கள் சம்மதமே அவர்களுடைய ஆற்றலாகும்.

ஆதிக்குடிகள் வீரத்தைப் பெரிதும் பாராட்டுபவர்கள். நாகர் போன்ற தலைவெட்டும் குடிகள் ஒருவன் வெட்டிவரும் தலையின் எண்ணிக்கையை வைத்தே அவனுடைய வீரத்தைப் பாராட்டுவார்கள். மாயோரிகள் போன்ற குடிகளிடையே நடனத் திறமையே பாராட்டப்பெறும். போன்டோ மக்கள் நிறைய மது தருபவனைப் புகழ்வர். சிவப்பு இந்தியர்கள் வீரத்தை மெச்சுவர். சவரர்கள் கொடையைப் பாராட்டுவர். பாவினீசியர் உயர்குலத்தையும், சில குடிகள் செல்வாளியையும் மதிப்பர். இவ்விதமாகச் சமூகத்தின் மதிப்பைப் பெறுபவர்கள் தலைவர்களாக நியமிக்கப் பெறுவர்.

ஆதிக்குடிகளிடையே தலைவனும் பஞ்சாயத்தாருமே அரசாங்க அமைப்பாவர். ஆதிக்குடிகளிடையே சட்டம் வழக்கத்துடனும், அரசியல் மதத்துடனும் தொடர்புடையன. பலியிடுதல், பொருள்களை வணங்குதல், தேவதை நம்பிக்கை, இயற்கையைக்கடந்த சக்திகளை மதித்தல் ஆகியவையே பெரும்பாலும் சமூக, பொருளாதார அமைப் உருவாக்குகின்றன. அந்தக் காரணத்தால் பழக்கவழக்கங்களே மக்களுடைய வாழ்க்கையை நடத்துபவைகளாக இருக்கின்றன. வழக்கம், நம்பிக்கை, மூடப்பழக்கம் ஆகியவையே ஒழுக்கத்தின் அடிநிலை. தேவதைகளுக்குக் கோபம் வரும்படி நடந்தால் நோய் முதலியன வரும் என்று நம்புகிறார்கள். இதைத் தடுப்பதற்காக மந்திரவாதிகளும் புரோகிதர்களும் உண்டு. ஆதலால் சமூக மக்களைப் போலவே சமூகத் தலைவனும் மந்திரவாதியையும் புரோகிதனையும் அதிக மரியாதையுடன் நடத்துகிறான். ஆகவே ஆதிக் குடிகளின் அரசியல் அமைப்பு அவர்களுடைய சமூக, மதப் பழக்க வழக்கங்களையும் பொருளாதாரச் சூழ்நிலையையும் அடிநிலையாக உடையதாகும். ஏ. எம். சோ.

ஆதிச்சநல்லூர்: இதை வேலூர் ஆதிச்சநல்லூர் என்றும் கூறுவர். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர்க்குப் போகும் வழியில் பாளையங்கோட்டையிலிருந்து பதினோராவது மைலில் உளது. தொல்பொருள் ஆராய்ச்சி முக்கியத்துவம் உடையது. இவ்வூருக்கு மேற்கேயுள்ள மேட்டில் பண்டைக்காலப்பொருள்கள் பல வெட்டி எடுக்கப்பெற்றுச் சென்னைப்

ஆதிச்சநல்லூரில் காணப்படும் புதை பொருட் பகுதி
உதவி : தொல் பொருள் இலாகா.சென்னை.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த வெண்கலப் பொருள்
(இப்பொழுது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் உள்ளது)
உதவி: தொல் பொருள் இலாகா, சென்னை.

பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. முதன் முதல் 1876-ல் அகழ்ந்து ஆராய்ச்சி செய்த ஜெர்மன் புலவர் டாக்டர் ஜாகர் பல பொருள்களைப் பெர்லினுக்குக் கொண்டுபோனார். பார்க்க: தமிழர்